நேரம் சரியில்லை
இடி மின்னலுடன் மழை பெய்து கொண்டிருந்தது.ஒரு கிராமத்தை நோக்கி வந்து கொண்டிருந்த மக்களில் பத்து பேர் மழைக்காக அருகில் இருந்த ஒரு பழைய கட்டிடத்தில் ஒதுங்கினார்கள்.
அவர்களில் ஒருவர் ஜோஷ்யர். அவர் சொன்னார்,”இங்குள்ளவர்களில் ஒருவருக்கு நேரம் சரியில்லை ஆகவே அவர் தலையில் சிறிது நேரத்தில் இடி விழப்போகிறது”.
இதைக்கேட்டு அனைவருக்கும் பயமாகிவிட்டது,நேரம் சரியில்லாத ஒருவரால் அவ்வளவு பெரும் பாதிக்கப் படுவதா?அந்த ஆள யார் என்று எப்படிக் கண்டுபிடிப்பது?
இறுதியில் ஒருவர் சொன்னார்,”இந்த வயதான கிழவன் தான் நேரம் சரியில்லாத மனிதன் போலத் தெரிகிறது. எனவே நாம் அவரை இங்கிருந்து வெளியே விரட்டி விடுவோம்”.
அனைவரும் ஆமோதித்தனர். கிழவர் வேறு வழியில்லாது,இருமிக்கொண்டே மெதுவாக அங்கிருந்து வெளியே சென்று ஒரு மரத்தடியில் நின்று கொண்டார்.
அப்போது ஒரு பெரிய இடி இடித்தது. கிழவர் பயத்தில் கண்ணை மூடிக்கொண்டார். சிறிது நேரம் கழித்து கண்ணைத் திறந்து பார்த்தபோது அந்த பழைய கட்டிடம் இடி விழுந்து தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது.