மனிதர்களில் நூற்றுக்குத் தொண்ணூற்றுஒன்பது பேருக்கு உண்மையான குறிக்கோள் திருமணம்தான். சகித்துக்கொள்வதும் பொறுத்துக்கொள்வதும்தான் வாழ்க்கை. இதற்கு மாறாக நாம் வாழ முடியாது; விட்டுக்கொடுத்தே ஒவ்வொருவரும் வாழ முடியும் இது மாறாத பாடம்.
இந்தப் பாடத்திற்கு ஏற்ப வாழத் தயாராகி விட்டவன் மகிழ்ச்சியாக வாழ்வான். அன்பார்ந்த ஹேரியட், என்னை நம்பு நமது மேலான லட்சியத்திற்கு ஏற்ப விஷயங்கள் இருக்காது என்பதை நாம் எதிர்பார்த்தே இருக்க வேண்டும். இதை அறிந்துகொண்டு, ஒவ்வொன்றையும் முடிந்தவரை நன்றாகச் செய்ய வேண்டும்.
உன்னை நான் அறிந்த வரையில், உன்னிடம் பெரிய அளவில் பொறுமையையும் சகிப்புத்தன்மையையும் தரக்கூடிய அமைதியின் ஆற்றல் இருக்கிறது; எனவே உன்னுடைய திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும். உனக்கும், உன் கணவராக ஆகப் போகிறவருக்கும் எல்லா ஆசிகளும் நிறையட்டும்.
உன்னைப் போன்ற நல்ல, அறிவுமிக்க, அன்பு நிறைந்த, அழகான ஒருவரை மனைவியாகப் பெறுவது பேரதிஷ்டம் என்பது அவர் நினைவில் எப்போதும் இருக்க இறைவன் அருளட்டும். உன் கணவனின் பிரியாத அன்பை நீ எப்போதும் அனுபவித்து வருவாயாக.
இந்த வாழ்க்கையில் விரும்பத் தக்கவற்றை அடைவதற்கு கணவனுக்கு உதவுவாயாக. நீ வாழ்க்கை முழுவதும் தூய்மையாக உமாதேவியைப் போல் வாழ்வாயாக! உன் கணவர், உமாதேவியிடம் தனது உயிரை வைத்திருந்த சிவனைப் போன்று இருப்பாராக.