ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் அவர்கள், 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்தியாவின் தலைசிறந்த ஆன்மீகவாதிகளுள் ஒருவர். ‘கடவுள் ஒருவரே, வழிபாட்டு முறைகள் அனைத்தும் கடவுளை அடைவதற்கான பல வழிகள்’ என்பதை தெளிவுபடுத்தி, இந்திய மக்களுக்கு ஆன்மீக ஞானஒளியாய் திகழ்ந்தவர்.
இந்தியாவின் ஆன்மீகப் பேரொளியை, அமெரிக்கா, ஐரோப்பா எனப் பிறநாடுகளுக்கும் கொண்டுசென்று, வேதாந்தத் தத்துவங்களை மேற்கிந்தியா முழுவதும் பரப்பிய சுவாமி விவேகானந்தரை இவ்வுலகிற்குத் தந்தவர். அனைத்து மதங்களும் ஒரே இறைவனை அடையும் வெவ்வேறு வழிகளே என்பதைத் தன் அனுபவத்தின் மூலமாக உணர்ந்து, அதையே வலியுறுத்திய ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் வாழ்க்கை வரலாறு மற்றும் ஆன்மீகச் சிந்தனைகளை விரிவாகக் காண்போம்.
பிறப்பு: பிப்ரவரி 18, 1836
இடம்: காமர்புகூர், மேற்குவங்கம் மாநிலம், இந்தியா
இறப்பு: ஆகஸ்ட் 16, 1886
தொழில்: ஆன்மீகவாதி, துறவி
நாட்டுரிமை: இந்தியா
பிறப்பு
‘ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்’ என அறியப்படும் காதாதர் சாட்டர்ஜி அவர்கள், 1836 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18 ஆம் நாள், இந்தியாவின் மேற்குவங்காளம் மாநிலத்தில் ஹூக்லி மாவட்டதிலுள்ள “காமர்புகூர்” என்ற இடத்தில் ‘குதிராம்’ என்பவருக்கும், தாயார் ‘சந்திரமணி தேவிக்கும்’ நான்காவது குழந்தையாகப் பிறந்தார். இவர் ஒரு பிராமணக் குடும்பத்தைச் சார்ந்தவர்.
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி
சிறுவயதில், ஆடல் பாடல்களிலும், தெய்வங்களின் படங்கள் வரைவதிலும், களிமண்ணில் சிலைகள் செய்வதிலும் ஆர்வமாயிருந்த ஸ்ரீ ராமகிருஷ்ணருக்கு, கல்வி பயில்வதில் ஆர்வம் இல்லை.
மேலும், ராமகிருஷ்ணரின் குடும்பம் மிகவும் ஏழ்மையில் இருந்ததால், தன்னுடைய 17 வயதில் குடும்பத்தின் பொருளாதார சூழ்நிலைக் காரணமாக, தமது அண்ணன் வசித்து வந்த கல்கத்தாவிற்கு வேலைத் தேடி சென்றார்.
அங்கு, அவருடைய அண்ணன் ராஜ்குமார், தட்சினேஸ்வர் காளி கோயிலில் ஒரு புரோகிதராக வேலைப் பார்த்து வந்தார். சிறிதுகாலம் தன்னுடைய அண்ணனுக்கு உதவியாக அங்கேயே தங்கி வேலைப்பார்த்து வந்த ராமகிருஷ்ணர், ராஜ்குமார் இறந்தவுடன் காளி கோயிலின் பூசாரியானார்.
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் ஆன்மீகப் பயணம்
தட்சினேஸ்வர் காளி கோயிலில் தினந்தோறும் பூஜை செய்துவந்த ராமகிருஷ்ணருக்கு, அவ்வப்போது பல சந்தேகங்கள் எழுவதுண்டு, ‘தாம் கல்லைத்தான் பூஜை செய்கிறோமா கடவுள் என்று’ நினைத்த அவர், ‘காளி கடவுளாக இருந்தால், தனக்குக் காட்சி அளிக்குமாறு தினமும் பிரார்த்தனைகளையும், தியானமும் செய்தார்.
எனினும் தன்னுடைய முயற்சிக்கு பலனில்லை என்பதை உணர்ந்த அவர், காளியின் கையில் இருந்த வாளினால் தன்னைத்தானே கொல்ல முயற்சித்தார். அத்தருணத்தில், தன்னுடைய சுயநினைவை இழந்ததாகவும், ஒரு பேரானந்த ஒளி அவரை ஆட்கொண்டதாகவும், பின்னர் அவர் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வுக்குப் பிறகு, ராமகிருஷ்ணரின் நடவடிக்கைகளில் பெரும் மாற்றம் தெரிந்தது. இவருடைய நடவடிக்கைகளைக் கண்ட ராமகிருஷ்ணரின் பெற்றோர்கள் அவருக்கு திருமணம் செய்துவைக்க ஏற்பாடுகள் செய்தனர்.
