இந்தியாவின் புவியமைப்பும் உயிர்மண்டலங்களும்
“ஆசியாவின் இரண்டாவது பெரிய தேசமாகவும் உலகின் ஏழாவது பெரிய நாடாகவும் விளங்கும் இந்தியாவின் மொத்த பரப்பளவு 3,287,263 சதுர கிலோமீட்டராகும். இயற்கை வளங்கள் நிறைந்த இங்கு, உலகிலேயே உயரமான பனிபடர்ந்த இமயமலை இந்தியாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ளது. தெற்கு பகுதியிலுள்ள இந்திய பெருங்கடல் இந்தியாவின் தென் கிழக்கு பகுதியில் வங்காள விரிகுடாவாகவும் தென் மேற்கு பகுதியில் அரபிக்கடலாகவும் இந்திய தீபகற்பத்தால் பிரிக்கப்பட்டு காட்சியளிக்கிறது. இந்தியாவின் தென்முனையில் கன்னியாகுமரி அமைந்துள்ளது. வங்க கடலில் அமைந்துள்ள அந்தமான் நிக்கோபார் தீவுகளும் அரபிக்கடலிலுள்ள லட்சத் தீவுகளும் இந்தியாவை சேர்ந்த பகுதிகளாகும்.
குளிர்ச்சியான உயர்ந்த இமயமலை சூழல் முதல் கடற்கரை சூழல் வரையும், வடகிழக்கிலுள்ள பசுமையான காடுகள் முதல் வடமேற்கிலுள்ள பாலைவனங்கள் வரையும் பலதரப்பட்ட இயற்கை சூழலமைவுகள் இந்தியாவில் காணப்படுகின்றன. பல்வேறு விதமான காடுகள், சதுப்பு நிலங்கள், தீவுகள் மற்றும் கடல் பகுதிகளும் இந்தியாவில் உள்ளன. வளமான ஆற்றுப்படுகைகளும், உயர்ந்த பீடபூமிகளும், கங்கை, பிரம்மபுத்திரா, சிந்து போன்ற முக்கிய ஆறுகளும் இந்தியாவில் உள்ளன.
ஜூன் முதல் அக்டோபர் மாதம் வரை நீடிக்கும் தென்மேற்கு பருவகாற்று, அக்டோபர் முதல் நவம்பர் மாதம் வரையிலான வடகிழக்கு பருவகாற்று மற்றும் டிசம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை வடக்கிலிருந்து வீசும் உலர்ந்த காற்று போன்ற காரணிகள் இந்தியாவின் தட்பவெப்ப நிலையை நிர்ணயிக்கின்றன. மார்ச் முதல் மே மாதம் வரை தட்பவெப்பநிலை உலர்ந்தும் வெப்பமாகவும் காணப்படுகிறது.
இந்தியா மாபெரும் தேசமாக விளங்குவதோடு பலதரப்பட்ட சீதோஷணநிலை மற்றும் புவியமைப்பும் காணப்படுவதால் இங்கு பல்லுயிர் வளம் நிறைந்து காணப்படுகிறது.
உலகின் 2% நிலபரப்பே இந்தியாவில் உள்ளபோதிலும் உலகிலுள்ள 6% வனவுயிர் இங்கு காணப்படுவதால் பல்லுயிர் பெருக்க ரீதியாக இந்தியா அதிமுக்கியத்துவம் பெறுகிறது.
இந்தியாவின் 10 உயிர்பரவல் மண்டலங்களும் 26 உயிர்பரவல் மாகாணங்களும் உள்ளன.
டிரான்ஸ் இமயமலைப் பகுதி
இப்பகுதி உலர்ந்த காற்றும் மிகவும் குளிராகவும் இருக்கும் (கடல்மட்டத்திற்கு மேல் 4500-6000 மீட்டர் வரை). மலைகளும் பனிப்பாறைகளும் நிறைந்து காணப்படும் இங்கு உயர்ந்த மலைகளில் வளரும் அல்பைன் வகை தாவரயினங்கள் ஆங்காங்கே காணப்படும். காட்டு ஆடுகள், இமயமலை வரையாடு, பனிசிறுத்தை, பளிங்குப்பூனை, கருங்கழுத்து கொக்கு போன்ற விலங்கினங்கள் இங்கு காணப்படுகின்றன.
