கவிஞர் பெரியசாமி தூரன்
இசை மற்றும் இலக்கிய உலகில் பெரிதும் போற்றப்பட்ட திரு. பெரியசாமி தூரன் அவர்கள், அவ்விரண்டின் வளர்ச்சிக்கும் மாபெரும் சேவை செய்துள்ளார்கள். தன்னுடைய காலத்தை வென்ற படைப்புகளின் மூலம் இசை மற்றும் இலக்கியங்களுக்கு மெருகூட்டியிருக்கிறார்கள்.
”தூரன் என்றால் தமிழ்; தமிழ் என்றால் தூரன்” என்று சொன்னால் அது மிகையாகாது. தூரன் என்ற பெயர் சொன்னாலே அது “கலைக்களஞ்சியம்” என்று சொல்லப்பட்ட “தமிழ் அபிதான சிந்தாமணி”யைத்தான் (தமிழ் என்ஸைக்ளோபீடியா) குறிக்கும். ஏனென்றால், கடுமையாக உழைத்து அதைப் பத்து தொகுதிகளாக தமிழுலகிற்கு அளித்த கொடை வள்ளல் அல்லவா அவர்? குழந்தை இலக்கியத்திற்குப் பங்காற்றியதன் மூலமும் நம்மால் நினைவுகூறத் தக்கவர் தூரன்.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி என்ற ஊரில், பழனிவேலப்ப கவுண்டர் – பாவாத்தாள் தம்பதியருக்கு, 1908 செப்டம்பர் 26–ல் பிறந்த தூரன், சென்னை மாநிலக் கல்லூரியில் கணிதத்தில் இளங்கலைப் பட்டம் பெற்று பின்னர், ஆசிரியர் பயிற்சியும் (L.T. – Licentiate in Teaching) பெற்றார். தன்னுடைய இளைய பருவத்தில், தேசிய-மஹாகவி பாரதியான் பால் ஈர்க்கப்பட்டு, மஹாத்மா காந்தியினாலும் ஊக்கம் கொண்டார். சிறந்த தேசபக்தராக இருந்த காரணத்தால், ஆங்கிலேய அரசாங்கம் விடுதலை வீரர் பகத் சிங்கைத் தூக்கிலிட்டதைக் கண்டித்து, கல்லூரியில் இறுதியாண்டுத் தேர்வைப் புறக்கணித்தார்.
வெள்ளையனிடமிருந்து சுதந்திரம் வாங்குவதன் முன்நாளில் (14-8-1947) தமிழ் வளர்ச்சிக் கழகம் தொடங்கப்பட்டது. செயலாளர் பெ. தூரன். 1948-லிருந்து 14 ஆண்டுகள் தூரன் கலைக்களஞ்சிய எடிட்டராக உழைத்தார். 15000 கட்டுரை, 1000+ ஆசிரியர்கள் எழுதினர். 10 தொகுதி, மொத்தம் 7500 பக்கம், எண்ணிறந்த படங்கள். 25000 தொழில்நுட்புச் சொற்கள். இந்தச் சொற்கள் எல்லாம் கணினியுகத்தில் பரவவேண்டுமாயின், யுனிகோட் எழுத்துருவில் வெள்ளுரையாக (plain-text) இணையப் பல்கலை அல்லது அவினாசிலிங்கம் பல்கலை (கோவை) வலைத்தளம் ஏறவேண்டும். அப்பொழுதுதான் கணித்துழாவி எந்திரங்களில் இவ்வார்த்தைகள் சிக்கும்.
தமிழால் எதுவும் முடியும்: தமிழ் கலைக்களஞ்சியமே சான்று. எம். பி. தூரன் பாராட்டு விழாவில் சி. சுப்பிரமணியம் பேச்சு. முடியுமா என்பதல்ல; முடிப்போம் முறையாக முடிப்போம் – காமராஜ் பேச்சு.
