ஒரு நீண்ட ஆற்றங்கரை. ஆற்றின் நடுவே ஒரு தீவு. தீவில் ஏராளமான மாமரங்கள். அங்கு வசித்த குரங்குகள் தினமும் மாம்பழங்களைத் தின்று களிக்கும்.
பெரும்பாலான மாமரங்கள் தீவின் நடுவே இருந்தன. ஒரே ஒரு மாமரம் மட்டும் கரை ஓரமாக இருந்தது.
குரங்குகளின் தலைவன் நந்திரியா, இந்த மரத்திலிருந்து பழங்கள் ஆற்றில் விழுந்து விட்டால் ஆபத்து! மனிதர்கள் இந்தத் தோப்பைத் தேடி வருவார்கள். நம்மை விரட்டி விடுவார்கள். எனவே பழங்கள் ஆற்றில் விழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று தன் கூட்டத்தினரை எச்சரித்தது.
ஆனாலும் அவற்றின் கண்ணில் படாமல் ஒரு பழம் ஆற்றில் விழுந்துவிட்டது. ஆற்றுநீர் அதை அடித்துச் சென்றது. பழம் எப்படியோ அரசன் கைக்குப் போய்ச் சேர்ந்தது.
பழத்தை ருசித்துப் பார்த்த அரசன், இந்தப் பழம் எங்கு கிடைக்கும்? கண்டுபிடிக்க வேண்டும் என்று நினைத்தான். தன் வீரர்களுடன் மாம்பழம் இருக்கும் இடத்தைத் தேடி வந்தான்.
தீவில் எங்கு பார்த்தாலும் குரங்குகள்! அவற்றை விரட்ட வீரர்கள் தயாரானார்கள். அரசன், இப்போது இருட்டிவிட்டது. இந்தக் குரங்குகளை நாளை விரட்டி விடுங்கள் என்று கட்டளை இட்டான்.
இதைக் கேட்ட குரங்குகள் நந்திரியாவிடம் ஓடின. ஆபத்து! ஆபத்து! நாளை நம்மைக் கொன்று விடுவார்கள். எப்படித் தப்பிப்பது? என்றன.
நந்திரியா, கவலைப்படாதீர்கள். நான் உங்களைக் காப்பாற்றுகிறேன் என்றது. பிறகு மரத்தில் படர்ந்திருந்த ஒரு கொடியைப் பிடுங்கியது. அதன் ஒரு முனையைக் கரையோரம் இருந்த மாமரத்தில் கட்டியது.
இன்னொரு முனையைத் தன் இடுப்பில் கட்டிக் கொண்டது. எதிர்க் கரை மரத்தில் கொடியைக் கட்டுவதற்காகத் தாவியது.
ஐயோ! கொடியின் நீளம் குறைவாக உள்ளதே! நந்திரியா எதிர்க் கரையில் ஒரு மரக்கிளையைப் பிடித்தபடி தொங்கியது.
இப்படிக் கொடியையும் தன் உடலையும் வைத்து ஒரு பாலம் உருவாக்கியது.
மற்ற குரங்குகளிடம், சீக்கிரம் வாருங்கள்! இந்தப் பாலத்தில் நடந்து, என் முதுகில் ஏறித் தப்பி விடுங்கள் என்றது.
குரங்குகள் ஒவ்வொன்றாகப் பாலத்தில் நடந்து எதிர்க்கரையை அடைந்தன. கடைசிக் குரங்கு தாவும்போது பளு தாங்காமல் கொடி அறுந்துவிட்டது! நந்திரியா தீவின் கரையில் விழுந்தது.
மறைந்து நின்று இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அரசன் அதிர்ந்தான். நந்திரியா விழுந்த இடத்துக்கு விரைந்தான். அப்போது நந்திரியா உயிர் இழக்கும் நிலையில் இருந்தது.
உன் உயிரையும் பொருட்படுத்தாமல் உன் கூட்டத்தினரைக் காப்பாற்றி இருக்கிறாய்! மனிதர்களிலே கூடத் தன்னையே தியாகம் செய்து கொள்பவரை நான் பார்த்ததில்லை. உன் கடைசி விருப்பத்தைச் சொல். அதை நான் நிறைவேற்றுகிறேன் என்றான் அரசன்.
என் கூட்டத்தினரை ஒன்றும் செய்யாதீர்கள் என்று கூறியபடியே நந்திரியா உயிரை விட்டது.
அரசன் மாம்பழத் தீவைக் குரங்குகளுக்கே விட்டு விட்டுத் தன் படையுடன் திரும்பிச் சென்றான்.