நடிகர் நாகேஷ் மிகவும் ஆசாரமான, கன்னடம் பேசும் பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர். பூர்வீகம் மைசூரு. கர்நாடக மாநிலம் அரிசிக்கரே என்ற ஊரில் ஸ்டேஷன் மாஸ்டராகப் பணியில் இருந்தவர் நாகேஷின் தந்தை. குடும்பம் தாராபுரத்தில் இருந்தது. நாகேஷை வளர்த்தது எல்லாம் அவருடைய அக்கா கெங்குபாய்.
தமிழ் திரைஉலக நகைச்சுவைக் காட்சிகளில் தனி முத்திரை பதித்தவர் நடிகர் நாகேஷ் (76). கர்நாடக மாநிலத்தில் பிறந்தவர். சிறுவயதில் தாராபுரத்தில் வசித்தார். இயற்பெயர் குண்டுராவ். சிறு வயதில் நாடகத்தின் மீது அதிகம் ஆர்வம் கொண்டிருந்தார். ஏராளமான நாடகங்களில் நடித்தவர்.
கடந்த 1956ம் ஆண்டு தமிழ் சினிமாவில் நடிப்பதற்காக சென்னைக்கு வந்தார். தொடர்ந்து இரண்டு வருடங்களுக்கு மேலாக வாய்ப்பு கிடைக்காமல் இருந்தார். 1958ம் ஆண்டு, முதல் முதலாக சினிமாவில் கால் பதித்தார். அப்போதிருந்து அவரது வெற்றிப்பாதை துவங்கியது. இவர் நடிக்காத படமே இல்லை என்ற அளவுக்கு, எல்லா கதாநாயகர்களுடனும் நடித்தார்.
“நான்’ என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற “அம்மனோ சாமியோ’ என்ற பாடல், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அவர் நடித்த ஆயிரத்தில் ஒருவன், மேஜர் சந்திரகாந்த், நீர்குமிழி, சர்வர் சுந்தரம், எதிர்நீச்சல், காதலிக்க நேரமில்லை, திருவிளையாடல் ஆகியவை மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த திரைப்படங்கள்.
ஒரே நாளில் ஐந்து படங்களின் ஷூட்டிங்கில் பங்கேற்கும் அளவு, “பிசி’யாக இருந்தவர். நகைச்சுவை காட்சி என்றாலே, நாகேஷ் என்ற அளவுக்கு மக்கள் மனதில் இடம் பிடித்தார். 1974ம் ஆண்டு கலைமாமணி விருது வழங்கப்பட்டது. “நம்மவர்’ படத்தில் நடித்ததற்காக தமிழக அரசு இவருக்கு, சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது வழங்கியது. நீர்க்குமிழி, எதிர்நீச்சல், சர்வர் சுந்தரம் உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாகவே வாழ்ந்துள்ளார்.
இவரது மனைவி ரெஜினா, இவரது நடிப்புக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தவர். 10 வருடங்களுக்கு முன், உடல்நிலை காரணமாக இறந்துவிட்டார். இவருக்கு ஆனந்த் பாபு (43), ரமேஷ் பாபு (40), ராஜேஷ்பாபு (37) என மூன்று மகன்கள் உள்ளனர். ஆனந்த் பாபு மட்டும் சினிமாத் துறைக்கு வந்தார். நாகேஷுக்கு நான்கு பேரன் மற்றும் மூன்று பேத்திகள் உள்ளனர்.
நகைச்சுவை நாயகன் நாகேஷ்!
தமிழ் சினிமாவில், ரசிகர்களை சிரிக்க வைத்த நகைச்சுவை மன்னன் நாகேஷ், இன்று அவர்களை கண்ணீர் விட வைத்து இவ்வுலகை விட்டு மறைந்துவிட்டார்.நாகேஷ் போன்ற நடிகரையோ, அவருக்கு இணையான ஒரு நடிகரையோ இனி தமிழ் சினிமாவில் பார்ப்பது மிக அரிது. கலை பொக்கிஷமாக விளங்கியவர். எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல், விஜய் என்று அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்தார்.கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இவரது இயற்பெயர் குண்டுராவ்.
