Home » படித்ததில் பிடித்தது » பெரிய கோயில் எப்படி கட்டப்பட்டது!!!
பெரிய கோயில் எப்படி கட்டப்பட்டது!!!

பெரிய கோயில் எப்படி கட்டப்பட்டது!!!

கட்டடக் கலையில் தமிழருடைய சாதனையாக ஒரு கோயிலை  கட்டியிருக்கிறான் சோழப்பேரரசின் மாமன்னன் ராஜராஜ சோழன்.   ஆயிரம் வயது ஆகியும் இன்றும் வாலிப முறுக்கோடு காட்சிய ளிக்கிறது அந்தக்கோவில்.  அதுதான் தஞ்சை பெரிய கோவில்.

இக்கோயிலின் கட்டிடக்கலை, சோழர்காலக் கட்டிடக்கலைக்கு நல்லதொரு எடுத்துக்காட்டாகக் கருதப் படுகிறது. கட்டுமான கற்கோயில் அமைப்புகளில், இந்தியாவிலேயே மிகப்பெரியது தஞ்சை பெரிய கோவில்.

கி.பி.985 ல் அரியனை ஏறிய ராஜராஜன், அவரது ஆட்சியில் கி.பி.1003 ல் துவங்கிய  இக்கோயில் கட்டுமானம், அரியனை ஏரிய இருபத்தைந்தாம் ஆண்டில் 275 ஆம் நாளில் நிறைவு பெற்றதாகக் கல்வெட்டுச் செய்தி கூறுகிறது. கல்வெட்டு அடிப்படையில் கி.பி. 1010 ஆண்டு ஏப்ரல் 22 ஆம் நாள், தஞ்சை பெரிய கோயிலுக்கு மாமன்னன் இராஜராஜனால் முதல் குடமுழுக்கு நடத்தப் பட்டுள்ளது தெரிய வருகிறது.

நம் கலைப்பொக்கிசம் தஞ்சைப் பெரிய கோயில் எப்படி கட்டப்பட்டது ???? என்ற தகவல் உங்களுக்காக.

படிப்பதற்கு பெரியதாக உள்ளது என பாதியில் நிறுத்திவிட வேண்டாம்.. இதை ஒவ்வொரு தமிழனும் தெரிந்து கொள்ளவேண்டும் .

தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலுக்குச் சிறப்பு அம்சங்கள் பல உண்டு. இரண்டு அல்லது மூன்று தளங்களை மட்டுமே கொண்டு கோயில்கள் கட்டப்பட்டு வந்த காலத்தில், கற்களே கிடைக்காத காவிரி சமவெளிப் பகுதியில், 15 தளங்கள் கொண்ட சுமார் 60 மீட்டர் உயரமான ஒரு கற்கோயிலை எழுப்பியது என்பது மாபெரும் சாதனையே.

அது மட்டுமன்றி, கல்வெட்டுகள், சிற்பங்கள், ஓவியங்கள், வழிபாட்டுக்கான செப்புத் திருமேனிகள் என்று பல புதிய அம்சங்களையும் இத் திருக்கோயிலில் புகுத்தி கோயில் கட்டும் கலையில் ஒரு புரட்சியை ஏட்படுத்தியவர்கள் விஸ்வப் பிரம்மகுல சிற்பிகளே மன்னர் கட்டியது மன்னர் கட்டியது என மார்தட்டும் எந்த மன்னனாவது ஒரு சிறு கல்லைத் தூக்கியதாக வரலாறுண்டா ஒரு கல்லை அது எந்த பதத்தில் உள்ளது என , தெரியும் தஞ்சாவூர் பெரிய கோயிலைப் பற்றிப் பல நூல்கள் வெளிவந்துள்ளன. ஆயினும் இவற்றில் முரண்பாடுகள் காணப்படுகின்றன.

