Home » பொது » ராபர்ட் பேடன் பவல் பிரபு!!!
ராபர்ட் பேடன் பவல் பிரபு!!!

ராபர்ட் பேடன் பவல் பிரபு!!!

ராபர்ட் பேடன் பவல் பிரபு  (பெப்ரவரி 22 1857, ஜனவரி 8 1941) ஸ்கவுட் எனப்படும் சாரணர் இயக்கத்தை உருவாக்கியவர் ஆவார். இவர் இங்கிலாந்தில் பிறந்த ஆங்கிலத் தளபதி. 1906 ஆம் ஆண்டு சாரணர் இயக்கத்தை தோறுவித்தார். 1910 இல் சிறுமிகள் சாரணர் இயக்கத்தையும் தொடங்கினார்.

சிறுவர்களுக்கான சாரணீயம் ( Scouting for boys) என்ற நூலை 1908 ஆம் ஆண்டு பதிப்பித்தார். ஆபிரிக்காவிற்குத் திரும்பிய பேடல் பவுல் தனது புத்தகமான எய்ட்ஸ் டு ஸ்கவுட்டிங் (Aids to Scouting) வெற்றிகரமாக விற்பனை ஆவதனையும் அவை பல இளைய மற்றும் ஆசிரியர்களைப் பயிற்றுவிப்பதற்குப் பயன்படுவதையும் கண்டார். 1907 ஆம் ஆண்டு சாரணீயம் ஓர் சோதனை முயற்சியாக 22 சிறுவர்களுடன் தொடங்கியது. முதலில் தேசிய ரீதியில் துவங்கப்பட்ட இம்முயற்சி பின்னர் உலக அளவில் புகழ்பெற்றது. 1920 இல் முதலாவது உலக சாரணீய ஜம்போரியானது ஒலிம்பியாவில் நடைபெற்றது.

பேடன் பவல் சிறு வயது தொட்டு அனுபவித்த பசுமையான, சந்தோசமான வாழ்க்கை அனுபவங்களை மாதிரியாக வைத்து அமைக்கப்பட்ட இயக்கமே சாரணர் இயக்கமாகும். கடவுள், சமயத்திற்கான கடமை, தேசப்பற்று, உலக சகோதரத்துவம், பிறருக்கு உதவுதல், போன்ற அடிப்படைத் தத்துவங்களை கொண்டதாக சாரணர் இயக்கம் கட்டியெழுப்பட்டுள்ளது.

சாரணத் தந்தை பேடன் பவல் 1857 பெப்ரவரி 22 இல் லண்டன் நகரில் பிறந்தார். இவரது முழுப்பெயர் ரொபேட் ஸ்டீவின்சன் ஸ்மித் பேடன் பவல். 1876 இல் தனது 19 வயதில் இராணுவத்தில் சப் லெப்டினனாக இணைந்து சேவையாற்றினார். 1907 இல் 20 சிறுவர்களுடன் பிரவுன்ஸீத் தீவில் இளைஞர் சாரணியத்தை ஆரம்பித்தார். 1908 இல் இளைஞர் சாரணியம் என்ற நூலை வெளியிட்டார். 1920 இல் உலகின் பிரதம சாரணனாக பேடன் பவல் அறிமுகம் செய்யப்பட்டார்.

சாரணீயத்தைப் பற்றி அறியாதவர்கள் இல்லையென்று சொல்லுமளவிற்கு உலகமெங்கும் சாரணீயம் வியாபித்துள்ளது. 1907 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சாரணர் இயக்கம் இவ்வருடம் நூற்றாண்டு விழாவை காணுகின்ற அதே வேளையில், சாரணீய இயக்கத்தின் ஸ்தாபகரும், தந்தையுமான உலக பிரதம சாரணர் கில்வெல் பேடன் பவல் பிரபு அவர்களின் நூற்றைப்பதாவது ஜனன தினம் இவ்வருடமே என்பதால் இவ்வாண்டு உலகமெங்கும் பரவியுள்ள சாரணர்களுக்கு பயன்மிக்க, கொண்டாட்டங்கள் நிறைந்த ஆண்டாக அமையப் போகின்றது என்பது மகிழ்ச்சிக்குரியது.

பேடன் பவல் தமது சிறுவயதில் அவரது பசுமையான சந்தோசமான வாழ்க்கை அனுபவங்களில் இருந்து அவரால் ஆரம்பிக்கப்பட்ட இயக்கமே சாரணர் இயக்கம். ஆரம்ப காலத்தில் சாரணனின் பணி போர்க்காலத்தில் எதிரிகளின் படை, நிற்குமிடம் என்பனவற்றை துணிவுடன் அறிந்து  போர்க்களத்திற்கு சென்று தாம் அறிந்து வந்ததை  தம் நாட்டுப் படைகளுக்கு அறிவிப்பதாகவிருந்தது. இது காலப்போக்கில் படிப்படியாக தேசத்திற்கும், சமயத்திற்கும் பணி புரியும் இயக்கமாக மாறி வந்துள்ளது.

சாரணியத்தில் இணைந்து கொள்ளும் சாரணர்களிடையே அபிவிருத்தி என நோக்கும் போது, ஆரோக்கியத்தைப் பேணும் நற் பழக்கவழக்கங்களை ஏற்படுத்துவதுடன், அதன் குறிக்கோளாக கைத்திறன் விருத்தியுடன், பரந்துபட்ட அறிவுடன், தன்னம்பிக்கையையும் வளர்க்கின்றது.  மேலும் செயற்றிட்டங்களை நெறிப்படுத்தல், வெளிக்களங்களில் துணிவு சேர் செயற்பாடுகள் நாட்டின் பண்பாட்டையும், அபிவிருத்தி என்பனவற்றில் அக்கறை, ஒழுக்க நெறிகளில் முன்னுதாரணம், சமூகத்திற்குப் பயனுள்ள சேவை போன்ற நற்பண்புகளை வளர்த்தெடுக்கக் கூடிய வகையில் சாரணீயம் காலத்திற்கு ஏற்றவாறு நல்ல பல திட்டங்களை நடைமுறைப்படுத்தி வந்துள்ளது.

உலகப் பிரதம சாரணர் கில்வெல் பேடன் பவல் பிரபு அவர்களின் நூற்றைப்பதாவது பிறந்த தினத்தில்  சாரணீயம் ஆரம்பிக்கப்பட்டு நூற்றாண்டு விழா காணும் இவ்வுலக இயக்கமான  சாரணீயத்தைப் பற்றி நாம் முற்றும் முழுதாக அறிந்து கொள்ள வேண்டுமாயின் சாரணீய இயக்கத்தை ஆரம்பித்தவரது வாழ்க்கைப் பற்றி நாம் சிறிது தெரிந்திருப்பது அவசியமாகும்.

பேடன் பவல் பிரபு இங்கிலாந்தில் இலண்டன் நகரிலே 1857 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22 ஆந் திகதி பிறந்தார். ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்த சங்.எச்.ஜி. பேடன் பவல் அவர்களுக்கும், பிரித்தானிய கடற்படைத்தளபதி டபிள்யூ.ரீ.ஸ்மித் என்பவரின் மகளாகிய ஹென்றியேற்றா கிறேஸ் ஸ்மித் என்பவருக்கும் மகனாகப் பிறந்தார். இவருக்கு தாய் தந்தையர் இட்ட பெயர் இராபாட் ஸ்மித் பேடன் பவல் என்பதாகும்.

ஏழு சகோதரர்களை உள்ளடக்கிய குடும்பத்தில் கடைசிப் பிள்ளையாகப் பிறந்திருந்த பவலுக்கு மூன்று வயதாக இருக்கும் போதே தந்தையார் இறந்துவிட்டார். அப்போதே மூத்த புதல்வனுக்கு 14 வயதாகவும் இருந்தனால் தாயாருடைய பாதுகாப்பிலேயே வளர்ந்தார்கள். பெரிய குடும்பம், கஷ்டமாகக் காலத்தைக் கழிக்க வேண்டியிருந்த போதிலும் பிள்ளைகள் மீது தாயாரும்இ தாயார் மீது பிள்ளைகளும் கொண்டிருந்த அன்பினால் அக்கஷ்டங்களை மறந்து வாழ்ந்தார்கள்.

