Home » தன்னம்பிக்கை » மாத்தியோசிங்க‬!!!
மாத்தியோசிங்க‬!!!

மாத்தியோசிங்க‬!!!

எனக்கு எப்போதும் தோல்விதான், கொஞ்சம்கூட ராசி இல்லாதவன், வாழ்க்கையே வெறுத்துப் போய்விட்டது. என்ன செய்வதென்றே தெரியவில்லை” என்று பலரும் புலம்பக் கேட்டிருப்போம்.

ஒரு வியாபாரத்தைத் தொடங்கி, அதில் சின்னஞ்சிறு சறுக்கல் வந்தால்கூட சோர்ந்து போய்விடும் பலரையும் பார்த்திருப்போம். இதில் உண்மை என்னவெனில், எந்த ஒரு செயலையும் வெற்றிகரமாகச் செய்ய நினைத்து அதில் தோல்வி அடைந்தவர்கள் அதே செயலில் சின்னச் சின்ன மாற்றங்களை மட்டும் செய்துவிட்டால் வெற்றிக்கனியைச் சுலபமாகச் சுவைக்க முடியும்.

வாடிக்கையாளர்கள் தேடிவந்து வாங்குவதைவிட, நாமே தேடிப்போய் கொடுக்கலாமே என்ற முயற்சியில் இறங்கி, முதல்முதலாக தவணை முறைத் திட்டத்தை அறிமுகப்படுத்தி அதில் மாபெரும் சாதனையும் படைத்தது ஒரு நிறுவனம். வீட்டில் இருக்கிற கட்டில் இடத்தை அடைக்கிறதே என்று ஒருவர் சிந்தித்ததன் விளைவு, அது மடக்கு நாற்காலியாக மாறியது. இதனால் மடக்கு நாற்காலிகளின் விற்பனையும் பல மடங்குகளாகப் பெருகியது.

ஒரு காலத்தில் அஞ்சல் அலுவலகத்தில் உரிமம் பெற்று வீட்டில் ரேடியோ வைத்துக் கொண்டிருந்த காலங்களில் பாடல்களையோ அல்லது செய்திகளையோ வீட்டில் மட்டும்தான் கேட்க முடிந்தது. மற்ற இடங்களில் கேட்க முடியவில்லையே, அதற்கு என்ன செய்வது என்று மாற்றிச் சிந்தித்ததன் விளைவு, அது பாக்கெட் ரேடியோவாக மாறியது. இந்த பாக்கெட் சைஸ் ரேடியோவில் வருகிற சத்தமும் பலருக்கு இடையூறாக இருக்கிறதே என்று சிந்தித்ததன் விளைவு, அது வாக்மேனாகிப் போனது. ரேடியோ-பாக்கெட் ரேடியோ-வாக்மேன். இவை மூன்றுமே சிறிது மாற்றிச் சிந்தித்ததன் விளைவால் இவற்றின் விற்பனை அந்தந்தக் காலங்களில் ஒரு பெரும் புரட்சியையே ஏற்படுத்தின.

விற்பனையின் அளவை அதிகப்படுத்தவும், பல் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும்

இருக்க பற்பசை நிறுவனம் ஒன்று ஒரு சிறு மாற்றத்தை மட்டும் செய்து பார்த்தது. அது என்னவெனில், பற்பசை வெளிவரும் சிறு துளையை மட்டும் தற்போது இருப்பதைவிட கொஞ்சம் பெரிதாக்கினால் என்னாகும் என்ற வித்தியாசமான சிந்தனையை அமல்படுத்திப் பார்த்தது. பற்கள் சுத்தமாகின, வாடிக்கையாளர்களும் மகிழ்ந்தார்கள், விற்பனையும் அதிகரித்தது. இதனால் அந்த நிறுவனத்தின் லாபமும் மறைமுகமாக அதிகரித்தது.

சோப்பு, ஷாம்பு, ஊதுபத்தி உள்ளிட்டவற்றின் உற்பத்தி நிறுவனங்கள்கூட விநோதமான விளம்பரங்களையும், சின்னச் சின்ன மாற்றங்களையும் செய்து விற்பனையைப் பல மடங்கு உயர்த்தியிருக்கின்றன. விலை உயர்ந்த பட்டு ரகங்களைக்கூட, பேரம் பேசாமல் சொன்ன விலைக்குத்தான் வாங்கிச் செல்ல வேண்டும் என்ற டெக்னிக்கை முதல் முதலில் துணிச்சலாகக் கையாண்டது ஒரு பட்டு நிறுவனம். “”தரமே நிரந்தரம் அதுதான் எங்கள் தாரக மந்திரம்” என்ற வாசகத்தை வாடிக்கையாளர்களின் மீது தெளித்து, அவர்களை உள்வாங்கிக் கொண்டது அந்த பட்டு விற்பனை நிறுவனம்.

