Home » சிறுகதைகள் » நளதமயந்தி பகுதி – 2
நளதமயந்தி பகுதி – 2

நளதமயந்தி பகுதி – 2

மகிழ்ச்சியடைந்த அன்னப்பறவை, சரி, தமயந்தி! உன் காதலனுடன் சேர்த்து வைப்பது என் பொறுப்பு. உன்னிலும் உயர்ந்தவள் இந்த உலகில் யாருண்டு! கவலை கொள்ளாதே! உடனே நிடதநாடு நோக்கி பறக்கிறேன். உன் உள்ளம் கவர் கள்வனிடம் உன் காதலைத் தெரிவித்து விடுகிறேன், என்று சொல்லிவிட்டு வேகமாக பறந்தது. தமயந்தி தன் காதல் நிறைவேறுமோ அல்லது ஏதேனும் இடைஞ்சல் வருமோ என்ற கவலையிலும், நளனை எப்போது காண்போமோ என்ற ஏக்கத்திலும் முகம் வாடியிருந்தாள்.
அப்போது அவளது தோழிகள் வந்தனர். அவர்களுக்கு ஆச்சரியம்! எப்போதும் மலர்ந்த தாமரை போல் இருக்கும் நம் இளவரசியின் முகம், சூரியன் அஸ்தமான பின் வாடித் தொங்கும் சூரியகாந்தி போல் மாறியது ஏன் என்று புரியாமல் தவித்தார்கள். உடல்நிலை சரியில்லையோ! அவர்களுக்கு கலக்கம். உடனே அவர்கள் அரசியிடம் ஓடினார்கள். மகாராணி! நம் இளவரசியார் நந்தவனத்தில் அமர்ந்திருக்கிறார்கள். அவர்களது முகம் என்றுமில்லாத வகையில் வாடிப்போய் உள்ளது. நாங்கள் காரணம் ஏதும் கேட்கவில்லை. தங்களிடமே சொல்லிவிடலாம் என விரைந்து வந்தோம், என்றனர்.
பெற்றவளுக்கு இதைக்கேட்டு பதட்டம். கையோடு தன் கணவன் வீமராஜனிடம் ஓடினாள். விஷயத்தைச் சொன்னாள். மன்னனுக்கோ மகள் மேல் கொள்ளைப் பாசம். இருவருமாய் இணைந்து நந்தவனத்துக்கு ஓடி வந்தனர்.மகளின் தலையைக் கோதிய தாய்,தமயந்தி, வா! அரண்மனைக்குச் செல்லலாம். உன் முகத்தில் என்ன வாட்டம்? எனக் கேட்டாள். உடம்பைத் தொட்டுப் பார்த்தாள். சூடு ஏதும் தெரியவில்லை.அரசனும்,அரசியும் அவளை அரண்மனைக்குள் அழைத்துச் சென்றனர். உள்ளே சென்றதும், அவள் தன்தந்தையின் காலடிகளில் விழுந்தாள்.
மகளே! உனக்கு என்னாயிற்று! திடீரென ஏன் இப்படி காலில் விழுகிறாய்? என்றான். அவளிடமிருந்து பதிலேதும் இல்லை. பெருமூச்சு மட்டுமே வெளிப்பட்டது. அவளது முகம் வியர்த்திருந்தது. வீமராஜனுக்கும், அவன் மனைவிக்கும் ஓரளவு புரிந்து விட்டது. இது இளவயது வியாதி தான் என்று! இருவரும் அவளை படுக்க வைத்து, சேடிப்பெண்களை அழைத்து மயிலிறகால் விசிறும்படி உத்தரவிட்டு, தங்கள் அறைக்குச் சென்றனர்.
அன்பரே! நம் பெண்ணின் மனநிலை நமக்கு புரிந்துவிட்டது. அவளுக்கு சிறந்த மணாளனைத் தேர்ந்தெடுக்க வேண்டிய காலகட்டம் வந்துவிட்டதை அவள் நமக்குச் சொல்லாமல் சொல்லியிருக்கிறாள். நமக்கு ஒரே செல்ல மகள். அவள் விரும்பும் கணவன் அமைய வேண்டுமே! எல்லா நாட்டு மன்னர்களுக்கும் ஓலை அனுப்புவோம். சுயம்வரத்துக்கு ஏற்பாடு செய்வோம். நம் அன்புப் பெண்ணுக்கு யாரைப் பிடித்திருக்கிறதோ, அவனை அவளே தேர்வு செய்து கொள்ளட்டுமே, என்றாள்.
சரியான யோசனை சொன்னாய். உடனடியாக ஏற்பாடு செய்து விடுகிறேன், என்றவன், பலநாட்டு மன்னர்களுக்கும் தகவல் அனுப்பினான். என் குமாரத்தி தமயந்திக்கு திருமணம் செய்ய உத்தேசித்துள்ளேன். அவள் விரும்பும் கணவனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்  வகையில், சுயம்வரம் நடத்தப்படும். இன்னும் ஏழே நாட்கள்.
அடுத்த வாரம் சுயம்வரம், என்று அந்தந்த நாடுகளுக்குச் சென்று அறிவிக்கும்படி தூதர்களை அனுப்பினான். தன் நாட்டு மக்களுக்கு இளவரசிக்கு சுயம்வரம் நடக்கும் விபரத்தை முரசறைந்து தெரிவித்தான். மக்கள் மகிழ்ந்தனர். தமயந்தியின் சுயம்வர விபரமறிந்த மன்னர்கள் மகிழ்ந்தனர். அவள் தனது மனையாட்டியனால் அதை விட உயர்ந்த யோகம் தங்களுக்கு ஏதுமில்லை என அவர்கள் எண்ணினர். ஏழுநாட்கள் என்று அறிவித்திருந்தாலும் கூட, அதற்கு முன்னதாகவே விதர்ப்பநாடு வந்து சேர்ந்தனர்.
