Home » பொது » குல்சாரிலால் நந்தா!!!
குல்சாரிலால் நந்தா!!!

குல்சாரிலால் நந்தா!!!

குல்சாரிலால் நந்தா

மெலிதான உடல், கதர்குல்லா, பெரிய கருப்புக் கண்ணாடி, தமிழர்கள் அதிகம் பார்த்திராத டை, தெரியாத மொழி, இவைகளே நந்தாவை நமக்கு அந்நியப்படுத்தியது.

1898-ம் ஆண்டு ஜூலை மாதம் 4-ஆம் தேதி சியால் கோட் என்ற பகுதியில் உள்ள படோகிகோசை என்ற இடத்தில் தான் நந்தா பிறந்தார். அவரது மனைவியின் பெயர் லட்சுமி. அவருக்கு 2 ஆண் குழந்தைகளும் ஒரு பெண் குழந்தையும் உண்டு. நந்தாவுக்கு நண்பர்கள் அதிகம். அவர்களின் பண உதவியுடன் தான் அவரது மகள் புஷ்பா டாக்டருக்குப் படிக்க முடிந்தது. மனைவி லட்சுமியின் மறைவினால் நந்தா அதிகம் பாதிக்கப்பட்டார்.

இந்திரா காந்தி இறந்தபோது அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்கு தன்னுடைய 86 வயதிலும் நடந்தே வந்தார். நேருவின் மறைவைத் தொடர்ந்து இரண்டு வார காலமும், சாஸ்திரியின் மறைவைத் தொடர்ந்து இரண்டு வார காலமும் நந்தா பிரதமராக இருந்தார்.

ஒரு சமயம் நந்தாவின் அலுவலகத்தில் உள்ள காகிதத்தையும், பென்சிலையும் எடுத்து அவருடைய பேரப்பிள்ளை ஒரு படம் வரைந்து, தாத்தாவிடம் காட்டினான். பேரப்பிள்ளை வரைந்த படத்தைப் பார்த்து பாராட்டிய நந்தா அந்தக் காகிதமும், பென்சிலும் அரசாங்க அலுவலகத்தில் இருந்து எடுத்தது என்பதை அறிந்து கடுமையாகக் கோபப்பட்டிருக்கிறார்.

அதைக் கொடுத்த செயலாளரை அழைத்து இங்கு உள்ள காகிதமும், பென்சிலும் அரசாங்கப் பணத்தில் வாங்கியது. அது மக்களின் வரிப் பணம். அதை நம்முடைய சொந்த உபயோகத்திற்குப் பயன்படுத்த நமக்கு எந்த உரிமையும் இல்லை என்று சொல்லி செயலாளரிடம் அந்தக் காகிதத்திற்கும், பென்சிலுக்கும் உரிய காசைக் கொடுத்து அவற்றைக் கடைக்குப் போய் வாங்கிக் கொண்டு வந்து அலுவலகத்தில் சேர்த்து விடு என்று சொல்லியிருக்கிறார்.

நந்தா ஆழ்ந்த கடவுள் நம்பிக்கை உள்ளவர். தேர்தலின் பிரசாரக் காலம் ஒரு மாதம் என்பது அதிகம். அந்த காலத்தைக் குறைக்க வேண்டும் என்றார். தேர்தலில் பண பலமும் அடியாள் பலமும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அவற்றைச் சீர்த்திருத்த வேண்டுமென்று டி.என்.சேஷனுக்கு முன்பே சொன்னவர் நந்தாதான்.

நந்தாவின் பிள்ளைகளுக்கு நடந்த திருமணத்திற்கு வந்த விலையுயர்ந்த பரிசுப் பொருட்களைத் திருமணம் முடிந்தவுடன் வந்ததற்கு நன்றி என்று சொல்லிவிட்டு அவர்களுக்கே திருப்பி அனுப்பி விட்டார். நந்தா சிறந்த எழுத்தாளர்.

