“நாளைய உலகம் உங்கள் கையில், நாளைய தலைவர்கள் நீங்கள்தான், எதிர்கால நட்சத்திரங்கள்” இப்படியாக தேசிய அளவில் நீங்கள் பேசப்படுகிறீர்கள். எதிர்காலம் உங்களால் வளம் பெறும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள் உலக மாந்தர்.
குடும்ப அளவில் நோக்கினால் ‘நாளை குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு உன்கையில், சகோதரங்களை கரை சேர்க்கும் பொறுப்பு, குடும்பக் கடன்களை தீர்க்க வேண்டிய தார்மீகக் கடமை’ எனப் பல உங்களைக் எதிர்பார்த்திருக்கின்றன. இவற்றில் பல உங்களுக்கு எதிர்காலத்தில் மகிழ்ச்சியளிப்பதாக இருக்கப் போகின்றன. சில புகழின் உச்சங்களுக்கும் இட்டுச் செல்லப் போகின்றன. வேறு பல கடமைகள் உங்களுக்கு உற்சாகம் அளிக்காவிட்டாலும் மகிழ்வைத் தராது போனாலும் கட்டாயம் செய்ய வேண்டியவை.
நாட்டிற்காகவும் வீட்டிற்காகவும் செய்ய வேண்டிய தார்மீகப் பொறுப்பு உங்களுக்கு உள்ளது. ஆனால் இவற்றை முன்னெடுப்பதற்கு அத்திவாரம் உங்கள் நலன் மட்டுமே. அது நல்ல நிலையில் இருக்க வேண்டும். நலம் என்பது உடல் நலம் மட்டுமல்ல. உடல், உள்ளம், சமூக நோக்கு, ஆன்மீகப் பார்வை யாவும் நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே ஒருவர் ஆரோக்கியமாக இருப்பதாகக் கொள்ளலாம்.
உணவும் போஷாக்கும்
போசாக்கான உணவு எந்தவொரு உயிருக்கும் அவசியமானது. உங்களுக்கும் அவசியம். ஆனால் இன்றைய தiமுறையினராகிய உங்களில் பெரும்பாலானவர்களது உணவுமுறைகள் மாறிவருகிறது. எமது பாரம்;பரிய முறைகளிலிருந்து விடுபட்டு மேலைத் தேய நாகரீகங்களின் பாதையில் வழிமாறிச் செல்கிறது. சோறு, இடியப்பம், புட்டு, அப்பம், இட்லி என்பவை பலருக்கும் வேண்டாத உணவாக இருக்கிறது.
“இவன் நான் சமைச்சு வைச்ச இடியப்பமும் சாம்பாரும் சரியில்லை என்று சொல்லிப் போட்டு ‘Pizza’ ஓடர் பண்ணி எடுப்பிச்சுச் சாப்பிடுகிறான்” என்று கவலைப்படும் அம்மாக்கள் பலர். பிட்ஸா மட்டுமல்ல, கொத்து ரொட்டி, ரோல்ஸ், மிக்ஸர் எனப் பலப்பல ரெடிமேட் உணவுகள் உணவகங்களை நிறைத்திருக்கின்றன. அங்கிருந்து ஹோம் டிலிவரி, பார்சல் என வீடு நோக்கிப் படை எடுக்கவும் செய்கின்றன. ஆம் அவை வாய்க்கு இதமானவை, உண்பதற்கு மென்மையானவை. கடைக்கு அருகில் சென்றாலே நாசியைக் கவர்ந்திழுப்பன. நாவின் சுவை மூளைகளை (Taste buds) சிலிர்க்க வைப்பவை. அதற்கு மேல் அது ஒரு பாஷன் போன்றதும் கூட. அவற்றிலிருந்து தப்புவதற்கு மிகுந்த மனஅடக்கம் தேவை.
ஆனால் இவற்றில் இருப்பவை என்ன? மாப் பொருளும் எண்ணெய், மாஜரீன், அஜினமோட்டோ போன்ற சுவையூட்டிகள், கலரிங் ஆகியவைதானே உள்ளன. ஊதிய பலூனில் காற்று நிறைந்திருப்பது போல அவற்றில் நிறைந்திருப்பது வெற்றுக் கலோரிகள்! அது மட்டுமே. நார்ப்பொருள், விட்டமின், கனியம் புரதம் போன்ற போஷாக்குகள் அற்றவை.
எனவே எடை அதிகரிக்கும். குனிந்து பாருங்கள். உங்கள் இடுப்புப் பட்டிக்கு மேல் தொப்பை வயிறு சரிந்து தொங்குகிறதா? ஆம் எடை அதிகரிக்கும்போது கொழுப்பு உங்கள் உடல் முழவதும் படிகிறது. முகத்தில் கை கால்களில் உடல் முழுவதும். அதே போல வயிற்றிலும் படிகிறது. வயிற்றின் வெளிப் பகுதியில் மட்டுமின்றி வயிற்றறைக்குள்ளும் கொழுப்புப் படிகிறது. இவ்வாறு கொழுப்புப் படிவது நல்லதல்ல. அதனால் எதிர்காலத்தில் இருதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பு அதிகம் என மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.
பொரிப்பதாலும், ஓரே எண்ணெயை மீண்டும் மீண்டும் உபயோகிப்பதாலும் மேற் கூறிய பாஸ்ட் பூட்ஸ் அனைத்துமே ரான்ஸ் கொழுப்பு அமிலங்களால் நிறைந்திருக்கின்றன. இவை கொலஸ்டரொலை அதிகரிப்பதுடன் இருதய நோய்களுக்கும் காலாகின்றன. எதிர்காலம் நோக்கிய முன்னேற்றப் பாதையில் இருதய நோய்கள் ஒரு தடைக்கல்லாக இருப்பதை நீங்கள் விரும்பமாட்டீர்கள். எனவே உணவு முறையில் மாற்றத்தைக் கொண்டு வாருங்கள்.
போசாக்குக் குறைபாடு
அதீத எடை கொள்ளை நோய் போல உலகெங்கும் பிரச்சனையாக உருவாவதைக் கணக்கில் எடுக்கும் அதே நேரம் குழந்தைப் பருவத்திலும் கட்டிளம் பருவத்திலும் நிலவும் போசாக்குக் குறைபாடு எதிர் காலச் சமூகத்தின் வளர்ச்சிக்கு ஊறு விளைவிக்கும் என உலக சுகாதார நிறுவனம் தனது வெளியீடு ஒன்றில் சுட்டிக் காட்டுகிறது.
குழந்தைப் பருவத்திலும் கட்டிளம் பருவத்திலும் தொடர்ந்து நிலவும் போசாக்குக் குறைபாடு ஒருவனது வளரச்சியைக் குன்றச் செய்வதுடன் சமூக மட்டத்திலும் பாதிப்புகளை ஏற்படுத்தும். IQ யையும் குறைக்கும் உங்களது வளர்ச்சியும் ஆரோக்கியமும் உங்களில் மட்டுமல்லாது பெற்றோர்களின் ஆரம்ப காலக் கவனிப்பிலும் தங்கியுள்ளது. முக்கியமாக குழந்தை மற்றும் பதின்ம வயதிலும் அவர்களது அக்கறையும் கவனிப்பும் முக்கியமானது என்பது தெளிவு.
இரத்தசோகை எவரது உடல்ஆற்றலையும் செயற்திறனையும் குன்றச் செய்யும். சோர்வை ஏற்படுத்தும். சிந்தனை ஆற்றலையும் குறைக்கும். ஆனால் பெண்களில் இது மேலும் முக்கியமானது. காரணம்அவர்கள் வெறும் பெண்கள் மட்டுமல்ல. எதிர்காலத் தாய்மாரும் கூட. பெண்களாகிய நீங்கள் கர்ப்பம் தங்குவதற்கு முன்னரே உங்கள் பொதுவான உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், இரத்தை சோகை ஏற்படாமல் தடுக்க வேண்டும்.
சமபல வலு உணவு
ஆரோக்கியமான சமபல வலுவுள்ள உணவுமுறையைக் நீங்கள் கடைப்பிடித்தால் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், இரத்தை சோகை ஏற்படாமல் தடுக்கவும் முடியும். உணவில் மாச்சத்து 55 சதவிகிதமாகவும், புரதம் 35 சதவிகிதமாகவும், கொழுப்பு 15 சதவிகிதமாகவும் இருக்க வேண்டும். அத்தகைய உணவுமுறையைக் கடைப்பிடிப்பதற்கு உணவு வழிகாட்டி கூம்பகம் உங்களுக்கு உதவும்.
இதன்படி உணவு வகைளை ஆறு வகைகளாகப் பிரிக்கலாம்
கூம்பகத்தின் அடியில் இருப்பது மாப்பொருள் உணவுகள். சோறு, பாண், இடியப்பம், புட்டு, அப்பம், இட்லி. நூடில்ஸ் போன்றவை.
இவற்றிற்கு அடுத்து இருப்பது நார்ப்பொருள் அதிகமாக உள்ள காய்கறிகளும், பழவகைகளும் கொண்ட அடுக்கு ஆகும். அவை இரண்டும்
மட்டுமே ஒருவரது உணவின் பெருப் பகுதியாக இருக்க வேண்டும். ன், இறைச்சி. பால், மீன் வகைகள் 15 சதவிகிதம் இருக்கலாம்.
எண்ணெய், பட்டர் ஏனைய கொழுப்புகள், கேக், ஐஸ்கிறீம் அடங்கிய பகுதியானது கூம்பகத்தின் உச்சியில் உள்ளது. இவற்றை மிகக்
குறைவாகவே உட்கொள்ள வேண்டும். ஆனால் இன்றைய நாகரீக உணவு முறையில் இது தலைகீழாக மாறிவிட்டமையே நீரிழிவு. உயர் இரத்த அழுத்தம், கொலஸ்டரோல், அதீத எடை ஆகிய பிரச்சனைகள் தலைவிரித்து ஆடுவதற்குக் காரணமாகும்.
ஆரோக்கியமான உணவுமுறைகளைக் கடைப்பிடிப்பதுடன், தினசரி உடற்பயிற்சி செய்வதும் அவசியமாகும். உடல்நலத்திற்கு உதவக் கூடிய வாழ்க்கை முறைகளை உங்கள் இளவயதிலேயே ஆரம்பிக்க வேண்டும்.
உளநலம்
பள்ளிப்பருவத்திலும் பதின்ம வயதுகளிலும் பல்வேறுவிதமான உளநலப் பிரச்சனைகள் அதிகரித்து வருவதை மருத்துவர்களாலும், அவர்களோடு அதிகம் பழகும் ஆசிரியர்களாலும் அவதானிக்க முடிகிறது. இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கலாம்.
1. முக்கிய காரணம் குடும்ப அன்னியோன்யம் குறைந்து வருவதாகும். பெற்றோர்;கள் இருவரும் வேலைக்கு போகிறார்கள். கூட்டுக் குடும்பமுறை சிதைவுறுவதால் உதவிக்கு பாட்டன் பாட்டி இல்லாமல் போவதால் குழந்தைகளின் மீதான அக்கறையும் அவதானிப்பும் நேச உணர்வும் குறைந்து போகிறது.
2. ஆனால் அதே நேரம் கல்வி ரீதியாக பிள்ளைகளிடமிருந்து உயர் பெறுபேறுகள் பெற்றோரால் எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றிற்கு ஈடு கொடுக்க முடியாத பிள்ளைகள் பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாகிறார்கள். ஆசிரியர் பெற்றோருக்கு கீழ்ப்படியாமை, முரட்டுத்தன்மை, தவாறான பழக்கங்கள் போன்ற நடத்தைப் பிரச்சனைகளுக்கு ஆளாகிறார்கள். தவறான உணவு முறைகளைப் பழகிக் கொள்கிறார்கள்.
அதனால் மனப்பதற்றம், மனச்சோர்வு போன்ற உளவியல் பிரச்சனைகளுக்கு பலரும் ஆளாகிறார்கள். தவறான பாலியல் பழக்கங்களுக்கும் ஆளாகி நோய்களைத் தேடும் அபாயமும் ஏற்படுகிறது. போதைப் பொருள் பாவனையும் இதன் நீட்சியே ஆகும். எனவே பாடசாலை, பல்கலைக்கழகம், மற்றும் சமூக நிலைகளில் இளம் வயதினர் உளவியல் பாதிப்புக்கு ஆளாகுமிடத்து அதனை ஆரம்பத்திலேயே கண்டு பிடித்து நெறிப்படுத்துவது அவசியம்.
