சேவல் கூவும் சத்தம் கேட்டு கண் விழித்த வசந்தன் “அதற்குள்ளே விடிந்து விட்டதா” என்றவாறு கடிகாரத்தைப் பார்த்தவன் அதிகாலை 2.30 என்பதை பார்த்த்தும் “கோதாரி விழுந்தது….நேரம்கெட்ட நேரத்தில கூவித்தொலைக்குதே இந்த சேவல்” என கடிந்துகொண்டே மறுபக்கம் திரும்பிப் படுத்தான். ஆனால் நித்திரை என்னமோ எட்டாக் கனியாகவே இருந்தது.
‘அவள் யாராக இருக்கும்? அவள் முகத்தில் என்னை வெகு நாட்களாக தெரிந்த உணர்வுகள் இருந்துச்சே… ஆனா இதுக்கு முன் இவளை பார்த்ததாக ஞாபகம் இல்லை…. அப்பிடி இருக்க எப்பிடி….? ஐயர் சொன்னது அவளைத்தானா…? அப்பிடி எண்டா அவளுக்கு என்னை தெரிந்திருக்க வேண்டும்…. ‘ முதல் நாள் காலை அவன் பார்த்த நினைவுகள் மனதிற்குள் ஓடிக்கொண்டிருந்தது.
முதல் நாள்…
வசந்தனின் பிறந்த நாள். அம்மாவின் அர்ச்சனை தாங்க முடியாமல் கோவிலில் அர்ச்சனை செய்ய புறப்பட்டான். அவனது வாய் பேசி பார்த்தது குறைவு. ஆனால் கைப்பேசி இல்லாமல் காண முடியாது. முகபுத்தகத்தில் கடலை போட்டுக்கொண்டு கோவிலினுள் நுழைந்தவன் எதிரே வந்த ஒரு பொண்ணுடன் மோதப்பார்த்து நிமிர்ந்து பார்த்தான். ஓரிரு நிமிடங்கள் அப்பிடியே நின்றவன் சட்டென விலகிக்கொண்டான். வெட்கம் தின்னும் புன்னகையுடன் அவள் நடந்து சென்றாள்.
பொது நிறம் – தன் நிறத்துக்கு பொருந்திய நிறத்தில் சேலை – தலையில் மல்லிகைப் பூச்சரம் – அழகுக்கு அழகு சேர்க்கும் வீபூதி, சந்தனம், குங்குமம் – கையில் அர்ச்சனைத் தட்டு.- கண்கள் பேசிடும், உதடுகள் துடித்திடும் மனதை திருடிடும் அதிசயம்.
கோயிலினுள் செல்வதா, இல்லை அவளின் பின் செல்வதா என்ற குழப்பத்தில் கடவுள் வென்றிட கோயிலினுள் சென்றான். சுற்றுபிரகாரத்தை சுற்றி வந்து ஐயரிடம் தனது பெயரில் அர்ச்சனைக்கு கொடுத்தான்.
“தம்பிக்கு இண்டைக்கு பிறந்த நாளா?”
“ஆமா ஐயா… உங்களுக்கு எப்பிடி தெரியும்?” – ஆச்சரியத்தோடு கேட்டான்
“இப்பத்தான் உங்களுக்கு வேண்டியவங்க வந்து இதே பெயர், ராசி, நட்சத்திரத்தில அர்ச்சனை செய்திட்டு போறாங்க” என்றார். ஐயர்.
குழப்பத்தை காட்டிக்கொள்ளாது சமாளித்து விட்டு வெளியேறினான்..
அலுவலகத்துக்கு போனவன் தன் நண்பன் கூட நடந்தவற்றை பகிர்ந்து கொண்டான்.
“மச்சி… எல்லாம் ஓகே டா. அவள் உன்னைத்தான் பார்த்து சிரிச்சவள் எண்டு எப்பிடி சொல்றது. உனக்கு பின்னுக்கு நின்றவங்களை பார்த்து சிரிச்சிருக்கலாம்ல…” – நண்பன்
“சரி அதை விடு… என்ர பெயரில அர்ச்சனை செய்தது…?” – வசந்தன்
“நீ பார்த்த பொண்ணு அர்ச்சனை செய்யாமல் இருந்திருக்கலாம். உன்ரபெயரில அர்ச்சனை செய்த பொண்ணை நீ பார்க்காமல் இருந்திருக்கலாம்ல” – நண்பன்
“உன்கிட்ட போயி சொல்லவந்தன் பாரு… என்ட புத்தியை ……”
“நான் செருப்பு போடலடா. வேணும் என்டா பக்கத்தில இருக்கிறவள்ட வாங்கி தரட்டா…?”