தேவகௌடா பிரதமராக இருந்தபோது முன்னாள் பிரதமர்களுக்குப் பல சலுகைகளை அளித்தார். அவை எதையும் நந்தா பயன்படுத்தியது இல்லை.

1975-ம் ஆண்டு ஜூன் மாதம் 27-ம் தேதி இந்திராகாந்திக்கு நந்தா ஒரு கடிதம் எழுதினார். நெருக்கடி நிலை பிரகடனம், வேதனை அளிப்பதாக உள்ளது. இதே நிலை நீடித்தால் விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படும் என்று குறிப்பிட்டிருந்தார். இருப்பினும் ஜூலை 4-ம் தேதி நந்தாவின் பிறந்த நாளன்று அவரது வீட்டுக்கு இந்திராகாந்தி சென்றார். நந்தாவுக்குத் தன்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

நந்தாவை அவரது அருமை மகள் புஷ்பாதான் கண்ணும் கருத்துமாகக் கவனித்து வந்தார். மொகலாய மன்னன் ஷாஜஹானின் கடைசி காலத்தில் அவரது மகள் ஜஹனாராபேகம் கவனித்தது போலக் கவனித்தார். டாக்டர் புஷ்பாவின் வீட்டில் முன்னாள் பிரதமர் ஒருவர் இருக்கிறார் என்பதே அப்பகுதி மக்களுக்குத் தெரியாது. தேவகௌடா பிரதமராக இருந்தபோது நந்தாவைப் பார்க்க அவரது இல்லத்திற்குச் சென்றார். அவர் இறப்பதற்கு 6 மாத காலத்திற்கு முன்பிருந்தே சுயநினைவில்லாமல் இருந்தார். குழாய் வழியாகவே அவருக்கு உணவு செலுத்தப்பட்டது.

1998-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15-ம் தேதி வியாழக்கிழமை நான்கு மணியளவில் குல்சாரிலால் நந்தாவின் உயிர் பிரிந்தது. 100 வயது பூர்த்தியாக இன்னும் ஐந்தரை மாதங்களே இருந்தன. இரண்டு முறை பிரதமராக இருந்தவரின் பெயரில் வங்கிக் கணக்கு என்று எதுவுமில்லை. பிள்ளைகளுக்கென்று பணம், சொத்து எதுவும் சேர்த்து வைக்கவில்லை. நல்ல பெயரையும், ஒழுக்கத்தையுமே சொத்தாக விட்டுச் சென்றார்.

அரசியல்வாதிகள் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் நந்தா. ஏழை எளிய மக்களுக்காக வாழ்நாளில் பெரிதும் பாடுபட்டவர். வாழ்க்கை முழுவதும் எளிமையாகவே இருந்தவர். இந்திய சரித்திரத்தில் அவருடைய பெயரும் நின்று நிலவிடக் கூடிய பெயராகும்.

1977-ம் ஆண்டிற்குப் பிறகு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிவிட்டார். ஜனதா தளத்தைச் சேர்ந்த தேவகௌடா பிரதமராக இருந்தபோது குல்சாரிலால் நந்தாவுக்குப் ‘பாரத் ரத்னா’ விருது வழங்கப்பட்டது. காங்கிரஸ் அரசு கொடுக்காத கௌரவத்தை ஐக்கிய முன்னணி அரசு கொடுத்தது. தனக்குப் ‘பாரத ரத்னா’ விருது வழங்கப்பட்டது என்பதைக் கூட முழுமையாக உணர்ந்து கொள்ளும் நிலையில் நந்தா இல்லை.

நந்தாவின் பார்வையிலும் கொள்கையிலும் இன்று இந்தியா இல்லை. எனவேதான் சுயநினைவை இழந்து மரணமடைந்தார் என்று எண்ண வேண்டியதிருக்கிறது. குல்சாரி நந்தா மரணமடைந்தார் என்ற செய்தியைப் பத்திரிகையில் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். காரணம் அவர் இவ்வளவு நாட்கள் இருந்தார் என்பதே என்னைப் போலவே பலருக்கும் தெரியாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top