கோபுரத்தின் உயரம் 59.75 மீட்டர் முதல் 65.85 மீட்டர் வரை குறிப்பிடப்பட்டு உள்ளன . எனவே சோழர் கால அளவுகளின்படி கோயிலின் திட்டமிடப்பட்ட உயரம் என்ன, கடைக்கால்கள் எந்த அடிப்படையில் திட்டமிடப்பட்டன. கட்டப்பட்டன, பாரந்தூக்கிகள் மற்றும் நவீன தொழிநுட்பங்கள் முதலியன இல்லாத ஒரு காலத்தில் சுமார் 60 மீட்டர் உயர கோபுரம் எவ்வாறு கட்டப்பட்டது.

பெரிய கோயில் அளவுகோல்…

எட்டு நெல் கதிர்களை அகலவாட்டில் ஒன்றோடொன்று நெருக்கமாக அமைத்து அந்த நீளத்தை

1. விரல்,
2. மானாங்குலம்,
3. மானம் என்று அழைத்தனர்.
4. இருபத்தி நான்கு விரல் தஞ்சை முழம் என்று அழைக்கப்பட்டது.
5. ஒரு முழமே இருவிரல் நீட்டித்து(நீளம்) பதினாறு விரல் அகலத்து(அகலம்), ஆறுவிரல் உயரத்து (உயரம்)பீடம், ஒரு விரலோடு ஒரு தோரை உயரத்து பதுமம் என்ற திருமேனி பற்றிய குறிப்பை காணலாம்.

தற்போதைய அளவின்படி ஒரு விரல் என்பது 33 மில்லி மீட்டராகும். கருவறைவெளிச்சுவர்களில் காணப்படும் கலசத்தூண்களின் அகலம் 10 விரல்களாகும், அதாவது 0.33 மீட்டர் ஆகும். இதுவே தஞ்சாவூர் பெரிய கோயிலின் அடிப்படை அளவாகும். இதனை நாம் அலகு என்று குறிப்பிடலாம். இந்த அடிப்படையில் விமானத்தின் திட்டமிட்ட உயரம் 180 அலகுகள். அதாவது சுமாராக 59.40 மீட்டர்.

சிவலிங்கத்தின் உயரம் சரியாக 12 அலகுகள். இதைப்போன்று 15 மடங்கு உயரமான 180 அலகுகள், அதாவது 59.40 மீட்டர் என்பதே கோபுரத்தின் திட்டமிடப்பட்ட உயரம். கருவறையின் இரு தளங்களிலும் விமானத்தின் பதின்மூன்று மாடிகளும் சேர்ந்து 15 தளங்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கத . அலகுகளின் அடிப்படையில் கருவறை 24 அலகுகள் கொண்ட ஒரு சதுரம். கருவறையின் உட்சுவரும், வெளிச்சுவரும் முறையே 48 அலகுகள், 72 அலகுகள் அளவுடைய சதுரங்களாகும்.

பிரகாரத்தில் நாம் காணக்கூடிய விமானத்தின் அடிப்பகுதி (உபானா) 90 அலகுகள். இந்த அடிப்படையில் விமானத்தின் கடைக்கால் 108 அலகுகள் (36 மீ ஷ் 36 மீ) பக்க அளவு கொண்ட பெரிய சதுரமாக இருக்கலாம் என யூகிக்க முடிகிறது. சரியான அளவுகள் தெரியவில்லை.
இந்த கடைக்கால் மிகக்குறைந்த ஆழத்திலேயே, அதாவது 5 அலகுகள் ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ள எனத் தெரியவந்துள்ளது. கோயில் வளாகத்தின் அருகே பாறை தென்படுகிறது. ஆயினும் சுமார் 42,500 டன் எடையுள்ள விமானத்தை பாறையின் தாங்கு திறனைச் சோதித்துப் பார்க்காமல் கட்டியிருக்க மாட்டார்கள்

1.2 மீ ஷ்
1.2 மீ சதுரத்தில்
0.6 மீ ஷ்
0.6 ஷ்
0.6 மீ அளவு கற்களை ஒவ்வொரு அடுக்கிலும் நான்கு கற்கள் என்ற கணக்கில் அடுக்கிக் கொண்டே போய் பாறையில் எப்போது விரிசல்கள் விழுகின்றன என்பதைக் கவனித்த பின்னரே கடைக்காலின் அளவுகளை தீர்மானித்திருக்கிறார்கள் .