அதன் விளைவாக காமர்புகூர் அருகில் உள்ள ஜெயராம்பாடி என்ற ஊரில் சாரதாமணி என்ற பெண் தனக்காக பிறந்ததாகவும், அப்பெண்ணே தன்னை மணம் புரிய பிறந்தவள் என்று கூறி, அவரையே திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகும், பக்தி, ஆன்மீக மார்கத்தில் தீவிர ஈடுபாடு கொண்டு விளங்கிய ஸ்ரீ ராமகிருஷ்ணர், தாம்பத்தியம் ஏற்காமல் மனைவியைத் தாயாக மதித்து, தெய்வீக வாழ்வு நடத்தினார்.
பைரவி பிரம்மணி என்ற குருமாதாவிடம் தாந்ரிகம் கற்றுத் தேர்ந்த அவர், பின்னர் தோதா புரி என்பவரிடம் அத்வைத வேதாந்தத்தைக் கற்றார். இந்திய நாட்டினர் மற்றும் இந்து மதத்தினர் என்றில்லாமல், மனித இனம் முழுமைக்கும் ஒரு ஆன்மீக வழிகாட்டியாகத் திகழ்ந்தார். ஸ்ரீ ராமகிருஷ்ணர் வேதாந்த உண்மைகளைக் கண்டறிந்தவர் மட்டுமல்ல, பிறருக்கு அதை உணர்த்துவதிலும் வல்லமைப் படைத்தவராக விளங்கினார்.
பாமரர் முதல் பண்டிதர் வரை அனைவரின் மனத்திலும் ஆன்மீக விளக்கெரிய தூண்டுதலாக அமைந்தார். இவரின் ஆன்மீகச் சிந்தனை உலகெங்கும் பரவி, அவதாரப் புருஷர் என்று அனைவராலும் போற்றப்பட்டார். மேலும், பலர் நாடி வந்து சீடர்களானார்கள். இவர்களுள் நரேந்தரநாத் தத்தா எனப்பட்ட சுவாமி விவேகானந்தர் குறிப்பிடத்தக்கவர். மேலும், ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் இறப்புக்குப் பிறகு, சுவாமி விவேகானந்தரால் நிறுவப்பட்ட ராமகிருஷ்ண மடம், இன்றளவும் ஆன்மீக வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றி வருகிறது.
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் சிந்தனைத் துளிகள்
- ஒருவன் வாழ்வில் இறைவன் அருளைப் பரிபூரணமாகப் பெற்ற பின்னரே, பிறருக்கு போதனை செய்ய முன்வர வேண்டும். அப்பொழுது தான் அது நல்ல பயனைப் பிறருக்குத் தரும்.
- இல்லற வாழ்வில் இருந்தாலும், இறையருள் பெற விரும்புபவர்கள் அவ்வப்போது தனிமையைத் நாடிச் சென்று இறைவனுக்காக ஏங்கி அழவேண்டும்.
- உலக வாழ்வில் ஈடுபட்டாலும், இறைவனே நமக்கு சொந்தமானவன் என்னும் உள்ள உறுதியோடு வாழ வேண்டும்.
- சிலருடைய உள்ளம் கல்சுவர் போல உறுதியாக இருக்கும், அதில் ஆணி அடித்தால் அது வளைந்து போகும். அதுபோல எவ்வளவு முயன்றாலும் அவர்களுக்கு ஆன்மீக விஷயம் எதுவும் உள்ளே போகாது.
- மக்களுள் பெரும்பாலோர் புகழுக்காகவோ, புண்ணியத்தைத் தேடும் பொருட்டோ பரோபகாரம் செய்கின்றனர். அத்தகைய சேவைகள் யாவும் சுயநலத்தை அடிப்படையாகக் கொண்டவை
இறுதி வாழ்க்கை
தாம் கற்றறிந்த உண்மைகளை மக்களுக்கு போதித்தது மட்டுமல்லாமல், எப்படி பக்தியோடு இருப்பது என்றும், அவற்றைத் தானும் கடைபிடித்து வாழ்ந்துக்காட்டிய ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர், இறுதி நாட்களில் தொண்டை புற்றுநோயால் அவதியுற்றார். அவருடைய சீடர்கள் அவரை கல்கத்தாவிலுள்ள காசிப்பூர் என்ற இடத்தில் வைத்து வைத்தியம் செய்தனர். இருந்தாலும், 1886 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16 அன்று அவர் உடலை விட்டு, உயிர் பிரிந்தது.
உலக நன்மைக்காகவும், ஆன்ம விடுதலைக்காகவும் துறவறம் பூண்ட ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் அவர்கள், இந்தியாவில் வாழ்ந்த “ஒப்பற்ற மனித தெய்வம்” ஆவார். இயற்கைப் பேரறிவும், செயற்கைப் பேரறிவும் ஒருங்கே பெற்ற அவர், இன்று உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள், ஆத்மார்த்தமாக வணங்கும் ஆன்மீக குருவாக விளங்கிக் கொண்டிருக்கிறார் என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை.
