ஒரு பிச்சைக்காரர் விலையுயர்ந்த வைரத்தை வழியில்
கண்டெடுத்தார்.
அதன் மதிப்பு என்னவென்று தெரியாமலே அதை தன்னுடனிருந்த கழுதையின் காதில்மாட்டிவிட்டார்.
இதை கண்காணித்துக் கொண்டிருந்த ஒரு வைர வியாபாரி அவரிடம் சென்று “இந்த கல்லை எனக்குக்கொடுத்தால் நான் உனக்கு பணந்தருகிறேன், எவ்வளவு வேண்டும் கேள்” என்றார்.
உடனே பிச்சைக்காரர், “அப்படியானால் ஒரு ரூபாய் தந்துவிட்டு இந்தக்கல்லை வைத்துக்கொள்”
என்றார்.
அதற்கு, வைர வியாபாரி இன்னுங்குறைவாக வாங்கும்
எண்ணத்துடன் “ஒருரூபாய் அதிகம்! நான் உனக்கு 50
பைசா தருகிறேன் இல்லையென்றால் வேண்டாம்” என்றார்.
பிச்சைக்காரர், “அப்படியானல் பரவாயில்லை. அது இந்த
கழுதையின் காதிலேயே இருக்கட்டும்” என்றவாறே நடக்கலானார்.
வைரவியாபாரி, எப்படியும் அந்த பிச்சைக்காரர் தன்னிடம் அதை 50 பைசாவிற்க்கு தந்து விடுவாரென்ற எண்ணத்துடன் காத்திருந்தார்.
அதற்குள் அங்குவந்த இன்னொருவியாபாரி அந்த பிச்சைக்காரரிடம் 1000 ரூபாய்தந்து அந்த வைரத்தை வாங்கிக்கொண்டார்.
இதை சற்றுமெதிர்பாராத முதல் வைரவியாபாரி அதிர்ச்சியுடன், “அட அடிமுட்டாளே!
கோடி ரூபாய் மதிப்புள்ள வைரத்தை வெறும் ஆயிரத்துக்கு கொடுத்து விட்டு இவ்வளவு சந்தோசமாகச் செல்கிறாயே! நன்றாக ஏமாந்துவிட்டாய்“ என்றார்.
அதைக் கேட்ட பிச்சைக்காரர், பலத்த சிரிப்புடன்
“ யார் முட்டாள்?, எனக்கு அதன் மதிப்புத் தெரியாது அதனால் அதை இந்த விலைக்கு விற்றுவிட்டேன்.
மேலும் எனக்கு இதுவே மிகப்பெரிய தொகை.
எனவே நான் மிகுந்த மகிழ்வுடனிருக்கிறேன்.
அதன் மதிப்பு தெரிந்தும் வெறும் 50 பைசாவிற்காக
அதை இழந்துவிட்டாய்..!
இது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்..!”
என்றவாறே நடக்கலானார்.
நீதி : பேராசை பெருநஷ்டம்!!!