ஆரம்பகால வாழ்கை

இவரது சிறுவயது வாழ்க்கை மிகவும் சந்தோசமான காலமாகும். இங்கிலாந்தின் பல்வேறு பகுதிகளுக்கு தனது சகோதர்களுடன் பிரயாணங்களை செய்து, வெட்ட வெளிகளில் பாசறை அமைத்து இன்பமாக கழித்ததுடன், வள்ளங்களில் சுற்றி திரிதல், மலையேறுதல்,  முயல் வேட்டை என்பனவற்றிலும் அதித ஈடுபாடு கொண்டிருந்தார்.

1870 ஆம் ஆண்டில் இலண்டனிலிருந்த சாட்டர்கவுஸ் கல்லூரியில் உபகாரச் சம்பளம் பெற்று படிப்பதற்காக சென்ற இவர் கல்வியில் விற்பன்னராக இல்லாத போதிலும் அக்கல்லூரியின் உதைபந்தாட்டக் குழுவின் முக்கிய அங்கத்தவராக இருந்தார். அத்துடன் சிறந்த நடிப்புத்திறன் மிக்கவராகவும் சித்திரம் வரைதல், சங்கீதத்தில் பற்று இப்படியாக அனைத்துத் துறையிலும் சிறந்து விளங்கினார். இதனால் பாடசாலையிலுள்ள அனைவரது உள்ளங்களையும் தன்பால் ஈர்த்துக் கொண்டார்.

இந்தியாவில் பேடன் பவல்

19 வது வயதிலே சாட்டர்கவுஸ் கல்லூரியில் பட்டம் பெற்று, இராணுவத்தில் சேர்ந்து குதிரைப் படையின் உப தளபதியாக இந்தியா சென்று “கிரிமியன்” என்ற யுத்தத்தில் வெற்றியை ஈட்டிக் கொடுத்தார். திறமையான இராணுவச் சேவையினால் தனது 26 வது வயதிலே இராணுவத் தளபதியாகும் வாய்ப்பைப் பெற்றுக் கொண்டார்.

ஆபிரிக்காவில் பேடன் பவல்

1887 ம் ஆண்டில் ஆபிரிக்காவில் சூலு வம்சத்தினருக்கு எதிராகவும் கொடிய அசாந்தி இனத்திற்கெதிராகவும் பெரும் யுத்தங்களை நடாத்தினார். இவரது மிகத்திறமையான யுத்த நுட்பங்களை பாராட்டிய சுதேசிகள் இவரை “இம்பிசா” என்று அழைத்தனர். இதன் பொருள் “ஒரு போதும் துயில்கொள்ளாத ஒநாய்” என்பதாகும்.

தனது திறமையினால் படிப்படியாக பதவி உயர்வுகளைப் பெற்று 1899 ஆம் ஆண்டிலே உபதளகர்;த்தா (கேணல்) பதவிக்கு உயர்த்தப்பட்டார். அவ்வேளையில் தென்னாபிரிக்காவிலுள்ள மேப்கிங் நகரம் எதிரிகளால் முற்றுகையிடப்பட்ட போது தனது திறமையால் சிறுவர்களைப் பழக்கி ஒற்று அறிவதன் மூலம் தனது சிறிய படை உதவியுடன் தாய் நாட்டிலிருந்து உதவி கிடைக்கும் வரை 217 நாட்கள் நகரைப் பாதுகாத்து வெற்றி வீரராகத் திகழ்ந்தார். 1901 இல் மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்று பெருவீரனாக தாய் நாடு திரும்பினார்.

சாரணீயம் பிறந்தது

இவர் தனது அனுபவங்களைக் கொண்டு இராணுவ வீரர்களுக்காக “சாரணீயத்துக்காய துணை” என்னும் நூலை எழுதினார். இந்நூல் மக்களிடையே பெரும் செல்வாக்குப் பெற்றிருந்ததுடன் சிறுவர்களிடமும் ஆர்வத்தினை ஏற்படுத்த இது பாடசாலைகளில் சிறுவர்களுக்கான பாடப்புத்தகமாகவும் பயன்படுத்தப்;பட்டது.