இமயமலைப் பகுதி
உயர்ந்த மலைப்பகுதியில் அமைந்துள்ள காரணத்தால் இமயமலைப் பகுதியில் பல்லுயிர் வளம் நிறைந்து காணப்படுகிறது. தட்பவெப்பநிலை மற்றும் உயரத்திற்கு ஏற்றவாறு இங்கு காணப்படும் தாவரங்களும், விலங்கினங்களும் மாறுபடுகிறது. இமயமலையின் கிழக்கு பகுதியில் வெப்ப மண்டல மழைக்காடுகளும் மத்திய மற்றும் மேற்கு பகுதியில் அடர்ந்த மித வெப்பமண்டல அல்பைன் காடுகளும் உள்ளது. இமயமலை அடிவாரத்தில் ஏராளமான ஆர்கிட்வகை தாவரங்கள் காணப்படுகிறது. இமய மலையின் கிழக்கு சரிவு பகுதியில் ரோடோடென்ரான் என்னும் தாவரயினம் காணப்படுகிறது. இங்குள்ள விலங்கினங்கள் பல்வேறு தகவமைவுகளை பெற்றுள்ளன. கடமான் மற்றும் குரைக்கும் மான் இனங்கள் இமயமலையின் அடிவார பகுதியில் காணப்படுகிறது. கோரல், இமய வரையாடு, பனிச்சிறுத்தை பழுப்பு கரடி போன்ற விலங்கினங்கள் அல்பைன் பகுதியில் காணப்படுகிறது. இங்கு காணப்படும் பல்வேறு மாமிச உண்ணிகள் தற்போது அழியும் தருவாயில் உள்ளன.
பாலைவனப் பகுதி
வெப்பமண்டல முட்புதர் காடுகளும், வெப்பமண்டல உலர்ந்த இலையுதிர் காடுகளும் இங்கு காணப்படும் இயற்கையான தாவரயினங்களாகும். மணற் குன்றுகளும் முகத்துவாரப் பகுதிகளில் சதுப்புநில தாவரங்களும் காணப்படுகின்றன. இங்கு காணப்படும் சீவன் வகை புல்நிறைந்த பகுதி பாலி என்று அழைக்கப்படுகிறது.
பாலைவனங்களில் அனைத்து பிரதான பூச்சியினங்களும் காணப்படுகின்றன. 43 வகையான ஊர்வனங்களும் பாலைவனப் பகுதிக்கே உரித்தான சில பறவையினங்களும் இங்கு காணப்படுகிறது.
பாலைவனங்களில் காணப்படும் முக்கிய பாலூட்டி இனமான வெளிமான் தற்போது ஒருசில பகுதிகளில் மட்டுமே காணப்படுகிறது. ஃகேசல் என்னும் ஒரே இந்திய மான் இனத்தில் பெண் மானும் கொம்பை பெற்றிருக்கும். நில்கை இந்தியாவின் பெரிய ஆன்ட்டிலோப் மான் இனம் மற்றும் காட்டுக் கழுதைகள் தற்போது குஜராத்தின் கட்ச் பகுதியில் மட்டுமே காணப்படுகிறது. மேலும் இப்பகுதியில் பூநாரையின பறவைகள் இனப்பெருக்கம் செய்கிறது. பாலைவன நரி, இந்திய வரகு கோழி, சிங்காரா காட்டுப் பூனை போன்ற விலங்கினங்களும் இங்கு காணப்படுகிறது.