இதற்கான அறிவையும் ஆற்றலையும் பெற்றோர் ஆசிரியர்களிடத்து வளர்ப்பது அவசியமாகிறது. மேலதிகமாக இது சம்பந்தமாக தொழில் ரீதியான மருத்துவ பணியாளர்களை பயிற்றுவித்து சேவையில் ஈடு;படுத்துவது அவசியம். தேவையானவர்களுக்கு உளவளத்துணை, அறிவார்ந்த நடத்தை முறை மாற்றங்களுக்கான சிகிச்சை முறைகள் போன்றவை அவர்களுடாக இலகுவில் கிட்டும்படி செய்யலாம்.
வன்முறையை நிராகரியுங்கள்
சும்மா இருப்பது வன்முறைக்கும் இட்டுச் செல்கிறது. அதேநேரம் சரியான வாழ்க்கை நெறிமுறைகளை புரிந்து கொள்ளாததும், பரந்த சமூக அக்கறை இல்லாமையும், நான் என்ற அகந்தையும் காரணங்களாகின்றன. நான், எனது சுகம், எனது மகிழ்ச்சி, எனது குடும்பம் என்பதற்கு அப்பாலும் சிந்திப்பது இளம் வயதிலேயே ஆரம்பிக்க வேண்டும். மாறாக எமது சமூகம் எமது நாடு எனச் சிந்தனைகள் விரிந்தால், மற்றவர்களது தேவைகளையும் உணர்வுகளையும் புரிந்து கொண்டால்வன் முறை உணர்வு ஏற்படாது.
தெருவில் நின்று பெண்களுக்கம் மற்றவர்களுக்கும் கொமன்ட் அடித்தும், சில்மிசங்கள் செய்வதைக் கைவிடுவதற்கு சமூகம் பற்றிய உணர்வு கைகொடுக்கும். இல்லையேல் சில்லறை அடிபிடி என ஆரம்பித்து பேட்டை ரவுடி, கொள்ளை கடத்தல் என விரிய ஆரம்பிக்கும்.
போரும் இனரீதியான ஒடுக்கு முறைகளும் எம்மிடமிருந்த நல்ல பல விழுமியங்களை அழித்துவிட்டன. வன்முறையால் எதற்கும் தீர்வு காணலாம் என்ற உணர்வு பலரிடம் குடி கொண்டுவிட்டது. இது தவறு வன்முறையை நிராகரித்து எதனையும் பேசி இணக்கப்பாடு காணும் பாதையை தேர்ந்து எடுக்க வேண்டும். பிரச்சனைகளை எவ்வாறு தீர்ப்பது என்பது பற்றிய அறிவு ஒவ்வொருவர்க்கும் தேவை.
பிரச்சனை என்பது வீட்டுப் பிரச்சனையாக இருக்கலாம், வெளியே காதல் பிரச்சனையாக இருக்கலாம். அல்லது தொழில் செய்யும் இடத்தில் ஏற்படும் சிக்கல்களாக இருக்கலாம். அல்லது கோயில், வாசிகசாலை போன்ற பொது இடங்களில் ஏற்படும் சங்கடங்களாக இருக்கலாம்.
எதையும் திறந்த மனத்தோடும் விட்டுக் கொடுப்புகளுடனும் செய்து சுமுகமாக தீர்வு காண்பதற்கான பயிற்சியை கல்வி மட்டுமின்றி ஆன்மீக ஸ்தாபனங்களும் செய்ய முடியும். எனவே காத்திருக்கும் எதிர்காலத்தை ஒளிமயமாகவும், பொன்விளைவதாகவும், மகிழ்ச்சி நிறைவதாகவும் ஆக்க முயலுங்கள். அதற்கு ஏற்றவகையில் உங்கள்
உடலையும் உள்ளத்தையும் நலமாகப் பேணுங்கள்.
நாளைய உலகம் உங்கள் கையில் உங்களுக்காக மட்டுமல்ல முழு உலகத்திற்காகவும்.