வேட்டியே கட்டாத, கட்டத் தெரியாத இளைஞர்களைக் கவர அதே வெள்ளை நிறத்தில் பனியன், கைக்குட்டை, பெல்ட், செல்போன் கவர் என்று அவர்களின் தேவையை அறிந்து, பூர்த்திசெய்து வேட்டி கட்டாதவர்களையும் வேட்டி கட்ட வைத்துவிட்டது ஒரு வெண்ணிற ஆடை தயாரிப்பு நிறுவனம். வேட்டி கட்டுபவர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே போகிறதே என்று கவலைப்படாமல் சிறிது மாற்றிச் சிந்தித்ததன் விளைவால் விற்பனையிலும் புரட்சி செய்திருக்கிறது அந்த நிறுவனம்.

பிரபலமான கடற்கரை ஒன்றில் ஐஸ்கிரீம் சாப்பிடுபவர்கள் சாப்பிட்ட பின்னர் அதன் கப்புகளைக் கண்ட இடங்களில் வீசினார்கள். இவற்றைச் சேகரித்து எடுத்து இடத்தைச் சுத்தம் செய்யும் தொழிலாளர்களுக்கு அதிகமான சம்பளம் கொடுக்க வேண்டியிருந்தது. துப்புரவுத் தொழிலைச் செய்ய போதிய தொழிலாளர்களும் கிடைக்கவில்லை. இதற்கு ஒரு முடிவு கட்ட வித்தியாசமாக சிந்தித்ததன் விளைவுதான் கோன் ஐஸ்.

ஐஸ்கிரீம் விலையையும் உயர்த்த முடிந்தது. கண்ட இடங்களில் தேவையற்ற குப்பைகள் சேருவதும் இல்லாமல் போனது. நிறுவனத்தின் லாபமும் பல மடங்கு அதிகரித்தது. காலண்டர், டெலிபோன் டைரி, நோட்பேடு, கடிகாரம், கேமரா, டார்ச்லைட், அலாரம், மியூசிக் பிளேயர், கால்குலேட்டர், நினைவுபடுத்தும் அலாரம், குறுந்தகவல்களைக் குறித்த நேரத்தில் அனுப்பும் வசதி, பொழுதைப் போக்கிட விளையாடும் வசதி, இணைய தளங்களைப் பார்க்கும் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் சின்னஞ்சிறு கையடக்கக் கருவியான செல்போனில் இருப்பதால்தான் இன்று அதன் விற்பனை ஒவ்வோராண்டும் பல கோடிகளைத் தொடுகிறது. சாதாரண பாமரன் முதல் பணம் படைத்தவர்கள் வரை அனைவருக்குமே செல்போன் ஓர் அங்கமாகவே மாறிப்போய் விட்டது.

கடுமையான வறுமையிலும் தான் அணியும் கறுப்புக்கோட்டின் கிழிசல்களை வெள்ளை நூலால் தைப்பாராம் மகாகவி பாரதி. கறுப்பில் வெள்ளை நூல் பளிச்சென்று அசிங்கமாகத் தெரிகிறதே என்று அந்த நூல் மீது கறுப்பு மையை தடவிக்கொண்டு வெளியில் வருவாராம்.

அதனால்தானோ என்னவோ அவர் அணிந்திருந்த உடையாலும், எழுதிய பாடல்களாலும் மனிதர்களின் மனங்களை உழுதாரா எனத் தெரியவில்லை. வெள்ளைத் தலைப்பாகையும், முறுக்கிய அரும்பு மீசையும், கருநிறக் கோட்டும் பாட்டுப் பாரதியை அடையாளம் காட்டின.

சட்டை இல்லாத உடலும், அணிந்திருந்த கண்ணாடியும், கையில் இருந்த கைத்தடியும் மகாத்மாவின் மந்திர சக்திகளாகவே இருந்தன. காவி உடையும், அதே நிறத் தலைப்பாகையும் சுவாமி விவேகானந்தரின் விவேகத்தையும், வீரத்தையும் வெளிப்படுத்தின.

இப்படியாக தோற்றத்தில்கூட கொஞ்சம் மாற்றிச் சிந்தித்து அதன்படி செயல்பட்டவர்கள் வாழ்வில் ஓர் உயர்ந்த இடத்தைத் தொட்டிருக்கிறார்கள். எனவே சின்னச் சின்ன விஷயங்கள்கூட மிகப்பெரிய மாற்றங்களைத் தந்திருக்கின்றன.

எனவே தோற்றம், பேச்சு, செயல் இவை மூன்றிலும் ஏதேனும் ஒன்றிலோ அல்லது மூன்றிலுமோ கொஞ்சமாவது மாற்றிச் சிந்தித்து, தேவைக்குத் தக்கவாறு, வித்தியாசங்களையும் குழைத்து, செய்யப் பழகி விட்டால் வெற்றி உங்களைத் தேடி வந்து உங்கள் வீட்டுக் கதவைத் தட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top