உடல் என்பது
ஒரு இயந்திரம் அல்ல
நாம் சொன்னதைக் கேட்க…
அது
சொல்வதைக் கேளுங்கள்
அதை உணர்ந்து
வாழ்ந்து பாருங்கள்
நீங்கள் நிம்மதியை
அடையலாம் !
இன்றைய அவசரமான உலகத்தில் பொறுமையை கடைபிடிப்பது என்பது எல்லோராலும் சாத்தியமில்லை. ஒவ்வொரு வேலையினையும் பொறுமையுடனும் நிதானத்துடனும் செய்வது என்பதும் இயலாத காரியமாய் போய்விட்டது. எவ்வளவு சுலபமாக ஒரு வேலையை முடிக்கலாம் அல்லது எவ்வளவு நேரத்தில் அந்த வேலையை முடிக்கலாம் என்பதில்தான் நாம் குறியாய் இருக்கிறோம். வேகமும் தேவை என்றாலும் விவேகமும் வேண்டும் என்பதைத்தான் மறந்துவிட்டோம். இந்த விவேகத்தைத்தான் நாம் இப்போது கட்டாயமாக உணரும் காலகட்டத்தில் இருக்கிறோம்.
ஆம் நண்பர்களே., நமக்குத் தேவையானதை நமக்கு நன்மை பயக்கக் கூடியவற்றை தவறவிட்டுவிட்டு அவசரத்தில் ஓடுவதில் எந்தப் புண்ணியமும் இல்லை என்பதை சிலர் உணர்ந்து கொள்ள ஆரம்பிக்கின்றனர். உணர்ந்து வாழ முயற்சிக்கின்றனர், அதில் வெற்றியும் பெறுகின்றனர். அவர்களின் வெற்றியும் அவர்களின் அனுவமும் நமக்கும் உதவும் என்பதை இங்கே உங்கள் பார்வைக்கு வைக்கின்றேன்.
இப்போதெல்லாம் சில தொலைக்காட்சிகளில் நல்ல விசயங்களையும் நமக்கு வழங்குகின்றனர். குறிப்பாக உணவு சம்பந்தப்பட்ட நிறைய ஆலோசனைகளை ஆராய்ந்து சொல்கிறார்கள். கடைகளில் விற்கும் குழந்தைகளுக்கான உணவுப் பண்டங்கள் அனைத்தும் நச்சுத்தன்மையுடன் இருப்பதாக விளக்குகிறார்கள். எல்லாக் காய்களுமே ஒரே நாளில் பழமாக ஆக்கப்பட்டு விற்பனைக்கு வருவதை எடுத்துக் கூறுகிறார்கள். பாக்கெட் பாலில் பாலே இல்லை என்பதை அறிவுறுத்துகிறார்கள். அத்தனையும் உடம்பிற்கு கேடு விளைவிக்கும் பொருட்களாக விற்பனைக்கு வருகின்றன என்பதை சுட்டிக் காட்டுகிறார்கள்.
வட இந்தியாவில் ஒரு பால் பண்ணைக்கு குறிப்பிட்ட அளவிற்குமேல் உபரியாக பால் கொள்முதல் ஆவதைக் கண்டு ஆச்ச்ரியப்பட்டுப் போய்விட்டனர் அதிகாரிகள். அது எப்படி சாத்தியமாகிறது. அப்படியெனில் எத்தனை கால் நடைகள் இருக்கும். அவற்றை எப்படி பராமரிக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளும் ஆவலில் அந்தக் கிராமத்திற்குச் சென்றனர். அங்கு அதிர்ச்சியே காத்திருந்தது. பால் உற்பத்தியாகும் அளவிற்கு கால் நடைகள் இல்லை. தீர விசாரிக்கும்போது ஒரு பெரிய உண்மை வெளிப்பட்டது. அந்தப் பால் வாசிங் மெசினில் உற்பத்தி ஆகிக் கொண்டிருக்கிறது.
