‘திருபாய் அம்பானி’ என்று அழைக்கப்படும் ‘தீரஜ்லால் ஹீராசந்த் அம்பானி’ இந்தியாவின் நவீனத் தொழில்துறை முன்னோடிகளில் குறிப்பிடத்தக்க ஒருவர் ஆவார். மும்பையில் ஒரு துணி வியாபாரியாகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் என்னும் மாபெரும் தனியார் நிறுவனத்தை உருவாக்கி, ‘இந்திய வர்த்தக உலக ஜாம்பவான்’ எனப் புகழ் பெற்றவர். 1982 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியாவில் மாபெரும் தொழிலதிபராக விளங்கிய இவர், 1996, 1998 மற்றும் 2000 ஆம் ஆண்டுகளில், ஆசியா வீக் இதழ் வெளியிட்ட ‘பவர் – 50 ஆசியாவின் மிகவும் சக்திவாய்ந்த மனிதர்களில் ஒருவராகவும்’, ‘இந்திய வணிக அமைப்புகளின் கூட்டமைப்பின் மூலம் இருபதாம் நூற்றாண்டின் சிறந்த மனிதராகவும்’ தேர்வு செய்யப்பட்டார். ‘ரிலையன்ஸ்’ என்கிற மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி, தற்பொழுது இந்தியாவின் பொருளாதாரத்தை அளகிடக்கூடிய அளவில், தன்னுடைய வர்த்தகப் பங்குகளை உயர்த்தி, பங்கு சந்தைகளின் ‘முடிசூடா மன்னனாக’ விளங்கிய, திருபாய் அம்பானி அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.
பிறப்பு: டிசம்பர் 28, 1932
பிறப்பிடம்: குஜராத் மாநிலம், இந்தியா
பணி: தொழிலதிபர், தொழில்முனைவர்
இறப்பு: ஜூலை 06, 2002
நாட்டுரிமை: இந்தியன்
பிறப்பு
திருபாய் அம்பானி அவர்கள், 1932 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி இந்தியாவின் குஜராத் மாநிலம் சோர்வாத் அருகிலுள்ள “குகஸ்வாடாவில்”, ஹீராசந்த் கோர்தன்பாய் அம்பானிக்கும், ஜமுனாபென் என்பவருக்கும் மகனாக ஒரு நடுத்தர வர்க்க மோத் குடும்பத்தில் பிறந்தார்.
ஆரம்ப வாழ்க்கை
ஹீராசந்த் கிராமத்தில் பள்ளி ஆசிரியராகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கிய அவர், பிறகு தென்மேற்கு ஆசியாவில் உள்ள ஏமனுக்கு சென்று ஏ.பெஸி & கோ நிறுவனத்தில் சிறிது காலம் வேலைப் பார்த்தார். அந்நிறுவனத்தில் பல பொறுப்புகளில் பணியாற்றி வந்த அவர், பத்தாண்டுகள் கழித்து இந்தியா திரும்பினார். பின்னர், தன்னுடன் ஏமனில் வேலைப்பார்த்து வந்த சமபக்லால் தமானி என்பவருடன் இணைந்து, ‘மஜின்’ என்ற நிறுவனத்தை மஸ்ஜித் பந்தரில் உள்ள நரசினதா என்ற இடத்தில் ஆரம்பித்தார். இந்நிறுவனம் முதலில் பாலிஸ்டர் நூல் இறக்குமதியும், மிளகாய் ஏற்றுமதியும் செய்யத் துவங்கியது. ஒரு காலகட்டத்திற்க்கு பிறகு, சமபக்லால் தமானியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், தனியாகப் பிரிந்த திருபாய் அம்பானி அவர்கள், தனது சொந்த நிறுவனத்தைத் தொடங்கினார்.
வெற்றிப் பயணம்
1970 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், துணி வியாபாரத்தில் நல்ல லாபம் இருப்பதை உணர்ந்த அவர், தன்னுடைய முதல் நூற்பாலையை அகமதாபாத்தில் உள்ள நரோதாவில் 1977 ஆம் ஆண்டு துவங்கினார். விமல் என்னும் பெயரில் துணிகளை விற்பனை செய்து வந்த இந்நிறுவனம், வளர்ச்சியுற்ற நாடுகளின் தர அடிப்படையிலும் கூட மிகச் சிறப்பாக அமைந்திருந்தது. இதனால், 1977 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் 55000-க்கும் மேற்பட்ட சிறு முதலீட்டாளர்கள், ரிலையன்ஸின் தொடக்கப் பொதுப் பங்கு வெளியீட்டை வாங்கினர். இதனால், நாளுக்கு நாள் சிறு முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பெற்ற நிறுவனமாக இது மாறியது. குறிப்பாக சொல்லப்போனால், 1982 ஆம் ஆண்டுகளுக்கு பிறகு, அவர் பங்கு சந்தையில் தன்னுடைய பங்குகளின் விலையை பன்மடங்கு அதிகப்படுத்தி, ‘பங்கு சந்தைகளின் முடிசூடா மன்னனாக’ விளங்கினார்.