அன்றிலிருந்து வலை வீசி தேட ஆரம்பித்தான். நாட்களும் நகர்ந்தது… அவ்வப்போது அவள் தரிசனமும் கிடைத்தது. ஆனாலும் சந்திப்பதற்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. வசந்தனை காணும் போதெல்லாம் ஒரு புன்னகையுடன் நழுவிக் கொண்டாள்.
காதல், கல்யாணம் என்று எதிலுமே பிடிமானமில்லாமல் வாழ்ந்தவனுக்கு இந்த வாழ்க்கை முறையும் ஏனோ பிடித்துக்கொண்டது. காதல் மீது காதல் கொண்டு அவள் பார்வைக்காக ஏங்கி நின்றான்.
ஒருநாள்…
“வசந்த்… அந்த போட்டோவை பார்த்தனியா…? தாய் கேட்க
“எந்த போடோம்மா?”
“பொம்பளைண்ட போடோ தாண்டா…. முதல்லே சொன்னனான் தானே…”
“இப்போதைக்கு எனக்கு கல்யாணம் வேண்டாம் என்று எத்தனை தடவை சொல்லிட்டன் உங்களுக்கு… இப்போதைக்கு பண்ணுற ஐடியா எதுவும் இல்லை…”
“இந்த வயசில பண்ணாம எப்ப பண்ண போற… எங்களுக்கும், உனக்கு ஒரு கலியாணத்தை பண்ணிவைச்சு பேரப்பிள்ளைகளை பார்க்கணும் என்ற ஆசை இருக்கும் தானே…” – அம்மா
“அதான் அக்காண்ட பிள்ளைகள் இருக்குறாங்க தானே. அவங்களை தூக்கி கொஞ்சிட்டு இருங்கோ…”
“என்னதானிருந்தாலும் ஆம்பிளைப்பிள்ளைண்ட வாரிசு போல வருமாடா…”
“அம்மா… தயவு செய்து இத்தோட விட்டுடுங்கோ… இதைப் பற்றி இனிமே கதைக்க வேண்டாம்”
“ஏன்… யாரையாச்சும் விரும்புறியா?”
“அது வந்து….. அப்பிடி ஒன்றும் இல்லைமா…” சொல்ல வந்ததை சொல்லாமல் தவிர்த்துக் கொண்டான்.
“பட்டென்று சொல்ல வேண்டியது தானே…. அதென்ன வந்து… போயி…” கேட்டுக்கொண்டே அக்கா உள்ளே நுழைந்தாள்
“ம்…. ஒன்றுமில்லைனு அர்த்தம்…” என்றவாறு எழுந்தவனின் தோளைப் பிடித்து இருக்க வைத்து விட்டு
“தம்பி… நானும் உன்ர வயசை தாண்டித்தான் வந்தனான். என்கிட்ட மறைக்காம சொல்லு…. யாரந்த பொண்ணு…?” அக்கா கேட்டாள்
“ யாரை அக்கா கேட்கிறாய்…?” – வசந்தன்
“நடிக்காதைடா… யாரையோ பற்றி சொல்ல வந்தனி. உடனே விழுங்கிட்டாய். சொல்லு… யாரது…?” – அக்கா
“அது வந்து…. இப்ப சொல்லேலாது…. நேரம் வரும் போது சொல்லுறன்…”
“என்னது லவ்வா…? அட கோதாரிவிழுந்தவனே… நாங்க உனக்காக ஒரு பொண்ணை பார்த்துட்டு வந்திருக்கிறம். இப்ப போயி லவ்வு கிவ்வு என்கிறியே…. அவங்களுக்கு என்ன பதில்டா சொல்லுறது….” – தாய் கத்தத் தொடங்கினார்.