எல்லோருடைய வீட்டிலும் வாசிங் மெசின் இருக்கிறது. சில மாவுப் பொருட்கள், நுரை வரும் பொருட்கள், யூரியா, பொருள் கெடாமல் இருக்கப் பயன்படுத்தும் அமிலம், ஆகியவற்றைக் கொண்டுதான் அந்தப் பால் தயாராகிக் கொண்டு இருக்கிறது. பிறகு அந்த செய்திகள் மறைக்கப்பட்டுவிட்டன.
இப்போது 100 நாள் பால் என்ற ஒன்று வரப்போவதாகக் கேள்விப் பட்டேன். 100 நாட்கள் பால் உயிருடன் இருக்குமா ?
நாம் இன்னொரு விசயத்தைக் கவனிக்கலாம். உதாரணத்திற்கு தேங்காய் எண்ணையை எடுத்துக் கொள்வோம். எப்போதெல்லாம் பெட்ரோலியப் பொருட்களின் விலை ஏறுகிறதோ அப்போதெல்லாம் எண்ணைகளின் விலையும் மாறுமாம். எல்லா வகையான எண்ணைகளுக்குமே அந்தந்த மணத்தைக் கொடுக்கும் வாசனைத் திரவியங்கள் தயாரிக்கப்படுகிறதாம். இப்படி எத்தனையோ மாற்றங்கள்., அறிவியல் வளர்ச்சி என்ற பெயரில். இத்தனையும் நம் உடம்பிற்கு மட்டும் எந்த நன்மையினையும் செய்ய முடியவில்லை.
இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். இங்கே ஒரு கேள்வி நமக்கு வருவதை தவிர்க்க முடிவதில்லை. எதைத்தான் சாப்பிடுவது. எதை விடுவது. சாப்பாட்டிற்குப் பதிலாக ஒரு மாத்திரையே போதும் என்று வந்து கொண்டிருக்கிற காலத்தில் என்ன சொல்லிக் கொண்டு இருக்கிறீர்கள் என்ற கேள்வி முளைப்பது இயல்புதான். ஆனால் அதையும் தாண்டி யோசிக்க வேண்டிய நிலையில் நாம் வந்து கொண்டு இருக்கிறோம். சரி இனி விசயத்திற்கு வருவோம்.
வேலை
***********
நாம் எந்த அளவிற்கு வேலை செய்கிறோம். எத்தனை மணி நேரம் செய்கிறோம். என்பதைப் பொறுத்தும் நம் உணவின் அளவை நிர்ணயிக்கலாம். இது மிக முக்கியம். இதை நாம் நிர்ணயிப்பதைவிட நம் வயிறு நிர்ணயம் செய்ய விடுவதுதான் நல்லது. ஆனால் யாரும் இப்பொது அதை அறிந்து கொள்ளவில்லை. எத்தனை சாப்பிட்டாலும் நம் உடல் அதற்குத் தேவையான சக்தியை மட்டுமே எடுத்துக் கொள்ளும். மற்றவற்றை கழிவாக்கிவிடும். இதை நாம் அறிந்திருக்கிறோம். இதன் மூலம் சொல்வது என்னவென்றால்., உடல் உழைப்பிற்குத் தகுந்த உணவை, உணவின் அளவை உடலே நிர்ணயிக்கும் என்பதே. இதை நாம் சுய பரிசோதனையின் மூலமே
இந்த உண்மையை ஒப்புக் கொள்ள இயலும்.
உணவு
**********
மூன்று வேளையும் கட்டாயமாகச் சாப்பிட்டே ஆகவேண்டும் என்ற கருத்து எப்படியோ நிலைத்துவிட்டது. அது முற்றும் அவசியமற்றது என்பதை அனுபவத்தின் மூலம் அறிந்திருக்கிறேன். முன்பெல்லாம் எனக்குத் தெரிந்தவரை விவாசயப் பணிக்குச் செல்பவர்கள் அதிகாலையில் எழுந்து காடு தோட்டத்திற்குச் சென்றுவிடுவர். வேலை செய்துவிட்டு சுமார் பத்து மணியளவில் சாப்பிடுவார்கள். பின்பு மீண்டும் வேலை. பிறகு இரவில் பசித்தால் ஒழிய சாப்பிடமாட்டார்கள்.