இந்த சமயத்தில், தமயந்தியிடமிருந்து தூது சென்ற அன்னம் நளமகராஜனின் இல்லத்தை அடைந்தது. அவன் போர்க்களத்தில் வீரத்திருமகன். வாளால் பருந்துகளுக்கும், கழுகுகளுக்கும் விருந்து வைப்பவன். அதாவது, எதிரிகளை மாய்த்து அவர்களது உடலை அவற்றுக்கு கொடுப்பவன். அப்படிப்பட்ட வீரத்திருமகன், இந்த காதல் விஷயத்தில் சோர்ந்து கிடந்தான்.
அன்னம் வந்து சேர்ந்ததும் ஆவலுடன் அதனருகே அமர்ந்து கொண்டான்அன்னங்களின் தலைவனே! நீ என் தமயந்தியைப் பார்த்தாயா? அவள் என்ன சொன்னாள்? நிச்சயமாக சம்மதித்திருப்பாளே! உம்…அங்கே என்ன நடந்தது? நான் அவளைப் பார்க்காமலே ஏற்றுக்கொண்டது போல, அவளும் என் காதலை ஏற்றாளா? என்றான் அவசரமும் படபடப்பும் கலந்து! அவனது அவசரத்தைப் புரிந்து கொண்ட அன்னம்,உன்னையும் அவள் ஏற்றாள். உன் பெருமையை உணர்ந்து கொண்டாள். கண்டதும் காதல் கொள்வதே உலகில் இயல்பு. நீங்களோ காணாமலே காதல் கொண்டீர்கள். காதலுக்கு மட்டும் தான் இத்தகைய சக்தி இருக்கிறது, எனறது.
நளன் இவ்வாறு பேசிக்கொண்டிருந்த வேளையில், நிடதநாட்டுக்கு வீமராஜன் அனுப்பிய தூதுவர்கள் வந்து சேர்ந்தனர். அவர்கள் வாயில்காவலர்களிடம், தங்கள் வந்த காரணத்தைக் கூறினர். காவலர்கள் நளனிடம் இதுபற்றி அறிவிக்க, நளன் அவர்களை அழைத்து விஷயத்தைத் தெரிந்து கொண்டான். உடனே புறப்பட்டு வருவதாக உங்கள் ராஜாவிடம் சொல்லுங்கள், என அவர்களை அனுப்பிவிட்டு, தேரைக் கொண்டு வர சொன்னான்.
சாரதியிடம்,விதர்ப்பநாடு நோக்கி விரைந்து செல், என உத்தரவிட்டான். படைவீரர்கள் புடைசூழ விதர்ப்பநாட்டை அடைந்தான்.  இப்போதெல்லாம் திருமணத்துக்கு மணப்பொருத்தம் பார்க்கிறார்கள். நளன் எப்படி பொருத்தம் பார்த்தான் தெரியுமா? தங்கம் போல் மின்னும் நெல்மணிகள் கொத்துக் கொத்தாக குலுங்கும் கதிர்களையுடைய வயல்சூழ்ந்த நாடு தன்னுடையது. விதர்ப்பநாடோ, குவளைக் கொடியில் பூத்துள்ள மலர்களில் இருந்து சிந்தும் தேன் வயல்களை நிறைத்து சகதியாக்க, அதில் செந்நெல் கதிர்கள் விளைந்த செழிப்பைக் கொண்டதாம்.ஆஹா! இரு நாடுகளுமே செழிப்பில் குறைந்தவையல்ல. மிகுந்த பொருத்தம் தான், என்று தனக்குள் சொல்லிக் கொண்டான்.இங்கே இப்படியிருக்க, இந்திரலோகத்திற்கு சென்றார் நாரத முனிவர்.
நாராயணா! என்ற மந்திரத்தை முழக்கியபடியே சென்ற நாரதரை இந்திரன் வரவேற்றான். சிவபெருமானின் நெற்றிக்கண்ணையும் குளிரச் செய்யும் வகையில் மகதி என்னும் யாழ் மீட்டி இனிமையாய் பாடும் மாமுனிவரே, வர வேண்டும், வர வேண்டும், ஆசனத்தில் அமருங்கள். எல்லா லோகங்களுக்கும் சென்று வருபவர் நீங்கள். ஏதேனும்விசேஷத்தகவல் உண்டா? என்றான். நாரதர் சிரித்தார்.
நினைத் ததைத் தரும் கற்பகமரம், கேட்டதைத் தரும் சிந்தாமணி ஆகியவற்றையெல்லாம் கொண்ட பெரும் செல்வனே! தேவாதி தேவனே! வஜ்ராயுதம் ஏந்தி தேவர்களுக்கு துன்பம் தந்த பறக்கும் மலைகளில் சிறகுகளை வெட்டி வீசிய வீரத்திருமகனே! விசேஷம் இல்லாமல் இங்கே வருவேனா! என்றதும், என்ன சங்கதி? என்று ஆவலுடன் கேட்டான் இந்திரன்.