தமிழ் மொழி வளர்ச்சி மற்றும் அறிவியக்கத்திற்கு இவர் ஆற்றியுள்ள பங்கு ஒப்பிடலுக்கு அப்பாற்பட்டது. முக்கியமாக, ஐந்து கவிதை நூல்களும், ஏழு நாடக நூல்களும், ஐந்து கதைத் தொகுதிகளும், மூன்று கட்டுரைத் தொகுப்புகளும், ஆறு இசை நூல்களும், மூன்று மொழிபெயர்ப்பு நூல்களும், மற்றும் பல நூல்களும் படைத்து அளித்துள்ளார்கள். உளவியல் துறையில் (Psychology) “குழந்தை உள்ளம்”, மரபணுவியல் துறையில் (Genetics) “பாரம்பரியம்”, கருத்தரித்தல் பற்றிய அறிவியல் துறையில் (Embryology) “கருவில் வளரும் குழந்தை” போன்ற அற்புத படைப்புகளும் வழங்கியுள்ளார் திரு தூரன்.
அவருடைய படைப்புகளில் இளந்தமிழன், மின்னல் பூ, தங்கச் சங்கிலி, பிள்ளை வரம், தேன் சிட்டு, பூவின் சிரிப்பு ஆகியவைக் குறிப்பிட்டுச் சொல்லும்படியானவை. பொன்னியின் தியாகம், அழகு மயக்கம் ஆகியவை அருமையாகப் படைக்கப்பட்ட நாடகங்கள். குழந்தைகளுக்காகப் பல பாடல்கள், மிருகங்கள் பற்றிய கதைகள், மற்றும் பல புத்தகங்கள் எழுதியுள்ளார்.
திரு.தூரன் அவர்கள், நாட்டுபுறப் பாடல்களும், கர்னாடக இசைக் கீர்த்தனைகளும், ஸ்வரங்களும் இயற்றியுள்ளார். டி.கே.பட்டம்மாள், செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயர், என்.சி.வசந்தகோகிலம், டி.வி.சங்கரநாராயணன், டைகர் வரதாச்சாரியார், முசிறி சுப்ரமணிய ஐயர், போன்ற இசையுலக ஜாம்பவான்கள், இவருடைய இசையறிவை மெச்சி, இவர் இயற்றிய பாடல்களுக்கு அடிமைகளாகவே இருந்து, தங்கள் கச்சேரிகளில் அவற்றைப் பாடாமல் இருந்ததில்லை என்று சொல்லலாம்.
’சாரங்கா’ ராகத்தில் அமைந்த “ஞானநாதனே”, ‘பிருந்தாவன சாரங்கா’வில் அமைந்த “கலியுக வரதன்”, ‘மாண்ட்’ ராகத்தில் அமைந்த “முரளீதரா கோபாலா”, ‘சாவேரி’யில் அமைந்த “முருகா முருகா”, ‘காபி’யில் பாடிய “பழனி நின்ற”, ‘கீரவாணி’யில் அமைந்த “புண்ணியம் ஒரு கோடி”, ‘சுத்த சாவேரி’ ராகத்தில் அமைந்த “தாயே திரிபுரசுந்தரி” ஆகியவை இவர் இயற்றியுள்ள மயங்கவைக்கும் கீர்த்தனைகளில் சில.
பெ.தூரன் இயற்றிய “எங்கு நான் செல்வேன் ஐயா” என்ற துவிஜாவந்தி ராகக் கீர்த்தனை, பாம்பே ஜெஸ்ரீ குரலில் (பாடலைக் கேட்க மேலே உள்ள பெட்டியில் அழுத்தவும்)
பெரியசாமி தூரன் அவர்கள் செய்துள்ள மொழியாக்கங்களில், ஜாக் லண்டன் அவர்களின் “Call of the Wild” (கானகத்தின் குரல்), நாவோமி மிட்சின்ஸனின் “Judy and Lakshmi” (காதல் கடந்த நட்பு) ஆகியவை குறிப்பிட்டுச் சொல்லப்படுபவை. இவர், “பாரதி தமிழ்” மற்றும் “தாகூரின் ஐம்பெரும் கட்டுரைகள்” ஆகிய நூல்களுக்கு தொகுப்பாசிரியராக (Editor) இருந்து வெளியிட்டுள்ளார். மேலும் ஓலைச் சுவடிகளில் எழுதப்பட்டிருந்த சில கவிதைகள் மற்றும் நாடகங்களையும் பதிப்பித்து வெளியிட்டுள்ளார். மஹாகவி பாரதியாரின் பன்முகத் தோற்றத்தையும் ஆளுமையையும், அருமையான முறையில் அலசி ஆராய்ந்து, இவர் வெளிக் கொணர்ந்த பத்து தொகுதிகள், நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு இவர் ஆற்றியுள்ள தொண்டுகளில் மிகச்சிறந்தது என்று சொன்னால் அது மிகையாகாது.
1948-லிருந்து 1978 வரை தலைமைத் தொகுப்பாசிரியர் பொறுப்பில் கடுமையாக ஓய்வின்றி உழைத்து பத்து தொகுதிகள் கொண்ட தமிழ்க் கலைக் களஞ்சியத்தை இவர் தயாரித்தது மிகச் சீரிய பணியாகும். அதைத் தொடர்ந்து குழந்தைகளுக்கான ஒரு கலைக் களஞ்சியத்தையும் பத்து தொகுதிகளுடன் படைத்தார்.
டி.அவினாசிலிங்கம் செட்டியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்தபோது, செட்டியார் மனமுவந்து அளித்த முப்பது ரூபாய் மாதச் சம்பளத்தை அதிகம் என்று மறுத்து வெரும் பதினைந்து ரூபாய் மட்டுமே பெற்றுக் கொண்டு பணியாற்றினார். இந்திய அரசு இவருக்கு 1968-ல் பத்ம பூஷண் விருதளித்துக் கௌரவித்தது. தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் 1970-ல் கலைமாமனி விருதும், 1972-ல் தமிழ் இசை சங்கம் இசைப்பேறறிஞர் பட்டமும், 1978-ல் எம்.எ.சி.அறக்கட்டளைகள் அண்ணாமலை செட்டியார் விருதும் அளித்து கௌரவித்தன. பாரதீய வித்யா பவனும், சாகித்ய அகாதமியும் இணைந்து தொண்டில் கனிந்த தூரன் என்ற பெயரில் அவரின் வாழ்க்கை பற்றிய புத்தகத்தை அவருடைய நூற்றாண்டான சென்ற வருடத்தில் வெளியிட்டு கௌரவித்தன.
“தூரனும் அவருடைய குடும்பத்தாரும், திருவண்ணாமலை யோகி ராம்சுரத்குமார் அவர்களின் பக்தர்களாவர். யோகியைப் போற்றி திரு.தூரன் அவர்கள் எழுதியுள்ள பாடல்கள் பல வித்வான்களால் பாடப் பெற்றுள்ளன. அப்பாடல்கள் புத்தகங்களாகவும் வந்துள்ளன. யோகி ராம்சுரத்குமார் அவர்கள் முன்னிலையில் தூரன் அவர்களிடமிருந்து பாடல்கள் மடை திறந்த வெள்ளம் போல் பெருகி வரும்” என்று பெங்களூரைச் சேர்ந்த துறவியும், சமூக சேவகருமான சாது ரங்கராஜன் அவர்கள் நெகிழ்ந்து கூறுகிறார்கள்.
உண்மையாக தமிழுக்குப் பெரும் தொண்டாற்றியுள்ள துரன் அவர்களின் நூற்றாண்டு விழாவை அதற்கு ஏற்ற முக்கியத்துவம் அளித்துக் கொண்டாடாமல், தற்போதைய தமிழக அரசாங்கம் அலட்சியம் செய்ததில் ஆச்சரியப் பட ஒன்றுமில்லை. பகுத்தறிவு பேசும் திராவிட மண்ணில் துரைகளுக்குத்தான் நூற்றாண்டு விழாவே தவிர தூரன்களுக்கு இல்லை. துரைகளைத் தூக்கி வைத்துக் கொண்டாடுவார்கள்; தூரன்களைத் தூரத் தள்ளி ஒதுக்கி வைப்பார்கள்.
தமிழைத் தன் உயிராக நினைத்து அதன் வளர்ச்சிக்குப் பெரும் தொண்டாற்றிய தூரனைக் கண்டு கொள்ள மாட்டார்கள். இவரும் அதே ஈரோடு மண்ணிலிருந்து வந்தவர் தான்.
பெரியசாமி தூரனை இனவெறியாளர்கள் மறந்துவிட்டுப் போகட்டும். நமக்குக் கவலை இல்லை. உண்மையான தமிழர்கள் உள்ளத்தில் தூரன் என்றும் தமிழ்ப் பெரியாராக மங்காப் புகழுடன் குடியிருப்பார். தூரன் புகழ் வாழ்க! அவர்தம் பெருமை வளர்க!
சிறு வயதில் இருந்தே கதர் ஆடை அணிவதில் விருப்பம் கொண்ட இவர் பாரதியின் பாடல்களைப் பரவலாக்குவதில் ஈடுபட்டார். தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட கலைக் களஞ்சியத்தின் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். குழந்தைகள் கலைக்களஞ்சியம் பத்து தொகுதிகளை 1976 வரை வெளியிட்டார். 1987 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20 ஆம் நாள் மறைந்தார்.
கவிஞர் பெரியசாமித்தூரன் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்
01. நவமணி இசைமாலை
02. மின்னல் பூ
03. இளந்தமிழா
04. தூரன் கவிதைகள்
05. நிலாப் பிஞ்சு
06. ஆதி அத்தி
07. அழகு மயக்கம்
08. பொன்னியின் தியாகம்
09. காதலும் கடமையும்
10. மனக்குகை
11. சூழ்ச்சி
12. இளந்துறவி
13. தூரன் எழுத்தோவியங்கள்
14. பிள்ளைவரம்
15. மா விளக்கு
16. உரிமைப் பெண்
17. காளிங்கராயன் கொடை & தங்கச் சங்கிலி (சிறுகதைத்
தொகுதி)
18. காலச் சக்கரம் (பத்திரிகை)
19. தமிழிசைப் பாடல்கள் (15ஆம் தொகுப்பு)
20. தமிழிசைப் பாடல்கள் (7ஆம் தொகுதி)
21. இசைமணி மஞ்சரி
22. முருகன் அருள்மணி மாலை
23. கீர்த்தனை அமுதம்
24. பட்டிப் பறவைகள்
25. கானகத்தின் குரல்
26. கடல் கடந்த நட்பு
27. பறவைகளைப் பார்
28. தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்
29. மோகினி விலாசம்
30. அருள் மலை நொண்டி
31. காட்டு வழிதனிலே
32. பூவின் சிரிப்பு
33. தேன் சிட்டு
34. காற்றில் வந்த கவிதை
35. பாரதியும் பாரத தேசமும்
36. பாரதியார் நூல்கள் ஒரு திறனாய்வு
37. பாரதியும் பாப்பாவும்
38. பாரதித் தமிழ்
39. பாரதியும் கடவுளும்
40. பாரதியும் சமூகமும்
41. பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்
42. பாரதியும் தமிழகமும்
43. பாரதியும் உலகமும்
44. பாரதியும் பாட்டும்
45. மனமும் அதன் விளக்கமும்
46. கருவில் வளரும் குழந்தை
47. குமரப் பருவம்
48. பாரம்பரியம்
49. பெற்றோர் கொடுத்த பெருங்கொடை
50. குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்
51. அடி மனம்
52. நல்ல நல்ல பாட்டு
53. சங்ககிரிக் கோட்டையின் மர்மம்
54. மழலை அமுதம்
55. நிலாப்பாட்டி
56. பறக்கும் மனிதன்
57. ஆனையும் பூனையும்
58. கடக்கிட்டி முடக்கிட்டி
59. மஞ்சள் முட்டை
60. சூரப்புலி
61. கொல்லிமலைக் குள்ளன்
62. ஓலைக்கிளி
63. தரங்கம்பாடித் தங்கப் புதையல்
64. நாட்டிய ராணி
65. மாயக்கள்ளன்
66. தம்பியின் திறமை