வயது வந்தவர்களுக்காக எழுதப்பட்ட நூல் சிறுவர்களிடம் ஏற்படுத்திய ஆர்வத்ததைப் பற்றி சிந்திக்கலானார். சிறுவர்களை ஆரம்பத்திலிருந்தே ஆளுமையுடைய நற்பிரஜையாக உருவாக்க வேண்டிய தேவையை உணர்ந்து கொண்ட அவர் இந்தியாவிலும்; ஆபிரிக்காவிலும் தாம் அடைந்த அனுபவங்களை கொண்டு சாரணியக் கொள்கையை உருவாக்கினார். இம் முறை வெற்றியடையுமா என பரிசோதிக்க 1907 ஆண்டில் இங்கிலாந்திலுள்ள பிரவுன்ஸீத் தீவில் சாரணீய பாசறையை 20 சாரணர்களுடன் நடாத்திக் காட்டினார். இதுவே உலகம் கண்ட முதலாவது சாரணீய பாசறையாகும். இப்பாசறை பெரும் வெற்றியை அளித்ததோடு அனைத்துலக மக்களின் கவனத்தையும் ஈர்த்தது. இப் பாசறையில் இருந்து பெற்ற அனுபவங்களைக் கொண்டு 1908 ஆம் ஆண்டில் “இளைஞர் சாரணீயம்” என்ற நூலை 6 பிரசுரங்களாக வெளியிட்டார்.

அதன் பின்னராக 1909 ஆண்டில் கிறிஸ்ரல் பிளேஸ் ( Cristal Place ) எனும் இடத்தில் முதலாவது சாரணர் ஒன்று கூடல் ஒன்றினை வெற்றிகரமாக நடத்தினார். இதில் சாரணர் தொண்டர் படை என்ற அமைப்பை அறிமுகப்படுத்தினார்.

இதன் பின்னர் குறுகிய காலத்தில் இயக்கத்தின் வளர்ச்சியைக் கண்ட பேடன் பவல் அவர்கள் வருங்கால சந்ததியினரை உத்தமர்களாக்குவதற்கு இதுவே சிறந்த வழி என்பதை உணர்ந்து கொண்டதுடன், இதுவே தமது வாழ்க்கையின் தொண்டாக அமையும் என்றும் நம்பினார். இதனால் 1910 ஆண்டில் இராணுவத்தில் தாம் வகித்த பெரும் பதவியைத் துறந்ததுடன் அவர் தமது இரண்டாவது வாழ்க்கை எனும் இம் முயற்சியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்.

சாரணீயத்தை உலக சகோரத்துவ இயக்கமாக்குவதற்கு ஆரம்ப முயற்சியாக 1912 ஆண்டளவில் உலகத்தின் பல பாகங்களிலும் உள்ள சாரணர்களை சந்திப்பதற்காக பிரயாணங்களை மேற் கொண்டிருந்ததுடன், பல்வேறு நாடுகளிலும் சாரணர்களுடன் செய்தி தொடர்புகளையும் வைத்திருந்தார். இதனால் உலக நாடுகளில் சாரணர் இயக்கம் விரைவில் வியாபிப்பதற்குக் காரணமாக அமைந்ததுடன் ஆண், பெண், வயது  வேறுபாடின்றி அனைத்து சமூகத்தினரிடமும் இவ் இயக்கம் பரவக் காரணமாக அமைந்ததெனலாம்.