இந்திரா! வழக்கமாக உன்னைக் காண பலதேசத்து மன்னர்களும் வருவார்களே! இன்று யாரையும் காணவில்லையே, கவனித்தாயா? என்றார். இதுபற்றி இந்திரன் ஏற்கனவே குழம்பிப்போயிருந்தான். ஆம்! நாரத முனிவரே! இதற்கான காரணம் என்ன என்று தெரிந்தால் என் குழப்பம் தீரும். என்றான். (அக்காலத்தில், பூலோக மன்னர்கள் இந்திரனைக் காண அடிக்கடி வருவார்கள் என்ற தகவல் நளவெண்பாவில் மறைமுகமாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது)விதர்ப்பநாட்டு இளவரசி தமயந்திக்கு சுயம்வரம் நடக்கப்போகிறது. பூலோக மன்னர்களெல்லாம் அங்கு போய் குவிந்திருக்கிறார்கள். அதனால் தான் உன்னைக் காண யாரும் இங்கு வரவில்லை, என்றதும், அந்தளவுக்கு அவள் பேரழகியா அல்லது இந்திரலோகத்தைப் போல் பெரும் செல்வம் படைத்தவளா? என்று கேட்டான்.
இந்திரா! தமயந்தி, உன் லோகத்தில் இருக்கும் ரம்பை, ஊர்வசி, திலோத்துமா ஆகியோரின் அழகையெல்லாம் ஒன்று சேர்த்தது போல கடைந்தெடுத்த வடிவம். வண்டுகள் மொய்க்கும் இயற்கை நறுமணத்தைக் கொண்ட கூந்தலை உடையவள். இளமையான யானைப்படையை உடைய வீமனின் மகள். அவன் குலம் தழைக்க வந்த அணையாவிளக்கு. மன்மதனே அவளது விழியழகை நினைத்துக் கொண்டு தான் காதல் பாணத்தையே மக்கள் மீது தொடுப்பான், என்றார் நாரதர்.
அவரது சொற்கள் இந்திரனின் மனதில் ஆசை அலைகளை எழுப்பின. அந்த தமயந்தி இந்திரலோகத்து ராணியானால் எப்படியிருக்கும்? இங்கே ஏற்கனவே பேரழகி இந்திராணி இருக்கிறாள். அவளையும் மிஞ்சும் வகையில் இன்னொரு ராணி வந்தால்… அவன் கற்பனைச் சிறகை விரித்தான். அது மட்டுமல்ல! இந்திரனின் அவையில் வீற்றிருந்த அக்னி, வருணன், எமதர்மராஜன் ஆகியோருக்கும் தமயந்தியின் மீது ஆசை ஏற்பட்டது. அனைவருமாக சேர்ந்து விதர்ப்ப தேசத்திற்குசெல்ல முடிவாயிற்று.
அப்போது, அவர்களது ஞானதிருஷ்டியில், நிடதநாட்டு அரசன் நளனை தமயந்தி விரும்புகிறாள் என்பது பட்டது. அதற்கேற்றாற் போல், நளன் சுயம்வர மண்டபத்தை நோக்கி, வேகமாக தன் தேரில் மற்றவர்களை முந்திச்செல்லும் வகையில் சென்று கொண்டிருப்பதைக் கண்டனர். அவனைத் தடுத்து நிறுத்தி, தாங்கள் முந்திக்கொள்ள வேண்டும் என்று கண்ணிமைக்கும் நேரத்தில் விதர்ப்பநாடு வந்து நளனைத் தடுத்தனர்.தன் முன்னால் வந்து நிற்கும் தேவேந்திரனைக் கண்ட நளன் அவனை வணங்கினான்.
தேவேந்திரரே! என்னை ஏன் தடுக்கிறீர்கள்? நான் தமயந்தி சுயம்வரத்தில் கலந்து கொõள்ள வேகமாகச் சென்று கொண்டிருக்கிறேன். உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும்? என்றான். நளனே! நான் இப்போது உனக்கு ஒரு கட்டளையிடப் போகிறேன். அதை நீ முடித்துத் தர வேண்டும், என்றான். யார் எந்தப் பணியைத் தந்தாலும் இல்லை என்று சொல்லாமல், அதை முடித்து தரும் இயற்கையான குணமுடைய நளன், இந்திரன் தன் ஆசைக்கே தடை விதிக்கப்போகிறான் என்பதை சற்றும் யோசிக்காமல், சொல்லுங்கள் தேவேந்திரா! தங்கள் கட்டளையை நிறைவேற்ற நான் தயார் என்று வாக்களித்து விட்டான்.
மதம் படைத்த யானைப்படையை உடைய மாபெரும் மன்னனே! நாங்கள் தேன்சிந்தும் மலர் சூடிய தமயந்தியைப் பெண் பார்க்க வந்துள்ளோம்.
எங்கள் நால்வரில் யாரேனும் ஒருவரது தகுதி, திறமையறிந்து யாரை அவளுக்குப் பிடித்துள்ளதோ, அவர்களுக்கே அவள் மாலை சூட்ட வேண்டும் என சொல்லி வர வேண்டும், என்று கிடுக்கிப் பிடி போட்டான் இந்திரன். நளன் அதிர்ந்துவிட்டான். யாராவது நம்மிடம் ஏதாவது செய்து கொடுக்க வேண்டும் எனக் கேட்டால், அவசரப்பட்டு வாக்கு கொடுத்து விடக்கூடாது. அவரது கோரிக்கையை வற்புறுத்திக் கேட்டு, நம்மால் செய்ய முடியுமானால் தான் வாக்கு கொடுக்க வேண்டும்.
நளசரித்திரம் படிக்கும் நமக்கு இது ஒரு பாடம். ஆனாலும் என்ன செய்வது? கொடுத்த வாக்கை மீற முடியுமா? தன் மனதில் இருக்கும் மங்கைநல்லாளின் மீதான ஆசையை தூக்கி எறிந்து விட வேண்டியது தான்! ஒருநாளாவது தமயந்தியுடன் வாழ்ந்தால் அந்த நாள் தன் வாழ்வின் பொன்னாள் என்று நினைத்திருந்த நளனுக்கு, தன் காதல் கானல் நீராகிப் போனது கண்டு வருந்தினான். சரியென தலையாட்டி விட்டான்.
