இரைப்பை கேன்சர் தடுப்பது எப்படி?….
முறையான உணவு முறை இன்றி வாய்க்கு பிடித்ததை எல்லாம் சாப்பிடுதல், பரபரப்பான வாழ்க்கை முறையால் ஏற்படும் டென்ஷன் போன்ற பல காரணங்கள் இரைப்பை கேன்சரை உருவாக்குகிறது. அல்சர், வயிற்றுப் பகுதியில் உள்ள உறுப்புகளின் பாதிப்பு, புகைபிடித்தல், மது போன்ற பழக்கங்களால் 30 வயதிலேயே இரைப்பை கேன்சர் வர வாய்ப்புள்ளது.
இரைப்பை கேன்சர் அதிகளவில் ஆண்களையே தாக்குகிறது. இப்போது 30 வயது முதல் 35 வயதுக்குள் இந்த நோயின் தாக்கம் அதிகம் உள்ளது. இரைப்பையில் கேன்சர் உருவாக ‘ஹெலிகோபேக்டர் பைலோரி’ என்ற கிருமியும் காரணம். இது முதலில் இரைப்பையில் அல்சரை உருவாக்குகிறது.
அந்த அல்சரே, கேன்சர் எனும் அடுத்த கட்டத்தை அடைகிறது. புகைபிடித்தல், புகையிலை போன்ற பழக்கம் உள்ளவர்களுக்கும் இரைப்பையில் கேன்சர் ஏற்பட வாய்ப்பு அதிகம். வயிற்றுப் பகுதியில் செய்யப்படும் அறுவை சிகிச்சையின் காரணமாக இரைப்பையின் உள்பக்க திசுக்களின் மீது பித்தநீர் பட்டுக்கொண்டே இருக்கும்.
நாளடைவில் இதுவே கேன்சராக மாறவும் வாய்ப்புள்ளது. மதுப்பழக்கம் மற்றும் மசாலா கலந்த உணவுகளும் இந்த பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் இரைப்பையின் உள்பகுதியில் ஏற்ப டும் பாலிப்ஸ் என அழைக்கப்படும் சிறு சிறு கட்டிகளும் நாளடைவில் கேன்சர் கட்டிகளாக மாறலாம். பரம்பரைக் காரணங்களாலும் இந்நோய் ஏற்படலாம்.
இரைப்பையில் ஏற்படும் கேன்சரை சில அறிகுறிகள் மூலம் கண்டறியலாம். முதல் கட்டமாக பசி குறைந்து எடை குறையும். அப்போதே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஆனால் பசியின்மை மற்றும் எடை குறைதலை மக்கள் மிக சாதாரணமாக எடுத்துக் கொள்வதால் கேன்சரை துவக்கத்தில் கண்டறிந்து சிகிச்சை செய்து கொள்ள முடியாமல் போகிறது. வெளிப்புற அறிகுறிகளை வைத்தே எந்த இடத்தில் கேன்சர் வந்துள்ளது என தெரிந்து கொள்ள முடியும்.
உணவுக்குழாய் மற்றும் இரைப்பை சேரும் இடத்தில் கேன்சர் இருந்தால் உணவு விழுங்குவதற்கு சிரமம் ஏற்படும். உணவுக்குழாய் கேன்சர் எனில் அதன் பாதிப்பு இரைப்பையின் மேல் புறத்தில் வரும். சிறு குடலோடு சேரும் இரைப்பையின் கடைசிப் பகுதியில் கேன்சர் பாதிப்பு இருக்கும் பட்சத்தில் அப்பகுதி அடைபட்டு விடும். இதனால் சிறு குடலுக்குள் உணவைத் தள்ள இரைப்பை சிரமப்படும்.
அப்போது வயிற்றுக்குள் பந்து உருள்வது போன்ற உணர்வு இருக்கும். பின்னர் வாந்தி ஏற்படும். சிலருக்கு இரைப்பை கேன்சர் எந்த அறிகுறியும் இன்றி வளர்ந்து பின்னர் கல்லீரல் அல்லது நுரையீரலை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. இதன் அடுத்த கட்டமாக கல்லீரல் வீக்கம் இருக்கலாம். இது கேன்சரின் முற்றிய நிலை. கல்லீரலை அல்ட்ராசவுண்ட் மூலம் ஸ்கேன் செய்து கண்டறியலாம். இரைப்பை கேன்சர் முற்றும் வரை விடாமல் ஆரம்ப அறிகுறிகளை முறையாக பரிசோதிப்பதன் மூலம் நோயை குணப்படுத்த முடியும்.