கடந்த 1933ம் ஆண்டு செப்., 27ம் தேதி கிருஷ்ணராவ் மற்றும் ருக்மணி அம்மாளுக்கு மகனாக பிறந்தார். தமிழகத்துக்கு வந்த இவர்கள் தாராபுரத்தில் தங்கியிருந்தனர்.
இளம்வயதிலேயே வீட்டை விட்டு வெளியேறிய நாகேஷ், ரயில்வேயில் வேலைக்கு சேர்ந்தார். சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில், ஒரு சிறிய அறையில் கவிஞர் வாலி, நடிகர் ஸ்ரீகாந்த் ஆகியோருடன் நாகேஷ் தங்கியிருந்தார். ஒருமுறை “கம்ப ராமாயணம்’ நாடகத்தை பார்த்த நாகேஷ், தன்னாலும் சிறப்பாக நடிக்க முடியும் என நினைத்தார். தன்னையும் சேர்த்துக் கொள்ளும்படி நாடகம் நடத்துபவர்களிடம் போராடி முதல் வாய்ப்பை பெற்றார். ரயில்வேயில் பணிபுரிந்து கொண்டிருந்த நாகேஷுக்கு முதலில் நாடகத்தில் கிடைத்தது “வயிற்று வலி நோயாளி’ வேடம். அந்த நாடகத்தில் நாகேஷ் சில நிமிடங்களே மேடையில் தோன்றுவார்.
ஆனால், அவர் இதை நன்றாக பயன்படுத்திக் கொண்டார். “டாக்டர்…’ என அலறியபடி மேடையில் நுழையும் நாகேஷ், நிஜமாகவே வயிற்று வலியால் துடிப்பது போல உடலை வளைத்து, நெளித்து, கைகளால் வயிற்றை பிடித்துக் கொண்டே சிறப்பாக நடித்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத பார்வையாளர்களுக்கு ஆச்சரியம். அவர்களின் கைதட்டலால் அரங்கமே அதிர்ந்தது. அன்றைக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆரும், நாகேஷின் நடிப்பை ரசித்தார்.
நாடகம் முடிந்த பின், மேடை ஏறிய எம்.ஜி.ஆர்., “நாடகம் நன்றாக இருந்தது. ஒரே ஒரு சீனில் வந்தாலும் அபாரமாய் நடித்து, அனைவரையும் கவர்ந்து விட்டார் ஒருவர். தீக்குச்சி போன்ற ஒல்லியான உருவில் வயிற்று வலிக்காரராக வந்தாரே, அவரைத் தான் சொல்கிறேன். நாகேஸ்வரன் என்ற பெயர் கொண்ட அவருக்கு நடிப்புக்கான முதல் பரிசை கொடுக்கிறேன்’ என முதல் பரிசுக்குரிய கோப்பையை நாகேஷிடம் வழங்கினார்.”மேக்அப்’ போட்டு மேடையேறிய முதல் நாளிலேயே நாகேஷுக்கு கைதட்டலும், பரிசும், பாராட்டும் கிடைத்தது. அதற்கு முன்பு நாகேஷ் எம்.ஜி.ஆரை., பார்த்ததில்லை.
தயாரிப்பாளர் பாலாஜி மூலமாக இவருக்கு சினிமா வாய்ப்பும் கிடைத்தது. “தாமரைக்குளம்’ இவரது முதல் படம். அதன் பின், ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டார்.”திருவிளையாடல்’ படத்தில் ஏழ்மையில் வாடும் புலவர் தருமியாக நாகேஷ் நடித்தது, எல்லார் மனதிலும் நீங்கா இடம் பெற்றுவிட்டது.
