மாமரத்தின் கீழிருந்து கங்கையை நோக்கி நடந்தால், நமக்கு இடது பக்கமாக, சுவாமிஜியின் அறைக்குச் செல்வதற்கான படிக்கட்டினைக் காணலாம். மாடியிலுள்ள சுவாமிஜியின் அறையைத் தரிசிப்பதற்காக பின்னாளில் கட்டப்பட்ட படிக்கட்டு இது.
தியான சித்தன் என்று ஸ்ரீராமகிருஷ்ணரால் அடையாளம் காட்டப்பட்டவரும், உலகின் சிந்தனைப் போக்கிற்கே ஒரு திருப்பத்தைக் கொண்டுவந்தவருமான அந்த மாமுனிவர் வாழ்ந்த அறையைப் பார்ப்போம்.
கட்டில், நாற்காலி, அலமாரி என்று சுவாமிஜியின் அறை, பொருட்மயமாகக் காட்சியளிக்கிறது. இத்தனை பொருட்களுக்கிடையே அவர் எப்படி வாழ்ந்தார் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. உண்மை என்னவென்றால், அறையில் காணப்படுகின்ற பொருட்களுள் பலவும் அவரது காலத்திற்குப் பிறகு சேர்க்கப்பட்டவை.
அவர் பல்வேறு இடங்களிலும் பயன்படுத்திய பொருட்கள் ஒவ்வொன்றாக அவரது காலதிற்குப் பிறகு பேலூர் மடத்திற்குக் கொண்டுவரப்பட்டன. அவற்றை வைக்கப் போதிய வேறு இடம் இல்லாத காரணத்தால் இந்த அறையில் வைக்கப்பட்டன. இவ்வாறு பல பொருட்கள் சேர்ந்துவிட்டன.
சுவாமிஜியின் நாட்களில் மிகச்சில பொருட்களே அந்த அறையில் இருந்திருக்க வேண்டும். மனம் எப்போதும் எல்லையற்ற ஆன்மப் பெருவெளியின் சிறகடித்துப் பறந்த, எல்லைக்கோடுகளால் கட்டுப்படுத்த முடியாத சுதந்திர மனிதர் அவர். இந்தப் பெரிய அறையிலும் குறைந்த பொருட்களுடன் சுதந்திரமாகவே வளைய வந்திருப்பார்; இதை நம்மால் ஊகிக்க முடியும்.
சுவாமிஜியின் பயன்படுத்திய பொருøட்கள், அவரது துணிகள், செருப்புகள் முதலியவை இந்த அறையில் பாதுகாக்கப்படுகின்றன. அவற்றுள் அவரது கைத்தடிகள், தலைப்பாகை, அவர் பயன்படுத்திய தம்புரா மற்றும் தபேலா காணப்படுகின்றன. இங்கு இருக்கும் பெரிய கட்டில் அவரது மேலை நாட்டுச் சீடர்கள் அவருக்குப் பரிசளித்தது. அதை அவர் அவ்வளவாகப் பயன்படுத்தவில்லை. அங்கு சிறிய நாடாக் கட்டிலையே பயன்படுத்தினார். ஆனால் தரையில் பாயில் படுப்பதையே விரும்பினார் அவர்.
கிழக்கு ஓரத்தில் நாற்காலியும் மேஜையும் உள்ளன. மேஜைமீது ஸ்ரீராமகிருஷ்ணரின் படம் ஒன்று மரப்பீடத்தில் வைக்கப்பட்டுள்ளது. அன்பும் ஆர்வமும் ததும்ப அந்தப் படத்தைப் பார்த்தபடி சுவாமிஜி நீண்ட நேரம் அமர்ந்திருப்பதுண்டு.
அந்தப் படத்தின் அருகில் ஒரு நீள்வட்டப் படிக உருவம் மரப் பீடம் ஒன்றில் உள்ளது. கூர்ந்து கவனித்தால் அதில் சுவாமிஜியின் திருவுருவம் செதுக்கப்பட்டுள்ளதைக் காணலாம்-கையில் தடியுடன் நிற்கின்ற பரிவிராஜகத் (சஞ்சரிக்கும் துறவி) தோற்றம் அது; அவர் சிவபெருமானாகச் சித்திரிக்கப்பட்டுள்ளார். அவரது திருப்பாதங்களின் கீழே சிவபெருமானின் வாகனமான நந்தி படுத்திருப்பதைக் காணலாம். 1917 களில் இதனை வடிவமைத்தவர் சுவாமிஜிக்கு நெருக்கமானவரும், அவரிடம் எல்லையற்ற அன்பு கொண்டவருமான மிஸ் மெக்லவுட் என்னும் அமெரிக்கப் பெண்மணி ஆவார்.