பல பிரச்சனைகள் வந்தாலும், முன்னேற்றத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படத் துவங்கிய அவர், தொடர்ந்து தன்னுடைய வணிகத்தை விரிவுப்படுத்தும் பணியில் ஈடுபட்டார். பெட்ரோலிய வேதிகள் உற்பத்தி, தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பம், எரிசக்தி, மின்சாரம், சில்லரை விற்பனை, துணி உற்பத்தி, உள்கட்டமைப்பு சேவைகள், மூலதனச் சந்தைகள், சரக்குப் போக்குவரத்து எனப் பல தொழில் அமைப்புகளை உருவாக்கி, மாபெரும் வளர்ச்சிப் பாதையில் தன்னுடைய வர்த்தக நிறுவனத்தை விரிவுபடுத்தினார்.
தனிப்பட்ட வாழ்க்கை
திருபாய் அம்பானி அவர்கள், கோகிலா பென் என்ற பெண்மணியைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு, முகேஷ் மற்றும் அனில் என இரண்டு மகன்களும், நிதா கோத்தாரி மற்றும் நினா சல்கோகர் என இரண்டு மகள்களும் பிறந்தனர்.
அம்பானி ஒரு சரித்திரம்
வெறும் தலைப்பிற்காக அம்பானியை நான் சரித்திரம் என்று கூறவில்லை, இன்றைக்கு சுயமாக தொழில் செய்யும் ஒவ்வொருவனின் வழிகாட்டியாக திகழ்பவர் அம்பானி, அம்பானியாக மாற வேண்டும் என நினைப்பவர்களின் எண்ணிக்கையை போல் அந்த ஆசைகளில் வித்யாசமும் உள்ளது 80% பேர் பணம் சம்பாதிக்க வேண்டும் என்றும் 20% பேர் நம்மால் முடியாதா என்றும் களம் இறங்கி உள்ளனர், ஆனால் இவர்களில் பலருக்கு அம்பானியின் வாழ்க்கை வரலாறு தெரியாது, தனக்கென ஒரு குணம் இருக்க வேண்டும்.
அது மனித வாழ்க்கைக்கு சரி ஆனால் தன்னை தண்ணீர் போல் மாற்றிக் கொள்பவன்தான் தொழில் துறைக்கு வேண்டும் இது ஒரு ராஜ கலை இதை கையாண்டவர்தான் திருபாய், திருபாய் வாழ்க்கையை வைத்து மணிரத்னம் இயக்கத்தில் குரு என்ற திரைப்படம் உருவானது அதில் எதிரியான மாதவனிடம் அபிஷேக்பச்சன் [அம்பானி பாத்திரம்] கூறுவார் இந்த குருவை ஜெயிக்கணும்னா நீ குருவா மாறனும் ஆனா குரு ஒருத்தன்தான், என்ற வசனம் இடம் பெற்றிருக்கும் நன்கு சிந்திப்பவர்களால் மட்டுமே உணர முடியும் இந்த வசனத்தில் எத்தனை தன்னம்பிக்கை உள்ளது என்று, அவர் தன்னை மட்டுமே எவ்வளவு பெரிதாக கருதினாரோ அவ்வளவு பெரிய வசனம்.
