Home » சிறுகதைகள் » கழுதையிடமும் கற்கலாம்!!!
கழுதையிடமும் கற்கலாம்!!!

கழுதையிடமும் கற்கலாம்!!!

கழுதையிடமும் கற்கலாம் – சுயமுன்னேற்றக் கட்டுரை

டெரெக்லின் என்ற தாவோ அறிஞர் ஒரு கழுதையின் கதையைக் கூறியதை சமீபத்தில் படிக்க நேர்ந்தது.

பண்டைய சீன தேசத்தில் ஒரு கிராமத்தில் சக்கரவர்த்திக்குக் கோயில் எழுப்ப தீர்மானிக்கப்பட்டது. அப்பகுதியின் கவர்னர் மிகக் குறுகிய காலத்தில் கோயிலைக் கட்டி முடிக்க கிராமத்தினருக்குக் கட்டளை இட்டார்.

கோயில் கட்டத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தில் தடுப்புச் சுவர் இல்லாத கிணறு ஒன்று இருந்தது. எனவே கட்டிடப் பணி துவங்கும் முன் அக்கிணறை மூட வேண்டி வந்தது.

மண்ணைப் போட்டு மூட முடிவெடுத்த கிராம மக்கள், மண்ணைச் சுமக்க ஒரு கழுதையைப் பயன்படுத்தினர். சிறிது பணி புரிந்த பின் ஒரு முறை கழுதை கிணற்றின் விளிம்பு வரை சென்று சறுக்கி கிணற்றுக்குள் விழுந்து விட்டது.

கிணற்றுக்குள் விழுந்த கழுதையை மீட்க சில முறை முயற்சித்த மக்கள் அது முடியாமல் போகவே அது உள்ளே இருக்கையிலேயே அந்தக் கிணற்றை மூட முடிவு செய்தனர். கழுதையைக் காப்பாற்ற நேரம் எடுத்துக் கொண்டால் கவர்னர் தந்த காலக் கெடுவுக்குள் கோயில் பணியை முடிக்க முடியாது என்று அவர்கள் எண்ணினர்.

கிராம மக்களே மண்ணைச் சுமந்து வந்து கிணற்றுக்குள் கொட்ட ஆரம்பித்தனர்.கழுதை பரிதாபமாகக் கத்தியது. அதைக் கண்டு கொள்ளாமல் மண்ணைக் கொண்டு வந்து கிணற்றில் கொட்டியபடி இருந்தனர். சிறிது நேரத்தில் கழுதையின் சத்தம் நின்று விட்டது. கழுதை இறந்திருக்கும் என்று எண்ணிய அவர்கள் சிறிது நேரம் கழித்து கிணற்றில் எட்டிப் பார்த்தனர். கழுதை உயிரோடு தான் இருந்தது. தன் மீது விழுந்த மண்ணை உதறி அடியில் தள்ளி அந்த மண் இறுகிக் கெட்டியாகும் வரை கால்களால் வேகமாக மிதித்தபடி இருந்தது.

அப்படி மண்ணால் உறுதியாகி கிணற்றின் அடித்தளம் மேற்பட மேற்பட கழுதையும் மேலே வந்த வண்ணம் இருந்தது. கடைசியில் ஒரே எட்டாகக் குதித்து கிணற்றுக்கு வெளியே வந்து தப்பித்ததைக் கிராம மக்கள் வியப்புடன் பார்த்தனர்.

பல சமயங்களில் நாமும் இந்தக் கழுதையின் பரிதாப நிலைக்கு ஆளாகிறோம். நம் மேல் விழ ஆரம்பிக்கும் பிரச்சினைகள் என்ற மண் குவியல் நம் புலம்பலுக்கு செவி சாய்த்து நிறுத்தப்படுவதில்லை.

எலிஸபெத் குப்ளர் ரோஸ் என்ற அறிஞர் சோதனைகள் வரும் போது ஒவ்வொரு மனிதனும் நான்கு நிலைகளைக் கடக்க வேண்டி இருப்பதாகக் கூறுகிறார்.

முதல் நிலை அந்த சோதனையை ஒத்துக் கொள்ளவே முடியாத ஒரு வித ஜடநிலை. இரண்டாவது நாம் மறுப்பதால் சோதனை நீங்கி விடும் என்று எதிர்பார்க்கும் நிலை. மூன்றாவதாக சோதனைகள் நீங்காததைக் கண்டு சோகமடையும் நிலை.நான்காவதாக நடந்ததை ஏற்றுக் கொண்டு அதற்கு தீர்வு காண முற்படும் நிலை. முதல் மூன்று நிலைகளை எந்த அளவுக்கு சீக்கிரமாகக் கடந்து நான்காம் நிலைக்கு வந்து செயல்பட ஆரம்பிக்கிறோமோ அந்த அளவுக்கு நாம் புத்திசாலிகளாகிறோம்.

இந்தக் கதையின் கழுதை தப்பித்தது தனது கூக்குரலால் அல்ல; தனது செயல் திறனால் தான். சோதனைகள் வரும் போது வருத்தப்படுவது இயல்பே. ஏன் இப்படி நேர்ந்தது என்ற கேள்வி நமக்குள் எழுவதும் சகஜமே. ஆனால் வருத்தத்தாலும் புலம்பலாலும் எதுவும் மாறப் போவதில்லை என்பதை உணர்வதும் பகுத்தறிவுள்ள மனிதர்களுக்கு சாத்தியமே.

கழுதையின் மேல் மணலைக் கொட்டியவர்களுக்குக் கழுதையின் மீது தனிப்பட்ட விரோதம் எதுவும் கிடையாது. அவர்களது சூழ்நிலையும், கட்டாயமுமே அவர்களை அப்படிச் செய்ய வைத்தது.

சோதனைகள் வரும் போது உலகம் நமக்கு எதிராகச் செயல்படுகிறது என்கிறதீர்மானத்திற்கு வருவது தவறு. குற்றம் சொல்லிச் சுட்டிக் காட்டிக் கொண்டு நிற்கும் போது நாம் காப்பாற்றப்படுவதில்லை.

எலிஸபெத் குப்ளர் ரோஸ் கூறுவது போல “ஆனது ஆகி விட்டது; இதற்குத் தீர்வு என்ன?” என்று சிந்தித்துச் செயல்படத் துவங்கும் போது தான் சோதனைகளில் இருந்து விடுபடுதல் சாத்தியமாகிறது.

மேலே விழுந்த மண் மழையை உதறித் தள்ளி, காலால் தொடர்ந்து மிதித்து உறுதியாக்கித் தான் படிபடியாக உயர்ந்து கழுதை தப்பித்த வழி சிந்திக்கத் தக்கது. அது போல சோதனைகளைக் காலடிக்குத் தள்ளி அவற்றின் மூலம் உயரக் கற்றுக் கொள்வதே வெற்றியின் ரகசியம்.

பயன்படுத்தும் வித்தை தெரிந்தால் வாழ்க்கையில் எதுவுமே வீண் அல்ல.எல்லாவற்றில் இருந்தும் நாம் கற்றுக் கொள்ள முடியும். சோதனைகளிலும் நம்சாதனைகளுக்கான விதைகளைக் காண முடியும். ஒவ்வொன்றின் மூலமாகவும் நாம் உயரக் கற்றுக் கொண்டால் வானம் கூட நமக்கு எட்டி விடும் தூரம்
தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top