இதன் பிரதிகள் நபல எடுத்து பலருக்கும் வழங்கினார்அவர். சுவாமிஜியின் திருவுருவைச் செய்வதற்குப் படிகத்தை ஏன் அவர் தேர்ந்தெடுத்தார் என்ற கேள்விக்கு, ஏனெனில் படிகம் மட்டுமே சுவாமிஜியின் மனத்தைக் காட்ட வல்லது என்ற ஆழ்ந்த பதிலைத் தந்தார் மிஸ் மெக்லவுட்
சுவாமிஜி இந்த அறையை மிகவும் நேசித்தார். கல்கத்தாவிற்கோ வெளியூர்களுக்கோ சென்றால் விரைந்து இந்த அறைக்குத் திரும்ப விரும்புவார் அவர். இங்கே அவர் படித்தார், எழுதினார், சிந்தித்தார், நண்பர்களைச் சந்தித்தார், சீடர்களுக்கு உபதேசித்தார், உண்டார், உறங்கினார், கங்கையை ரசித்தார், கடவுளுடன் தொடர்பு கொண்டார். இறுதியில் உடலையும் உகுத்தார்.
இந்த அறையில் அமர்ந்து அவர் எழுதிய ஓரிரு கடிதங்களின் சில பகுதிகளைக் காண்போம்:
இப்போது நான் இங்கே மடத்தில் கங்கைக்கரையில் என் அறையில் அமர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன். எல்லாம் அமைதியில் ஆழ்ந்துள்ளன. அருகில் பாய்ந்தோடும் கங்கை பிரகாசமான சூரிய ஒளியில் நடனமாடிச் செல்கிறாள். சூழ்நந்துள்ள அமைதி, சரக்கேற்றிச் செல்லும் படகுகளின் துடுப்புகள் நரைத் துளைவதால் மட்டும் எப்போதோ சிலவேளைகளில் குலைகிறது (1900 டிசம்பர் 19 அன்று எழுதியது)
நிலவு இதுவரை உதிக்கவில்லை. சூரியன் இல்லாமலேயே ஒரு மெல்லிய ஒளி நதிமீது படிந்துள்ளது. எங்கள் மாபெரும் கங்கை மடத்துச் சுவர்களின்மீது வந்து மோதிச் செல்கிறாள். எண்ணற்ற சிறு படகுகள் இந்த மெல்லிய இருளில் அங்குமிங்குமாக உலவிக் கொண்டிருக்கின்றன.
அவை மீன் பிடிக்க வந்தவை… வெளியில் மழை பெய்து கொண்டிருக்கிறது- கொட்டிக்கொண்டிருக்கிறது. ஆனால் மழை நிற்கின்ற அந்தக் கணமே எனது மயிர்க்கால் ஒவ்வொன்றிலிருந்தும் (வியர்வை) மழை கொட்டத் தொடங்கும்- அவ்வளவு சூடு!
இன்று இரவு நான் சாப்பிடப் போவதில்லை… படுத்த படி சிந்திக்க வேண்டும்; சிந்தனை, சிந்தனை, சிந்தனை! சில விஷயங்களைப் படுக்கையில்தான் என்னால் நன்றாகச் சிந்திக்க முடிகிறது. ஏனெனில் சிந்தனைக்கான விடைகளைக் கனவில் நான் பெறுகிறேன். எனவே இப்போது நான் படுக்கப் போகிறேன்.
இரவு வணக்கம்! மாலை வணக்கம்! இல்லை, இல்லை! இப்போது டெட்ராய்ட்டில்(டெட்ராய்ட்டில் வாழ்ந்த தமது சிஷ்யையான சிஸ்டர் கிறிஸ்டைனுக்கு சுவாமிஜி எழுதிய கடிதம் இது.) காலை 10 மணியாக அல்லவா இருக்கும், எனவே காலை வணக்கம்! கனவுகளை எதிர்நோக்கியபடி நான் படுக்கப் போகின்ற இந்த வேளையில் எல்லா நன்மைகளையும் சுமந்தபடி பகல் உன்னை அணுகட்டும்!