தமயந்தியை நளன் காதலிப்பது தேவர்களுக்கு தெரியும். தமயந்தியும் அதே நிலையில் இருப்பதையும் அறிவார்கள். மற்றவர்களை தூது அனுப்பினால் தமயந்தி மறுத்து விடுவாள். காதலனையே தூது விட்டால் அவளால் என்ன செய்ய முடியும்? இப்படிப் போனது தேவர்களின் கணக்கு.
நளனுக்கும் தன் காதலை தேவர்களிடம் சொல்ல முடியாமல் போய்விட்டது. ஏனெனில், கொடுத்த வாக்கை மீற அவனால் முடியவில்லை. அதேநேரம் தமயந்தியிடம் தூது சென்று, இந்த விஷயத்தை எடுத்துச் சொன்னால், அவளது கண்ணாடி இதயம் நொறுங் கிப் போகுமே!நெஞ்சில் ஆசைக்கனலை மூட்டிய வேகத் தில், அதில் ஏமாற்றம் என்னும் தண்ணீரை ஊற்றி அணைக் கும் பித்தலாட்டக் காரனே என தன்னைத் திட்டவும் செய்வாளே… அவன் யோசித்தான்.
அப்போது தான் இன்னொரு சிக்கலும் எழுந்தது.தன் விஷயம் ஒருபக்கம் இருக்கட்டும்! தேவர்கள் அவர்கள் பாட்டுக்கு, தமயந்தியிடம் தங்களுக்காக தூது செல் என சொல்லிவிட்டார்கள். தமயந்தி கன்னிமாடத்தில் இருப்பாள். அவளைச் சந்திக்க வேண்டுமானால், பெரும் கட்டுக்காவலை மீறிச் செல்ல வேண்டியிருக்குமே! என்ன செய்யலாம்? என்று யோசித்தான் நளன். இந்திரனிடமே அதுபற்றி கேட்டான்.
தேவேந்திரா! உனக்காக நான் தூது போக தயாராக இருக்கிறேன். ஆனால், அரண்மனைக் கன்னிமாடத்தில் காவல் பலமாக இருக்குமே! அதை எப்படி கடந்து செல்வேன்? என்றான். நளனே! நீ தமயந்தியைத் தவிர யார் கண்ணிலும் பட மாட்டாய் எனஉறுதியளிக்கிறேன். வெற்றியுடன் போய் வா, என்று வழியனுப்பி வைத்தான். இதனால் தைரியமடைந்த நளன் தமயந்தி இருக்கும் குண்டினபுரம் அரண்மனைக்குச் சென்றான். அந்த ஊர் தான் விதர்ப்பநாட்டின் தலைநகரம். ஊருக்குள் நுழைந்ததும் அசந்து விட்டான். ஊரின் அழகு அவனை மயக்கியது. அந்த ஊரிலுள்ள வீடுகள் மனைசாஸ்திரப்படி அரண்மனை போல் கட்டப்பட்டிருந்தன.
தெருக்கள் நேராக மிக நீண்டதாக இருந்தன. நகரின் அழகை ரசித்தபடியே, தன் கனவுக்கன்னியிடம், தான் செய்யப்போகும் காதல் தியாகத்தைப் பற்றி பேசுவதற்காக நளன் கன்னிமாடம் சென்று சேர்ந்தான். அவனை முன் பின் பார்த்திராவிட்டாலும், கன்னிமாடத்திற்குள் புகுந்து தன்னருகே வருமளவு தைரியம் நளனைத் தவிர யாருக்கு வரும் என்று கணித்துவிட்ட தமயந்தியின் விழிகள் நளனின் விழிகளைச் சந்தித்தன. குவளை மலரும், தாமரை மலரும் ஒன்றுக்கொன்று பார்த்தது போல அமைந்ததாம் அந்த சந்திப்பு.
தமயந்தியின் கண்கள் குவளை போலவும், நளனின் கண்கள் தாமரை போலவும் இருந்தன. கண்கள் கலந்ததும் காதல் ஊற்றெடுத்தது.
நளனின் பேரழகு தமயந்தியை பைத்தியம் போல் ஆக்கிவிட்டது. ஒரு கட்டத்தில், அவனை அப்படியே அணைத்துக் கொள்ளலாமா என்று கூட தோன்றியது. ஆசை வெட்கத்தை வெல்லப் பார்த்தது. ஆனால், பெண்மைக்கே உரிய நாணம் அவளைத் தடுத்துவிட்டது. அதே நேரம் அன்னம் சொன்ன அடையாளங்களால் அவன் நளன் தான் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டதும், கண்களில் ஆனந்தக்கண்ணீர் துளிர்த்தது. அப்போது, அவள் தன் பவளவாய் திறந்தாள்.
நீங்கள் யார்? அரண்மனையின் கட்டுக்காவலை மீறி கன்னிமாடத்துக்கே வந்துவிட்டீர்களே! உங்களை இங்கே அனுமதித்தது யார்? ஒருவேளை காவலர்கள் கண்ணில் படாமல் மாயாஜாலம் நிகழ்த்தி வந்தீர்கள் என்றால், ஒருவேளை நீங்கள் தேவலோகத்தைச் சேர்ந்தவரோ? உண்மையைச் சொல்லுங்கள், என்றாள் மெல்லிய குரலில். குயில் போல் இருந்தது அவளது தேன்குரல்.
