Home » படித்ததில் பிடித்தது » கோபப்படாமல் எப்படி வாழ!!!
கோபப்படாமல் எப்படி வாழ!!!

கோபப்படாமல் எப்படி வாழ!!!

கோபப்படாமல் எப்படி வாழ முடியும்?

கேள்வி: ஒருவர் கோபப்படாமல் எப்படி வாழ முடியும்? ஒருவருக்குள் எழும் எதிர்மறை எண்ணங்களான கோபம், வெறுப்பு, பொறாமை ஆகியவற்றை எப்படி வெல்வது?

சத்குரு: பலரும் தங்களுக்குள் ஏற்படும் கோபம், பொறாமை போன்ற எதிர்மறை எண்ணங்களைஎப்படி வெல்வது என்று கேட்கிறார்கள். அவற்றை நீங்கள் எதற்காக வெல்ல வேண்டும் என்று கேட்கிறேன். உங்களால் மதிக்கப்படக்கூடிய ஒன்றைத் தான் நீங்கள் வெல்ல வேண்டும். உங்களுக்கு எந்த விதத்திலும் பயன் தராத ஒன்றை நீங்கள் வெல்ல வேண்டிய அவசியமென்ன?

நீங்கள் அரசராக விரும்பினால் எதற்கும் பயன்படாத நிலத்தையா வெல்வீர்கள்? எல்லா வளங்களும் பொருந்திய நிலத்தைத்தானே வெல்வீர்கள். அதுபோல் உங்களுக்கு எவ்விதத்திலும் பயன்படாத எதிர்மறை எண்ணங்களை “வெல்ல” முயற்சிக்காதீர்கள்.

கோபத்தை வெல்ல வேண்டும் என்கிறீர்கள். ஆனால் இந்த விநாடி நீங்கள் கோபமாக இல்லை. இல்லாத கோபத்தை வெல்வதெப்படி? எப்போதோ சிலநேரம் கோபப்படுகிறீர்கள். ஏனென்றால்உங்கள் உடல் மனம் சக்திநிலை எல்லாம் நீங்கள் விரும்பும் விதமாக செயல்படாமல்வேறுவிதமாக செயல்படுகிறது, இதுதான் கோபம். இது நிலையான ஒன்றல்ல. எது இல்லையோஅதை வெல்ல முயல்வது வேண்டாத வேலை.

சில நேரங்களில் உங்கள் மனதில் மகிழ்ச்சியில்லாத சூழ்நிலை காணப்படுகிறது. அந்த நிலையின் ஒரு வெளிப்பாடு, கோபம். வெவ்வேறு வெளிப்பாடுகளுக்கு வெவ்வேறு பெயர்கள்வழக்கிலிருக்கின்றன. உதாரணத்திற்கு கோபம்… ஒருவர் தன்னைத்தானே மகிழ்ச்சியின்றி வைத்துக் கொள்ள என்ன தேவை இருக்கிறது?

உலகெங்கும் மகிழ்ச்சியற்ற தன்மை ஏராளமாகவே இருக்கிறது. தனியாய் அதனை உருவாக்க எந்தத் தேவையும் இல்லை. நீங்கள் எவ்வளவு சிறு பிள்ளைத்தனமாக இருக்கிறீர்களென்றால்,உங்களைச் சுற்றி மகிழ்ச்சியற்ற சூழல் உருவானால் நீங்களும் மகிழ்ச்சியற்றவர் ஆகிவிடுகிறீர்கள். இது புத்திசாலித்தனமில்லை என்று உங்களுக்கும் தெரியும். ஆனால் உங்கள் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்த உங்களுக்குள் எங்கோ ஒரு தடை இருக்கிறது.

நீங்கள் கோபப்படாதீர்கள் என்று நான் சொல்லவில்லை. அது உங்கள் விருப்பம். ஆனால் கோபப்படுவது உங்களுக்கு அற்புதமான அனுபவமாக இருந்தால் எப்போதும் கோபமாகவே இருங்கள். ஆனால் உங்களுக்குக் கோபம் வந்தால், யார் மீது கோபப்படுகிறீர்களோ அவர்களை விட நீங்கள்தான் அதிக பாதிப்புக்கு ஆளாகிறீர்கள். உங்களுக்கு நீங்களே சொந்தமாக சுயமான ஒரு பாதிப்பை ஏற்படுத்திக் கொள்வதால் எந்தப் பயனும் கிடையாது.

ஆனால் உங்களுக்கு நீங்களே என்ன செய்கிறீர்கள் என்று உங்களுக்குத் தெரியவில்லை. அதுதான் காரணம். எவ்வித விழிப்புணர்வும் இல்லாமல் உங்களுக்கு நீங்களே பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள். ஒரு காரியம் செய்யுங்கள். கண்களை மூடிக்கொண்டே உங்கள் வாகனத்தை இயக்கி, வீடு போய் சேர முயலுங்கள். சிலரை சாகடித்துவிட்டு நீங்களும் போய் சேர்வீர்கள். வீட்டுக்கல்ல, வேறோர் இடத்திற்கு.

எனவே உங்கள் நலன் குறித்து எவ்வித விழிப்புணர்வும் இல்லாமல் உங்களைக் கையாள்கிறீர்கள்.நீங்கள் எதைச் செய்தாலும் உங்கள் இயல்பறிந்து முழு விழிப்புணர்வுடன் கையாள்வது தான் மிகச் சிறந்த வழி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top