மித வறட்சிப்பகுதி
இந்தியாவின் மேற்கு பகுதியிலுள்ள தார் பாலைவனத்திலிருந்து குஜராத்தின் கட்ச் பகுதி காம்பே மற்றும் கத்தியவார் தீபகற்ப பகுதிகள் மித வறட்சிப் பகுதிகளாகும்.
வெப்பமண்டல உலர்ந்த இலையுதிர் காடுகளும் முட்புதர் வகை தாவரங்களும் இங்கு காணப்படும் இயற்கை தாவரங்களாகும். மணற்பகுதிகளில் ஆங்காங்கே அக்கேஷியா, புரசாப்பிஸ் போன்ற மரங்கள் காணப்படுகிறது. மலைப் பகுதிகளில் யூபார்பியா தாவரயினங்களும் கடற்கரையோரப் பகுதிகளில் சால்வடோரா, டெமரிக்ஸ் போன்ற தாவரயினங்களும் காணப்படுகிறது.
மேற்குதொடர்ச்சி மலைப்பகுதி
மேற்குதொடர்ச்சி மலைப்பகுதி இந்தியாவில் 5% நிலப்பகுதியை மட்டுமே உடையதாக இருப்பினும் நம் நாட்டிலுள்ள சுமார் 4000 வகையான தாவரயினங்கள் இங்கு காணப்படுகிறது. இவற்றில் 1800 வகை தாவரயினங்கள் மேற்கு தொடர்ச்சி மலைக்கே உரித்தானவையாகும். பருவமழைக்காடுகள் மேற்கு பகுதிகளிலும் மழை குறைந்த கிழக்கு பகுதிகளிலும் காணப்படுகிறது. இங்கு பசுமைமாறா காடுகளிலிருந்து உலர்ந்த இலையுதிர் காடுகள் வரை பல்வேறு விதமான காடுகள் காணப்படுகிறது.
நீலகிரி கருங்குரங்கு, சிங்க வால் குரங்கு, நீலகிரி வரையாடு, மலபார் மலைமொங்கன் போன்ற விலங்கினங்களும் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைக்கே உரித்தான பல இருவாழ்விகளும் இங்கு காணப்படுகிறது.
தக்காணப் பகுதி
இந்தியாவிலுள்ள 43% நிலப்பரப்பில் தக்காணப்பகுதி பரந்து விரிந்து காணப்படுகிறது. தக்காணப் பகுதி வடக்கே சாத்பூரா மலைதொடராலும் மேற்கே மேற்கு தொடர்ச்சி மலையாலும் கிழக்கே கிழக்கு தொடர்ச்சி மலையாலும் சூழப்பட்டுள்ளது. இம்மலைத் தொடரின் உயரம் கிழக்கே 300 மீட்டர் முதல் மேற்கே 900 மீட்டர் வரை மாறுபட்டு காணப்படுகிறது. வளமான கரிசல்மண் மற்றும் செம்மண்ணை உடைய இப்பகுதி நான்கு பெரிய ஆறுகள் மூலம் பாசன வசதி பெறுகின்றது. இப்பீடபூமியின் வடக்கு, தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் வெப்ப மண்டல உலர்ந்த இலையுதிர் காடுகள் காணப்படுகிறது. இப்பீடபூமியின் கிழக்கு பகுதியான ஆந்திரா, ஒரிசா, மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் ஈரப்பத இலையுதிர் காடுகள் உள்ளன.
புலி, காட்டுபன்றி, பனிக்கரடி, காட்டெருது, கடமான், புள்ளிமான் போன்ற விலங்கினங்கள் இப்பகுதி முழுவதும் காணப்படுகிறது. காட்டெருமைகள், யானைகள் மற்றும் மணிப்பூர் மான் போன்ற விலங்கினங்களும் ஆங்காங்கே சில இடங்களில் காணப்படுகிறது.