பாதுகாப்பு முறை:
இரைப்பை கேன்சரைத் தவிர்க்க வயிற்றில் அல்சர் ஏற்படுவதற்கான காரணிகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சத்தான உணவுமுறை, உடற்பயிற்சி அவசியம். டென்ஷன் குறைக்க யோகா மற்றும் தியானம் உள்ளிட்ட மனப்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். அசைவம், மசாலா கலந்த உணவுகள் அடிக்கடி சாப்பிடுவதைத் தவிர்க்கலாம்.
புகைபிடித்தல் மற்றும் புகையிலைப் பழக்கம் உள்ளவர்கள் அதைக் கைவிடுவது நல்லது. ஜீரணப் பிரச்னை, பசியின்மை மற்றும் எடை குறைதல் உள்ளிட்ட பிரச்னைகள் துவங்கும் போதே அதற்கான பரிசோதனைகள் செய்து கேன்சரா, இல்லையா என்பதை உறுதி செய்து கொள்வதும் அவசியம்.
இதயத்துக்குப் பின்னால், நீளமான குழாய் போன்ற அமைப்பை உடையது உணவுக்குழாய். வாயையும், இரைப்பையையும் இணைக்கக் கூடிய தசையால் ஆன குழாய், 25 செ.மீ., முதல் 30 செ.மீ., நீளமானது; சுருங்கி விரியும். வாய், இரைப்பை இணையும் பகுதியில், மூடி போன்ற இரு வால்வுகளை கொண்டது. உணவு செல்லும் போதும், வாந்தி எடுக்கும் போதும் மட்டுமே இந்த வால்வுகள் திறக்கும்.
வாய் வழியாக உணவு சென்றதும், இயந்திரம் போன்று வேகமாக இயங்கி, உணவை வயிற்றுக்குள் தள்ளும் திறன் கொண்டது தான் இந்த உணவுக் குழாய். நாம் தலைகீழாக நின்று சாப்பிட்டாலும், உணவை வயிற்றுக்குள் அனுப்பும் திறன் வாய்ந்தது. உணவின் பயணம் இக்குழாயில் ஏழு நொடிகள். தண்ணீராக இருந்தாலும், திட உணவாக இருந்தாலும், இந்த நேரத்தை எடுத்துக் கொள்கிறது.
மூன்று வகை நோய்கள்:
உணவுக்குழாயில் ஏற்படும் நோய்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.
1.வயிற்றில் சுரக்கும் அமிலத் தன்மையால் வரக்கூடிய உணவுக்குழாய் அழற்சி.
2. தசையால் ஆன உணவுக் குழாய் அமைப்பில் ஏற்படும் பாதிப்பு, சுருங்கி விரியும் தன்மையில் ஏற்படும்
மாறுதல்.(அக்லேசியா).
3.உணவுக் குழாயினுள் சாதாரண கட்டிகள்,புற்றுநோய் கட்டி ஏற்பட்டு அடைப்பு ஏற்படுதல் (கேன்சர்).
இவற்றில், அமிலத் தன்மையால் வரக்கூடிய நோய், மக்களிடையே காணப்படுகிறது.
நோய்க்கான காரணங்கள்:
* இயற்கையான உணவுப் பழக்கங்களைத் தவிர்த்து, அதிக மசாலா, காரம், எண்ணெய் உள்ள பொருட்களை உண்பதால், வயிற்றில் அமிலத் தன்மை அதிகரிக்கிறது. உணவு ஜீரணத்துக்காக, வயிற்றில் அதிக அளவிலான அமிலம் சுரப்பதால், உணவுக் குழாயின் கீழ் உள்ள வால்வு பாதிப்படைகிறது.
* பொதுவாக, நாம் அதிகம் விரும்பி சாப்பிடும் கொழுப்புச் சத்துள்ள உணவுகளாலும் இந்த சூழ்நிலை
ஏற்படுகிறது. கலாசாரத்தின் பெயரால், மேலை நாட்டு உணவுப் பழக்கத்துக்கு செல்வது ஆபத்தானது.
* அதோடு, குடிப்பழக்கம், புகையிலை, பான்பராக்கு பயன்படுத்துதல், டாக்டர்கள் பரிந்துரை செய்யாத வலி மாத்திரைகளை பயன்படுத்துதல் போன்றவை, உணவுக்குழாய் பாதிப்புக்கு உள்ளாக்குகின்றன. பொதுவாக, கேன்சர் வர காரணமாக அமைவது புகைப்பிடித்தல், குடிப்பழக்கம் தான்.
