போகி பண்டிகை
பொங்கல் பண்டிகைக்கு முதல் நாளான இன்று போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பதற்கு ஏற்ப பழைய பொருட்களை இன்று காலையிலேயே தீயிலிட்டு கொளுத்தி போகி பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம்.
பழயவற்றவையும், உபயோகமற்றவையும் விட்டெறியும் நாளாக கருதப்படுகிறது. பழந்துயரங்களை அழிப்பதான இப்பண்டிகை “போக்கி” என்றழைக்கப்பட்டு நாளடைவில் மருவி “போகி” என்றானது.
அன்றைய தினம், வீட்டில் தேங்கியிருக்கும் குப்பைகள், தேவையற்ற பொருகளை அப்புறப்படுத்திவிட்டு வீடு சுத்தமாக்கப்ப்படும். வீடு மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களும், தவறான எண்ணங்களும் அவ்வப்போது நீக்கப்படவேண்டும் என்பதே இதில் மறைந்துள்ள தத்துவமாகும்.
பொங்கல் கொண்டாட்டம் என்பது வெறும் மூன்று நாட்கள் மட்டுமல்ல அதற்கான ஆயத்தங்கள் மார்கழி பொறந்த உடனே ஆரம்பிச்சுடும், வீட்டை சுத்தம் பண்ணி, சுண்ணாம்பு அடிப்பது, துணி எடுப்பது, அதை தைக்க குடுத்து, நடையா நடந்து வாங்கிவருவது, சமையல் பொருட்கள் வாங்கி வருவது, விறகை காய வைக்குறதுன்னு பெருசுங்கலாம் பிசியா இருப்பாங்க.
போகி அன்று அதிகாலையில் எழுந்து வீட்டு வாசல்ல குப்பைகள், உபயோகமற்ற பாய், சாக்கு பைலாம் போட்டு எரிச்சு குளிர் காய்வோம்.
மார்கழி மாதம் கடைசி நாள் போகி பண்டிகையுடன் நிறைவடைந்து தை மாதம், பொங்கல் திருநாளோடு பிறக்கிறது. போகி பண்டிகை அன்று சூரிய உதயத்திற்கு முன்னதாக வீட்டு வாசலின் முன்பாக, வீட்டில் இருக்கும் தேவை இல்லாத பழைய துடைப்பம் போன்ற குப்பைகளை தீயிட்டு கொளுத்தி விடுவார்கள்.
இதனால் வீட்டில் இருக்கும் திருஷ்டி கழியும் என்பது ஒரு ஐதீகம். பிறகு வீட்டின் வாசலில் அழகான கோலம் போடவேண்டும். அன்று பித்ருக்கள் நம் இல்லத்திற்கு வருவதாக சாஸ்திரம் சொல்கிறது.
அதனால் அவர்களுக்கு பிடித்த உணவை படைத்து, தேங்காய்- வெற்றிலை, பாக்கு, வாழை பழம் வைத்து தீப ஆராதனை செய்து வணங்க வேண்டும்.
போகி அன்று வாசலில் காப்புக்கட்டுவார்கள். உப்பு சேர்க்காமல் மொச்சை, சர்க்கரைவள்ளிக்கிழங்கு வேகவைத்து சங்கராந்தி கடவுளுக்கு படைப்பார்கள். ஒவ்வொரு வீட்டுக்கும் சங்கராந்தி கடவுள் வரும் என்பது நம்பிக்கை. சங்கராந்தி கடவுள் வரும் விதத்தை பொருத்து நன்மை ஏற்படும் என்பார்கள். தீமை ஏதும் ஏற்படும் என்றால் எல்லா வீடுகளிலும் பரிகாரம் செய்வார்கள்.
உ.ம்: சகோதரிக்கு பச்சை சேலை, வளையல் கொடுப்பது. ஆண் பிள்ளைகள் இருக்கும் வீடுகளில் விளக்கு வைப்பது இப்படி. இதையெல்லாம் பஞ்சாங்கம் பார்த்து ஜோதிடர்கள் கணித்துக்கூறுவார்கள்.
எனக்கு தெரிந்தது இவ்வளவுதான். இன்னும் விஷயமிருந்தால் தோழிகள் கூறவும்.
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். தை மாதம் பிறந்து நம் வாழ்வில் நல்வழி பிறக்க, மார்கழி நிறைவு பெறும் நாளில் வரும் போகி பண்டிகையன்று, இறைவனையும், நம் முன்னோர்களையும் வணங்கி, தை மாதத்தை மகிழ்ச்சியுடன் வரவேற்று, தமிழர் திருநாளை கொண்டாடி மகிழ்வோம்.!