Home » படித்ததில் பிடித்தது » தோஷம் நீக்கும் தானம்!!!
தோஷம் நீக்கும் தானம்!!!

தோஷம் நீக்கும் தானம்!!!

செவ்வாய் தோஷம் நீக்கும் ராசிகளுக்கான தானம்:
ஒருவரது ஜாதகத்தில் லக்னம், சந்திரன், சுக்கிரனில் இருந்து 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால் அவருக்கு செவ்வாய் தோஷம் என்று அர்த்தம். செவ்வாய் தோஷம் நீங்க பல வகை வழிபாடுகள், பரிகாரங்கள் உள்ளன. சிலருக்கு செவ்வாய் தோஷம் பாதிப்பு மிக கடுமையாக இருக்கும்.
அத்தகைய நிலையில் உள்ளவர்கள் வழக்கமான பூஜைகள், பரிகாரங்களுடன் சில தானங்களையும் செய்யலாம். ஐதீகப்படி தானம் செய்யும்போது செவ்வாய் தோஷம் பனி போல மறைந்து விடும். அந்த வகையில் 12 ராசிக்காரர்களும் செவ்வாய் தோஷம் நீங்குவதற்கு செய்ய வேண்டிய தானம் என்னென்ன என்ற விவரம் வருமாறு:-
மேஷம்….. செவ்வாய் தோஷம் உடைய மேஷ ராசிக்காரர்கள் முன்பின் அறிமுகம் இல்லாத ஏழைப் பெண்களுக்கு சிவப்பு நிறத் துணியை தானம் செய்யலாம். ஆதரவற்றோர் இல்லங்களுக்கு சென்று துவரை பருப்பு தானம் செய்யலாம். செவ்வாய்க்கிழமைகளில் இந்த தானம் செய்தால் பலன் கிடைக்கும்.
ரிஷபம்…… செவ்வாய் தோஷம் பாதித்த ரிஷப ராசிக்காரர்கள் ஏழை பெண்களுக்கு சிவப்பு, வெள்ளை நிறம் கலந்த புடவையை வாங்கி தானமாக கொடுக்கலாம். ஆதரவற்றவர்களுக்கு தங்கள் கையால் தயிர் சாதம் கொடுக்க வேண்டும். வெள்ளிக்கிழமைகளில் இந்த தானம் செய்தால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.
மிதுனம்…… செவ்வாய் தோஷம் உடைய மிதுனம் ராசிக்காரர்கள், ஏழை-எளியவர்களுக்கு பச்சை நிறத் துணி அல்லது உடைகளை தானமாக கொடுக்க வேண்டும். உங்களால் முடியும்பட்சத்தில் குதிரைகளுக்கு உணவு வாங்கி கொடுக்கலாம். எந்த நாள் வேண்டுமானாலும் இந்த தானத்தை செய்யலாம்.
கடகம்….. கடகம் ராசிக்காரர்கள் செவ்வாய் பாதிப்புக்கு உள்ளாகி இருந்தால், மாலை அல்லது இரவில் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு சென்று அன்னதானம் செய்ய வேண்டும். முடிந்தால் மயிலுக்கு உணவிடுங்கள். பவுர்ணமி நாட்களில் இந்த தானங்கள் செய்தால் தோஷம் நீங்கி விடும்.
சிம்மம்…… செவ்வாய் தோஷம் பாதித்த சிம்மராசிக்காரர்கள், மன நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும். மேலும் பசு மாட்டுக்கு கோதுமை தவிட்டை தானமாக கொடுக்க வேண்டும். ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த தானத்தை செய்ய வேண்டும்.
கன்னி….. செவ்வாய் தோஷம் பாதித்த கன்னி ராசிக்காரர்கள் ஏழைகளுக்கு அன்னதானம் கொடுத்து சிவப்பு நிற துணியை தானமாக கொடுக்க வேண்டும். மேலும் வாத்துக்கு உணவிடலாம். அல்லது வாத்து வாங்கி தானமாக கொடுக்கலாம். செவ்வாய்க் கிழமைகளில் இந்த தானத்தை மேற்கொள்ள வேண்டும்.
துலாம்…… துலாம் ராசிக்காரர்களுக்கு செவ்வாய் தோஷ பாதிப்பு இருந்தால், வெள்ளை, சிவப்பு நிறம் கலந்த உடைகளை ஏழை விதவைகளுக்கு தானம் கொடுக்க வேண்டும். மேலும் மிருகக்காட்சி சாலைக்கு சென்று கருடனுக்கு உணவிடலாம். வெள்ளிக்கிழமைகளில் இந்த தானம் செய்ய வேண்டும்.
விருச்சிகம்…… செவ்வாய் தோஷம் பாதித்த விருச்சிக ராசிக்காரர்கள், சஷ்டி விரதம் இருந்து அன்னதானம் செய்ய வேண்டும். முருகப் பெருமானுடன் தொடர்புடைய மயில், சேவலுக்கு உணவு கொடுத்தால் உடனே தோஷ நிவர்த்தி பெறலாம். செவ்வாய்க்கிழமைகளில் இந்த தானம் செய்யப்பட வேண்டும்.
தனுசு….. செவ்வாய் தோஷம் பாதித்த தனுசு ராசிக்காரர்கள் புத்தக தானம் செய்வது நல்லது. அருகில் உள்ள லைப்ரரிக்கு உங்களால் முடிந்த அளவுக்கு புத்தகங்கள் வாங்கி தானமாக கொடுக்கலாம். யானைக்கு ஒரு நேர உணவு கொடுப்பதும் நல்லது. வியாழக்கிழமைகளில் இந்த தானங்களை செய்தல் வேண்டும்.
மகரம்……. மரக ராசிக்காரர்கள் செவ்வாய் தோஷ பாதிப்புக்குள்ளாகி இருந்தால், வயது முதிர்ந்த ஏழைகளுக்கு கருப்பு நிறத் துணி அல்லது உடைகளை தானமாக கொடுக்க வேண்டும். மேலும் எருமை மாட்டுக்கு தவிடு தானம் கொடுப்பதும் நல்லது. சனிக்கிழமைகளில் இந்த தானத்தை செய்ய வேண்டும். அமாவாசை நாட்களில் பித்ரு தர்ப்பணம் செய்த பிறகு ஏழைகளுக்கு சிவப்பு நிற உடையை தானம் செய்வதும் நல்லது.
கும்பம்….. செவ்வாய் தோஷ பாதிப்பில் இருக்கும் கும்ப ராசிக்காரர்கள் வெயில் காலத்தில் இலவச நீர், மோர் பந்தல் வைத்து ஏழைகளுக்கு உதவலாம். ஏழைகளுக்கு சமையல் பாத்திரங்கள் வாங்கிக் கொடுத்து உதவலாம். எருமை மாட்டுக்கு புல்தானம் அளிப்பது சிறந்தது. சனிக்கிழமைகளில் இந்த தானம் செய்யலாம்.
மீனம்….. மீனம் ராசிக்காரர்கள் செவ்வாய் தோஷ பாதிப்பில் இருந்தால், வியாழக்கிழமை செவ்வாய் ஓரையில் ஏழைகள் மனம் குளிரும் வகையில் தான தர்மம் செய்ய வேண்டும். குறிப்பாக ஏழை மாணவர்களுக்கு நோட்டு, பென்சில், பேனா வாங்கி கொடுக்கலாம். ஏழைகளுக்கு கல்விக்கு உதவினாலே போதும், செவ்வாய் தோஷ பாதிப்பு பறந்து விடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top