தல்லபாக்கம் அன்னமாச்சாரியார்
தல்லபாக்கம் அன்னமாச்சாரியார் (மே 9, 1408 – பெப்ரவரி 23, 1503) 15ம் நூற்றாண்டில் தென்னிந்தியாவில் வாழ்ந்தகருநாடக இசைக் கலைஞர். திருப்பதி வெங்கடேஸ்வரர் கோயிலுடன் மிக நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர். வெங்கடேஸ்வரர் மீது அவர் பாடிய சங்கீர்த்தனைகள் என்ற பஜனைப் பாடல்கள் புகழ்பெற்றவை.
15ம் நூற்றாண்டில் தென்னிந்தியாவில் வாழ்ந்த கருநாடக இசைக் கலைஞர்.அன்னமாச்சாரியார் தென்னிந்திய இசையில் தோற்றுவித்த மரபுகள் பல பின்வந்தோரால் வளர்க்கப்பட்டு விருத்தியடைந்தன. பஜனை மரபினைத் தொகுத்து வழங்கிய சிறப்பு இவருக்குண்டு. பல்லவி, அநுபல்லவி, சரணம் போன்றவை இவரால் உருவாக்கப்பட்டவை என்று கருதப்படுகிறது.
இவர் 32,000க்கும் மேற்பட்ட பஜனைப் பாடல்களை (சங்கீர்த்னைகள்) கருநாடக இசை முறையில் இயற்றியுள்ளார். இவரது பெரும்பாலான பாடல்கள் செப்புத் தட்டுகளில் எழுதப்பட்ட இவரது பெரும்பாலான பாடல்கள் திருப்பதி வெங்கடேஸ்வரர் கோயிலில் உள்ள சிறு அறை ஒன்றில் சுமார் மூன்று நூற்றாண்டுகளாக மறைத்து வைக்கப்பட்டிருந்து பின்னர் 1922ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டன. இவரது பாடல்களில் சுமார் 12,000 மட்டுமே இப்போது கிடைக்கப்பட்டுள்ளன.
பஜனைப் பாடல்கள் தவிர ஒவ்வொன்றும் 100 பாடல்கள் அடங்கிய 12 சாதகங்களையும் இயற்றியிருக்கிறார். இராமனைப் பாடும் மரபிலும் இவருக்குப் பங்குண்டு.
சங்கீத மும்மூர்த்திகள் தமிழகத்தில் சங்கீதப் பணி செய்வதற்கு முன்னரே, தற்போதைய ஆந்திர மாநிலத்தில், சங்கீதப் பணி புரிந்தவர் அன்னமாச்சாரியார். கடப்பா மாவட்டத்தில் கி.பி. 1408-ல் ஒரு சைவ அந்தண குலத்தில் பிறந்தவர். பின்னர் அகோபில மடத்துப் பெரியவர் ஒருவரை குருநாதராகக் கொண்டு வைணவத்தைக் கற்றார்.
“”ஸ்ரீநரசிம்ம அனுஷ்டுப் மஹா மந்திரத்தை” பின்பற்றி அதிலுள்ள முப்பத்திரண்டு எழுத்துக்களுக்கு ஏற்ப, முப்பத்திரண்டாயிரம் கீர்த்தனை ஏழுமலையான் மீது பாடியுள்ளார்.
சைவ, வைணவ தமிழ்ப் பாசுரங்களில் உள்ளதுபோல, நாயக-நாயகி பாவத்தில் இவரும் எண்ணற்ற பாடல்களை எழுதியுள்ளார். இப்பாடல்களில் சிருங்கார ரசம் மிகுந்திருக்கும்.
இரண்டடி ராமாயணம்,சிருங்கார மஞ்சரி, ஸ்ரீவெங்கடேஸ்வர சதகங்கள், சங்கீர்த்தன லட்சணம்,ஸ்ரீவெங்கடேஸ்வர மகாத்மியம், அலர்மேல் மங்கை வெங்கட நரசிம்மர் பதிகம், தசாவதார மகாத்மியம் உள்ளிட்ட எண்ணற்ற சங்கீதக் கீர்த்தனைகள் தெலுங்கிலும், சமஸ்கிருதத்திலும் இவர் இயற்றியுள்ளார்.
பிறப்பால் சைவரான அன்னமய்யா விசிஷ்டாத்வைத கருத்துக்களை ஏற்றுக்கொண்டு, வைணவ நெறியை கடைபிடித்தததாலும், வைணவ கீர்த்தனைகளை இயற்றியதாலும் “”ஸ்ரீஅன்னமாச்சாரியார்” என்று அழைக்கப்பட்டார்.
இவரது மகன் பெரிய திருமலாச்சாரியாரும்,பேரன் சின்ன திருமலாச்சாரியாரும் பல சங்கீத நூல்களையும், பகவத் கீதையின் மொழிபெயர்ப்பு நூலையும் இயற்றினர்.
அன்னமாச்சாரியார் பெரிய, சிறிய, திருமலாச்சாரியார்கள் மூவரையும் சேர்த்து, “”தாளபாக மும்மூர்த்திகள்” என்று அழைக்கின்றனர். அன்னமாச்சாரியார் பிறந்த கிராமத்தின் பெயர் தாளபாக்கம்.
அன்னமய்யாவின் துணைவியாரான திம்மக்க அம்மையாரும், சுபத்ரா கல்யாணம் எனும் காவியத்தை எழுதி, தெலுங்குமொழியின் முதல் பெண் கவிஞர் என்ற சிறப்பைப் பெற்றார். இத்தனைக்கும் எந்த ஒரு சங்கீத அறிவும் பெறாதவர் இவர். கணவரின் கவித்திறனில் மனம் மயங்கி, தாமும் சிறிது சிறிதாக சங்கீத அறிவைப் பெற்றே மேற்கண்ட காவியத்தை எழுதினார்.
சங்கீதப் பணிகள் தவிர திருக்கோயில் பணிகளையும், தாளபாகமும் மூர்த்திகள் செய்தனர். தங்களுக்கு சன்மானமாக வழங்கப்பட்ட கிராமங்கள், பொன்,பொருள் அனைத்தையும் திருமலைக் கோயிலுக்கே நன்கொடையாக வழங்கினர். திருமலையில் நடைபெற்று வரும் சுப்ரபாத சேவை, கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஏகாந்த சேவை ஆகியவற்றைத் துவக்கி வைத்த பெருமை அன்னமாச்சாரியரையே சேரும்.