Home » பொது » காணும் பொங்கல்!!!
காணும் பொங்கல்!!!

காணும் பொங்கல்!!!

காணும் பொங்கல்…

காணும் பொங்கல் என்பது பொங்கல் கொண்டாட்டங்களில் நான்காவது நாள் இடம்பெறும் விழா ஆகும். காணும் பொங்கலை கன்னிப் பொங்கல் அல்லதுகணுப் பண்டிகை என்றும் அழைப்பர்.

உற்றார், உறவினர், நண்பர்களை காணுதல் மற்றும் பெரியோர் ஆசி பெறுதல் என்பன அடங்கும். பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், பட்டி மன்றம், உரி அடித்தல், வழுக்கு மரம் ஏறல் என்று வீர சாகசப் போட்டிகளிலிருந்து சகலமும் இடம் பெறும்.

இது பெண்களுக்கு முக்கியமான பண்டிகை ஆகும். பொங்கல் பானை வைக்கும்போது அதில் புது மஞ்சள்கொத்தினை கட்டி அதனை எடுத்து முதிய தீர்க்க சுமங்கலிகள் ஐவர் கையில் கொடுத்து ஆசி பெற்று அதனை கல்லில் இழைத்து பாதத்தில் முகத்தில் பூசிக்கொள்வார்கள்.

கச்சேரிகள், நாடகம் என்று இன்றைக்கு ஊருக்கு ஏற்றவாறு ஏற்பாடு செய்யப்படுவது உண்டு. கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் என்று தொன்மையான கலைகள் இரவு விளக்கு வெளிச்சத்தில் நடை பெறுவதும் உண்டு.

ஜல்லிக் கட்டு…

கிராமப்புறங்களில் கிராமியக் கலைகள் இந்த நாளில் நடத்தப்படும். கரக ஆட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், சிலம்பாட்டம் இவற்றோடு வீர விளையாட்டான மஞ்சு விரட்டு அல்லது ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடை பெறும். சண்டித்தனம் செய்யும் காளைகளின் கொட்டத்தை அடக்கி வெற்றி வாகை சூடுபவர்களுக்கு பரிசுகள் பண முடிப்புகள் வழங்கப்படும்.

தமிழகத்தில் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் அலங்காநல்லூரில் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு நடை பெறுவது வழக்கம். இந்த ஜல்லிக்கட்டைப் பார்க்க அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா போன்ற

வெளிநாடுகளில் இருந்து பார்வையாளர்கள் ஒவ்வொரு வருடமும் வந்து குவிந்து விடுவார்கள். லட்சக்

கணக்கானவர்கள் திரண்டு வந்து இந்த ஜல்லிக்கட்டைப் பார்ப்பார்கள். இந்த ஜல்லிக்கட்டில் ஒவ்வொரு வருடமும் அடங்காத காளைகள் வீரர்களைப் படுமோசமாக காயப்படுத்திவிடும். இதை எல்லாம் பொருட்படுத்தாமல் வீர சாகசத்துடன் காளையை மூக்கணாங் கயிறு பிடித்து அடக்கி வெற்றி வாகைசூடுவார்கள்.

அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு காளைகள் கோவை, கம்பம்,காங்கேயம், இராமாநாதபுரம், தஞ்சை, புதுக்கோட்டை, சேலம் போன்ற இடங்களிலிருந்து லாரிகள் மூலமாக கொண்டுவருவார்கள். இத்தகைய காளைகள் விவசாயத்திற்கோ மற்றவேலைகளுக்கோ பயன் படுத்தாமல் ஜல்லிக்கட்டுக்காகவே வளர்ப்பார்கள்.

தமிழகத்தில் மிகப் பழமையான வீர விளையாட்டாகும். மன்னர்கள் ஆண்ட காலத்தில் கிராமங்களில் ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் வீரர்களையே பெண்கள் மணந்ததாக வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கிறது. (ஆனால் இப்போது மாப்பிள்ளை ஜல்லிக்கட்டுக்கு போறார்னு தெரிஞ்சா, அந்த இடம் நம்ம புள்ளைக்கு ஒத்து வராது என்று ஒதுங்கிவிடுவார்கள். மாடு முட்டி குடல் சரிஞ்சு செத்துப்போனா மக வாழாவெட்டியாப் போயிருவாள் என்று மகளைப் பெற்ற மகராசர்கள் சிந்தனைதான் காரணம்) ‘ரேக்ளா ரேஸ் ‘ எனப்படும் ஒற்றை மாடு பூட்டப்பட்ட வண்டிப் பந்தயம் ட பலடங்களில் நடைபெறும். தற்கும் ஏராளமான கூட்டம் கூடும். எந்த வண்டி ஜெயிக்கும் என்று வேடிக்கை பார்ப்பவர்கள் பந்தயம் கட்டுவது வழக்கம்.

சாவக்கட்டு …

இது தவிர ‘சாவக் கட்டு ‘ என்றழைக்கப்படும் கோழிச் சண்டைகள் தமிழகத்தில் பரவலாக நடைபெறும்.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்று சேவல் சண்டை. மூவேந்தர்கள் ஆட்சி புரிந்த இந்த தமிழ்மண்ணில் 16ஆம் நூற்றாண்டில் இந்த சேவல் சண்டை மிகவும் பிரபலம் அடைந்தது. போர் இல்லாத நேரங்களில் வீரர்கள் சோர்ந்து போகாமல் இருக்க இந்த சேவல் சண்டை நடத்தப்பட்டுள்ளது.

சேவல்சண்டையின் போது சேவல்களின் கால்களில் கத்தியை கட்டிவிட்டு அவற்றை மோதவிட்டு போர் வீரர்கள் பொழுதுபோக்கினர். இவ்வாறு சேவல்சண்டையிடும் களம் ‘சாவக்கட்டு’ என்று இன்றளவும் தமிழகத்தின் பல ஊர்களில் மருவி  அழைக்கப்படுகிறது.

கோழிச் சண்டை என்று சொன்னாலும் சேவல்களைத்தான் சண்டை போடவிடுவார்கள். சேவல்களை கோழிச் சண்டைக்காகவே வளர்ப்பார்கள். சேவல் கால் நகங்களை வெட்டி வெட்டி கூராக்கி வருவார்கள்.

முதிர்ச்சியடைந்ததும் அதை சண்டைக்கு பழக்குவார்கள். சேவலின் கால்களில் ஒரு சாண் நீளமுள்ள கூரான கத்தியை கட்டிவிடுவார்கள். அவரவர் சேவல்களை களத்தில் எதிரும் புதிருமாக இறக்கிவிடுவார்கள்.

சேவல்கள் எகிறிஎகிறி சண்டைபோட்டுக் கொள்ளும். சண்டையில் சேவல்களின் காலில் உள்ள கத்தியால்

இரண்டுக்கும் காயம் ஏற்படலாம். ஆனால் ஆக்ரோசமான சண்டையில் எதாவது ஒரு சேவல் தலை சாய்ந்துவிடும். ஜெயித்த சேவலுக்குரியவர் தோற்றசேவலை எடுத்துக் கொள்வார். ஆனால் எந்தச் சேவல் ஜெயிக்கும் என்று பந்தயம் கட்டுபவர்கள் கூட்டம் தான் கட்டுக்கு அடங்காமல் இருக்கும்.

இது சில இடங்களில் அடிதடி, கத்திகுத்து வரை போய் விடுவதும் உண்டு. இப்படி நடக்கும் இடங்களில் அடுத்ததடவை சாவக்கட்டு கிடையாது என போலீசார் தடை விதித்து விடுவதும் உண்டு. அவர்களுக்கு ‘கடுக்காய் ‘ கொடுத்துவிட்டு வேறு இடத்தில் ரகசியமாக சாவக்கட்டை நடத்துவார்கள்.

இது ஒரு சூதாட்டம் போல் நடப்பதால் பெரும்பாலும் கோழிச் சண்டைநடத்த போலீஸ் தடை இருக்கும். அதை எல்லாம் மீறி சாவக்கட்டு பொங்கல் திருநாளில் தமிழகத்தில் நடந்து வருகிறது. பொங்கல் திருநாளில் கிராமங்களில் கோழிக்குழம்பு மணக்கிறது என்றால் அது பெரும்பாலும் சாவக்கட்டில் சாவடிக்கப்பட்ட சேவல் குழம்பு மணமாகத்தானிருக்கும் என்றால் அது மிகை இல்லை.

