அந்த நாலு வார்த்தைக்கு நன்றி!
சர்.வின்ஸ்டன் சர்ச்சில், இங்கிலாந்தில் பிரதமராக இருந்தவர். சர் பட்டம் வாங்கிய இவர், பள்ளிப்படிப்பில் எப்படி தெரியுமா? இவருக்கு ஆங்கிலமே வராது. ஆங்கிலத்தில் பெயிலானதற்காக, ஒரே வகுப்பில் மூன்று வருஷம் இருந்தார். இப்படிப்பட்டவர்,விடாமுயற்சியுடன் படித்து “சர்‘ பட்டம் வாங்குமளவு தகுதி பெற்றார்.
வின்ஸ்டன் சர்ச்சிலின் தலையில் தொப்பி, கையில் ஊன்றுகோல், வாயில் சுருட்டு எப்போதும் புகைந்து கொண்டிருக்கும். ஒருமுறை, அவர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உரையாற்ற அழைக்கப்பட்டார். ஆங்கிலத்தில் “வீக்‘ ஆக இருந்த அவர், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கு அழைக்கப்படுகிறார் என்றால், அவர் ஆங்கிலம் கற்க எந்தளவுக்கு முயற்சி எடுத்திருக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
சர்ச்சில் அவருக்கே உரித்தான உபகரணங்களுடன் மேடையில் ஏறினார். கைதட்டல் அரங்கைப் பிளந்தது. வாசிப்பு பலகை முன் வந்து நின்றார். அந்தப் பலகையில், அவர் எழுதி வந்திருக்கும் குறிப்பை வைப்பார் என்று எல்லாரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், தன் தொப்பியைக் கழற்றி மேலே வைத்தார். சுருட்டை ஆஷ் டிரேயில் போட்டார். கூட்டத்தினர் ஆங்காங்கே பேசிக்கொண்டிருந்த சப்தம் கேட்டது.
அதையெல்லாம் தாண்டி மிக உச்ச ஸ்தாயியில் “எப்பொழுதும் விடாமல் முயற்சி செய்யுங்கள்”என்று சொல்லிவிட்டு, தொப்பியைத் தூக்கி தலையில் வைத்தார். ஊன்றுகோலைஎடுத்தார். மேடையில் இருந்து இறங்கி விட்டார். அரங்கமே அவரது அதிரடி பேச்சைக் கேட்டு அமைதியாகி விட்டது. அவர் வெளியேறும் வரை அப்படியே நின்றுகொண்டிருந்தது.
ஆம்…வாழ்க்கையின் வெற்றி ரகசியத்தை நான்கே வார்த்தைகளில் உலகுக்கு அறிவித்து விட்டார். ஆக்ஸ்போர்டு பல்கலை வரலாற்றில் இந்த உரை தான் மிகச்சிறியது. ஆனால், உணர்ச்சிவேகம் கொண்டது, மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிதென்பது போல..!
இங்கிலாந்து மக்களின் உள்ளத்தில் இந்த வார்த்தைகள் இன்றும் வாழ்கிறது. தினமும் காலையில் எழுந்ததும், இந்த வார்த்தைகளைச் சொல்வோம். வாழ்வில் வெற்றியடைவோம். ஆம்… அந்த நாலு வார்த்தைக்கு நன்றி!