கங்கை சமவெளி பகுதி
கங்கை சமவெளி பகுதி இந்தியாவிலேயே மிகவும் வளமான பகுதியாகும். கங்கை ஆறு மற்றும் அவற்றின் உபநதிகள் கொண்டு சேர்க்கும் வண்டல்படிவுகளால் கங்கை சமவெளி பகுதி உருவாகியுள்ளது. மண்ணின் அமைப்புக்கு ஏற்றவாறு கங்கை சமவெளி நான்காக பிரிக்கப்பட்டுள்ளது.
பஹாபர் – கூழாங்கற்கள் மற்றும் பெருமணல் நிறைந்த இடங்கள்
டெரை – சதுப்பு நிலப்பகுதியாக இருக்கும்
பங்கார் – பழைய வண்டல் படிவுகள் இருக்கும்
கஹாதர் – புதிய வண்டல் படிவுகள் காணப்படும்
கிழக்கு ராஜஸ்தானிலிருந்து உத்திர பிரதேசம், பீகார் மற்றும் மேற்கு வங்காள மாநிலங்களில் உள்ள கங்கை சமவெளிப் பகுதிகளில் பெரும்பாலும் விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. இங்குள்ள காடுகளில் பெரும்பகுதி வெப்பமண்டல உலர்ந்த இலையுதிர் காடுகளாகும்.
யானை, வெளிமான், காண்டாமிருகம், கங்கைநீர் முதலை, நன்னீர் ஆமைகள், மற்றும் பல நீர்ப்பறவைகளும் இங்கு காணப்படுகிறது.
கடற்கரைப் பகுதி
இயற்கையாக இங்கு சதுப்பு நிலத் தாவரங்கள் (மாங்கரோவ்) காணப்படுகிறது. கடல்பசு, டால்பின்கள், முதலைகள் மற்றும் சில பறவையினங்களும் இங்கு காணப்படுகிறது. இந்தியாவில் 26 வகையான நன்னீர் ஆமைகளும் மற்றும் நிலத்தில் வாழும் ஆமைகளும் 5 வகையான கடல் நீர் ஆமைகளும் காணப்படுகிறது. கடல் நீர் ஆமைகள் கடற்கரையோரங்களில் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்கின்றன. நிலவாழ் ஆமைகள் நிலத்திலே வசித்து இனப்பெருக்கம் செய்து வாழ்கின்றன. 2 லட்சத்திற்கும் கூடுதலான ஆலிவ் ரெட்லி ஆமைகள் ஒரிசா கடற்கரை பகுதிகளில் முட்டையிட்டு செல்கின்றன. கிழக்கு கடற்கரையை ஒட்டியுள்ள சுந்தரவனக் காடுகளில் அதிகளவில் புலிகள் வசிக்கின்றன.
லட்சத்தீவுகளில் 36 முக்கிய தீவுகள் உள்ளன. 12 அட்டோல், 3 பவழப்பாறைகள் மற்றும் 5 மூழ்கிய நிலையிலுள்ள பவழத்திட்டுகளும் உள்ள இத்தீவு மேற்கு கேரள கடற்கரையில் சுமார் 300 கிலோமீட்டர் நீளத்திற்கு பரவியுள்ளது. இத்தீவீன் மொத்த பரப்பளவு 32 சதுர கிலோமீட்டராகும். இதில் பயன்பாட்டில் உள்ள இடத்தின் பரப்பளவு சுமார் 26.32 சதுர கிலோமீட்டராகும். 4 வகையான கடல் ஆமைகள், 36 வகையான நண்டுகள், 12 வகையான மட்டியினங்கள், பவழங்கள் உட்பட 41 வகையான புழையுடலிகள், கடல்பசு, வண்ண மீன்கள் போன்றவையும் இங்கு காணப்படுகிறது. மேலும் 104 வகையான பவழப்பாறைகள் இங்குள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
வடகிழக்கு பகுதி
இப்பகுதியில் உயிர்ம வளங்கள் நிறைந்து காணப்படுகிறது. பசுமைமாறா காடுகள், பசுமைமாறா மழைக்காடுகள், ஈரப்பத இலையுதிர் காடுகள், பருவகால இலையுதிர் காடுகள், மற்றும் புல்வெளிகளும் இங்கு நிறைந்து காணப்படுகிறது.