“காதலிக்க நேரமில்லை’ படத்தில் பாலையாவிடம் நாகேஷ் கதை சொல்லும் காட்சி, ரசிகர்களின் வயிற்றை இன்றும் புண்ணாக்கும். நாகேஷின் திறமையை நன்கு பயன்படுத்திக்கொண்ட பெருமை, இயக்குனர்கள் ஸ்ரீதர் மற்றும் பாலச்சந்தர் ஆகியோரையே சேரும்.அபூர்வ ராகங்கள் படத்தில் குடிகாரனாக நடித்த நாகேஷ், தன்னுடைய நிழலை பார்த்து பேசி, “சியர்ஸ்’ சொல்லி சுவற்றில் கோப்பையை எறிவார். இடைவேளையின் போது, ரசிகர்களும் சுவாரஸ்யமாக அவரைப் போலவே சுவரில் கோப்பையை எறிந்து அவரைப் போல் நடந்து கொண்டனர்.
“தமிழ் சினிமாவில் பத்தாண்டுகளுக்குப் பிறகு செய்ய வேண்டியவற்றை இப்போதே செய்பவர் கமல்’ என்று, அவர் பற்றி நாகேஷ் பெருமையாக கூறினார். நடிகர் கமல் தனது படங்களில் நாகேஷை தவறாமல் இடம்பெற செய்வார். “அபூர்வ சகோதரர்கள்’ “மைக்கேல் மதன காமராஜன்’ “மகளிர் மட்டும்’ ஆகிய படங்களில் துவங்கி சமீபத்தில் வெளியான “தசாவதாரம்’ வரை கமலின் பெரும்பாலான படங்களில் இவர் இடம் பெற்றார். மகளிர் மட்டும் படத்தில் “பிணமாக வாழ்ந்த’ நாகேஷ் நடிப்பு, ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்றது.
கலாட்டா கல்யாணம், சுமதி என் சுந்தரி, அன்பே வா உள்ளிட்ட படங்களில் அவரது நகைச்சுவை எல்லாரையும் கவர்ந்தது.நவக்கிரகம், யாருக்காக அழுதான், சர்வர் சுந்தரம், நீர்க்குமிழி, எதிர் நீச்சல் ஆகிய படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். ஒரு முறை, ரசிகர் ஒருவர் நாகேஷிடம், “உங்களுக்கு ஹீரோ மாதிரி பெர்சனாலிட்டி எல்லாம் இல்லை. ஆனா, நடிப்பு டான்ஸ் எல்லாவற்றிலும் பிரமாதப்படுத்துறீங்களே… எப்படி உங்களால் இப்படி நடிக்க முடியுது?’ என்றார்.
சிரித்தபடியே நாகேஷ், “உங்கள வீட்ல ஆட்டுக்கல் இருக்குமில்லையா… அதுல இட்லி, தோசைக்கு மாவு அரைச்சு பார்த்திருக்கீங்களா? ஆறு மாசம், ஒரு வருஷத்துக்கு ஒரு தடவை அந்த ஆட்டுக் கல்லை கொத்து வைப்பாங்க. எதுக்கு தெரியுமா? ஆட்டுக்கல்லை பொளிஞ்சா… மாவு நன்றாக அரைபடும்; இட்லி நன்றாக வரும். ருசி உசத்தியா இருக்கும். என் முகமும் ஆட்டுக்கல்லைப் போல்தான். ஆண்டவன் “அம்மை’ என்கிற உளியை வெச்சு முகம் முழுக்க, நல்லா பொளிஞ்சுட்டாரு.
அதனால் தான் நடிப்புங்கிற இட்லி நல்லா வருது’ என்றார். இந்த பதில் ரசிகரை நெகிழ வைத்தது. “சிரித்து வாழ வேண்டும்’ என்ற வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தில் நாகேஷ் இதைத் தெரிவித்திருந்தார். ஐம்பது ஆண்டுக்கும் மேற்பட்ட தமிழ் சினிமா வாழ்க்கையில் மனோரமாவும், நாகேஷும் ஏராளமான படங்களில் இணைந்து நடித்திருக்கின்றனர். நாகேஷின் மனைவி ரெஜினாவுடன், மனோரமாவுக்கு மிகுந்த நட்பு உண்டு.
