Home » பொது » இராசேந்திர பிரசாத்!!!
இராசேந்திர பிரசாத்!!!

இராசேந்திர பிரசாத்!!!

டாக்டர் இராசேந்திர பிரசாத்

டாக்டர் இராஜேந்திரப் பிரசாத் (3 டிசம்பர் 1884 – 28 பிப்ரவரி 1963) இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவரும் இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார்.

காங்கிரஸ் கட்சித் தலைவர்களுள் ஒருவர். 1950 முதல் 1962 வரை இந்திய குடியரசுத் தலைவராக இருந்தார்.

இந்திய அரசியல் சாசனத்தில் மிக உயர்ந்த ஆளுமையாக கருதப்பட்ட மற்றும் நாட்டின் முதல் குடிமகன் என கௌரவமாக போற்றப்பட்ட குடியரசு தலைவர் பதவியை ஏற்ற சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசு தலைவர், டாக்டர் ராஜேந்திர பிரசாத் ஆவார். இந்திய குடியரசு தலைவர்கள் வரலாற்றில், இரு முறை குடியரசுத் தலைவர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே குடியரசுத் தலைவர்.

பிறப்பு:

இவர் 1884ம் ஆண்டு டிசம்பர் 3ம் தேதி பீகாரின் சிவான் மாவட்டத்திலுள்ள செராடெ என்ற இடத்தில் பிறந்தார். இவருடைய தந்தை மகாவீர சாகி பெர்சிய மொழியிலும் சமஸ்கிருத மொழியிலும் தேர்ந்திருந்தார். இவரது தாயார் கமலேசுவரி தேவி சமயப் பற்றுள்ள ஒரு மாது ஆவார்.

சிறு வயதில் தன் குடும்பத்தாராலும் நண்பர்களாலும் ராஜன் என அழைக்கப்பட்டார். தனது 12 ஆம் வயதில் ராஜவன்சி தேவி என்ற பெண்ணை மணந்தார். திருமணத்திற்குப் பின்பு பிரசாத் தனது தமையனார் மகேந்திர பிரசாத்துடன் வசித்து வந்தார்.

கல்வி:

இராஜேந்திர பிரசாத்திற்கு ஐந்து வயதானபோது ஒரு இஸ்லாமிய மௌல்வியிடம் பெர்சியம், இந்தி மற்றும் கணிதம் கற்க இவருடைய பெற்றோர் ஏற்பாடு செய்தனர்.சாப்ரா மாவட்டத்திலுள்ள பள்ளியில் பிரசாத் தனது தொடக்கக் கல்வியை முடித்தார். பின்னர் டி. கே கோஷ் அகாடமியில் இரண்டாண்டு பயின்றார்.

கல்கத்தா பல்கலைக் கழகத்தில் நுழைவுத் தேர்வு எழுதி மாதம் ரூ.30 உதவித் தொகைப் பெற்று தனது இடைநிலைக் கல்வியைத் தொடர்ந்தார். கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பயின்று 1907ம் ஆண்டு பொருளியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். படிக்கும் காலத்தில் பீகார் மாணவர் அவையை உருவாக்கினார் இராசேந்திர பிரசாத்.

பேராசிரியராக பணியாற்றிக் கொண்டிருக்கும்போதே சட்டத்தில் மேற்படிப்பு படித்து தேர்வில் முதல் மாணவனாக தங்கப் பதக்கத்தை வென்றார். பின்னர் சட்டத்துறையில் முனைவர் பட்டமும் பெற்றார்.

விடுதலைப்போரில் ஈடுபாடு:

1911 ஆம் ஆண்டு, கொல்கத்தாவில் சிறிது காலம் வழக்கறிஞராக பணியாற்றிய அவர், 1916 ஆம் ஆண்டு பாட்னாவிற்கு இடம்பெயர்ந்து, பீகார் மற்றும் ஒரிசா மாநிலங்களுக்கான உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.

அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினராக சேர்ந்த அவர், தன்னுடைய வழக்கறிஞர் பணியைத் துறந்து, மகாத்மா காந்தியின் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டு ஒத்துழையாமை இயக்கத்திலும் சேர்ந்தார். மும்பையில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டிற்குத் தலைவராகப் பொறுப்பேற்ற அவர், 1942 ல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்துகொண்டு கைதுசெய்யப்பட்டு மூன்றாண்டு சிறை தண்டனையும் பெற்றார்.

மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தால் கவரப்பட்டு தன் வேலையைத் துறந்து, அவ்வியக்கத்தில் இணைந்தார். ‘வெள்ளையனே வெளியேறு’ என்ற போராட்டத்தில் கலந்து கொண்டதால் 1942ம் ஆண்டு கைது செய்யப்பட்டு மூன்றாண்டு கால சிறைவாசத்திற்குப் பின் 1945ம் ஆண்டு ஜூன் மாதம் 15ம் தேதி விடுதலையானார்.

பதவி:

1946ம் ஆண்டு இந்திய அரசியலமைப்பு அவையின் தலைவராக நியமிக்கப்பட்ட இவர், 1947ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் தலைவராக மூன்றாம் முறையாகப் பதவியேற்றார்.

இந்தியா சுதந்திரம் அடைந்த இரண்டரை ஆண்டுகளுக்குப் பின் புதிய அரசியலமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, 1950ம் ஆண்டு இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராகப் பதவியேற்றார் இராசேந்திர பிரசாத்.

1952, 1957 ஆகிய ஆண்டுகளில் இரண்டு முறை குடியரசுத் தலைவராகப் பதவியேற்ற ஒரே குடியரசுத் தலைவரான இராஜேந்திரப் பிரசாத் 1962ம் ஆண்டு வரை பதவியிலிருந்து, பின் ஓய்வு பெற்றார்.

விருது:

இவருக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

மரணம்:

இந்திய முதல் குடியரசுத் தலைவர் இராசேந்திர பிரசாத் 1963ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28ம் தேதி காலமானார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top