இங்கு காணப்படும் 390 வகையான பாலூட்டியினங்களில் 63% அஸ்ஸாமில் காணப்படுகிறது. மாமிசஉண்ணிகளும் இங்கு நிறைந்து காணப்படுகிறது. இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் யானையினங்கள் இங்குதான் காணப்படுகிறது.
இந்திய தீவுகள்
அந்தமான் நிக்கோபார் பகுதி 325 தீவுகளை உள்ளடக்கியது. வடக்கு பகுதியில் அந்தமானும் தெற்கு பகுதியில் நிக்கோபாரும் உள்ளது. இருதீவுகளுக்கு இடைபட்ட தூரம் 160 கிலோமீட்டராகும். இங்கு வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவமழையும் பொழிகிறது. எனவே ஆண்டுதோறும் கனத்த மழை இருக்கும். தனித்தன்மை வாய்ந்த பல்வேறு தாவரயினங்கள் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் காணப்படுகிறது.
இங்கு காணப்படும் 2,200 தாவரயினங்களில் 200 வகை தாவரங்கள் இத்தீவுகளுக்கே உரித்தானவையாகும். வெப்ப மண்டல பசுமைமாறா காடுகள், ஈரப்பதமான இலையுதிர் காடுகள் சதுப்புநிலக் காடுகள், போன்ற வகை காடுகள் இங்கு காணப்படுகிறது. 112 வகையான பறவையினங்கள், அந்தமான் உடும்பு, பெரிய கொள்ளைக்கார நண்டு, 4 வகையான ஆமைகள், காட்டுப்பன்றி, அந்தமான் பல்லி, விஷமற்ற அந்தமான் தண்ணீர் பாம்பு போன்ற விலங்கினங்கள் இத்தீவுகளில் வாழ்கின்றன.
பெரிய அலகையுடைய காடுகளில் வாழும் நார்கோடம் மலைமொங்கன் பறவை நார்கோடம் என்னுமிடத்தில் மட்டுமே காணப்படுகிறது. அந்தமானில் 11,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலும் நிக்கோபாரில் சுமார் 270 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலும் பவழப்பாறைகள் சூழ்ந்து காணப்படுகிறது.
சூழல் அமைப்பின் அழிவிற்கான காரணங்கள்
உயிர்ச்சூழலில் மனிதர்களின் தலையீட்டால் சூழல் சீர்கேடு அடைவதோடு வனவுயிரினங்களும் அழிந்து வருகின்றன.
வாழிடங்களை அழித்தல், வெளிநாட்டு உயிரினங்களை அறிமுகம் செய்தல், சுய இலாபத்திற்காக இயற்கை வளங்களை சுரண்டுதல், கடல் மாசுபாடு, வெள்ளம், வறட்சி, பூகம்பம், காட்டுத்தீ போன்ற இயற்கை சீற்றங்களினாலும் சூழல் பாதிப்படைகிறது. சில குறிப்பிட்ட இடங்களில் காணப்படும் பிரதான பிரச்சனைகள் கீழே கொடுக்கப்பட்டடுள்ளது.
சதுப்பு நிலப்பகுதி: மண்படிதல், ஆக்கிரமிப்பு, சுற்றுலா தொழில்
காடுகள்: மரங்களை வெட்டுதல், காடுகளில் பயிரிடுதல், சாலைகள் அமைத்தல், சுரங்கத்தொழில் மேலும் தோல், ரோமம், தந்தம், இறைச்சி, மருந்து பொருள் போன்றவற்றை பெற காடுகளிலுள்ள விலங்கினங்கள் வேட்டையாடி அழிக்கப்பட்டுவருகின்றன.