சென்னை காமராஜர் அரங்கில், 2007, ஜூன் 17ல் “என்றென்றும் நாகேஷ்’ பாராட்டு விழா நடந்தது. இதில், கே.பாலச்சந்தர், எம்.எஸ்.விஸ்வநாதன், கமல், பாக்யராஜ், குஷ்பூ, மனோரமா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நகைச்சுவை நடிகராக மட்டுமின்றி கதாநாயகனாகவும், வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நாகேஷ் நடித்துள்ளார்.
நாகேஷ் ஒரு சந்தர்ப்பத்தில் சொன்னார். தான் திரையில் தோன்றியதுமே ரஸிகர்கள் சிரித்து ஆரவாரம் செய்கிறார்கள். அதற்காக மகளிர் மட்டும் படத்தில் பிரேதமாகவும் தோன்றிப்பார்த்தாராம். அதற்கும் ரசிகர்கள் அழாமல் சிரித்தார்களாம்.
நாகேஷ் தத்துவார்த்தமாக அதேசமயம் சுவாரஸ்யமாகவும் பேச வல்லவர். நண்பர்களுடனான சந்திப்புகளில் அவர் உதிர்க்கும் தத்துவக்கதைகள் பொருள் பொதிந்தவை.
நாகேஷ் சொன்ன பல துணுக்குகளில் இரண்டு வாசகர்களுக்கு:-
1. தெருவோரத்தில் கிடந்த மலத்தைப்பார்த்தவர்கள் மூக்கைப்பொத்திக்கொண்டு அருவெருப்போடு சென்றார்களாம். அதனைப்பார்த்த அந்த மலம் சொன்னதாம். ‘நான் முன்பு ஒரு பலகாரப்பட்சணக்கடையில் அழகிய கேக்காக கண்ணாடிப்பெட்டிக்குள் இருந்தேன். உங்களைப்போன்ற ஒரு மனிதன்தான் என்னை வாங்கி உண்டு இப்படி இந்தக்கதியில் விட்டுப்போய்விட்டான். கண்ணாடிப்பெட்டிக்குள் நறுமணத்துடன் சுவையாகத்தான் நான் இருந்தேன். என்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கியவன் மனிதன்தான்.
2. குதிரை ரேஸ் நடக்கும் மைதானத்தில் இலட்சக்கணக்கான மனிதர்கள் குதிரைகளின் மீது பணத்தைக் கட்டிவிட்டு அவற்றின் ஓட்டத்தைப்பார்ப்பார்கள். ஆனால் குதிரைகளுக்கு என்ன நடக்கிறது என்பது தெரியாது.
இவருக்கு நடிகர் ஆனந்த் பாபு உள்ளிட்ட மூன்று மகன்கள் உள்ளனர். திரையில் சாதித்த அவர் விருதுகளில் நம்பிக்கை இல்லாதவர். அவர் இல்லத்தில் எந்த ஒரு விருதும் அலங்காரப் பொருளாக இடம்பெற்றது இல்லை.
*நாகேஷ்… மாறும் உடல் மொழி… ஏறி இறங்கும் குரல் ஜாலம்.. தமிழர்களில் 40 ஆண்டு கால சாயங்காலச் சந்தோஷம், ஈர்க்குச்சி உடம்பால், சிரிப்புத் தீக்குச்சி கிழிந்தவர்!….
*பூர்வீகம் மைசூர். ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டரான தந்தை ஊர் ஊராக பணியாற்ற், குடும்பம் மட்டும் தமிழ்நாட்டில் தாராபுரத்தில் இருந்தது. தாராபுரம் பீமராய அக்ஹாரம்தான் நாகேஷ் வீட்டுச் வளர்ந்த தொட்டில்!
*பெற்றோர் கிருஷ்ணராவ்- ருக்மணி வைத்த பெயர் நாகேஸ்வரன் பின்னாளில் நாகேஷ் ஆனது. வீட்டுச் செல்ல பெயர் –குண்டப்பா!