2009.07.12(Scout)002

பேடன் பிரபு அவர்களின் முயற்சியினால் 1910 ஆண்டில்  பெண்கள் சாரணிய வழிகாட்டி ( Girls Guide ) , கடற் சாரணர் பிரிவு ( Sea Scout ) பிரிவும், 1916 இல்  குருளைச் சாரணர்  ( Cubs Scouts  ) பிரிவும், 1918 இல்  திரி சாரணர் ( Rover Scout ) பிரிவும்,  1925 இல் வலது குறைந்தவர்களுக்கான சாரணர் இயக்கமும், 1941 ஆண்டில் வான் வெளிச் சாரணர் ( Air Scout) பிரிவு என அனைத்து மக்களையும் இணைக்க கூடிய இயக்கமாக உருவாக்கியிருந்தார். இதில் பெண்கள் சாரணியத்தை ஆரம்பிக்க பிரபுவின் மனைவியான லேடீ ஒலெவ் பி.பீ அவர்கள் உறுதுணையாக இருந்ததுடன் உலகத் தலைவியாக இருந்து தொண்டாற்றியுள்ளார்.

1920 ஆம் ஆண்டு உலக சாரணர்கள் ஒன்று கூடிய ஜம்போரி ஒலிம்பியாவில் நடைபெற்றது. இவ் விழாவின் இறுதி நாளாகிய ஆகஸ்ட் 6 ஆந் திகதி பேடன் பவல் அவர்கள் “ உலகப் பிரதம சாரணர் ” ஆகப் பிரகடனப்படுத்தப்பட்டார்.

இவ்வியக்கம் உலகமெங்கும் வளர்ச்சி பெறும் எனக் கனவு கூடக் கண்டிருக்காத நிலையில் 1929 ஆம் ஆண்டு காலப்பகுதிகளிலேயே உலகெங்கும் இருபது இலட்சம் சாரணர்களை உருவாக்கியிருந்த பேடன் பவல் அவர்களை திறமையை பாராட்டிக் கௌரவிக்கும் முகமாக 5 ஆம் ஜோர்ஜ் மன்னர் “ கில் வெல் பேடன் பவல் பிரபு” எனும் கௌரவ பட்டத்தை சூட்டி சிறப்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தனது வாழ்நாளின் பெரும் பகுதியை சிறுவர்களின் நலன்களுக்காகவும்,  சாரணியத்தின் வளர்ச்சிக்காக தொண்டாற்றிக் கொண்டிருந்த வேளையில் 80 ஆவது வயதில் தேகநிலை குன்றத் தொடங்கியது. இதனால் தனது இறுதிக் காலங்களைக் கழிப்பதற்காக அவருடைய மனைவியுடன் ஆபிரிக்காவிலுள்ள கென்யா நாட்டில் அவருக்கு மிகவும் பிடித்த இடமாகிய “ நைரோபி ” எனும் பிரதேசத்தில் இருக்கும் தனது இல்லத்தில் வாழ்ந்து வரும் வேளையில் தனது 84 வயதிற்கு ஒரு மாதம் முன்னதாக, அதாவது ஜனவரி 08 ஆந்  திகதி 1941 இல் இவ்வுலக வாழ்வை நீத்தார்.

இவ்வுலகை விட்டுப் பிரிவதற்கு முன்னர் இறுதியாக எழுதிய கடிதம் ஒன்று அவருடைய பத்திரத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.  அதில் அவர் “போதுமென்ற மனமே பொன் செய் மருந்தாக இருக்க வேண்டும். கிடைத்தன கொண்டு தகுந்தன ஆற்றுக. உலக செயல்களின் இருளகத்தைவிட்டு ஒளியகத்தை நாடுக. உலகத்திலுள்ள மற்ற மக்களுக்கு சந்தோஷத்தைக் கொடுப்பதன் மூலமே உண்மையான இன்பத்தைப் பெற முடியும்” என்ற வரிகளை உலகில் உள்ள சாரணர்களுக்கு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் வாழ்ந்து சேவையாற்றியவர்களை நாம் என்றுமே மறந்துவிட முடியாது. அப்படியானவர்களுக்கு என்றுமே மரணம் தழுவியதில்லை. அவருடைய எதிர்பார்ப்பும் நம்பிக்கை எதுவும் வீண் போகவில்லை. இன்றும் அவர்கள் இளஞ் சாரணனாக அனைத்துலக நாடுகளிலும் உலா வந்து கொண்டிருக்கிறார் என்பது மிகைப்படுத்தப்படாத உண்மையே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top