Home » சிறுகதைகள் » மூன்று மந்திரம்!!!
மூன்று மந்திரம்!!!

மூன்று மந்திரம்!!!

இந்த “சாமி” யார், எந்த ஊர், என்ன பேர் என்று அந்த கிராமத்தில் யாருக்குமே தெரியாது. பல வருடங்களுக்கு முன்னால், சின்னக்குப்பம் கிராமத்துக்கு வந்தவர்,ஊருக்கு வெளியே குடிசை போட்டு தனியாக வசிக்கிறார்.

ஊருக்குள் அவராக வரமாட்டார். விவசாய வேலைகளுக்கு கிராம மக்கள் அவரை வேலைக்கு கூப்பிடுவர். ஆனால், செய்த வேலைக்காக பணமோ பொருளோ வாங்கிக் கொள்ளமாட்டார்.

உணவு கொடுத்தால் மட்டும் வாங்கிக்கொள்வார். எனவே,பெயரில்லாத அவரை “சாமி’ என்று பெயரிட்டு அழைக்கவும் தொடங்கினர்.

“இன்று அவரிடம் கேட்டு விட வேண்டியதுதான்” என்ற முடிவோடு அந்த “சாமியை’ப் பார்க்க வந்தான் முத்து.

அவன் குடிசையில் நுழைந்தபோது, சாமி ஆனந்தமாய் கயிற்றுக்கட்டிலில் படுத்திருந்தார். அவருடைய மாற்று உடை ஒன்றைத்தவிர, குடிசையில் வேறு எந்தப்பொருளும் இல்லை.

ஆள் நுழையும் சப்தம் கேட்டு, “”வா, முத்து வா” என்று அழைத்தார்

“”சாமி, நேற்று நான் பட்டினம் போயிருந்தேன். அங்கே என் உறவினர் ஒருவர் இறக்கும் தருவாயில் பட்ட கஷ்டங்ளைப் பார்த்தேன். அதிலிருந்து என் மனம்கலவரமடைந்திருக்கிறது. நான் இறக்கும்போது அது போன்ற கஷ்டங்ளை அனுபவிக்க விரும்பவில்லை. ஆனந்தமாக இறக்க வேண்டும். அதற்கு வழி ஏதேனும் இருக்கிறதா? சொல்லுங்க சாமி,” என்றான்.

“”அது மிகவும் எளிமையானது. ஆனால், சுலபமானதல்ல.”

“”உன்னிடம் எத்தனை மேலாடைகள் உள்ளன”?

“”இருபதுக்கும் மேல் இருக்கும்.”

அதில் மிகப்பழைய, விலை மிகக்குறைவான ஒன்றை எடுத்து இப்போது நான் செய்வது போல் செய்துவிட்டு நாளை வா என்றவர், தன் மேலாடையைக் கழற்றித் தூக்கியெறிந்தார். அதனை அவன் கண் எதிரே தீயிட்டுக் கொளுத்தினார். அதைப் பார்த்து சிரித்தார்.

“”இது என்ன பெரிய காரியம்” என்று நினைத்த முத்து வீட்டுக்கு வந்ததும் தன்னிடம்இருந்த பத்து வருட பழைய சட்டை ஒன்றை எடுத்தான். அது பல இடங்களில் நைந்து கூட போயிருந்தது. அதனை தூக்கி எறியலாம் என்று நினைத்தபோது, அது அவன் பாட்டி அவனது பிறந்த நாளுக்குக் கொடுத்த பரிசு என்பது நினைவுக்கு வந்தது. அதை வைத்து விட்டான். இவ்வாறாக ஒவ்வொரு ஆடையை எடுக்கும்போதும் ஒவ்வொரு ஞாபகம்!

மறுநாள் சாமியின் கால்களில் விழுந்தான்.

“”அய்யா, ஒரு பழைய ஆடையைக்கூட என்னால் தூக்கி எறிய முடியவில்லை. என்னை எவ்வாறேனும் காத்தருளுங்கள். இதற்காக
என் குடும்பத்தைவிட்டு உங்களோடு வந்து விடவும் நான் சித்தமாயிருக்கிறேன்,”என்றான்.

“”ஒரு பழைய ஆடையைக்கூட தூக்கி எறிய முடியாத உன்னால், நேரம் வரும்போது உடல் எனும் ஆடையை எவ்வாறு சுலபமாக கழற்றிவிட முடியும்”? பசித்திரு,தனித்திரு, விழித்திரு. இதுவே உனக்கான என் உபதேசம்.

பசித்திரு என்றால் உன் ஆன்மிகப்பசியினை வளர்த்துக்கொள் என்று அர்த்தம். உன் குடும்பத்தைவிட்டு என்னோடு வருவதால் மட்டும் பெரிய பயன் விளைந்து விடாது. அது தற்போது இயலாத காரியமும் கூட.

உலகியல் வாழ்க்கை அனைத்திலும் ஈடுபட்டபோதும், இந்த உலகிலேயே நீ மட்டும் தனி ஒருவனாக வாழ்வது போன்ற உணர்வு நிலையில் வாழ். அதுவே தனித்திரு என்பதன் பொருள்.

“ஒரு பழைய ஆடையைக்கூட தூக்கி எறிய முடியாத நிலையில் நான் உள்ளேன். இது போன்று இன்னும் எத்தனை எத்தனை கர்மவினையின் கட்டுப்பாட்டுக்குள் சிக்கியிருக்கிறேனோ’ என்ற விழிப்புணர்வுடன் வாழ். இதுவே விழித்திரு என்பதன் பொருள்.

இந்த உபதேசத்தினை கடைபிடி. மற்றவை தானே நிகழும்,” என்று ஆசிர்வதித்து அவனை அனுப்பி வைத்தார். அந்த “சாமி’யார் தெரியுமா? வள்ளலார் பெருமகனார்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top