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாறையின் மேல் வரும் அழுத்தம் குறித்த சோதனைகள் மேற்கொண்டனர் என்பது இக்கோயிலின் மற்றொரு சிறப்பம்சமாகும்.

பெரிய கோயிலின் விமான வடிவமைப்பு

180 அலகுகள் உயரம் கொண்ட கோயில் விமானம் எவ்வாறு கட்டப்பட்டது என்பது குறித்த குறிப்புகள் எதுவுமில்லை. சில சாத்தியக் கூறுகள் மட்டுமே பரிசீலிக்கலாம். கருவறையின் உட்சுவருக்கும், வெளிச்சுவருக்கும இடையே 6 அலகுகள் கொண்ட உள் சுற்றுப்பாதை உள்ளது. இந்த இடைவெளி படிப்படியாகக் குறைக்கப்பட்டு, சுமார் 20 மீட்டர் உயரத்தில் இரு சுவர்களும் இணைக்கப்பட்டன.

இங்கிருந்து விமானம் மேலே எழும்புகிறது. சுவர்களை இணைத்ததன் மூலம் 72 அலகுகள் பக்க அளவு கொண்ட (சுமார் 24 மீ ஷ் 24 மீ) ஒரு பெரிய சதுர மேடை கிடைக்கப் பெற்றது. விமானம் 13 தட்டுகளைக் கொண்டது. முதல் மாடியின் உயரம் சுமார் 4.40 மீட்டர், பதின்மூன்றாவது மாடியின் உயரம் சுமார் 1.92 மீ. பதின்மூன்று மாடிகளின் மொத்த உயரம் 32.5 மீட்டராகும். பதின்மூன்றாவது மாடியின் மேல் எண்பட்டை வடிவ தண்டு, கோளம், கலசம் மூன்றும் உள்ளன. இதன் மொத்த உயரம் 30 அலகுகள். அதாவது பிரகாரத்திலிருந்து விமானத்தின்,13-வது மாடி சரியாக 150 அலகுகள் (50 மீ) உயரத்தில் உள்ளது. இந்த உயரத்தை மூன்று சம உயரப் பகுதிகளாகப் பிரித்துள்ளனர்.

அதாவது, கருவறை மேல் மாடி உயரம் 50 அலகுகள், விமானத்தின் முதல் மாடியிலிருந்து 5-வது மாடி வரை 50 அலகுகள், விமானத்தின் 6-வது மாடியிலிருந்து 13-வது தளம் வரை 50 அலகுகள். இந்த மூன்று பகுதிகளுக்கும் அதன் உயரத்துக்கேற்ப தனித்தனியான சார அமைப்புகள் அமைக்கத் திட்டமிட்டிருந்தனர் என்று தெரிகிறது.

கருவறையின் நிலகீழ் அமைப்பும் நிலத்தில் நீர் ஊற ஆரம்பிக்கும் இடத்திலிருந்து கருவறை அத்திவாரநிலபீடம் எனும் சிட்பசாஸ்திர அளவு முறை ஆலயம் கட்டும் போதும் பயன்படுகிறது என்பது ஒரு முக்கியகுறிப்பு ஆகும்,