*பள்ளி நாடகத்தில் நாகேஷீக்கு எமன் வேஷம். வசனம் பேசிக்கொண்டே பாசக் கயிற்றினை வீச வேண்டும். இவர் வீசிய பாசக் கயிறு எசகுபிசகாக ஒருவர் கழுத்தில் போய் விழுந்தது. பள்ளித் தலைமை ஆசிரியரின் கழுத்து அது!
*இளம் வயதில் வீட்டில் கோபித்துக்கொண்டு ஹைதராபாத்துக்கு வந்தவர் ரேடியோ கடை ஊறுகாய் கம்பெனி எடுபிடி, மில்லில் கூலி வேலை என்று பல வேலைகள் பார்த்திருக்கிறார்!
*முதன் முதலில் நாடகத்தில் வயிற்று வலி நோயாளியாக நடித்தார் அன்று அவரது நடிப்பைப் பாராட்டி, முதல் பரிசை வழங்கியவர் எம்.ஜி.ஆர்!
*கோயம்புத்தூரில் பி.எஸ்.ஜி ஆர்ட்ஸ் காலேஜில் படித்தபோது, அடுத்தடுத்த மூன்று தடவை அம்மை போட்டது. முகம் முழுக்க அம்மைத் தழும்புகளை வைத்துக்கொண்டு பலரது முகத்தை மலரவைத்து அவரது நடிப்பில் வெளிச்சம்!
*ஹோட்டலில் தங்கியிருந்த நாகேஷை அவரது நாடக நடிப்பின் மீது கொண்ட காதலால்…. தன் வீட்டில் தங்குவதற்கு ஏற்பாடு செய்து தந்தவர் நடிகர் பாலாஜி!
*இவர் மனைவி பெயர் ரெஜினா. ஆனந்த் பாபு, ரமேஷ்பாபு, ராஜேஷ்பாபு என்று மூன்று மகன்கள். மூன்று மகன்களும் வெவ்வேறு மதங்களில் திருமணம் செய்துகொண்டபோது மனமார ஆசி வழங்கியவர்!
*முதல் படம் `தாமரைக்குளம்’ ஷீட்டிங்கின் போது சரியாக நடிக்கவில்லை என்று உதவி இயக்குநர்கள் நாகேஷைக் கடிந்தனர். உடன் நடிக்க வந்த எம்.ஆர்.ராதாவிடம் மனம் வெதும்பி நடந்தைச் சொன்னார் இவர். `மத்தவன் எல்லாம் நடிகன், நீ கலைஞன்… கவலைப்படாம நடி’ என்றாராம் ராதா!
*அபூர்வ ராகங்கள்’ படத்தில் இவருக்கு வைத்தியம் பார்க்க டாக்டராக வருவார் கண்ணதாசன், அவரிடம் ஒரு கவிதை சொல்லச் சொல்வார் நாகேஷ் கவிதை கேட்ட இவர், `அதான்யா கண்ணதாசன்’ என்று சொல்லிவிட்டு, `பீஸ் எவ்வளவு?’ என்பார். `இதுதான்யா ஃபீஸ்’ என்பார் கண்ணதாசன்!
*முறைப்படி யாரிடமும் நடனம் கற்றுக்கொண்டது இல்லை, யாரையும் காப்பி அடித்ததும் இல்லை. ஆனால், நடனத்தில் `நாகேஷ் பாணி’ என்கிற தனி முத்திரையைக் கொண்டுவந்தார்!
*எம்.ஜி.ஆருடன் 45 படங்களில் நடித்த நகைச்சுவை நடிகர் இவர்தான் அதில், 19 படங்களில் இவருக்கு ஜோடி மனோரமா!
*திருவிளையாடல்’ படத்தின் காட்சிகளை ரஷ் பார்த்த சிவாஜி, `நாகேஷின் நடிப்பு பிரமாதம். தயவுசெய்து எதையும் கட் பண்ணிடாதீங்க’ என்று டைரக்டர் ஏ.பி.நாகராஜனிடம் கேட்டுக் கொண்டாராம்!