திருபாய் வல்லவராக திகழ்ந்தார் உழைத்தால் வருமானம் பெருகும் என்று இருந்திருந்தால் இன்று அம்பானி பம்பாயில் ஒரு அப்பார்ட்மெண்டில் சொந்தமாக ஒரு வீடும் ஒரு காரும் வாங்கி இருப்பாரே ஒழிய சரித்திரம் ஆகி இருக்க மாட்டார், இன்றைக்கு முகேஷ் அம்பானி பம்பாயில் கட்டி இருக்கும் வீட்டின் மதிப்பு எவ்வளவு தெரியுமா சுமார் 9000 கோடிகள், உலகிலேயே மிக அதிக செலவில் கட்டப்பட்ட வீடு இதுதான், மூன்று ஹெலிகாப்டர்கள் நிறுத்தும் வசதியோது கட்டப்பட்ட வீடு, இந்த வாழ்க்கை திருபாயின் அசாத்தியதால் வந்தது அவர் அப்பாவியாக இருக்கவில்லை வல்லவராக திகழ்ந்தார் எதிரிகளின் சூழ்ச்சி வலையை வைத்தே லாபம் ஈட்டி தன்னுடன் மோதினால் என்னாகும் என்பதை நிரூபித்திருந்தார்.
அரசாங்க கொள்கைகளை தனக்கு சாதகமாக்கி கொள்கிறார் என்பது அவர் மீது உள்ள இன்னொரு குற்றச்சாட்டு காலப்போக்கில் நாட்டின் பிரதமரையே மந்திரி ஆக்கும் அளவிற்கு அரசாங்கத்திலும் முடி சூட மன்னனாக திகழ்ந்தார் , பங்கு சந்தையில் தன்னுடன் மோதியவர்களுக்கு திருபாய் கொடுத்த பதிலடியும் அந்த நேரத்தில் அவர் தைரியமாக அந்த பிரச்சினையை கையாண்ட விதமும் அரசாங்கத்தையே வியப்பில் ஆழ்த்தியது.
1982 ஆம் ஆண்டில், பகுதியாக மாற்றத்தக்க கடன்பத்திரங்கள் தொடர்பாக உரிமைப் பிரச்சினைக்கு எதிராக ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் வந்தது. தங்களது பங்கு விலைகள் ஒரு அங்குலம் கூடக் குறையா வண்ணம் பார்த்துக் கொள்வதற்கு அவசியமான அனைத்து முயற்சிகளையும் நிறுவனம் மேற்கொண்டதாக கூறப்பட்டது. வாய்ப்பை உணர்ந்த, கரடிச் சந்தையில் லாபமீட்டும் கல்கத்தாவைச்சேர்ந்த பங்கு புரோக்கர்கள் குழு ஒன்று ரிலையன்ஸ் பங்குகளை அதிக விலையில் விற்று பின் குறைந்த விலையில் வாங்கிக் கொள்ளும் நோக்குடன் கையிருப்பிலில்லாமல் விற்கத் துவங்கியது.
இதனை எதிர்கொள்ள, மற்றுமொரு பங்கு புரோக்கர்கள் குழு ஒன்று, இன்று வரை இவர்கள் “ரிலையன்ஸின் நண்பர்கள்” என்று தான் குறிப்பிடப்படுகிறார்கள், பம்பாய் பங்குச் சந்தையில்கையிருப்பு இல்லாத நிலையில் விற்கப்பட்ட ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் பங்குகளை வாங்கத் துவங்கினர்.
காளைகளுக்கு பரிவர்த்தனையை நிறைவு செய்ய போதுமான பணம் இல்லாது போய் விடும், அப்போது அவர்கள் பம்பாய் பங்குச் சந்தையின் “பத்லா” வர்த்தக முறையின் கீழ் செட்டில்மென்டுக்கு தயாராய் இருப்பார்கள் என்கிற அடிப்படையில் தான் கரடிச் சந்தையில் லாபமீட்டும் கூட்டம் பங்குகள் கையில் இல்லாமல் விற்பனை செய்து கொண்டிருந்தது.
காளைகள் தொடர்ந்து வாங்கிக் கொண்டிருந்தார்கள், செட்டில்மென்ட் தேதி வரையிலும் ஒரு பங்கு ரூ. 152 என்கிற நிலையே தொடர்ந்து பாதுகாக்கப்பட்டது.செட்டில்மென்ட் தேதியில், காளைகள் பங்குகளின் பத்திரங்களை சமர்ப்பிக்க கோரியபோது இந்த கரடிச்சந்தை லாபமீட்டும் குழு திகைத்துப் போனது. ரிலையன்ஸ் பங்குகளை வாங்கியிருந்த பங்கு புரோக்கர்களுக்கு பரிவர்த்தனையை நிறைவு செய்வதற்கு தேவையான பணத்தை திருபாய் அம்பானியே வழங்கினார்.