* பாஸ்ட் புட் பெயரில் தயாரிக்கப்படும் கொழுப்பு நிறைந்த உணவுகளால், இரைப்பையில் அமிலத் தன்மை ஏற்பட்டு பாதிப்பு வரும்.
* உடற்பயிற்சியே இல்லாதது, அமர்ந்த இடத்திலேயே வேலை செய்தல், பரபரப்பான வாழ்க்கை முறை
போன்றவை.
* உடல் பருமன் அதிகரிப்பதால், வயிற்றுப் பகுதியில் கொழுப்பு அதிகரித்து, தொப்பை உருவாகிறது. தொப்பை வெளியே இருப்பதோடு, உள் பகுதியில் உள்ள இரைப்பையையும் அழுத்துகிறது. அழுத்தம் அதிகரித்தால், இரைப்பை அமிலம் உணவுக்குழாயின் வால்வுகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
*அளவுக்கு அதிகமான சூட்டில் , காபி, டீ சாப்பிடுவதால், உணவுக்குழாயில் பாதிப்பு ஏற்படுகிறது.
அறிகுறிகள்:
உணவுக்குழாய் பாதிப்பு ஏற்படுமானால், திட உணவை விழுங்க கடினமாக இருக்கும்; நெஞ்சு எரிச்சல் இருக்கும். உணவுக்குழாயின் கீழ் உணவு செல்லாமல், அதன் பாதையில் நின்றிருப்பது போன்ற உணர்வு ஏற்படும்; வலியும் ஏற்படும்.
* நாளுக்கு நாள், உணவு சாப்பிடக்கூடிய தன்மை குறைந்து, முற்றிலுமாக சாப்பிட முடியாத நிலை ஏற்படும். அமிலத் தன்மையுள்ள ஏப்பம் அடிக்கடி வந்து செல்வதும், உணவுப் பாதையில் ஏற்பட்டுள்ள பாதிப்பை ஏற்
படுத்தும்.
* ரத்த வாந்தி எடுத்தல், இருமல் வருதல், மூச்சு விட சிரமம் ஏற்படுதல் போன்றவையும் கூட, உணவுக்குழாயில் கேன்சர் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் காட்டும்.
கண்டறிதல்:
பொதுவாக, உணவின் பாதை யை முற்றிலும் அறிய, வீடியோ “எண்டோஸ்கோப்’ முறை பயன்படுகிறது. இதில், குடலின் உள் பகுதியை ஒவ்வொரு அங்குல படமாக, “டிவி’ திரையில் படமாகக் காணலாம். உணவுக்குழாயில் புண் உள்ளதா, கட்டி ஏற்பட்டுள்ளதா, தசைகள் பாதிக்கப்பட்டு வீக்கம் ஏற்பட்டுள்ளதா போன்றவற்றைக் காண முடியும். “சிடி’ ஸ்கேன் மூலம், வெளிப்பகுதியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை அறிய முடியும்.
சிகிச்சை முறை:
உணவுக் குழாயில் ஏற்படும் நோய்களுக்கான சிகிச்சை, அதன் தன்மையைப் பொறுத்து மாறுபடும். உணவுக் குழாயில், மூன்று வகையான நோய்கள் ஏற்படுகின்றன. இதில், அமிலத் தன்மையால் ஏற்படும் புண்களை எளிதாக குணப்படுத்தலாம். அக்லேசியா எனப்படும் இரண்டாம் வகை, உணவுக்குழாய் சுருங்கி விரியும் தன்மையில் ஏற்படும் மாற்றம். உணவுக்குழாயில் ஏற்படும் சுருக்கம் (சிரோசிஸ்) மற்றும் வீக்கம், உணவுக்குழாயில் அடைப்பை ஏற்படுத்தும்.
சில சமயங்களில், இந்த வீக்கத்தை சரி செய்வது கடினமாக இருக்கும். அறுவை சிகிச்சை மூலம் இந்த உணவுக்குழாய் சுருக்கத்தை சரி செய்ய முடியும். எளிதாக இதை, லேப்ராஸ்கோபிக் சிகிச்சையில் சரி செய்யலாம்.உணவுக்குழாய் கேன்சர் ஆபத்தானது. முதல் கட்ட அளவில் உள்ள கேன்சரை எளிதாக குணப்படுத்த முடியும். உணவுக்குழாய் கேன்சர், ஆரம்ப கட்டத்தில் இருக்குமானால், எளிதாக எண்டோஸ்கோபி முறையிலான அறுவை சிகிச்சை முறையில் குணப்படுத்தலாம்.