சாரங்களின் அமைப்பு

கருவறைக்கு ஒரு கீழ்தளமும் ஒரு மேல் தளமும் உள்ளன. மேல் தளத்தின் கூரை சரியாக 50 அலகுகள் (16.5 மீ) உயரத்தில் உள்ளது. இங்கு தான் முதல்கட்ட சாரம் – ஒரு சாய்வுப் பாதை முடிவுற்றது. ஒன்றுக்கு மேற்பட்ட சாய்வுப் பாதைகள் உபயோகப்படுத்தப்ப ட்டுள்ளது தெரிகிறது. இவை பல ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கும் வகையில் அமைக்கப்பட்டன. சாய்வுப் பாதையின் இருபக்கங்களிலும் கற்கள் – சுண்ணாம்புக் கலவை கொண்டு கட்டப்பட்ட உறுதியான சுவர்கள் இருந்தன.

இந்த இரு சுவர்களுக்கு நடுவில் உள்ள பகுதி (4 அல்லது 5 மீ அகலம் இருக்கலாம்) பெரிய மற்றும் சிறிய உடைந்த கற்கள், துண்டுக் கற்கள் ஆகியவற்றால் நிரப்பப்பட்டன. மண்ணால் அல்ல. யானைகள் செல்வதற்கு ஏற்ற மிதமான வாட்டத்துடன் அமைக்கப்பட்டன. மழைநீர் வடியவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோயிலின் திருமதில் சுவரும் (சுமார் 1 மீ குறுக்களவு கொண்டது) இதே பாணியில் கட்டப்பட்டிருந்தது என்பது குறிப்பிட்டத்தக்கது.

இரண்டாவது கட்டமாக 50 முதல் 100 அலகுகள் வரை (சுமார் 16.5 மீட்டரிலிருந்து 33 மீட்டர் உயரம் வரை) விமானம் கட்டுவதற்குச் சற்று மாறுபட்ட சாரம் தேவைப்பட்டது. இது அமைப்பில் சீனாவின் நெடுஞ்சுவர் போல் ஓர் அரண் மதில் சுவர் அமைப்பாக செங்குத்தான இரு சுவர்களையும், அதன் நடுவே முதல்கட்ட சாரத்தைப் போல் யானைகள் செல்வதற்கேற்ற வழித்தடத்தையும் கொண்டிருந்தது.

விமானத்தின் நான்கு பக்கங்களையும் சுற்றிச் செல்லுமாறு அமைந்திருந்த இந்த அரண் மதில் சாரம், கோபுரம் உயர உயர தானும் உயர்ந்து கொண்டே சென்றது. முதல் கட்ட சாய்வுப் பாதையின் இறுதிகட்ட மேடைச் சுவர்களுடன் இந்த இரண்டாம் கட்ட சாரத்தின் சுவர்கள் இணைக்கப்பட்டிருந தன. இந்த கட்டுமானத்தின் அமைப்பில் மிகுந்த கவனம் தேவைப்பட்டது.

இதுமட்டுமன்றி இந்த அரண் சுவர்களுக்கு நிறைய கற்களும் தேவைப்பட்டன. முதல் கட்ட சாரங்களில் சில கலைக்கப்பட்டு, அவற்றின் கற்கள் முதலியவை செங்குத்தான அரண் சுவர்கள் கட்டுவதற்கு உபயோகப்படுத்தப்ட்டன என்று நம்புவதற்கு இடமிருக்கிறது.

இறுதிகட்டமாக, 100 முதல் 150 அலகுகள் வரையிலான விமானப் பணிகளுக்காக மரத்தினாலான வலுவான சாரம் அமைக்கப்பட்டது. சவுக்குக் கழிகள், சணல் கயிறுகள் தவிர்க்கப்பட்டன. தரமான நல்ல உறுதியான மரங்களிலான தூண்கள் நேர்ச்சட்டங்கள் , குறுக்குச் சட்டங்கள் அனைத்தும் முட்டுப் பொருத்துகள் மூலம் இணைக்கப் பெற்றன. இவை இரண்டாவது கட்ட மதில் அரண் சாரத்தில் நிலை நிறுத்தப்பட்டன. செங்குத்தான தூண்களும் நேர் சட்டங்களும் மேடைகளை விரும்பிய விதத்தில் அமைத்துக் கொள்ளஉதவின.