அன்பாசிகளுடன் என்று உன் விவேகானந்த (1901 செப்டம்பர் 3 அன்று எழுதியது) சுவாமிஜியின் ஜெயந்தி நாளன்று பக்தர்கள் இந்த அறைக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த அறையில் சுவாமிஜி வாழ்கிறார்!
சுவாமிஜி பேலூர் மடத்தில் இப்போதும் வாழ்ந்து வருகிறார். அவர் தமது அறையில் தியானத்தில் ஆழ்ந்திருப்பதை எத்தனையோ நாட்கள் நான் கண்டிருக்கிறேன். அவர் அந்த அறையில் அங்குமிங்குமாக உலவுவதையும் சிலவேளைகளில் கண்டிருக்கிறேன். இது மஹாபுருஷ்ஜி 1924 ஜனவரியில் விவேகானந்தர் கோயில் பிரதிஷ்டை விழாவின்போது கூறியது.
இது பற்றி ஸ்ரீராமகிருஷ்ணரின் துறவிச் சீடர்கள் ஒரிருவரின் அனுபவங்களைப் பார்ப்போம்!
1. சுவாமிஜி மறைந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒருமுறை விஞ்ஞானானந்தரிடம் ஒருவர், நீங்கள் சுவாமிஜியை இப்போதும் காண்பது உண்டா? என்று கேட்டார். அதற்கு அவர் சுவாமிஜி அந்த அறையில் இப்போதும் வாழ்ந்து வருகிறார், வாழ்கின்ற ஒருவரை நான் காணாமல் இருப்பேனா? என்று பதில் கூறினார். சுவாமிஜி இப்போதும் அவரது அறையில் வாழ்கிறார்! அவரைத் தொந்தரவு செய்யக் கூடாதே என்பதற்காகத்தான், நான் அந்த அறையைக் கடந்து செல்ல நேரும்போதெல்லாம்.
குதிகாலை உயர்த்தி, ஓசையின்றி நடந்து செல்கிறேன். அவரது கண்களைச் சந்திக்க நேருமே என்பதற்காக, பொதுவாக, நான் அந்த அறையைப் பார்ப்பதையே தவிர்க்கிறேன். அவர் இப்போதும் இங்கே நடக்கிறார், பாடுகிறார், மாடியில் உலவுகிறார், இன்னும் என்னென்னவோ செய்கிறார்.
2. அகண்டானந்தரின் இயற்பெயர் கங்காதர், சுவாமிஜி அவரை கங்கா என்று அழைப்பார். 1933 துர்க்கா பூஜை நாட்களில் அதிகாலை வேளையில் அகண்டானந்தர் தினமும் சுவாமிஜியின் அறைக்கு அருகில் அமர்ந்து உரத்த குரலில் துர்க்கா நாமம் சொல்லலானார். காரணம் கேட்டபோது அவர், சுவாமிஜி கேட்பதற்காகவே என்று பதில் கூறினார்.
ஒருநாள் இரவு அவர் கனவொன்று கண்டார். அதில் சுவாமிஜி அவரிடம் வந்து, கங்கா! என் துணிகளைப் பார்த்தாயா? பூச்சி வில்லைகளின் நாற்றம் சகிக்க வில்லை. இந்த விசேஷ நாளிலாவது எனக்கு ஒரு நல்ல வேட்டி தரங்கூடாதா! என்று கேட்டார். வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்த அகண்டானந்தர் இரவென்றும் பாராமல் அப்போதே பூஜாரி சுவாமியின் அறைக்குச் சென்றார். அவரை எழுப்பி, எழுந்திரப்பா, ஒரு புதிய வேட்டியை எடுத்துக்கொண்டு என்னுடன் வா என்றார். படுக்கையிலிருந்து எழுந்த அந்த இளம்துறவிக்கு ஒன்றும் புரியவில்லை.
எனினும், சொல்வது அகண்டானந்தர் என்ற காரணத்திற்காக அவர் சொன்னபடியே செய்தார். நேராக சுவாமிஜியின் அறைக்குச் சென்றார் அகண்டானந்தர். அறையைத் திறந்து உள்ளே சென்றதும் பத்தி கொளுத்தி வைக்குமாறு கூறினார். அப்படியே செய்தார் பூஜாரி சுவாமி. அதன்பிறகு அகண்டானந்தர் அந்தப் புதிய வேட்டியைக் கையில் எடுத்து, அதில் சிறிது வாசனைத் தைலம் தெளித்து, சுவாமிஜியின் படத்திற்கு முன்பு அதனைப் பணிவுடன் சமர்ப்பித்தார். பின்னர் பூஜாரி சுவாமியிடம், இனி கற்பூர ஆரதி காட்டு என்றார்.