கடல் : அணுஉலை மற்றும் அனல்மின்நிலையத்திலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் கடல் நீருடன் நேரடியாக கலத்தல், நச்சுடைய நீர்த்த கழிவுகளை கடலில் கலக்கவிடுதல், சிறிய உயிரினங்களை பிடித்து அழித்தல், ஆபரணத்திற்காக கிளிஞ்சல்களை சேகரித்தல், சங்குகள் மற்றும் முத்துசிப்பிகளை அழித்தல், சங்குகள் மற்றும் கடல் தாவரங்களின் ஏற்றுமதி.
பவழப்பாறை : சிமெண்ட் தொழிற்சாலைகளில் மூலப்பொருளாக பயன்படுத்துதல், சிகப்பு முத்து மற்றும் பவழங்களை சேகரித்து ஆபரணத்திற்காக பயன்படுத்துதல், மீன் தொட்டிகளில் வளர்ப்பதற்காக பவழப்பாறைகளிலுள்ள மீன்களை அழித்தல்.
சதுப்புநிலக் காடுகள் : விவசாயம் செய்தல், இறால் பண்ணை அமைத்தல், விறகுக்காக சதுப்பு நிலக்காடுகளை அழித்தல், பாசனத்திற்காக நன்னீரை பயன்படுத்துவதால் நீரில் உப்பின் அளவு அதிகரிப்பு.
ஆறுகள் : கன உலோக கழிவுகளால் மாசடைதல், நிலைத்திருக்கும் உயிர் கொல்லிகளை கலக்கவிடல், கரிமக் கழிவுகளை கொட்டுதல், ஆறுகளில் மணல் எடுத்தல்.
அபாய நிலையிலுள்ள உயிரினங்களை பாதுகாக்க சட்டதிட்டங்கள்:
அபாய நிலையிலுள்ள உயிரினங்களை பாதுகாக்கவும் பல்லுயிர் வளங்களை பாதுகாக்கவும் தேசிய மற்றும் உலகளவிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அழிவு நிலையிலுள்ள வனவாழ் தாவர விலங்கினங்களின் உலகளாவிய வர்த்தக ரீதியிலான ஒப்பந்தம், (1973). மேற்கூறிய நோக்கத்திற்கு ஒரு முக்கிய மைல்கல்லாக விளங்குகிறது. இவ்ஒப்பந்தத்தில் வனவாழ் தாவர, விலங்கினங்களை அவற்றின் வாழிடங்களில் வைத்து பாதுகாக்க வழி வகை செய்யப்பட்டுள்ளதோடு அவற்றின் முக்கியத்துவமும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 1992 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் பல்லுயிர் பெருக்க ஒப்பந்தம் மற்றுமொரு மைல்கல்லாகும்.
1972 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட வனவுயிர் பாதுகாப்பு சட்டம் தேசிய அளவிலான ஒரு முயற்சியாகும். வனவுயிர் சரணாலயங்கள் தேசிய பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு வாரியம் ஏற்படுத்துதல் போன்றவை இச்சட்டத்தில் இடம் பெற்றுள்ளன. வனவிலங்குகளை வேட்டையாடுதல் தண்டனைக்குரிய குற்றமாக இச்சட்டம் குறிப்பிடுகிறது. அழியும் தருவாயிலும், அபாய கட்டத்திலுமுள்ள உயிரினங்களையும், பல்லுயிர் பெருக்கத்தையும் பாதுகாக்க 2000 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட பல்லுயிர் பெருக்க பாதுகாப்பு சட்டதிட்டம் வழிவகை செய்கிறது.
சூழல் சமநிலை
கீழே குறிப்பிடப்பட்ட காரணங்களினால் வனவாழ் தாவர மற்றும் விலங்கினங்களை நாம் அழிவிலிருந்து காப்பாற்ற வேண்டும்.
காடுகள் தட்பவெப்ப நிலையை கட்டுப்படுத்தவும், மண்ணரிப்பை தடுக்கவும், நிலச்சரிவை தடுக்கவும், வெள்ளத்தை கட்டுப்படுத்தவும் உதவிபுரிகின்றன.