அரண் மதில் உட்சுவரிலிருந்து மேடைகளுக்குக் கற்களையும் சிற்பிகள் மற்றும் ஏனைய தொழிலாளர்களையும் எடுத்துச் செல்ல சாய்வுப் பாதைகள் அமைப்பது இந்த முறையில் எளிதாகவிருந்தது.

மேலே கூறிய அமைப்பு ஒரு சாத்தியக் கூறு

இரண்டாவது கட்ட அரண் மதில் சுவர் சாரத்துக்கு முதல் கட்ட சாய்வுப் பாதைகள் கலைக்கப்பட்டு, அதன் கற்கள் பயன்படுத்தப்பட்ட . விமானக் கட்டுமானப் பணிகள் அனைத்தும் முடிவுற்றதும் சாரங்கள் கலைக்கப்பட்டு, கற்கள், மண், மரம் அனைத்தும் கோயில் மதில் சுவர், மதில் சுவர் உள்புறத்தில் காணப்படும் துணைக் கோயில்கள், நுழைவுவாயில்கள், சாலைகள் அமைப்பது முதலிய கட்டுமானங்களில் எவ்வித சேதாரமுமின்றி முழுமையாகப் பயன்படுத்தப்பட்ட என்பது குறிப்பிடத்தக்கது . !!

‘இராஜராஜேச்சரம்’ – பெயர்க்காரணம்

“கோயில் என்பது சைவர்களுக்குத் தில்லை பொன்னம்பலத்தையும், வைணவர்களுக்குத் திருவரங்கத்தையும் குறிப்பது போலப் பொது மக்களுக்குப் ‘பெரிய கோயில்’ என்றால் அது தஞ்சை இராஜராஜேச்சரமே ஆகும்.”

“பெரிய கோயில், ‘ப்ருஹத் ஈஸ்வரம்’ எனும் வடமொழிப் பெயரால் ‘பிரஹதீஸ்வரம்’ என்றும், பெரிய லிங்கத்திருமேனி இடம் பெற்றுள்ளது என்பதால் ‘பிரஹதீஸ்வரர் ஆலயம்’ எனவும் அழைக்கப்படலாயிற்று. தென்னாட்டுக் கோயில்களுக்குள் மிக உயர்ந்த விமானத்தை உடையதால்தான் ‘பெரியகோயில்’ என்ற சிறப்புப் பெயர் பெற்று விளங்குகிறது. இக்கோயிலின் ஸ்ரீவிமானம் தக்ஷிணமேரு எனப்பெயர் பெற்றுத் திகழ்கிறது.”

சென்ற நூற்றாண்டில் இத்திருக்கோயிலின் வரலாறு மக்களால் தெளிவாக அறியப்பட்டிருக்கவில்லை. சைவர்களால் திருவிசைப்பா படிக்கப்பட்டு வந்தபோதும், அதிலுள்ள இராஜராஜேச்சுரம் என்னும் தொடர் வரலாற்று உணர்வோடு புரிந்து கொள்ளப்படவில்லை.

இச்சிவாலயத்தைப் பற்றிப் பலவகையான கற்பனைக் கதைகள் ஏட்டிலும், நாட்டிலும் வழங்கி வந்தன.

“இக்கோயிலைக் கட்டியவர் என்று பலருடைய பெயர்கள் தவறாகப் பரவியிருந்தன. 1892இல் வெளியான ‘தென்னிந்திய கல்வெட்டுக்கள்’ என்னும் நூலில், “பாண்டிய குலாசனி வளநாட்டுத் தஞ்சாவூர்க் கூற்றத்துத் தஞ்சாவூர் நாம் எடுப்பிச்ச திருக்கற்றளி ஸ்ரீராஜராஜீஸ்வரம்” எனும் தொடரால்தான் இது மாமன்னன் ராஜராஜன் கட்டிய செய்தி உறுதி செய்யப்பட்டது. இதுதவிர இந்தக் கோயிலைப் பற்றிய வேறு பல செய்திகளும் தவறாகவே சொல்லப்பட்டு வந்திருக்கின்றன.

அவை:- நிழல் கீழே விழாத கோபுரம்; வளர்ந்து வருகின்ற நந்தி, சாரப்பள்ளம் எனும் கிராமத்திலிருந்து சாரம் கட்டி கோபுர உச்சிக்கு 80 டன் எடையுள்ள பிரமரந்திரக்கல் ஏற்றப்பட்டது என்பது போன்ற பல செய்திகள் பொய்.”

“மன்னன் ராஜராஜனுக்கு இந்த ஆலயம் எழுப்பிட பலர் உதவியிருக்கிறார்கள். இந்தக் கோயிலால் ஆன்மீகம் வளர்ந்தது, கலைகள் செழித்தன; சோழநாட்டின் பொருளாதாரம் சிறந்தது என்பது போன்ற பல சாதனைகளைச் சொல்லி மகிழலாம். ராஜராஜனுடைய பெருந்தன்மையை விளக்கும் ஒரு செய்தி, இவ்வாலயம் எழுப்ப அவனுக்கு உதவிய அத்தனை பேருடைய பெயர்களையும் கல்வெட்டில் எழுதி வைத்திருக்கிறான்.”

‘இராஜராஜேஸ்வரம்’ எழும்பியுள்ள தஞ்சாவூர் பகுதி முழுவதும் ஆறுகள், வாய்க்கால்கள், வயல்வெளிகள் என பாறைகளே இல்லாத சமவெளிப் பிரதேசம். இங்கு பெரிய பெரிய கற்பாறைகளைக் கொண்டுவந்து தரை கெட்டியாகவுள்ள செம்மண் பிரதேசத்தில் இக்கோயிலை அமைத்துள்ளதே இவனது பொறியியல் திறமைக்குச் சான்று. இங்கு உபயோகப்படுத்தப்பட்ட பாறைகள் அனைத்தும் புதுக்கோட்டையை அடுத்த குன்னாண்டார்கோயில் பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்டவை என்பது முனைவர் குடவாயில் அவர்களின் கருத்து.

நுழைவுக் கோபுரம் – கேரளாந்தகன் திருவாயில்

இவ்வாலயத்தின் நுழைவு வாயிலாகத் திகழ்வது ‘கேரளாந்தகன் திருவாயில்’ எனப்படும். மாமன்னன் இராஜராஜன் தான் முடிசூடிய நான்காம் ஆண்டில் ‘காந்தளூர்ச்சாலை கலமருத்தருளிய கோஇராஜகேசரிவர்மன்’ என்று பெயர்பெற்றான். பொ.பி.988ஆம் ஆண்டில் கேரளத்தில் திருவனந்தபுரம் அருகிலுள்ள காந்தளூர்ச்சாலையை வென்று இப்பட்டப்பெயர் பெற்றான். (பொ.பி – பொது சகாப்தத்திற்குப் பின், CE)

இந்த கேரளாந்தகன் திருவாயிலைக் கடந்து உள்ளே சென்றால் அடுத்து வருவது ‘இராஜராஜன் திருவாயில்’. அதையும் தாண்டி உள்ளே சென்றால் இருப்பது ‘நந்தி மண்டபமும்’ மாபெரும் நந்தி உருவமும். இப்போது அங்குள்ள பெரிய நந்தி நாயக்க மன்னர்கள் காலத்தில் வைக்கப்பட்டது. மன்னன் ராஜராஜன் நிறுவிய பழைய நந்தி இப்போதும் ‘வாராஹி’ அம்மன் சந்நிதிக்கருகில் வைக்கப்பட்டிருக்கிறது.

