Home » சிறுகதைகள் » நல்லவருடன் பழகுங்க!!!
நல்லவருடன் பழகுங்க!!!

நல்லவருடன் பழகுங்க!!!

ஒரு கிராமத்தில் சிறிய பலசரக்குக் கடை இருந்தது. கடைக்காரர் மிகவும் நல்லவர். கிராமத்தையே தன் குடும்பமாக எண்ணி அன்பு காட்டுவார்.

கடனுக்கு பொருள் கேட்டாலும் கொடுத்து விடுவார். தேவையான பொருட்களை எல்லோரும் அவரிடமே வாங்கினர்.

பக்தி மிக்க அவர் பக்தி பாடல்களையும் அவ்வப்போது பாடுவார். அந்தப்பாடல்களைக் கேட்டால் கல்லும் கரைந்து விடும்.
மதிய நேரத்தில் சாப்பாட்டுக்கு வீட்டுக்குப் புறப்படுவார்.

அந்த நேரம் யாராவது பொருள் கேட்டு வந்தால் காத்திருக்க நேரிடுமே என்பதால் கடையை அடைக்க மாட்டார். அறிமுகமே இல்லாத நபராக இருந்தால் கூட, கடையைச் சற்றுநேரம் பார்த்துக் கொள்ளச் சொல்லி விட்டு வீட்டிற்குப் போய் விடுவார்.

ஒருநாள் மதியம் திருடன் ஒருவன் கடை முன் வந்தான். அவனிடம் கடைக்காரர், “” ஒரு உதவி செய்ய வேண்டும். சிறிது நேரம் கடையைப் பார்த்துக் கொண்டால், வீட்டிற்குப் போய் சாப்பிட்டு வந்து விடுவேன்,” என்று கேட்டார்.

மகிழ்ச்சியுடன் சம்மதித்தான் திருடன். கடைக்காரரும் கிளம்பி விட்டார்.

அந்த நேரத்தில் வந்த சிலரிடம் காசை வாங்கிக் கொண்டு சரக்கைக் கொடுத்தான் திருடன்.

பணப்பெட்டியும் திறந்தே இருந்தது. அந்த நேரத்தில், திருடனை நன்றாக அறிந்த நண்பன் ஒருவன் அங்கே வந்தான்.

“”அடேய்! திருடுவதற்கு இதை விட சரியான சமயம் நமக்கு கிடைக்காது. பணம், சாமான்களை கட்டிக் கொண்டு ஓடி விடலாம்,” என்று யோசனை கூறினான்.
திருடனுக்கோ திருடுவதா வேண்டாமா என்ற தயக்கம்… தனக்குள் ஏன் இந்த மாற்றம் என்றே அவனுக்குப் புரியவில்லை.

சிறிது நேரம் சிந்தித்தவன், “”தன்னை நம்பிய கடைக்காரருக்குத் துரோகம் செய்ய மனமில்லை.” என்று சொல்லி நண்பனிடம் மறுத்து விட்டான்.

சிறிது நேரத்தில் கடைக்காரர் வந்து விட்டார். அவரிடம்,””எல்லாப் பொருளும் சரியாக இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளுங்கள்,” என்றான்.

கடைக்காரரோ,””ஏன் இப்படி கேட்கிறாய். உன் மீது கொண்ட நம்பிக்கையால் தான் கடையை ஒப்படைத்துச் சென்றேன். அதனால், பணத்தையோ, பொருளையோ சரி பார்க்கத் தேவையில்லை,” என்றார்.

கடைக்காரரின் நம்பிக்கை மிக்க பேச்சை கேட்டதும் திருடனின் வருத்தம் அதிகரித்தது.

“”உங்களைப் போன்ற நல்லவர்களுடன் ஒருநாள் பழகியதற்கே மனம் இவ்வளவு தூய்மையாகி விட்டதே. வாழ்நாளெல்லாம் உங்களோடு உறவாடினால் பிறவிப்பயனே கிடைத்து விடுமே!” என்றான்.

கடைக்காரர், “” நீ சொல்வது புரியவில்லையே!” என்றார்.

“”ஐயா! என்னை மன்னியுங்கள். நான் ஒரு திருடன். என் நண்பனும், நானும் கடையில் திருடி விட்டு ஓட எண்ணினோம். ஆனால், நல்ல வேளையாக என் இயல்பான திருட்டுக் குணம் இன்று மறைந்து விட்டது. இனி ஒருநாளும் திருட மாட்டேன்,” என்று அழுதான். கடைக்காரரின் காலில் விழுந்து வணங்கினான்.

இப்படி திருடனைக் கூட திருத்தி பக்தராக மாற்றிய அந்தக் கடைக்காரர் வேறு யாருமல்ல. ஞானி துக்காராம் தான்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top