அவர்கள் ஆரோக்கியத்தின் சூட்சுமம் அதுதான். இன்னும் நிறைய விளக்கலாம் என்றால் உங்களுக்குப் படிக்கப் பொறுமை இருக்காது. அதனால் சுருக்கமாக விளக்கிவிடலாம். பசித்தபின் உண்ணுங்கள். தேவையான அளவே உண்ணுங்கள். ருசித்து உண்ணுங்கள். கீழே உட்கார்ந்து உண்ணுங்கள். உடல் படிப்படியாக வளமடையும். உடல் உங்களை ஆராதிக்கும். எப்படி சாப்பாட்டின் மேல் விருப்பம் கொள்கிறீர்களோ அதைப்போலவே விரதம் இருந்தும் பாருங்கள்.
நோய்
********
பெரும்பாலான நோய்கள் நம்மால் உருவாக்கப் பட்டதே. இன்னும் உருவாக்கிக் கொண்டு இருக்கிறோம். உணவே மாத்திரையாகிப் போக இன்னும் நோயை வளர்த்துக்கொண்டு இருக்கிறோம். ஒரு கட்டத்தில் படுத்துவிடுகிறோம். எதுவும் அளவுதான் என்பதை மறந்து விடுகிறோம். தொடர் மருந்து மாத்திரைப் பயன்பாட்டில் இருந்து விடுபட ஒரே வழி நீங்கள் உணவுக் கட்டுப்பாட்டை கையாள்வதுதான்.
சாதாரண காய்ச்சல் என்றால் விட்டுவிடுங்கள். சில நாட்களில் சரியாகிவிடும். அது நல்லதே. காய்ச்சல் என்பது., உடலில் உள்ள குப்பைகளை எரிக்கும் நிகழ்வுதான் அது. நாம்தான் அதை மருந்தைச் செலுத்தி அடக்கி விடுகிறோம். பின்னொரு நாள் மீண்டும் காய்ச்சலாக வருகிறது. காய்ச்சல் தானாக குறைய விட்டால்., மீண்டும் காய்ச்சல் வருவது குறைகிறது.
என் அனுபவம்
**********************
மரபுவழி வழி மருத்துவத்தை அறிந்து கொண்டபின் பல பிரச்சனைகளுக்கு மாத்திரை பயன்படுத்துவதை தவிர்த்திருக்கிறேன். இதை பலரையும் பின்பற்ற வைத்து வெற்றியும் கண்டிருக்கிறேன். சிறு நீரகக்கற்கள் எளிதாய் உடைந்து வெளியேறி இருக்கிறது. முதுகுத் தண்டுவட வலிகள் நீக்கப் பட்டிருக்கின்றன. உடல் சம நிலையில் இருப்பதை அறிந்திருக்கிறோம். சுருக்கமாகச் சொன்னால் அவர்கள் ஆரோக்கியத்தை அவர்களே அடைந்திருக்கிறார்கள்.
தவிர்க்கலாம்
*********************
அஸ்கா. மினரல் வாட்டர். பதப்படுத்திய உணவுகள். எண்ணைப் பொருட்கள். ப்ரிட்ஜ். குக்கர். குறிப்பாக பாஸ்ட்புட் உணவுகள். இவைதான் பல நோய்க்கு அச்சாரம் இடுகின்றன.
நம் வாழ்க்கை நம் கையில்
*******************************************
உடல் சொல்வதைக் கேளுங்கள். அதன்படி செயல்படுங்கள். சுகமும் நலமும் நம்முடன் துணையாய் நிலைத்து நிற்கும்!
ஆம். உடல் ஒரு அதிசயம் !! எந்தப் பிரச்சனை என்றாலும் அது தன்னைத்தானே சரியாக்கிக் கொள்ளும் அபூர்வ ஆலயம் !!!
என்ன நண்பர்களே…
தூங்கி விட்டீர்களா…
இப்படி ஒரு அறிவுரையா என்று
ஓட்டம் பிடிக்கிறீர்களா…
நான் உங்களை விடுவதாக இல்லை…
இதோ உங்களைத் தேடி வருகிறேன்…
நீங்கள் எங்கிருந்தாலும்….
வாழ்க நலமுடன்.