தமயந்தி! நீ நினைப்பது சரியே! நான் தான் நளன். உன்னை மணம் முடிக்கவே மற்ற அரசர்களையெல்லாம் முந்திக்கொண்டு இங்கு வந்து சேர்ந்தேன். ஆனால், இங்கு வந்ததும் நிலைமை மாறிவிட்டது. உன்னை மணம் முடிக்க இயலாத நிர்ப்பந்தத்தில் இருக்கிறேன், என்றதும், தமயந்தியின் ஆனந்தக்கண்ணீர் சோக நீராய் மாறியது.
மாமன்னரே! ஏன் அப்படி சொல்கிறீர்கள்? காணாமலே காதலித்தவர்கள் நாம். அன்னம் தங்களைப் பற்றி சொன்ன அடுத்த கணமே, என் இதயம் உங்கள் இதயத்துடன் சங்கமித்து விட்டது. இதயமில்லாதவளாய் நிற்கும் என்னிடம், இரட்டை இதயத்தைக் கொண்டுள்ள நீங்களா இப்படி பேசுகிறீர்கள்? அப்படி என்ன நிர்ப்பந்தம்? என்றாள் அந்த பைங்கொடி.
தமயந்தி! நான் வரும் வழியில் இந்திரன் முதலான தேவர்களைக் கண்டேன். தேவலோகத்தில் சுகத்தைத் தவிர வேறு எதையுமே அனுபவிக்காத அந்த சுகவாசிகள், உன் பேரழகு பற்றிக் கேள்விப்பட்டு, உன்னை மணம் முடிக்க இங்கு வந்துள்ளார்கள். அதிலும், இந்திரன் உன் மேல் உயிரையே வைத்திருக்கிறார். உன்னையும், என்னையும் பிரிக்க முடியாது என்று தெரிந்து கொண்ட அவர், என்னையே தூது அனுப்பினார். நானும் அவசரப்பட்டு வாக்கு கொடுத்து விட்டேன்.
என் வாக்கைக் காப்பாற்றும் நிர்ப்பந்தத்தில் இருக்கிறேன். நீ அவருக்கு மாலை அணிவித்து மணாளனாக ஏற்றுக்கொள். பூலோக ராணியாக வேண்டிய நீ, தேவலோக ராணியாகப் போகிறாய், என்றான்.
கண்ணீர் சிந்த நின்ற தமயந்தி, மன்னரே! உங்கள் நிலையைப் புரிந்து கொண்டேன். ஆனால், ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள். இந்த தமயந்தி உங்களைத் தவிர யாருக்கும் சொந்தமாக மாட்டாள். இந்த சுயம்வரம் ஏற்பாடு செய்யப்பட்டதே உங்களுக்காகத் தான். நீங்கள் வந்ததும், உங்களை அடையாளம் கண்டு மாலை அணிவிக்கலாம் என இருந்தேன். ஆனால், இப்போது இப்படி ஒரு சிக்கலில் நீங்கள் மாட்டியிருக்கிறீர்கள் என்பதை அறிந்து வேதனைப்படுகிறேன். நளமகாராஜரே! தேவர்களுடன் இணைந்து சுயம்வர மண்டபத்துக்கு வாருங்கள்,  என்ற அந்த அழகுப்பாவை அங்கிருந்து புறப்பட்டாள்.
நளனும் அவளிடம் விடைபெற்று தேவர்களிடம் வந்து சேர்ந்தான். இந்திரனிடம் நடந்ததைச் சொன்னான். தேவர்கள் மகிழ்ந்தனர். தமயந்தி தங்களை மறுக்கவில்லை என்பதை அறிந்து ஆறுதலடைந்தனர். அதே நேரம், சுயம்வர மண்டபத்துக்கு நளனை அவள் வரச்சொல்லியிருக்கிறாள் என்ற தகவல் அவர்களுக்கு நெருப்பாய் சுட்டது. இருப்பினும், தங்களுக்காக, தன் காதலையே தியாகம் செய்ய முன்வந்த நளனுக்கு ஒரு வரத்தை அளித்தனர்.
நளனே! நீ செய்த தியாத்துக்காக ஒரு வரத்தை அளிக்கிறோம். உணவு. தண்ணீர், நகைகள், ஆடைகள், மலர் மாலை, நெருப்பு ஆகியவற்றை நீ எந்த இடத்தில் இருந்தாலும் நினைத்தவுடன் அவை கிடைக்கும் சக்தியை அளிக்கிறோம், என்றனர். மறுநாள், சுயம்வர மண்டபத்துக்கு அங்கு வந்துள்ள அரசர்கள் அனைவரும் வந்து சேரும்படி அழைப்பு விடுக்கப்பட்டது. அனைத்து நாட்டு அரசர்களும் புறப்பட்டனர்.
தேவர்கள் சென்ற பிறகு, நளன் மன்னர்கள் தங்கியிருந்த அரண்மனைக்குப் போய்விட்டான். தமயந்தி ஆழ்ந்த வருத்தத்தில் இருந்தாள். யாரைக் காதலித்தோமோ, அவனே, மற்றவர்களுக்கு என்னைக் காதலியாக்க தூதாக வந்தது எவ்வளவு பெரிய கொடுமை! இவன் என்ன மனிதன்! அன்னப்பறவை சொன்னது முதல் இவனே கதியென இருந்தோமே! இப்போதோ இவன் தூதனாகி விட்டான். இவனை நாடி என் மனம் செல்வதைத் தான் புரிந்து கொள்ள முடியவில்லை. இப்படிப்பட்டவன் கடைசி வரை என்னைக் காப்பாற்றுவானா? அவள் தனக்குள் அரற்றினாள்.மயக்கமே வந்துவிடும் போல் இருந்தது. சந்தேகப்பூக்கள் அவளது மனதுக்குள் பூத்தாலும், ஆசை மட்டும் விடவேயில்லை. அவன் எவ்வளவு பெரிய கட்டழகன்.