“நான் தான் அப்போ தொடக்கி வேண்டாம் வேண்டாம் எண்டு சொல்லிட்டு இருக்கேன் தானே. அப்புறம் என்ன…?” – வசந்தன்
“வேணாம் எண்டு தானேடா சொன்னாய். லவ் பண்ணுறன் எண்டு சொன்னியா. இல்லையே ….” – தாய்
“அம்மா… எனக்கே அவள் யார் எவர் என்று சரியா தெரியல. தெரிஞ்ச பிறகு சொல்லலாம் என்று இருந்திட்டன்….” – வசந்தன் கூறினான்.
“உன்ர முட்டாள் தனத்தால பார்…. இப்ப அவங்களுக்கு என்ன பதில் சொல்லுறது. நல்ல குடும்பம். வசதியான படிச்ச பிள்ளை. நம்ம குடும்பத்துக்கு ஏற்ற பிள்ளைடா… எங்க எல்லோருக்கும் பிடிச்சிருக்கு. நீயும் ஒருதடைவை பிள்ளைட படத்தை பாரு தம்பி… உனக்கும் பிடிக்கும்….” அம்மா.
வெருட்டென கோபத்துடன் எழுந்தான்.
“கோபம் மட்டும் பொத்துகிட்டு வந்துடும் அப்பன் மாதிரி…” – அம்மா சொன்னார்.
“வசந்த்… இப்பிடி பண்ணினா என்ன.. வருகிற வெள்ளிக்கிழமை பிள்ளையார் கோவில்ல வைச்சு பார்க்கிறது என்று தான் யோசிச்சு இருக்கிறம். நீயும் சும்மா வா. வந்து பார்த்துட்டு பிடிக்கலைனா பிடிக்கலை என்று சொல்லு. முடிஞ்சு…” அக்கா கூறவும்….
“என்னடி நீயும் அவன் கூட சேர்ந்து விளையாடுறியா… அவங்க என நினைப்பாங்க சொல்லு பார்ப்பம்…” – அம்மா
“எனக்கு புரியுது அம்மா… அவனுக்கு பிடிக்காதவளை கட்டி வைச்சு ஏன் ரெண்டு பேரோட வாழ்க்கையையும் பாழாக்குவான்… வந்து பார்க்கட்டும். பிடிச்சிருந்தா ஓகே. இல்லைனா விடுவம்… வேறென்ன பண்ண….”- அக்கா
“என்னமோ செய்து முடியுங்க…” – அம்மா கூறினார்
“நான் வேண்டாம் என்று சொல்லுறதை கோவிலில வைச்சுதான் சொல்லணும் என்றால் அதற்கும் நான் என்ன செய்ய…” – வசந்தனும் அரைகுறை மனதுடன் சம்மதித்தான்.
ஆலயத்தினுள் நுழையும் போது அவளது முகம் வந்து போக ஒரு நிமிடம் தயங்கினான். அவளுக்கு துரோகம் செய்வதாக ஒரு குற்ற உணர்வு அவனுள் படர்ந்தது.
உடம்பு இறைவனை வழிபட மனசும் கண்களும் அவளை தேடியது.
ஆலயத்தின் ஒதுக்கு பக்கத்தில் இரண்டு குடும்பமும் சந்தித்துக்கொண்டது.
சிலநிமிட சம்பிரதாய பகிர்வின் பின்னர்..
“ஹம்ஷா… இங்க வாம்மா…” ஹம்ஷாவின் தாய் அழைத்தார்.
குனிந்த தலை நிமிராது மறைவிலிருந்து வெளியே வந்தாள்…
வசந்தனின் மனதுக்குள் சந்தோசத்தில் ஒன்று இரண்டாக பறக்க ஆரம்பித்த பட்டாம்பூச்சிகள் அவள் அருகே வர வர ஆயிரத்தை தாண்டிக்கொண்டிருந்தது….
“அவள் தான்…. அவள் தான்… அவளே தான்….” அவன் மனசு சொல்லிக்கொண்டது.
“சரி நாங்க வீட்ட போயிட்டு கலந்து பேசிட்டு நல்ல முடிவாக சொல்லுறம்” – வசந்தனின் தாய் சொல்ல,
“இல்லைமா … எனக்கு முழுசம்மதம். இதுல கலந்து பேசுறதுக்கு ஒன்றுமில்லை” வசந்தன் சொன்னதும் அவனது தாய் மற்றும் சகோதரி அவனை ஆச்சரியத்தோட பார்க்க, அவள் மட்டும் அதே நாணம் கலந்த புன்னகையுடன் அவனை நோக்கினாள்.