முற்றிலுமாகக் குழம்பிப்போன அந்த இளம்துறவி, ஆனால் மஹராஜ்! இப்போது அதிகாலை 2.30 மணி என்று தயங்கினார். ஒருவித ஆனந்த பரவசத்தில் திளைத்துக் கொண்டிருந்த அகண்டானந்தர், பரவாயில்லை இன்று 2.30 மணியை 4 மணியாக நினைத்து மங்கல ஆரதி செய் என்றார் அகண்டானந்தர் ஆரதி காட்டினார் அந்த இளம்துறவி.
3. இடம் போதாமை காரணமாக ஒருமுறை இளம் துறவியர் இருவர் சுவாமிஜியின் அறைக்கு முன்புள்ள சிறிய இடைவெளியில் தூங்கினர். அதைக் கண்ட மஹாபுருஷ்ஜி அவர்களை எழுப்பி அவர்களிடம் கூறினார்: அப்பா, இது சுவாமிஜி நடக்கின்ற இடம். நீங்கள் படுத்திருந்தால் அவருக்கு இடைஞ்சலாக இருக்கும். அவர் இங்கே வாழ்கிறார். இது முற்றிலும் உண்மை. அவருக்கு இடைஞ்சலாக இருக்காதீர்கள்.
4. ஒருநாள் மஹாபுருஷ்ஜி சுவாமிஜியின் அறைக்கு முன்பு நின்று அறைக்குள் கூர்ந்து பார்த்தபடி காலை வணக்கம் சுவாமிஜி என்று மீண்டும்மீண்டும் பலமுறை கூறினார். பிறகு மற்றவர்களிடம், இன்று ஒரு பொன்னாள்.
இன்று எனக்கு சுவாமிஜியின் தரிசனம் கிடைத்தது. காலையில் சற்று காலாற நடந்துவிட்டு அறைக்குள் நுழையும்போது தான் நான் அவரைக் கண்டேன். அவர் ஆனந்த பரவசத்தில் திளைத்துக் கொண்டிருந்தார் என்றார். அன்று முழுவதும் மஹாபுருஷ்ஜி, சுவாமிஜியைப் பற்றிய விஷங்களையே பேசினார். சுவாமிஜியின் உணர்விலேயே திளைத்தார்.
இன்று உலகெங்கும் கொண்டாடப்படுகின்ற அந்தத் தியான சித்தரை நாமும் நமது மனக்கண்ணால் கண்டு, பணிந்து நமது பிரார்த்தனைகளைச் சமர்ப்பித்து, அவர் வாழ்ந்த புனிதக் கோயிலை வணங்குவோம்.
பாதையின் ஆரம்பத்தில் வலது பக்கம் ஒரு சிறிய பூந்தோட்டம் உள்ளது. ஆரம்ப நாட்களில் இந்த இடத்தில் ஒரு வில்வ மரம் நின்றது. நீலாம்பர் வீட்டில் இருந்து மடம் இந்த இடத்திற்கு மாற்றப்பட்ட நாளில் (1898 டிசம்பர் 9, வெள்ளி) சுவாமிஜி அந்த வில்வ மரத்தின் கீழ்தான் ஸ்ரீராமகிருஷ்ணருக்கு விசேஷ பூஜை செய்தார்.
பாதையின் இடது பக்கம் நிற்கின்ற நாகலிங்கம் மற்றும் கிருஷ்ண-ஆல்( ஆல மரங்களில் சுமார் 200 வகைகள் உள்ளன. அவற்றுள் கிருஷ்ண- ஆல் அரிய வகைப் பிரிவைச் சேர்ந்தது. இதன் இலைகள் கிண்ணம் போலுள்ளன. ஆயுர்வேதம் மற்றும் யுனானி மருத்துவத்தில் பெரிதும் பயன்படுகின்றன) மரங்கள் சுவாமி பிரம்மானந்தரால் நடப்பட்டவை. அவர் மேலும் பல மரங்கள் நட்டிருந்தார்; இவை மட்டுமே எஞ்சின.