பெட்டி போனால் என்ன? சாவி இருக்கிறது!
தந்தையும், பதினைந்து வயது மகனும் ரயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்தார்கள்.
அவர்கள் பயணிக்க வேண்டிய ரயில் வருவதற்கு இன்னும் ஒரு மணி நேரம் அவகாசம் இருந்தது.
பையன் பொறுப்பில்லாதவன். விளயாட்டுப்பிள்ளை. அம்மா செல்லம். சொல்வதைக் கேட்கமாட்டான்.
ஆகவே, தந்தை தன்னுடைய டிராவல் பேக்கை எடுத்துத் தோளில் மாட்டிக்கொண்டு, “டேய், முதல் பிளாட்பாரத்தில் ரயில்வே கேன்டீன் இருக்கிறது. போய்க் காப்பி சாப்பிட்டுவிட்டு, ரயிலில் சாப்பிடுவதற்கு ஏதாவது பார்த்து வாங்கிக்கொண்டு வருகிறேன். நீ இங்கேயே இரு. உன் சூட்கேசைப் பார்த்துக் கொள். எம்ப்டி சூட்கேஸ் மட்டுமே 1,500 ரூபாய் விலை. ஜாக்கிரதை!” என்று சொல்லிவிட்டுப் போனார்.
பையன் சுவாரசியமில்லாமல் மண்டையை அசைத்து அவரை அனுப்பி வைத்தான்.
…………………………………………………………………
சென்றவர் அரை மணி நேரம் கழித்துத் திரும்பி வந்தார்
பையனையும் காணவில்லை அவனுடைய பெட்டியையும் காணவில்லை.
பதற்றமாகிவிட்டது.
அந்த பிளாட்பாரத்தின் வலதுபுறம் சற்றுத் தள்ளி ஒரு குளிர்பானக் கடை இருப்பதும், பையன் அங்கே நிற்பதும் தெரிந்தது.விரைந்தார். பையன் கண்களை மூடியவாறு பெப்சியை உறிஞ்சிக் குடித்துக் கொண்டிருந்தான்.
“டேய் ராசா, நான் வர்றதுக்குள்ளே என்னடா அவசரம்?”
“தாகமா இருந்துச்சு நைனா, அதான் பெப்சி குடிக்க வந்தேன்”
“பெட்டி எங்கேடா ராசா?”
“அதை நாம நின்ன இடத்துல வச்சுட்டுத்தான், இங்க வந்தேன்”
சட்டென்று தந்தையின் ப்ளட் பிரஷர் எகிறி விட்டது. காட்டுக் கத்தலாகக் கத்தினார்
“டேய் அறிவு கெட்டவனே, உன் மேம்போக்குத்தனத்துக்கு அளவே இல்லையா?”
“இப்ப என்ன ஆச்சுன்னு இப்படிக் கத்தறே நைனா?”
“பெட்டி அங்கே இல்லை. யாரோ லவட்டிக் கொண்டு போய் விட்டான். நான் நினைத்தபடியே ஆகிவிட்டது.”
பையன் கூலாகச் சொன்னான்,”பெட்டியை எடுத்துக் கொண்டு போனவன் திரும்ப நம்மகிட்டதான் வருவான் நைனா ”
“எப்படிடா அறிவுகெட்டவனே?”
“சாவி எங்கிட்டயில்ல இருக்கு!”