ராஜராஜன் எழுப்பிய மாபெரும் கோயிலுக்குள் நுழைவதற்கு முன் நாம் தாண்டிச் செல்லவேண்டிய இவ்விரு கோபுரங்களின் சிறப்பை அறிய வேண்டுமானால் குடவாயில் அவர்களின் நூலைப் படித்துத் தெரிந்து கொள்ளலாம். இனி கோயிலின் சிறப்பினைப் பார்ப்போம்.

திருக்கோயிலின் அமைப்பு

ஆலயத்தின் மதிற்சுவரோடு இணைந்து நாற்புறமும் திருச்சுற்று மாளிகை அமைந்திருக்கிறது. அதன் வடபுற விமானத்துக்கருகே சண்டீசரின் சந்நிதி உள்ளது. இவ்வளவுதான் அந்த ஆலயத்தின் பழைய தோற்றம். திருச்சுற்று மாளிகையில் பல பரிவார தேவதைகளுக்கான சிறு சந்நிதிகள் உண்டு. பழைய காலத்தில் வடக்குப் புறம் ஓர் அம்மன் ஆலயம் இருந்ததாகத் தெரிகிறது. “திருச்சுற்று மாளிகையில் ஆலயத்து பரமேஸ்வரி” என்று ஒரு கல்வெட்டு கூறுகிறது.

ஆலயத்தின் மகாமண்டபம், அர்த்தமண்டபம் இவைகளைத் தாண்டிச் சென்றால் ஆலயத்தின் கற்றளி விமானம் இருக்கிறது. “இந்த ஸ்ரீவிமானம் 30.18மீ அளவுடைய உயர்ந்த அதிஷ்டானத்தின் மேல் கருவறை நடுவே திகழ, அதனைச் சுற்றி நான்கு புறமும் வாயில்களுடனும் ஓர் சுற்று அறையுடனும் திகழ்கின்றது. இராஜராஜேச்சரமுடையார் எனும் மிகப்பெரிய லிங்கத் திருவுருவம் நடுவே திகழ, ஒரே வாயிலுடனும் 11அடி கனமுடைய சுற்றுச் சுவர்களுடனும் கருவறை உள்ளது.

கருவறைக்கு வெளிப்புறம் அமைந்துள்ள அறை 6அடி அகலமுடையதாக விளங்குகிறது. இங்கு புறச்சுவர்களின் நான்கு பக்கச்சுவர்களின் அகலம் 13 அடி கனமுள்ளது. சிவலிங்கத்துக்கு மேலே விதானம் மரத்தாலானது. இது பிற்காலத்தில் அமைக்கப்பட்டது. விமானம் உட்புறம் கூடாக அமைந்திருக்க அதன் இருண்ட பகுதிக்குள் வெளவால்கள் அடைந்துகொண்டு லிங்கத்தின் மேல் அசிங்கம் செய்துவந்த காரணத்தால் அதனைத் தடுக்கும் பொருட்டு மர அடைப்பு இடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கருவறைக்கு மேல் இரண்டாம் தளம் உள்ளது 

மகாமண்டபம் வழியாகப் படியேறிச்சென்றால் இந்த தளத்துக்குச் செல்லலாம். இங்கே ஒரு திருச்சுற்று இருக்கிறது. இங்கு இருபக்கச் சுவர்களும் மேலே போகப்போக ஒன்றுகூடி 30அடியுள்ள கனமான சுவராக ஆகிவிடுகிறது.

