முற்றத்தின் கிழக்கு ஓரத்தில் நிற்கிறது. சுவாமிஜியின் மாமரம். மடத்து நிலம் வாங்கியபோதே நிற்கின்ற மரங்களுள் ஒன்றான இந்த மரம் சுவாமிஜியின் வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்தது.
காலைவேளைகளில் இதன்கீழ் நாடாக் கட்டிலில் அமர்ந்து கொண்டு படிக்கவோ, எழுதவோ, தம்மைக் காண வருபவர்களுடன் பேசவோ செய்வார் அவர். அவர் விரும்பி தியானம் செய்கின்ற இடங்களுள் ஒன்று இது, சுவாமிஜியின் ஆன்மீக ஆற்றலை வெளிப்படுத்துகின்ற சில நிகழ்ச்சிகள் இந்த மாமரத்தின் கீழ் நடைபெற்றுள்ளன. ஓரிரண்டைக் காண்போம்.
ஒருநாள் மாலை வேளை, சுவாமிஜி கங்கைக் கரையில் நின்றுகொண்டு, ஆயாஹி வரதே தேவி (ஆயாஹி வரதே தேவி த்ர்யக்ஷரே ப்ரஹ்மவாதினி காயத்ரி சந்தஸாம் மாதர்ப்ரஹ்மயோனி நமோஸ்துதே(காயத்ரி தேவி, வரங்களை அளிப்பவளே, ஓம் என்னும் பிரணவ மந்திரத்தால் பரம்பொருளைக் காட்டுபவளே, வேதங்களின் தாயே, சக்தியின் வடிவே, உன்னை வணங்குகிறேன்.
கருணைகூர்ந்து இங்கே எழுந்தருள்வாய்) வேத கால முனிவர் சிந்து நதிக் கரையில் நின்றபடி இந்த மந்திரத்தை உணர்ச்சிபெருக்குடன் ஓதுவதை ஒரு தெய்வீகக் காட்சியில் சுவாமிஜி கண்டிருந்தார்.) காயத்ரி ஆவாஹன மந்திரத்தைக் கூறியபடியே மடத்தை நோக்கி நடந்து வந்தார். அவரது இனிய கம்பீரக் குரல் கேட்பவரை மெய்மறக்கச் செய்தது.
மந்திரத்தை ஓதியபடியே வந்த சுவாமிஜி இந்த மாமரத்தின்கீழ் வந்ததும் பரவச நிலையில் அப்படியே நின்றார். அவரது கண்கள் செம்பருத்திப்பூபோல் சிவந்து காணப்பட்டன. மது அருந்தியவர் போல் தள்ளாடினார் அவர். மாமரத்தின்கீழ் நடந்தபடியே இடையிடையே ஹும் ஹும் என்று ஹுங்கார த்வனி எழுப்பினார். அங்கே நின்றிருந்த அனைவரும் அவரைப் பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.
சிறிதுநேரத்தில் அமைதியானார் சுவாமிஜி. அசாதாரணமானதொரு தெய்வீகம் அந்த வேளையில் அவரிடம் பொலிந்தது. மனிதர்கள் மட்டுமல்ல. மிருகங்களையும் பறவைகளையும்கூட தம்மிடம் கவர்ந்திழுக்கவல்ல ஈர்ப்பாற்றல் அவரிடமிருந்து வெளிப்பட்டதுபோல் தோன்றியது.
மற்றொரு நாள்: சுவாமிஜி கல்பதருவாக பலருக்கும் உயர்ந்த ஆன்மீக அனுபவத்தை அள்ளி வழங்கிய நிகழ்ச்சி அது. பலவீனங்களை வெல்ல வேண்டுமானால், மகாவீரரான ஆஞ்சநேயரைத் தியானிக்க வேண்டும். அவரை லட்சியபுருஷராகக் கொள்ள வேண்டும் என்று சீடர் ஒருவரிடம் கூறியபடியே வந்த சுவாமிஜி, இந்த மாமரத்தின்கீழ் வந்து நாடகக் கட்டிலில் மேற்கு நோக்கி அமர்ந்தார். ஆஞ்சநேய உணர்வில் அவர் திளைப்பது போலிருந்தது.
அந்த நிலையிலேயே, அங்கே கூடியிருந்த துறவிகளையும் பிரம்மச்சாரிகளையும் பார்த்துத் திடீரென்று இதோ இதோ பிரத்தியட்சமான கடவுள்! அவரை ஒதுக்கி விட்டு, மற்ற விஷயங்களில் மனத்தைச் செலுத்துவார்களா? சீ, சீ! இதோ, அவர் உள்ளங்கை நெல்லிக்கனிபோல் தெளிவாகத் தெரிகிறார். நீங்கள் பார்க்க வில்லையா? இதோ…. இதோ என்று கூறினார். அப்போது அங்கிருந்த அனைவரும் திடீரென்று தியானத்தின் ஆழத்திற்குள் இழுக்கப்படுவதாக உணர்ந்தார்கள் ஆனந்தவுணர்வில் திளைத்தவர்களாக, ஓவியத்தில் வரைந்த உருவங்கள்போல் அசையாமல் நின்றார்கள்.
கங்கையில் குளித்துவிட்டு, பூஜை செய்வதற்காகக் கையில் கமண்டல நீருடன் கோயிலுக்குச் சென்றுகொண்டிருந்த பிரேமானந்தரும் அவர்களுள் ஒருவர். சுமார் 15 நிமிடங்கள் இவ்வாறு கழிந்தன. அதன்பிறகு சுவாமிஜி பிரேமானந்தரைப் பார்த்து, இனி பூஜைக்குப் போ என்றார். அவருக்குப் புறவுணர்வு திரும்பியது. அவர் மெல்லமெல்ல கோயிலை நோக்கிச் சென்றார். மற்றவர்களும் படிப்படியாகச் சாதாரண நிலைக்குத் திரும்பினார்கள்.