ராமகிருஷ்ண இயக்க குருவின் உறைவிடம்!
வில்வ மரத்திற்குத் தென்மேற்கில் சில அடி தூரத்தில் அமைந்துள்ள கட்டிடம் ராமகிருஷ்ண இயக்கத்தின் குரு வசிக்கும் இடமாகும்.
அவர் மடத்தில் இருக்கின்ற நாட்களில், காலையிலும் மாலையிலும் குறிப்பிட்ட நேரங்களில் அவரது தரிசனம் பெறலாம். அவர் வாழும் கட்டிடத்தின் கீழ்ப் பகுதி வங்க நாடக உலகினரின் நன்கொடையால் கட்டப்பட்டதாகும்.
எனவே அந்தப் பகுதி, வங்க நாடக உலகின் தந்தை என்று போற்றப்படுபவரும் ஸ்ரீராமகிருஷ்ணரின் சீடருமான கிரீஷ் சந்திர கோஷின் நினைவாக கிரீஷ் நினைவில்லம் என்று வழங்கப்படுகிறது. மாடிப் பகுதி பின்னர் கட்டப்பட்டது. இங்கிருந்து கங்கையை நோக்கிச் சென்றால் வருவது சமாதி பீடம்.
சமாதி பீடம்!
அனைத்தும் முடிகின்ற மயானமாகிய சமாதி பீடத்தில் நமது பேலூர் மட தீர்த்த யாத்திரை நிறைவடைகிறது. அங்கே பீடம் எழுப்பப்பட்டுள்ள இடத்தில்தான் ஸ்ரீராமகிருஷ்ணரின் துறவிச் சீடர்கள் எழுவரின் இகவுலகவாழ்வு நிறைவுற்றது.
அவர்களின் பெயர்கள் அந்தப் பீடத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. பீடத்தின் கிழக்கில் ஓர் இரும்பு வேலிக்குள், இரண்டாகப் பிரிக்கப்பட்ட ஒரு சிறிய நிலப்பகுதியைக் காணலாம். வட பகுதி ராமகிருஷ்ண இயக்கத்தின் குருமார்கள் மற்றும் தென் பகுதி மற்ற துறவியரின் இறுதிக் கிரியைக்காக ஒதுக்கப்பட்ட இடங்களாகும்.
ஓம், இந்த உடம்பு சாம்பலாகிவிடும். உடம்பிலிருந்து வெளியேறுகின்ற பிராணன், எங்கும் நிறைந்ததும் அழிவற்றதுமான பிராணனுடன் கலந்துவிடும். மனமே! இந்த வாழ்க்கையில் செய்த செயல்களை நினைத்துப் பார்!
மீண்டும்மீண்டும் நினைத்துப் பார் (வாயுரனிலம் அம்ருதம் அத இதம் பஸ்மாந்தம் சரீரம்! ஓம் க்ரதோ ஸ்மர க்ருதம் ஸ்மர க்ரதோ ஸ்மர க்ருதம் ஸ்மர!) என்கிறது உபநிஷதம். நாமும் அங்கே சிறிதுநேரம் நின்று அந்த மாமுனிவர்களின் பெருவாழ்வைச் சிந்திக்கிறோம் மவுனமாக அவர்களின் அருளாசிகளை நாடுகிறோம்.
ராமகிருஷ்ணரின் கண்காட்சி!
ராமகிருஷ்ண இயக்கத்தில் வாழ்ந்த, அதனை வாழ்வித்த மகான்கள் மறைந்து விட்டாலும் அவர்களின் நினைவுச்சின்னங்கள் ராமகிருஷ்ணர் கண்காட்சியில் பாதுகாக்கப்படுகின்றன. பேலூர் மடத்தின் முக்கிய வாசலுக்கு அருகில் இந்தக் கண்காட்சி அமைந்துள்ளது.
ஸ்ரீராமகிருஷ்ணர், அன்னை, சுவாமிஜி, ஸ்ரீராமகிருஷ்ணரின் மற்ற சீடர்கள், மற்றும் ராமகிருஷ்ண இயக்கத்தின் வளர்ச்சிக்குப் பங்களித்தவர்களைப் பற்றிய தகவல்கள் அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் ஆகியவை இங்கே காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.
கண்காட்சியைப் பார்த்துச் செல்லும்போதே ராமகிருஷ்ண இயக்கத்தின் வரலாறு மற்றும் சமய வரலாற்றில் அதன் இடத்தைப் புரிந்துகொள்ளும் விதத்தில் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இறுதியில் ஓர் அரை மணி நேரம் வீடியோ காட்சியும் உண்டு. திங்கள் மற்றும் விழா நாட்கள் கண்காட்சி விடுமுறை நாட்கள் ஆகும்.