இந்த இடத்திலிருந்து விமானம் உட்புறம் பிரமிட் வடிவில் குவிந்து 13 அடுக்குகளாக உயர்ந்து கடைசியாக 8.7மீ பக்க அளவுடைய ஒரு சதுரத் தளத்தை உருவாக்கியிருக்கிறது. இந்த தளத்தில் எட்டு நந்திகள் உள்ளன. மையத்தில் 20மீ சுற்றளவுள்ள பெரிய பாறைபோன்ற அமைப்பு, அதன் மேல் சிகரம் அது சுமார் 12 அடி உயரமுள்ளது. இந்த விமானம் தரையிலிருந்து கலசம் வரை 60.40 மீ உயரமுள்ளது.

இந்த விமானத்தின் உச்சியில் உள்ள பாறைபோன்ற அமைப்பு ஒரே கல்லால் ஆனது 80 டன் எடையுடையது என்றெல்லாம் பேசப்பட்டாலும், அது உண்மையல்ல என்பது முனைவர் குடவாயில் அவர்களின் முடிவு. இந்தக் கல்லை ஒரு கிழவி கொடுத்தாள் என்பதெல்லாம் கற்பனை கதை என்றும் அவர் கூறுகிறார். இந்த பாறைவடிவம் பல கற்களை இணைத்து உருவாக்கப்பட்டதாம். இருந்தாலும் ஒரே கல் போன்ற தோற்றமளிக்கும் வகையில் அவ்வளவு நேர்த்தியாக இவை கோர்க்கப்பட்டிருப்பது வியப்புக்குரியது.

அற்புதமான துவாரபாலகர்கள்

பெரிய நந்தியிலிருந்து மகாமண்டபத்துள் நுழையுமுன் இருக்கும் முன்மண்டப வாயில் இரண்டு துவாரபாலகர்கள் உண்டு. ஒரு துவாரபாலகரின் காலடியில் ஒரு மலைப்பாம்பு யானை ஒன்றை விழுங்கிக்கொண்டிருக்கிறது.

இது ஓர் அரிய உட்பொருளை விளக்குகிறது என்று ஆசிரியர் கூறுகிறார். இந்த ஆலயமே ஒரு மாபெரும் தத்துவப் படைப்பு என்றும், இந்தச் சிற்பங்கள் அப்படிப்பட்ட தத்துவங்களை விளக்குவன என்றும் குடவாயில் கூறுகிறார்.

இந்த கோயிலில் எழுப்பப்பட்டிருக்கும் புதுமையான விமான கோபுரத்தின் உயரம் 190 அடி ஆகும். கோயில் வளாகத்தில் ‘முன் தாழ்வாரம்’, நந்தி மண்டபம், கருவூர்த்தேவர் கோயில், சுப்ரமணியர் கோயில் போன்றவை பின்னாளில் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

இங்கு காணப்படும் கல்வெட்டுகள் மறுக்க முடியா வரலாற்று ஆவணங்களாக பல தகவல்களை கொண்டுள்ளன. இந்த கல்வெட்டுகளின் தொலைநோக்கு பார்வைமொரு முக்கியமான பிரமிக்க வைக்கும் அம்சமாக விளங்குகிறது.

இங்கு நிர்மாணிக்கப்பட்டிருக்கும் நந்தி ஒரே கல்லால் ஆனதாக 14 மீ உயரமும், 7மீ நீளமும், 3மீ அகலமும் அகலமும் கொண்டதாக வீற்றிருக்கிறது. இதன் எடை 25 டன் என்பதாக சொல்லப்படுகிறது. பிருகதீஸ்வரர் என்ற பெயருடன் சிவபெருமான் உறையும் இந்த திருக்கோயிலில் மே மாதத்தின்போது வருடாந்திர திருவிழா கொண்டாடப்படுகிறது.

ஒரு மஹோன்னத பொற்காலத்தின் சாட்சியமாகவும் கல்லிலே பொறிக்கப்பட்ட ஆவணமாகவும் வீற்றிருக்கும் இந்த தட்சிண மேருவை தமிழர்கள் அனைவரும் வாழ்வில் ஒருமுறையாவது தரிசிப்பது அவசியம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top