*நகைச்சுவையில் மட்டுமல்ல: `நீர்க் குமிழி’ குணச்சித்திரம், `சர்வர் சுந்தரம்’ ஹீரோ, `அபூர்வ சகோதரர்கள்’ ல் வில்லன், மகளிர் மட்டும்’ பிணம் என்று வெளுத்துக்கட்டியவர்!
*அபூர்வ ராகங்கள்’ ஷீட்டிங், பாலசந்தர் ஆக்ஷன் சொல்லிவிட்டார். நாகேஷ். கோப்பையைக் கையில் எடுத்து சுவரில் தெரிந்த தன் நிழலைப் பார்த்து, `சியர்ஸ்’ என்று சொல்ல… படம் பார்த்தவர்கள் பாரட்டினார்கள். நாகேஷின் டைமிங் சென்ஸீக்கு இது ஒரு சாம்பிள்!
*இவரை எப்போதும் `டேய் ராவுஜி’ என்று செல்லமாக அழைப்பார் பாலசந்தர்!
*டைரக்ஷன் துறையையும் விட்டுவைக்கவில்லை இவர். `பார்த்த ஞாபகம் இல்லையோ’ இவரது டைரக்ஷனில் வெளிவந்த திரைப்படம்!’
*பணம் விஷயத்தில் நாகேஷ் கறார் பேர்வழி என்று சினிமா உலகில் ஒரு பேச்சு உண்டு. ஆனால், `எவ்வளவு பணம் இருந்தாலும் சாப்பிட ஒரு வயிறு தானே என்று சொன்ன எளிமையான கலைஞன் என்பதுதான் நிஜம்!
*சீட்டாட்டம், டேபிள் டென்னிஸ், தத்துவம், நடனம், நடிப்பு என்று எதைச் செய்தாலும் உச்சம் தொட்ட மகா கலைஞன்’ என்று இவரைப் புகழ்ந்தவர் கவிஞர் வாலி!
*நாகேஷ் என் வாழ்வில் நட்சத்திரமாக, மூத்த அண்ண்ணாக அறிவுரை சொல்லும் நண்பனாக, அறிவுரை கேட்கும் அப்பாவியாக, சொல்லிக் கொடுத்த ஆசானாக, சொல் பேச்சுக் கேட்கும் மாணவனாகப் பல பொறுப்புகளை ஏற்றிருக்கிறார்’ என்று சொன்னவர் கமல்ஹாசன்!
*பஞ்சதந்திரம்’ ஷீட்டிங், உணவு இடைவேளையில் கமல் சிக்கனை முள் கரண்டியால் குத்திக்கொண்டு இருந்தார். அருகில் இருந்த நாகேஷ் கேட்டார், `கோழி இன்னும் சாகலையாப்பா?’
*தசாவதாரம்’ கடைசி நாள் ஷீட்டிங்க்கு வந்து நடித்துக் கொடுத்தவர் கடைசியாகச் சொன்ன வாக்கியம் `என் கடைசிப் படம் நல்ல படம். I am honoured – டா கமல்!’
*தாம் வாங்கிய பரிசுகள், ஷீல்டுகள் எதையும் வீட்டு ஷோகேஸில் வைக்கும் பழக்கம் இல்லாதவர்!
*இந்தியாவின் ஜெர்ரி லூயிஸ் என்று அழைக்கப்பட்ட நாகேஷ் பிறந்தது- செப்டம்பர் 27, 1933 –ல். மறைந்தது ஜனவரி 31, 2009 –ல்!
*30 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழர்களைச் சிரிக்கவைத்த இந்தக் கலைஞனை இந்திய அரசின் எந்த விருதுகளும் கெளரவிக்கவில்லை!
தமது 75 ஆவது வயதில் 2009 ஜனவரி 31 ஆம் திகதி மறைந்தார்.