மாப்பிள்ளைகளுக்கு மரண தண்டனை
அக்பர் தனது மகளை ஓர் அரசக்குமாரனுக்கு திருமணம் செய்து வைத்தார். அன்புடன் குடும்பம் நடத்தி வந்த அவர்களின் வாழ்வில் ஏதோ ஒரு காரணத்திற்காக சண்டையும் சச்சரவும் ஏற்பட்டுவிட்டது. இதனால் மன அமைதி இழந்த அக்பரின் மகள் தன் தந்தையிடம் வந்து கண்ணீர் விட்டு கதறி அழுதாள். பாசத்துடன் வளர்த்த மகளின் கண்ணீரைக் கண்டதும் அக்பருக்கு தன் மாப்பிள்ளையின் மீது கடுங்கோபம் ஏற்பட்டது. அதனால் படைவீரர்களை அனுப்பி மருமகனைக் கைது செய்து டில்லி சிறையில் அடைத்தார். அத்துடன் அவரது கோபம் தணியாமல் எல்லா வீட்டிலுள்ள மாப்பிள்ளைகளையும் கைது செய்துவர ஆணையிட்டார். பீர்பாலை உடனே வரவழைத்தார் அக்பர்.
”சக்ரவர்த்திப் பெருமானே, தாங்கள் உடனே என்னை அழைத்ததன் காரணம் என்ன?” என்று வினவினார் பீர்பால். ”பீர்பால் அவர்களே, நாளைக் காலை சூரிய உதயத்தில் எனது மாப்பிள்ளையை தூக்கிலேற்றி மரண தண்டனை விதிக்க வேண்டும். அதே சமயம் நமது நகரத்திலுள்ள ஒவ்வொரு வீட்டின் மாப்பிள்ளைகளையும் தூக்கிலிட வேண்டும். இனி நமது நாட்டில் மாப்பிள்ளைகளே இல்லை என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும்”என்றார் அக்பர்.
மன்னரின் அதிசய ஆணையைக் கேட்டு பீர்பால் அதிர்ச்சியடைந்தார். உத்தரவைக் கேட்ட மக்களும் பீதியடைந்தனர். பீதியடைந்த மக்களைப் பார்த்து,”இதற்காகப் பயப்பட வேண்டாம். நான் பார்த்துக் கொள்கிறேன். ”அரசரும் அவ்வளவு கொடுமனம் படைத்தவரல்ல” என்று சமாதானம் கூறி அனுப்பி வைத்தார் பீர்பால்.
சூரிய உதயத்திற்கு முன்னர் அரண்மனைக்குச் சென்ற பீர்பால்,”சக்ரவர்த்திப் பெருமானே! தாங்கள் கூறியபடியே தூக்கு மரங்கள் தயாராகிவிட்டது. தாங்கள் வந்து பார்வையிட்டப் பின்னர் உடனடியாக எல்லா மாப்பிள்ளைகளுக்கும் தூக்குத் தண்டனையை நிறைவேற்றி விடலாம்” என்றார் பீர்பால்.பீர்பாலின் சொற்படி தூக்கு மரங்களைப் பார்வையிட்டார். அச்சமயம் அந்தத் தூக்கு மரங்களுக்கு இடையில் ஒரு தூக்கு மரம் தங்கத்தாலும் மற்றொரு தூக்கு மரம் வெள்ளியினாலும் காணப்பட்டது. ”இந்த இரு தூக்கு மரங்கள் மட்டும் ஏன் வித்தியாசமாக உள்ளது. காரணம் என்ன?” என்று வினவினார் அக்பர்.
சிறிதும் பதட்டப்படாமல் அமைதியாக,”மன்னர் பெருமானே! அங்கே தங்கத்தினால் உருவாக்கப்பட்ட தூக்குமரம் தங்களுக்காகவும், வெள்ளியினால் உருவாக்கப்பட்ட தூக்குமரம் எனக்காகவும் என்றார் பீர்பால். பீர்பாலின் எதிர்பாராத பதிலலைக் கேட்டதும் அக்பருக்கு வியப்பாக இருந்தது.
”நமக்கு எதற்காகத் தூக்கு மரங்கள்?”என்றார் அக்பர்.
”மன்னர் பெருமானே! தாங்களும் ஒரு வீட்டின் மாப்பிள்ளைதானே! அதே போன்று நானும் ஒரு வீட்டின் மாப்பிள்ளைதானே! ஆகவே சட்டப்படி தண்டனை நம்முடைய இருவருக்கும் சேர்த்துதானே!” என்றார் பீர்பால். கோபத்துடன் இருந்த அக்பர் தன்னை மறந்து வாய்விட்டுச் சிரித்தார்.
”மேன்மைமிகு சக்ரவர்த்தி பெருமானே! தங்களுடைய மாப்பிள்ளை தவறு செய்தமைக்காக நாட்டிலுள்ள மாப்பிள்ளைகள் எல்லோரையும் தண்டிப்பது என்ன நியாயம்? தங்களுடைய மாப்பிள்ளை செய்த தவறை திருத்தி நல்வழி படுத்த வேண்டுமேயன்றி மரண தண்டனை அளிக்கலாமா? தங்களைத் திருத்துவதற்கு எந்த அருகதையும் எனக்கு இல்லை. ஆனால் இந்தச் செய்கையினால் தங்களுக்கு இழுக்கு வராமல் தடுப்பது எனது கடமையல்லவா? தயவு செய்து மாப்பிள்ளைகளின் மரண தண்டனையை உடனடியாக ரத்து செய்ய வேண்டுகிறேன்” என்றார் பீர்பால். தவறு செய்து அவப்பெயர் எடுப்பதிலிருந்து தன்னைத் தடுத்த பீர்பாலை அக்பர் பெரிதும் பாராட்டினார்.