ஆண்மை அவனோடு பிறந்தது. காதலையே துறக்க முடிவெடுத்த இவனைத் தியாகி என்று நினைக்க என் மனம் ஏன் நினைக்கவில்லை? அவனைப் பார்க்கும் முன் என் உள்ளம் தான் நிடதநாட்டை நோக்கிப் போயிற்று! அவனைப் பார்த்த பிறகு, உயிரும் போய்விட்டதே! தீயிலே விழுந்த இளம் தளிர் போல என் மனம் தவிக்கிறதே! கொக்குகளாலும், நாரைகளாலும் கொத்தி தின்னப்படும் மீன் போல் துடிக்கிறேனே! என் அன்பரே! தாங்களா இப்படி ஒரு வார்த்தை சொன்னீர்கள்.
உங்களுக்காக என் உயிர் வேண்டுமானால் போகும். ஆனால், என் காதல் என்றும் ஜீவித்திருக்கும், என்று புலம்பியவள் அவ்வப்போது மயக்கநிலைக்கும் சென்று திரும்பினாள். அப்போது மாலைப் பொழுது வந்துவிட்டது. தமயந்தியின் புலப்பம் அதிகமாயிற்று. இந்த வானத்தைப் பாருங்களேன்! ஓரிடத்தில் பிறை நிலா இருக்கிறது. ஆனாலும், நிலவின் குளிரால் அதற்கு எந்த பயனுமில்லை. அந்த வானத்தில் அப்படி என்ன தான் வெப்பமோ? கொப்புளங்கள் பல தோன்றியிருக்கின்றன.
நட்சத்திரங்களைத் தான் சொல்கிறேன். அந்த வானத்தின் நிலை போல் தான் என் மனமும் புண்பட்டிருக்கிறது. அந்த நிலவுக்கு என் மேல் கோபமோ தெரியவில்லை, அதன் கதிர்கள் என் உள்ளத்தை நெருப்பாய் சுடுகின்றன. அதென்னவோ தெரியவில்லை. இன்றைய இரவுப் பொழுது வெகுவாக நீளுமென்றே நான் கருதுகிறேன், என்றாள். அந்த இரவில் நளன் தன்னுடன் யாருமறியாமல் இருந்திருந்தால் காதல் மொழி பேசி இனிய இரவாக கழிந்திருக்குமே என ஏக்கப்பெருமூச்சு விட்டாள். பஞ்சணையில் படுத்தாள். அது முள்ளாய் குத்தியது. உலகிலேயே கொடிய வியாதி காதல் தான் போலும்! காதலனை நினைத்து விட்டால் காதலியருக்கு தூக்கமே கிடையாது என்று அவள் படித்திருக்கிறாள். இப்போது அதனை அவளே உணர்கிறாள்.
என்னைத் துன்பத்திற்குள்ளாக்கும் இரவே போய் விடு. கதிரவனே விரைந்து வா! விடியலுக்குப் பிறகாவது என் வாழ்விலும் விடியல் ஏற்படுகிறதா பார்ப்போம், என எண்ணியபடியே, ஒவ்வொரு நொடியையும் தள்ளினாள். ஒரு வழியாய், அந்த விடியலும் வந்தது. விடிய விடிய கண் விழித்ததால், குவளை மலர் போன்ற அவளது கண்கள் சிவந்திருந்தன. அன்றைய தினம் தான் சுயம்வரம். மனதுக்குப் பிடித்தவன் மணாளனாக அமைந்தால் தான் சுயம்வரம் இனிக்கும். காதலனோ காதலைத் தியாகம் செய்துவிட்டான்.
யார் கழுத்தில் மாலை அணிந்தால் என்ன! ஏதோ, ஜடம் போல் மாலையைத் தூக்கிக் கொண்டு உணர்வற்றவளாய் மண்டபத்துக்குள் நுழைய வேண்டியது தான்! அவளும் இதோ நுழைந்து விட்டாள். அவளது காதில் அணிந்திருந்த முத்துக்கம்மல் அவளது எழிலை அதிகமாக்கியிருந்தது. மன்னர்களெல்லாம் தமயந்தியின் அழகை ரசிக்க அப்படியும், இப்படியுமாய் தலையை தூக்கி பார்க்க முயன்றனர். ஆனால், தோழிகள் அவளைச் சுற்றி நின்றதால் அவள் அவர்களின் பார்வையில் படவில்லை. அந்த மண்டபத்தில் இந்திரன், எமன், அக்னி முதலான தேவர்களும் மன்னர்களின் வரிசையில் எழில் பொங்க வீற்றிருந்தனர்.
நளன் எவ்வித உணர்வும் இல்லாமல் ஒரு ஆசனத்தில் அமர்ந்திருந்தான். தோழிப்பெண் தமயந்தியிடம் ஒவ்வொரு மன்னரையும் அறிமுகம் செய்து வைத்தபடியே முன்சென்றாள். தமயந்தி அழகிய மாலையுடன் அவள் சொல்வதைக் கேட்க விரும்பாமல் பின்சென்றாள். தமயந்திக்கு முதலில் அறிமுகப்படுத்தப்பட்டவன் சோழ மன்னன். காவிரிநதி தீரத்துக்குச் சொந்தக்காரன். அந்த ஆற்றிலே ஓடுவது தண்ணீரல்ல! அமுதம், அதற்கு பொன்னி என்றும் பெயருண்டு என்று எடுத்துச் சொல்கிறாள்.
