Home » விவேகானந்தர் » விவேகானந்தரும் அவரது அன்னையும்!!!
விவேகானந்தரும் அவரது அன்னையும்!!!

விவேகானந்தரும் அவரது அன்னையும்!!!

என்தாயைப் போல பார்ததில்லை!

தாய்மையைப் போற்றுதல் என்னும் பண்பு சுவாமி விவேகானந்தரிடம் முழுமையாக வெளிப்பட்டது கீழ்க்காணும் வாசகங்கள் அதைப் பறைசாற்றும் விதத்தில் அமைந்துள்ளன. எங்கள் குடும்பங்களில் அன்னையே கடவுள் இவ்வுலகில் தன்னலமற்ற. உண்மையான அன்பு தாயிடம் மட்டுமே இருக்கிறது. அவள் எப்போதும் தான் துன்புற்றபடி பிறர் மீது அன்பைப் பொழிந்து கொண்டே இருப்பாள் என்று சுவாமிஜி கூறியுள்ளார்.

சுவாமிஜி என்ற அற்புத மனிதரை இவ்வுலகிற்கு அளித்த அவரது தாயான புவனேஸ்வரி தேவியைப் பற்றி பல சந்தர்ப்பங்களில் சுவாமிஜி புகழ்ந்து பேசியிருக்கிறார். வாழ்க்கையில் நான் அடைந்த அனைத்திற்கும் என் தாய்க்கு நான் கடமைப்பட்டுள்ளேன் நான் அவளுக்குக் கடன்பட்டிருக்கிறேன் அதை என்னால் திரும்பிக் கொடுக்கவே முடியாது.

புவனேஸ்வரி வடக்கு கொல்கத்தாவில் பிரபலமாயிந்த பெற்றோர்களுக்கு 1841 ஆம் ஆண்டு பிறந்த ஒரே குழந்தை சற்றே குள்ளமாக அழகு மிக்கவராக விளங்கினார் இவர். பின்னாளில் சுவாமிஜியின் மேல்நாட்டு சிஷ்யையான கிறிஸ்டைன் சுவாமிஜியின் தாய் ஒரு அரசியைப் போன்று கம்பீரமாக நடந்து செல்வார். சுவாமிஜியின் கம்பீரமான தோற்றம்.அவருடைய அன்னையிடமிருந்தே அவருக்கு வந்தது என்று அடிக்கடிக் கூறுவது வழக்கம்.

16 வயது விஸ்வநாத தத்தரை புவனேஸ்வரி மணந்த போது அவருடைய வயது 10 மட்டுமே பெரிய கூட்டுக் குடும்பத்தில்,சிறிய மாமனாரும் அவருடைய மனைவியும், புவனேஸ்வரிக்கு மாற்றுப் புடவை கூடத் தராது கொடுமைப்படுத்திய போதிலும் எல்லாவற்றையும் பொறுமையாகச் சகித்துக் கொண்டார். அதே நேரத்தில் மனவுறுதியும் உடல் வலிமையும் எதிர்ப்பேச்சுக்கு இடமின்றி பிறரைப் பணிய வைக்கும் ஆளுமைப் பண்பும் பெற்றவராகத் திகழ்ந்தார் புவனேஸ்வரி தேவி.

தாயின் இக்குண நலன்கள் அனைத்தும் தனயனான சுவாமிஜியிடமும் நிரம்பியிருந்தன. ஒயாத வீட்டு வேலைகளுக்கு இடையிலும் இசை தையல் வேலை ராமாயணம் மகாபாரதம் வாசித்தல் போன்றவைகளுக்கு தினமும் புவனேஸ்வரி நேரம் ஒதுக்கியிருந்தார்.சிறிது ஆங்கிலமும் கற்றிருந்தார் ஆழ்ந்த அறிவும் மதிநுட்பமும் கொண்ட புவனேஸ்வரி மிகவும் பக்தி பூண்டவரும் கூட முதலில் பிறந்த ஆண் குழந்தை இறந்து விட அடுத்தது நான்கும் பெண் குழந்தைகள்.

எனவே ஆண்குழந்தை வேண்டும்மென்று சிவபெருமானை நினைந்து ஒரு வருடம் சோமவார விரதத்தைக் கடைபிடித்தார். எனக்குத் தெரிந்து எந்தப் பெண்ணும் என் தாயைப் போல் நீண்ட நாள் விரதமிருந்து பார்த்ததில்லை என் தாய்மிகுந்த சுயக்கட்டுப்பாடு உடையவர். ஒருமுறை 14 நாட்கள் தொடர்ந்து எதுவும் உண்ணாமல் அவர் விரதம் இருந்துள்ளார் என்று புவனேஸ்வரியைப் பற்றி பெருமிதமாக சுவாமிஜி சொல்வதுண்டு.

புவனேஸ்வரியின் ஒரு வருட விரதத்தின் முடிவில் ஒரு நாள் இரவில் சிவபெருமான் அவரது கனவில் தோன்றி ஓர் ஆண் குழந்தையாக மாறுவதைக் கண்டார் சுவாமிஜியின் தாய். சிவனது அருளால் சுவாமிஜி குழந்தை நரேனாக புவனேஸ்வரிக்குக் கிடைத்தார். புவனேஸ்வரி அற்புதமான நினைவாற்றல் கொண்டவர்.