உயிர் காத்த குரு
சாரதா பிரசன்னர் என்ற இயற்பெயர் கொண்டவர் சுவாமி திரிகுணாதீதானந்தர். ராமகிருஷ்ணரின் சீடர்களுள் ஒருவர். சுவாமி விவேகானந்தரின் அன்புக்குப் பாத்திரமானவர். இவர் இறைநம்பிக்கை கொண்டவர் என்றாலும் பேய், பிசாசு போன்றவற்றில் நம்பிக்கை இல்லாதிருந்தார். ஆகவே அதுபற்றிய ஆய்வுகளில் சில காலம் ஈடுபட்டார்.
பேய் ஒன்றிருக்குமானால் அதை நேரில் காணவேண்டும் என்று உறுதியுடன், பேய் இருப்பதாகச் சொல்லப்பட்ட வீடுகளுக்கெல்லாம் சென்று தேடினார். இரவில் தங்கினார். இவரது கண்களுக்கு எந்தப் பேயும் தட்டுப்படவில்லை.
ஒருநாள் வராகநகர் மடத்துக்கு அருகிலான ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு வீட்டில் பேயிருப்பதாகவும் இரவு அங்கே சென்று தங்கினால் பேயைக் காணலாம் என்றும் சிலர் கூறினர். சுவாமிகளும் மிகுந்த ஆர்வத்துடன் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் இரவில் அந்த வீட்டில் போய்த் தங்கினார்.
நள்ளிரவு நெருங்கியது. சுவாமி பேயை எதிர் நோக்கிக் காத்திருந்தார். சற்று நேரம் சென்றது. அப்போது அவர் அமர்ந்திருந்த அதே அறையின் மூலையில் மங்கலான வெளிச்சம் ஒன்று தோன்றியது. பின் அது கொஞ்சம் கொஞ்சமாக பிரகாசம் அடைந்தது. அந்த வெளிச்சத்தின் மத்தியில் கண்கள் இரண்டு தோன்றியது. அது மிகுந்த கோபத்துடன் சுவாமிகளை நோக்கி மெல்ல நகர்ந்து வந்தது.
சுவாமிகளின் இரத்தம் அச்சத்தால் உறைந்தது. உடல் வியர்த்து ஒழுக ஆரம்பித்தது. நாக்கு உலர்ந்தது. அச்சத்துடன் சுவாமிகள், தனது குருதேவரான ஸ்ரீ ராமகிருஷ்ண மரமஹம்சரை மனதார வேண்டிக் கொண்டார்.
உடனே குருதேவரின் உருவம் திரிகுணாதீதானந்தரின் முன் தோன்றியது. அவரது கரங்களைப் பாதுகாப்பாகப் பற்றிக்கொண்டு, ”மகனே! ஏன் இவ்வாறெல்லாம் உயிருக்கு ஆபத்தான விஷயங்களைத் தேடி ஓடுகிறாய்? எப்போதும் என்னையே நினைத்துக் கொண்டிரு. அதுபோதும்’ என்று கூறிவிட்டு மறைந்துவிட்டது. அந்த மாயக்கண்களும் உடனே மறைந்து விட்டன.
தான் மறைந்தும் தனது அன்புச் சீடனுக்கு தக்க சமயத்தில் உதவி நல் வழிகாட்டினார் குரு தேவர் ராமகிருஷ்ண பரமஹம்சர். குருவை நம்பினோர் கைவிடப்படார் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சான்று.
பொன்மொழிகள்
* சத்தியத்தின் மூலமாகவன்றிக் கடவுளை அடையமுடியாது.
* உள்ளத்தை முதலில் தூயதாக்கு. பிறகு அதனுள் தெய்வத்தைப் பிரதிஷ்டை பண்ணு. வெறும் சங்கு நாதத்தைக் கிளப்புவதால் ஆவதொன்றுமில்லை.
* உலக வேலைகளைச் செய்து கொண்டு இருப்பதற்கிடையிலும் ஒருவன் சத்திய விரதத்தைத் தீவிரமாக அனுஷ்டிக்கவேண்டும். இக்கலியுகத்தில்
சத்திய விரதத்துக்கு நிகரான ஆத்மசாதனம் இல்லை. சத்திய விரதம் என்பது சத்தியத்தையே எப்போதும் பேசுதலைக் குறிக்கின்றது. இக்கலியுகத்தில் சத்தியம் பேசுதலே சிறந்ததொரு தவம் ஆகிறது. ஒருவன் சத்தியத்தைக் கொண்டே கடவுளை அடையலாம்.
* எந்தக் காரணத்தை முன்னிட்டும் மனிதன் பொய் பேசலாகாது. பொய் பேசிப் பழகுபவன் படிப்படியாக பாவ காரியங்களைச் செய்யக்கூடிய கீழான மனப்பான்மையைப் பெறுகின்றான்.
* அசுத்தமான மனப்பான்மை உள்ளவர்களுக்கும் ஈசனுடைய அருளுக்கும் வெகுதூரம். எளிமையும் சத்தியமும் உடையவன் ஈசனுடைய அருளை
எளிதில் பெறுவான்.