இன்று நாம் பயிரிடும் உணவுப் பொருட்கள் காடுகளிலிருந்து பெறப்பட்டவையே.
சுமார் 80% மக்கள், மருந்திற்கு காடுகளிலுள்ள மூலிகைகளையே சார்ந்துள்ளனர்.
அயல் மகரந்த சேர்க்கைக்கு பறவையினங்கள், பூச்சியினங்கள் மேலும் பலவகை உயிரினங்களும் உதவிபுரிகின்றன.
வேளாண்மை விஞ்ஞானிகளுக்கும் மரபியல் பொறியாளர்களுக்கும் தற்போதுள்ள ஒவ்வொரு உயிரினங்களும் அத்தியாவசியமானதாகும். பெரும்பாலான உயிரினங்கள் இதுநாள்வரை கண்டறியப்படவில்லை.
மனிதர்களும் மற்ற விலங்கினங்களும் உயிர்வாழ்வதற்கு தாவரங்கள் இன்றியமையாத ஒன்றாகும்.
வனவுயிரினங்கள் ஜீன்களின் மரபியல் களஞ்சியமாக விளங்குகின்றன. உயிரினங்களின் அழிவினால் அத்தகைய உயிரினத்திலுள்ள மரபியல் செய்திகளை இழக்க நேரிடுகிறது. மேலும் இவை பிற்காலத்தில் பூமியிலுள்ள உயிரினங்களின் மரபியல் கூறுகளிலும் பரிணாமத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
இயற்கை அழகிற்காக வனவுயிரினங்களை காப்பாற்ற வேண்டும்.
பல்லுயிர் வளமும் சூழல் சமநிலையும் இப்பூமியிலுள்ள எல்லா உயிரினங்களுக்கும் அத்தியாவசியமாகும்.
எனவே மனிதர்கள் இயற்கைக்கு இடையூறு செய்ய கூடாது. உலகின் இயற்கை எழிலை காப்பதற்கு சூழல் மண்டலம் முழுவதும் பாதுகாக்கப்பட வேண்டும். சூழல் முழுவதும் பாதுகாக்கப்படாவிட்டால் தனிப்பட்ட உயிரினங்கள் அதிக நாள் உயிர்வாழ இயலாது.
கீழ்கண்ட யுக்திகளை பின்பற்றி வனவுயிர் பாதுகாப்பிற்கு வழிவகை செய்யலாம்.
ஜீன் வங்கிகள் மற்றும் தாவரவியல் பூங்காக்கள்
உயிரியல் பூங்காக்கள்
பாதுகாக்கப்பட்ட பகுதியில் இனப்பெருக்க மையங்கள் அமைத்தல்
உயிர்ச்சூழல் காப்பகங்கள்
தேசிய பூங்காக்கள் மற்றும் வனவுயிர் சரணாலயங்கள்
சட்டதிட்டங்களை நடைமுறைப்படுத்தி அழியும் நிலையிலுள்ள உயிரினங்களை காப்பற்றலாம்.
இப்பூமியிலுள்ள அனைத்து உயிரினங்களும் ஒன்றோடு ஒன்று நெருங்கிய தொடர்புடையதாகவும் ஒன்றையன்று சார்ந்தும் வாழ்ந்து வருகின்றன. தன்னுடைய தேவைக்காக மனிதன் இயற்கையை மாற்றியமைத்தால் நாம் எதிர்பார்ப்பதைவிட அதிகளவில் சூழலில் தாக்கம் ஏற்பட்டுவிடும். எனவே எஞ்சியுள்ள இயற்கை வளங்களின்பால் அக்கறை கொண்டு பல்லுயிர்வளம் மற்றும் பிற்கால பரிணாம வளர்ச்சிக்கு உதவும் மரபியல் கூறுகளையும் பாதுகாத்தல் அத்தியாவசியமாகும்.