திருக்குறள் கதை
பக்கத்து வீட்டுப் பொண்ணு லட்சுமி எல்லா வேலைகளையும் முடித்து விட்டு படுக்கலாம் என்று நினைத்த போது காலிங் பெல் அடித்தது. வெளியே ஒரு நடுத்தர வயதில் ஒரு ஆணும் பெண்ணும் நின்றிருந்தனர். அந்தப் பெண் பேசினார் ” அம்மா நாங்க பூங்குடி கிராமத்திலிருந்து வாறோம்.
அங்கே இருக்கும் ஜானகியம்மாவோட மருமகள் நான். அவங்கதான் என்னை உங்க கிட்ட அனுப்பினாங்க என்றார். உள்ளே வந்து உட்கார்ந்த பின் சொன்னார். இங்கே உங்க பக்கத்து வீட்டிலே கல்யாண வயதில் ஒரு பெண் இருப்பதாகக் கேள்விப் பட்டோம். என் பையனுக்கு பாக்கலாமான்னு உங்ககிட்ட கேட்டுட்டுப் போகலாம்னு வந்தோம் என்றார்.
பக்கத்து வீட்டுக்கு அந்தக் குடும்பம் குடி வந்ததில் இருந்து அந்த தெருவில் எல்லோருடனும் சண்டை. நேற்று கூட எங்க வீட்டுக்கு வந்த காய் வண்டிக்காரன் அவங்க வீட்டு வாசலில் வண்டியை நிறுத்திட்டான்னு ஒரே சண்டை. போன வாரம் எங்க வீட்டு கடிதத்தை அவங்க வீட்டிலே போஸ்ட்மேன் போட்டுட்டான்னு அதுக்கும் வாசலில் நின்று கத்தினார் அந்த அம்மா. அந்தத் தெருவில் யாருடனும் ஒட்டுதல் கிடையாது அவர்களுக்கு.
ஆனால் அந்த வீட்டில் இருக்கும் அந்த கல்யாண வயதுள்ள பெண்ணை அதிகமாக வெளியில் பார்க்க முடியாது. லட்சுமி கூட ஓரிரு முறைதான் அந்த பெண்ணை கோவிலில் பார்த்திருக்கிறாள். அவ்வளவு அமைதி. பெரும்பாலும் அந்த அம்மாவை அடக்கி உள்ளே கூட்டிச் செல்வதே அந்தப் பெண்ணாகத்தான் இருக்கும்.
லட்சுமி ஒரு முறைக்கு இரு முறையாக தீர யோசித்து சொன்னார் ” நல்ல பொண்ணும்மா ! ரொம்ப அமைதியானவ ! நீங்க உங்க பையனுக்கு பாக்கலாம்”
ஒரு மாதம் கழித்து காலிங் பெல் அடித்தது. வாசலில் பக்கத்து வீட்டுப் பெண்ணும் அவருடைய மகளும் கையில் வெற்றிலைத் தட்டோடு நின்றிருந்தார்கள்.
அந்த அம்மா தழுதழுத்த குரலில் சொன்னார் ” உங்க வார்த்தையிலேதாம்மா என் மகள் கழுத்திலே தாலி ஏறுது. நீங்க மனசால பெரியவங்க ! கட்டாயம் கல்யாணத்துக்கு வந்திருந்து வாழ்த்தணும்”
இதைத்தான் திருவள்ளுவர் 314 வது குறளில் இப்படி சொல்லியிருக்கிறார்.
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
நன்னயம் செய்து விடல் ( 314 )
பொருள் : தமக்கு துன்பம் தருபவர்களும் கூட வெட்கப்படும் படி அவர்களுக்கு நன்மை செய்வது தான் அவர்களுக்குக் கொடுக்கும் தண்டனையாகும்.