அடுத்து பாண்டிய மன்னனை அறிமுகப்படுத்துகிறாள். இவன் சொக்கநாதரின் அருள்பெற்ற வம்சத்தில் பிறந்தவன். முன்னொரு காலத்தில் இவனது முன்னோர் செண்டால் மேரு மலையையே அடித்துப் பிளந்தார்களாம், என்று அவனது வீரத்தைப் புகழ்ந்தாள். கங்கைக்கரையிலுள்ள காந்தார நாட்டின் மன்னனும் சுயம்வரத்துக்கு வந்திருந்தான். அவனது தேசத்தின் பெருமையையும் சொல்லி பாராட்டினார்கள். அடுத்து சேரநாட்டின் மன்னனை அறிமுகம் செய்தாள். அடுத்து குருநாடு, அவந்தி நகரத்து மன்னன் என்று பட்டியல் நீண்டு கொண்டே போனது. ஓரிடத்தில் தோழி அயர்ந்து நின்று விட்டாள்.
ஏனெனில், நளனைப் போலவே உருவம் கொண்ட நான்கு பேர் அமர்ந்திருந்தனர். தமயந்தியும் அவர்கள் நால்வரும் நளனைப் போலவே இருப்பது கண்டு அசந்துவிட்டாள். இதெப்படி சாத்தியம்? ஒரே வடிவத்தில் நால்வரா? இந்த உலகத்திலா இந்த அதிசயம்? அப்படியானால், இவர்களில் யார் என் நளன்? ஐயோ! இது தேவர்களின் வேலையாகத்தான் இருக்க வேண்டும். என்னை விரும்பிய தேவர்கள், என் நளனை என்னிடமே தூது அனுப்பியது போதாதென்று இப்போது இப்படி வந்து அமர்ந்திருக்கிறார்களே! இந்த இக்கட்டான நிலையில் என் நளனை எப்படி கண்டுபிடிப்பது? என்று சிந்தித்த தமயந்திக்கு, ஒரு பொறி தட்டியது.
நிஜமான நளனும் இங்கிருக்கிறான். மற்றவர்களும் எனது கண்களுக்கு மட்டுமே தெரியும்படி நளனைப் போலவே இருக்கின்றனர். தேவர்களை அடையாளம் காண்பது எளிது. தேவர்களின் கண்கள் இமைக்காது. அவர்களது பாதங்கள் நிலத்தில் படாமல் அந்தரத்தில் நிற்கும். அவர்கள் அணிந்து வரும் மாலைகள் வாடாது. இங்கே இந்திரன், அக்னி, வருணன் எமதர்மன் ஆகிய தேவர்கள் அமர்ந்துள்ளனர். அவர்களது அடையாளத்தை இவற்றைக் கொண்டே கணித்து விடலாம். நிஜமான நளனைக் கண்டுபிடித்து விடலாம் என்ற மகிழ்ச்சியுடன் கண்களால் துழாவினாள் தமயந்தி.
எல்லாருமே காதல் பார்வையை அவள் மீது வீசிக்கொண்டிருந்தனர். தமயந்தி மிகத்தெளிவாக கணித்து, நிஜமான நளனுக்கு மாலை அணிவித்து விட்டாள். தேவர்கள் மட்டுமல்ல! மற்ற நாட்டு மன்னர்களும் அதிர்ச்சியடைந்து விட்டனர். ஏமாற்றமும், மான உணர்வும் அவர்களின் மனதைப் புண்ணாக்கி விட்டது. அந்த ஆத்திரத்துடன் அவர்கள் ஒவ்வொருவராய் வெளியேறினர். அவர்களது செந்தாமரை முகங்கள் வெண்தாமரை ஆகி விட்டன ஏமாற்றத்தால்.
தமயந்தியின் முகமும் அப்படித்தான் ஆகியிருந்தது. எதனால் தெரியுமா? நிஜ நளனுக்கு மாலை சூட்டிய வெட்கம் தாளாமல்! நளனும் பெரும் மகிழ்ச்சியை அடைந்தான். தன் தமயந்தி தனக்கு கிடைத்து விட்டதில், அவனது உள்ளம் ஆனந்தக் களியாட்டம் போட்டது. தமயந்தியோ எப்போது அவனைத் தனிமையில் சந்தித்து அவனுடன் பேசி மகிழ்ந்திருக்கலாம் என்று அவசரப்பட்டுக் கொண்டிருந்தாள். காளையுடன் நடந்து செல்லும் பசுவைப் போல நளனுடன் அவள் கிளம்பினாள்.
தேவர்கள் கடும் கோபத்துடன் சுயம்வர மண்டபத்தை விட்டு வெளியேறினர். எல்லாரும் இங்கு வந்து சுயம்வரத்தை முடித்துக் கொண்டு கிளம்பிக் கொண்டிருந்த வேளையில் தான், தேவலோகத்தில் இருந்து ஒரு வி.ஐ.பி., தள்ளுநடை போட்டு வந்து கொண்டிருந்தார். அவரது பெயர் சனீஸ்வரன். கலிபுருஷன் என்றும் அவரைச் சொல்வார்கள்.
 அவருக்கு என்ன ஆசை தெரியுமா? தமயந்தியைத் திருமணம் செய்ய வேண்டுமென்பது. ஆனால், என்ன செய்வது? அவர் கால் ஊனமானவர். மெதுவாக சுயம்வரம் முடிந்ததைக் கூட அறியாமல் விதர்ப்பநாடு நோக்கி வந்து கொண்டிருந்தார்.