எனவே தன் தாயின் மடியில் அமர்ந்து இதிகாசம் மற்றும் புராணங்களிலுள்ள கதைகளைக் கேட்கும் வாய்ப்பு சிறுவன் நரேந்திரனுக்குக் கிட்டியது. இத்துடன் வாழ்வில் எதிர்கொள்ள வேண்டிய இடைஞ்சல்கள் துன்பங்கள் ஆகியவற்றுக்கு நடுவிலும் எக்காரணத்தைக் கொண்டும் நல்லொழுக்க விதிகளைக் கைவிடக்கூடாது என்பதை தம் பிள்ளைகளுக்கு ஆணித்தரமாகக் கற்றுத் தந்தார் புவனேஸ்வரி.

குழந்தைகளும் தம் தாயின் மீது மிகுந்த மரியாதை செலுத்தினர் நாங்கள் சிறுவர்களாக இருந்த போது ஒவ்வொரு நாளும் ஒரு தம்ளரில் தண்ணீரை எடுத்து வந்து தாயின் முன் வைத்து அவர் அந்த நீரில் தன் கால்கட்டை விரலை அமிழ்த்திய பின்னர் நாங்கள் அந்த நீரைப் பருகுவோம் என்று தனது மேல்நாட்டு உரைகளில் குறிப்பிடுகிறார். சுவாமிஜி.

புவனேஸ்வரி தேவியின் பெருந்தன்மையைப் பிரதிபலிக்கும் இரு சம்பவங்களை அடுத்துக் காணலாம்.

1.சுவாமிஜியின் தந்தை, நீதி மன்றத்தால் விற்கப்படும் பெரிய சொத்துக்களை விலைக்கு வாங்கி அதைத் திரும்பவும் விற்பது வழக்கம். அத்தகைய சொத்து ஒன்றைஅவர் புவனேஸ்வரியின் பெயரில் வாங்கி வாடகைக்கு விட்டிருந்தார். அவற்றில் குடியிருந்த சில முஸ்லீம்களால் தொடர்ந்து வாடகை அளிக்க முடியவில்லை.

தங்கள் இயலாமையை அவர்கள் சுவாமிஜியின் தந்தை தாயிடம் முறையிட்டனர். சொத்தின் உரிமையாளரான புவனேஸ்வரியிடமே முடிவெடுக்கும் பொறுப்பை விட்டுவிட்டார் விஸ்வநாதர். எந்தப் பணமும் தாராமல் முஸ்லீம்கள் அந்த இடத்திலேயே வசிக்கச் சம்மதித்தார் புவனேஸ்வரி நாளடைவில் அந்த முஸ்லீம்களுக்கே அந்தச் சொத்து உடைமையாகி விட்டது.

2.புவனேஸ்வரியின் மகள் ஜோகேந்திரபாலா 1891 இல் தனது 25 ஆவது வயதில் சிம்லா மலையில் தற்கொலை செய்து கொண்டார். திருமணமான அந்தப் பெண்ணின் மரணம் தாய்க்கு எப்படியொரு துன்பத்தைக் கொடுத்திருக்கும் என்பதை நாம் சொல்லவே வேண்டியதில்லை.

அவரின் மருமகன் மறுமணம் செய்து கொண்டு புது மனைவியை புவனேஸ்வரியிடம் அழைத்து வந்தார். தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொண்ட சுவாமிஜியின் தாய் இருவரையும் வரவேற்றதுடன் மணப்பெண்ணையும் தன் மகள் போலவே நடத்தினார்.

நரேந்திரர் ஸ்ரீராம கிருஷ்ணரைச் சந்தித்து அவரால் ஆட்கொள்ளப்பட்டு துறவறம் பூண்ட போது. அந்தக் தாயுள்ளம் மௌனமாக தன் மகனை உலகிற்கு ஈந்து விட்டது. சுவாமிஜியின் சகோதரரான பூபேந்திரநாதர் இந்திய விடுதலையை முன்னிட்டு புரட்சி இயக்கத்தில் சேர்ந்து சிறைக்குச் சென்று. பல துயரங்களை அனுபவித்தார்.

இத்தகைய வீர மகனைப் பெற்றதற்காக பலர் புவனேஸ்வரியைப் பாராட்டினர் பூபேனின் பணி இப்போது தான் தொடங்குகிறது நான் அவனை நாட்டிற்காக அர்ப்பணித்து விட்டேன் என்று அஞ்சா நெஞ்சத்துடன் மொழிந்தார் புவனேஸ்வரி.

1900 ஆம் ஆண்டு கொல்கத்தாவிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கடும் மழை பெய்தது ஸ்ரீராமகிருஷ்ணரின் புனித அஸ்தி வைக்கப்பட்டிருந்த இடமான காங்குர் காச்சி யோகோத்யானுக்கு புவனேஸ்வரி உணவுப்பொருட்களை அனுப்பி வைத்தார். சுவாமிஜியின் தம்பியான பூபேந்திரர் இடுப்பளவு நீரில் நடந்து சென்று அப்பொருட்களை அளித்து விட்டு திரும்பினார். பொறுமை திறமை உறுதி பெருந்தன்மை இன்னும் என்னென்ன நற்குணங்குள் உண்டோ அவையனைத்தும் புவனேஸ்வரி தேவிக்குச் சொந்தமானவை போலும்.

தன் எழுச்சி மிகும் கருத்துக்களின் தாக்கத்தினால் உலகத்தின் ஆணிவேரையே அசைத்த வீரப்புதல்வன் புதியதோர் தேசம் எழுவதற்கு அடிக்கற்கள் அமைத்த தலைசிறந்த மனிதர் சுவாமி விவேகானந்தர். நம் போன்றோருக்கு அவரைக் கொடையாய் அளித்த புவனேஸ்வரி தேவி எனும் புனிதத் தாயின் தியாக உள்ளம் மிகமிக விசாலமானது விசேஷமானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top