மன்னர் காலத்தில் தொடங்கிய இந்த சேவல்சண்டை தமிழரின் கலாச்சாரமாக இன்றளவும் பொங்கல் நாட்களில் தொடந்து  நடைப்பெற்று வருகிறது. தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, திருச்சி, மதுரை, புதுக்கோட்டை, திருநெல்வேலி, தூத்துக்குடி,  கரூர், அரவக்குறிச்சி, கோவை உள்ளிட்ட பகுதிகளில் இந்த சேவல் சண்டை போட்டி பிரபலம்.
கத்தி கட்டி சேவல்களை மோதவிடுவதால் சேவல்கள் அதிகம் இறக்க நேரிடுவதோடு, ரத்தகோரத்தோடு சண்டை நடத்தப்படுவதால் அதற்கு மிருக வதை எதிர்ப்பு எழும்பவே கத்தி கட்டி சண்டையிடும் முறைக்கு அரசாங்கம் தடைவிதித்தது. நீதிமன்ற அனுமதியுடன் அந்தந்த  மாவட்ட ஆட்சியரின் அறிவுரையின்படி தற்போது சேவல் சண்டை போட்டி கத்திகட்டப்படாத  வெற்றுக்கால் சேவல் சண்டைபோட்டியாக நடத்தப்பட்டு வருகிறது.
சண்டைசேவலை பெட்டைகோழியுடன் இணையவைத்து முட்டையிலிருந்து வெளிவரும் போதே குஞ்சுபருவத்திலேயே சண்டைசேவலை பிரித்தெடுத்து மற்ற கோழிகளுடன் சேரவிடாமல் எப்போதும் தனியாக கூண்டில் வைத்து பராமரித்து வருகின்றனர். நூரி, ஜாவா, சீத்தா, யாகூத்து, ஜகரியாகூத்து, தும்மரியாகுத்து, ஜரிதியாபிகா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட சண்டைச்சேவல் வகைகள் உள்ளன.
போட்டிக்கு 21 நாட்களுக்கு முன்பு எந்தசேவலுடன் எந்த சேவலை மோதவிடுவது என்பது தீர்மானிக்கப்படுகிறது. இது ‘ஜோடி சேர்த்தல்’ என்று அழைக்கப்படுகிறது. சேவல்களின் உயரம், வலு போன்றவற்றை அடிப்படையாக கொண்டு ஜோடி அப்போதிருந்தே சண்டைசேவல்களுக்கு காலை, மாலை என இருவேளைகளில் பாதாம் பருப்பு உணவாக கொடுக்கப்படுகிறது.
மேலும் பிஸ்தா, பேரீச்சம்பழம், தேன் ஆகியவற்றை கலந்து உருண்டையாகப் பிடித்தும் தினந்தோறும் உணவாக வழங்கப்பட்டு வருகிறது. கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட நவதானியங்களும் அரைத்து தோசைக்களில் வைத்து சுட்டுகொடுக்கிறார்கள். சேவல்களுக்கு சுடு ஒத்தடம் செய்து பராமரிக்கிறார்கள். இவை தவிர ஒருநாள் உடற்பயிற்சியும், மறுநாள் நீச்சல்பயிற்சி என மாறிமாறி பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஐனவரி 18,19ஆம் தேதிகளில் தஞ்சாவூர் ஞானம்நகரில் சமுத்திரம் ஏரி தென்கரையில் இந்த வெற்றுக்கால் சேவல்சண்டை போட்டி நடத்தப்பட்டது. இதில் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, தமிழகம் ஆகிய தென்மாநிலங்களை சேர்ந்த 6 ஆயிரத்திற்கும் அதிகமான  சேவல்கள் பங்கேற்றன.
வடஅமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளிலும் தற்போது சேவல்சண்டைகள் பிரபலமாகி வருகிறது. தமிழகத்தில் பன்நெடுங்காலமாக சேவல் சண்டை போட்டி நடத்தப்பட்டு வந்தாலும் தனுஷ் நடித்த ‘ஆடுகளம்’ திரைப்படத்திற்கு பிறகு தமிழ்நாட்டில் சேவல்சண்டை இளைஞர்களையும் ஈர்த்துள்ளது.

பொங்கல் என்பதும் நான்கு எழுத்து! பொங்கல் விழா நடக்கும் நாட்களும் நான்கு!! தமிழகத்தின்

பாரம்பரியமான கலை, கலாச்சாரம் மற்றும் வீர விளையாட்டுகளை பொங்கல் நாளில் புதுப்பித்து

மகிழ்கின்றனர். பழமையான கிராமிய கலைகள் அழியாமல் பாதுகாக்கும் விழாக்களில் ‘பொங்கலுக்கும் ‘

பங்கு இருக்கிறது என்பது பெருமையான விசயம் தானே!

தமிழர் என்கிற ஒரு குடையின் கீழ் சமதர்ம சமுதாயம் இணைந்து உவப்போடு ‘தமிழர்திருவிழா ‘ வைக் கொண்டாடுகிற பெருவிழா இந்தப் பொங்கல் திருநாள் ஒன்று தான் என்பது அதனினும் மகிழ்தன்றோ!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top