Home » பொது » எம்.வி.வெங்கட்ராம்!!!
எம்.வி.வெங்கட்ராம்!!!

எம்.வி.வெங்கட்ராம்!!!

எம்.வி.வெங்கட்ராம் (மே 18, 1920 – ஜனவரி 14, 2000) தமிழ் சிறுகதை இலக்கிய வளர்ச்சிக்கு பங்களிப்பு நல்கிய தமிழக எழுத்தாளர். 16வது வயதில் முதன் முதலில் இவர் எழுதிய “சிட்டுக்குருவி” என்ற சிறுகதை மணிக்கொடியில் வெளியானது.1993 ஆம் ஆண்டில் இவர் எழுதிய “காதுகள்” என்ற புதினத்திற்குசாகித்ய அகாதமி விருது கிடைத்தது. “விக்ரஹவிநாசன்’ என்ற புனைபெயரில் கவிதைகள் எழுதியுள்ளார்.

எம்.வி. வெங்கட்ராம்

பிறப்பால் ஒரு சௌராஷ்டிரர்.

37, தோப்புத் தெரு.

ஒரு காலத்தில் தமிழ் எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் கும்பகோணத்தில் மிக பரிச்சயமான முகவரி இது. தறிக்கூடங்களின் ஓயாத தறியோசையுயும் நெசவாளர்களின் புழக்கமும் நிறைந்த தோப்புத் தெருவில் கதவிலக்கம் 37-ம் எண் கொண்ட வீடு ஒரு விதிவிலக்கு.

பகலெல்லாம் நெசவிலும் இரவெல்லாம் கனவிலும் கரையும் அந்தத் தெரு மனிதர்கள் வாழ்விலிருந்து முற்றிலும் வேறுபட்ட வாழ்க்கையை வரித்துக்கொண்ட ஒரு மனிதர் இங்கு வாழ்ந்தார்; தமிழ்ச் செவ்வியல் புதினங்களில் ஒன்றான ‘வேள்வித்தீ’யின் கரு உருவான இடமும் ‘தேனீ’ இலக்கிய இதழ் வெளியான இடமும் இதுதான். ஆம். எம்.வி. வெங்கட்ராம் வாழ்ந்து மறைந்த முகவரி இது!

வெங்கட்ராம் நல்ல வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். தொடக்கத்தில் ஜரிகை வியாபாரம் செய்து கொண்டிருந்தார். எழுத்துப்பித்து பிடித்ததும் பொருளாதார ரீதியான வீழ்ச்சி அவரை ஆட்கொண்டது. நாற்பதுகளின் இறுதியில் அவர் நடத்திய ‘தேனீ’ இதழ் அவருக்கு ரூ. 25,000 நஷ்டத்தை ஏற்படுத்தியிருந்தது. அக்காலத்து ஆயிரங்கள் இன்றைய லட்சங்களுக்கு சமம்.

வெங்கட்ராம் தொடர்ந்து எழுத்தைக் கட்டிக்கொண்டு வாழ்க்கையுடன் போராடினாலும், இறுதி வரை அந்த வீழ்ச்சியிலிருந்து அவரால் மீள முடியவில்லை.
இந்த வீழ்ச்சியின் மற்றொரு பாதிப்பு 37, தோப்புத் தெரு வீட்டில் வாழ்ந்த மனிதர்களிடத்தில் ஏற்பட்டது. அவரது பரம்பரையே அறிந்திராத வறுமையும் சிரமமும் வெங்கட்ராம் குடும்பத்துக்கு ஏற்பட்டது.

அவர் ஒரு மாய உலகில் வாழ்ந்துகொண்டிருப்பதாகவே அவருடைய குடும்பத்தினர் கருதினார்கள். அவருடைய எழுத்தில் அந்த வீட்டு மனிதர்கள் எவருக்கும் ஈடுபாடு இருந்ததில்லை. இன்னும் சொல்லப்போனால் அவருடைய எழுத்துகளை அவர்கள் வெறுத்தார்கள். பின்னாளில், மருத்துவர்கள் சொல்வதுபோல் வித்தியாசமான ஒரு வியாதியோ அல்லது வெங்கட்ராம் உணர்ந்ததுபோல் ஒரு தீய சக்தியோ அவரை ஆட்கொண்டது.

ஏறத்தாழ 27 ஆண்டுகள் அதன் கடும் தாக்குதலை எதிர்கொண்டு இந்த வீட்டில்தான் அவர் வாழ்ந்தார். தன் காலத்து எல்லா நண்பர்களும் போய்சேர்ந்த பின், கடைசி நாள்களில் யாருடைய வரவையாவது எதிர்பார்த்திருந்த அவருடைய காத்திருப்பை தோப்புத் தெரு வீடு மட்டுமே அறிந்திருந்தது.