ஜோதிட சாஸ்திரத்திலும் இது தெளிவாக இருக்கிறது. மற்ற கிரகங்கள் வேகமாக ஒரு ராசியைக் கடந்து விடும். குரு ஒரு வருஷம், ராகு, கேது ஒன்றரை வருஷம் என சற்று அதிக காலம் சஞ்சரிப்பர். ஆனால், சனீஸ்வரர் மட்டும் இரண்டரை வருஷம் ஒரு ராசியில் இருப்பார். காரணம் இவரது மெதுவான நடையால் தான். இவருக்கு ஒரு குணம் உண்டு. நல்ல மனங்களை கெட்ட வழியில் திருப்பி விடுவார். ஆனால், எல்லாரையும் அப்படி செய்யமாட்டார். எவனொருவன் கடமையைச் சரிவர செய்யத் தவறுகிறானோ அவனுக்கே அம்மாதிரியான குணநலனை தண்டனையாகக் கொடுத்து விடுவார்.
அவர் தன் எதிரே முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு வந்து கொண்டிருந்த இந்திரன், அக்னி, வருணன், எமதர்மனைப் பார்த்தார். தேவேந்திரனுக்கு வணக்கம் தெரிவித்த அவரிடம் தேவேந்திரன்,சனீஸ்வரரே! எங்கே போய்க்கொண்டிருக்கிறீர்? என்று கேட்டான். சனீஸ்வரர் அவனிடம்,விதர்ப்ப நாட்டு இளவரசி தமயந்திக்கு சுயம்வரமென அறிந்து அங்கு சென்று கொண்டிருக்கிறேன். அவள் பேரழகியாம் என்றதும், சரியாப் போச்சு, தமயந்தியின் சுயம்வரம் முடிந்து விட்டது. நாங்களும் அவளை மணம் முடிக்கவே சுயம்வரத்தில் பங்கேற்க இங்கு வந்தோம். ஆனால், அவளோ நிடதநாட்டின் அரசன் நளனுக்கு மாலை சூட்டி அவனது மனைவியாகி விட்டாள். அங்கே உமக்கு இனி வேலை இல்லை. வந்த வழியே திரும்பிச்செல்லும், என்றான் இந்திரன்.
சனீஸ்வரரின் முகம் சிவந்து விட்டது. என்ன! வானுலகத் தேவர்களை விட அறிவிலும், அழகிலும் சிறந்த ஒருவன் பூமியில் இருக்கிறானா? அவனுக்கு தமயந்தி மாலை சூடி விட்டாளா? அந்த அகம்பாவம்பிடித்த பெண்ணை நான் பிடிக்கிறேன். அவளது கணவன் மன்னன்என்னும் பதவியைத் துறந்து, பிச்சை எடுக்கும் நிலைமைக்கு ஆளாக்குகிறேன், என்று கூக்குரலிட்டார்.
இந்திரன் சிரித்தான். சனீஸ்வரரே! மணமகள் கிடைக்காத ஆத்திரத்தில் துள்ளிக்குதிக்காதீர். உம்மால் யாரைப் பிடிக்க முடியும் என்பதை மறந்து விட்டுப் பேசுகிறீர். தமயந்தி கற்புடைச் செல்வி. தன் அறிவால், நளனைப் போலவே மாறியிருந்த எங்களைக் கூட அடையாளம் கண்டு ஒதுக்கிவிட்டு, அவளது காதலனை மணாளனாகப் பெற்ற புத்திசாலி. புத்திசாலிகளை நீர் அணுகமுடியாது என்பதை மறந்து விடாதீர். நளனோ வீரம் மிக்கவன். யாருக்கும் எந்த துன்பமும் இழைக்காதவன். தன் மக்களை கண்போல் பாதுகாப்பவன். அவனருகிலும் உம்மால் நெருங்க முடியாது. நான் சொல்வதைக் கேளும். எங்களுடன் திரும்பி வாரும், என்றான்.
சனீஸ்வரரும் வேறு வழியின்றி, வந்த வழியே திரும்பினார். இதற்கிடையே விதர்ப்ப நாட்டு அரண்மனையில், வீமராஜன் தன் மகளின் திருமணத்தை நடத்த தகுந்த ஏற்பாடுகளைச் செய்தான். ஜோதிடர்கள் திருமண நன்னாளைக் குறித்துக் கொடுத்தனர். குறிப்பிட்ட அந்த நாள் காலையிலேயே திருமணம். தோழிகள் தமயந்தியின் உடலையே மூடுமளவுக்கு மலர்களால் அவளை அலங்கரித்தனர். ஏராளமான நகைகள் அணிவிக்கப்பட்டன. இந்த நகைககளையெல்லாம் மிஞ்சும் புன்னகை முகத்தில் அரும்ப நின்ற தமயந்தியின் தங்கக்கழுத்தில் மங்கலநாண் பூட்டினான் நளன்.
அவர்களின் மனம் இன்ப வெள்ளத்தில் மிதந்தது.ஒரு நன்னாளில் தன் அன்பு மனைவியை அழைத்துக் கொண்டு, தனது நாட்டுக்குப் புறப்பட்டான் நளன். தேர் புறப்பட்டுச் சென்றது. செல் லும் வழியிலுள்ள இயற்கைக் காட்சிகளை தனக்கே உரித் தான கவிநயத்துடன் மனைவியிடம் விளக்கிச் சொல்லியபடியே இருவரும் மகிழ்ச்சியுடன் சென்று கொண்டிருந்தனர். பாவம்! இந்த மகிழ்ச்சி நீண்டகாலம் நீடிக்காது என்பது அவர்களுக்கு எப்படி தெரியும்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top