அடுத்த சில கட்டங்களை தாண்டியிருந்தால், பாதிக்கப்பட்ட இடத்தை வெட்டி எடுத்து விட்டு, அங்கு செயற்கை உணவுக் குழாயை பொருத்துகின்றனர். அதிக அளவில் பரவிய கேன்சராக இருந்தால், கீமோதெரபி, கதிர்வீச்சு முறை போன்ற சிகிச்சை முறைகளை கையாள வேண்டிய கட்டாயம் ஏற்படும். இது, கடினமான சிகிச்சையாக இருக்கும்.
டயட்
வயிற்று பகுதியில் ஏற்படும் கேன்சர் அடினோகாஸ்டினோமோ என அழைக்கப்படுகிறது. வயிற்றுப் பகுதியில் எச்.5 என அழைக்கப்படும் பாக்டீரியா கிருமியின் தாக்குதலே கேன்சரை உருவாக்குகிறது.
உணவில் காய்கறி, பழங்கள் சேர்க்காமல் இருப்பது, உணவில் அதிக உப்பு, காரம் சேர்ப்பது, சூடான உணவாக எடுத்துக் கொள்வது, அல்சர் மற்றும் செரிமானப் பிரச்னை உள்ளவர்கள், புகை பிடிப்பது, புகையிலை மற்றும் மதுப்பழக்கம் உள்ளவர்களையும் இந்நோய் எளிதில் தாக்குகிறது.
செரிமானப் பிரச்னை, வயிற்று வலி, லேசான மயக்கம், வாந்தி, பசியின்மை, நெஞ்சு எரிச்சல் போன்ற அறிகுறிகள் தோன்றும். பால், பால் பொருட்கள், வைட்டமின்-சி சத்துள்ள பழங்கள் சேர்த்துக் கொள்ளலாம். மூன்று வேளை வயிறு முட்ட சாப்பிடுவதற்கு பதிலாக 6 வேளை பிரித்து உண்ணலாம்.
பேரிக்காய், வாழைப்பழம், கருப்பு திராட்சை, எலுமிச்சை, பப்பாளி, சாத்துக்குடி, முட்டைக்கோஸ், கேரட், காளான், பச்சை மற்றும் மஞ்சள் நிற காய்கறிகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
சோயா பருப்பு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பூண்டு சேர்த்துக் கொள்ள வேண்டும். உணவில் மஞ்சள் தூளை சேர்க்க வேண்டும்’’ என்கிறார் உணவு ஆலோசகர் சங்கீதா.
பாட்டி வைத்தியம்
* பாற்சொரிக் கீரையுடன் மிளகு, சீரகம், பூண்டு, மஞ்சள் சேர்த்து சூப் வைத்து அதிகாலையில் குடித்தால் பசியின்மை குணமாகும்.
* பிரண்டையின் இளந்தண்டை நெய் சேர்த்து வதக்கி சாப்பிட்டால் நன்றாக பசி எடுக்கும்.
* புதினா இலைச்சாறு, ஆரஞ்சு பழச்சாறு இரண்டையும் சம அளவில் கலந்து குடித்தால் வாந்தி, ருசியின்மை தீரும்.
* புதினாவை காய வைத்து பொடியாக்கி சாப்பிட்டு வந்தால் இரைப்பை பலம் அடையும். ஜீரண சக்தி அதிகரிக்கும்.
* புளியாரை கீரை சாற்றில் ஓமத்தை ஊற வைத்து உலர்த்தி பொடியாக்கி சாப்பிட்டால் ஜீரண சக்தி அதிகரிக்கும்.
* பெருங்காயம் ஒரு பங்கு, வெந்தயம் பத்து பங்கு எடுத்து இரண்டையும் வறுத்து பொடி செய்து கால் ஸ்பூன் பொடியை மோரில் கலந்து குடித்தால் கடுமையான வயிற்று வலியும் குணமாகும்.
* பொன்னாங்கண்ணி கீரையுடன் பருப்பு சேர்த்து அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் கல்லீரல் சார்ந்த நோய்கள் குணமாகும்.