வெங்கட்ராமின் கனவுகள், வளர்ச்சி, இழப்புகள், வீழ்ச்சி, எதிர்பார்ப்புகள், காத்திருப்பு என அனைத்துக்கும் ஒரு மௌனசாட்சி அந்த வீடு. வெங்கட்ராம் மறைவுக்குப் பிறகு 10 ஆண்டுகளாக உறைந்திருந்த அந்த வீடு கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே 19) சற்று ஆசுவாசம் பெற்றது. வெங்கட்ராமுக்கு அஞ்சலி செலுத்த நினைத்த அவருடைய எழுத்துலக நண்பர்கள் அவருடைய பிறந்த நாளான அன்று அங்கு கூடினர். வெங்கட்ராமின் வீடு, அவர் நடமாடிய வாசல், அடிக்கடி செல்லும் கோயில் என அவர் நினைவைச் சொல்லும் இடங்களுக்கெல்லாம் சென்று அவருடைய படைப்புகளை வாசித்தனர். அவரை நினைவுகூர்ந்தனர்.

இந்நிகழ்வில் பங்கேற்ற – வெங்கட்ராமின் இறுதி நாள்களில் அவருக்கு மிக ஆத்மார்த்த நண்பராகத் திகழ்ந்த கலை விமர்சகர் தேனுகா கூறினார்:
“தன் ஆத்மார்த்தத் திருப்திக்காக மட்டுமே எழுதியவர் வெங்கட்ராம். விருதுகள், பரிசுகள், பணம் என அவருக்கு எந்த எதிர்பார்ப்பும் இருந்ததில்லை. அவருடைய கடைசிக் காலத்தில் ‘சாகித்ய அகாதெமி’ விருது அளிக்கப்பட்ட பின்னர், குற்ற உணர்விலிருந்து தன்னை விடுவித்துக்கொள்வதுபோல் தமிழக அரசு ஒரேயொரு பரிசை அவருக்கு அறிவித்தது. அந்தப் பரிசைப் பெறுவதற்கு முதல் நாள் அவருடைய உயிர் பிரிந்தது. பிறப்பால் அவர் ஒரு சௌராஷ்டிரர்.

ஆனால், தமிழுக்காக அவர் அளித்ததும் ஏராளம்; இழந்ததும் ஏராளம். ஏறத்தாழ 150 -க்கும் மேற்பட்ட நூல்களை அவர் எழுதியிருக்கிறார். அவற்றில் பல நூல்கள் இன்று சேகரிப்பில் இல்லை. ‘மணிக்கொடி’ எழுத்தாளர்களில் இன்னமும் நாட்டுடைமையாக்கப்படாத நூல்கள் அவருடையவை மட்டுமே. தமிழக அரசு வெங்கட்ராமின் நூல்களை நாட்டுடைமையாக்க வேண்டும். அது அவருக்கு அளிக்கப்படும் கௌரவம் மட்டுமல்ல; அவர் குடும்பத்தினருக்கு நம் சமூகம் அளிக்கும் இழப்பீடும்கூட” என்றார் தேனுகா.

வெங்கட்ராமின் மூத்த மகன் எம்.வி. சந்திரவதனம் கூறினார்:

“காலம் முழுவதும் எழுத்து அவருக்கும் அவரைச் சார்ந்தவர்களுக்கும் நெருக்கடியான வாழ்வையே தந்தது. நாங்கள் அவரை மதித்தோம். ஆனால், அவருடைய எழுத்துகளை முற்றிலும் வெறுத்தோம். வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு இது தவறாக தெரியலாம். ஆனால், இந்த வெறுப்புக்குப் பின் அத்தனை இழப்பும் ஆழமான வலியும் இருக்கிறது. இப்போது அவருடைய எழுத்துகளைப் படிக்கிறோம்.

அவருடைய படைப்புகளைத் தேடித்தேடிச் சேகரிக்கிறோம். அவர் முழுமையாக நேசித்த – நம்பிய எழுத்துகளை, அவர் வாழ்ந்த காலத்தில் எங்களுடன் பகிர்ந்துகொள்ள முடியாத நிலையில் நாங்கள் இருந்தோம் என்பதை எண்ணி வேதனையடைகிறோம். ஆனால், இவை எல்லாவற்றுக்குமே காலம்தான் காரணம்.

ஒன்று நிச்சயம் – யார் புறக்கணித்தாலும் புதைத்துவைத்தாலும் ஓர் உண்மையான எழுத்தாளனை அவனுடைய எழுத்துகள் மீட்டெடுத்துக்கொண்டே இருக்கும்” என்றார் சந்திரவதனம்.
அவர் சொன்னதை ஆமோதிப்பதுபோல் காற்றில் ஒருக்களித்துக்கொண்டது தோப்புத் தெரு வீட்டின் கதவு. கதவின் எண் இப்போது 37 அல்ல 36!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top