பங்கு பத்திரங்களை வழங்க முடியாத நிலையில், காளைகள் “அன்பத்லா” (அபராதத் தொகை) பங்குக்கு ரூ.35 கோரினர். இதனால், பங்குகளின் தேவை அதிகரித்து, ரிலையன்ஸ் பங்குகளின் விலை சில நிமிடங்களிலேயே 180 ரூபாய்க்கும் அதிகரித்து விட்டது. இந்த செட்டில்மென்டானது சந்தையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது, திருபாய் அம்பானி பங்குச் சந்தைகளின் முடிசூடா மன்னராகியிருந்தார். ரிலையன்ஸ் உடன் மோதுவது எவ்வளவு அபாயகரமானது என்பது அவர் தனது எதிர்ப்பாளர்களுக்கு அவர் நிரூபித்தார்.
இந்த சூழ்நிலைக்கு ஒரு தீர்வினைக் காண, பம்பாய் பங்குச் சந்தை மூன்று வர்த்தக தினங்களுக்கு மூடப்பட்டது. பம்பாய் பங்குச் சந்தை (BSE) அதிகாரிகள் இந்த விஷயத்தில் தலையீட்டு, “அன்பத்லா” தொகையை பங்குக்கு ரூ.2 என குறைத்தனர், கரடிச் சந்தையில் லாபமீட்டும் குழு பங்குகளை அடுத்த சில நாட்களுக்குள் வழங்க வேண்டும் என்கிற நிபந்தனையுடன். இதனால் அதிகமான விலை அளவுகளில் சந்தையில் இருந்து ரிலையன்ஸ் பங்குகளை வாங்கும் நிர்ப்பந்தம் கரடிச்சந்தையில் லாபமீட்டும் குழுவுக்கு நேர்ந்தது, அத்துடன் திருபாய் அம்பானியே அந்த குழுவுக்கு பங்குகளை அதிகமான விலையில் வழங்கி அந்த குழுவின் சாகச முயற்சியின் மூலம் கனமான ஆதாயம் ஈட்டினார் என்பதும் பிறகு தெரிய வந்தது.
இந்த சம்பவத்திற்கு பிறகு, அவரது எதிர்ப்பாளர்கள் மற்றும் ஊடகங்கள் மூலம் பல கேள்விகள் எழுப்பப்பட்டன. சில வருடங்களுக்கு முன் வரை நூல் வியாபாரம் செய்து கொண்டிருந்த ஒருவர் எப்படி ஒரு நெருக்கடியான காலத்தில் இவ்வளவு பெரும் பணத்தைப் புரட்ட முடிந்தது என்பதை பலரால் புரிந்து கொள்ள முடியவில்லை.
இதற்கான பதிலை அப்போதைய நிதி அமைச்சரான பிரணாப் முகர்ஜி நாடாளுமன்றத்தில் வழங்கினார். வெளிநாடு வாழ் இந்தியர்கள் 1982-83 காலத்தில் ரிலையன்ஸில் ரூ.22 கோடியை முதலீடு செய்திருந்ததாக அவையில் அவர் தெரிவித்தார். குரோகடைல், லோட்டா மற்றும் ஃபியாஸ்கோ ஆகிய பல நிறுவனங்கள் வழியாக அவர்களது முதலீடுகள் திருப்பப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
இந்த நிறுவனங்கள் முதன்மையாக ஐஸ்ல் ஆஃப் மேன் இல் பதிவு செய்யப்பட்டிருந்தன. சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இந்த நிறுவனங்களின் அனைத்து பங்குதாரர்கள் அல்லது முதலாளிகளின் துணைப்பெயர்களும் ஷா என ஒரேபெயரில் முடிவதாய் இருந்தது. இந்த விஷயம் தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி மேற்கொண்ட விசாரணை ரிலையன்ஸ் அல்லது அதன் முக்கிய பங்குதாரர்கள் எந்த முறையற்ற அல்லது சட்டவிரோத செயல்கள் அல்லது நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என தீர்மானித்தது.
இந்தியாவில் தொழில்முனைவோராக விரும்புபவர்களுக்கெல்லாம் முக்கிய ஆதர்சமாகத் திகழ்பவர் திருபாய் அம்பானி.
மிகச் சாதாரணப் பின்னணியிலிருந்து தொடங்கி படிப்படியாக முன்னேறி ரிலையன்ஸ் எனும் மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியவர் திருபாய் அம்பானி. துணிமணி வியாபாரத்திலிருந்து ஆரம்பித்து, அதன்பின் துணிகளைத் தயாரித்து, பின் பாலியெஸ்டர் வியாபாரம், பாலியெஸ்டர் உற்பத்தி, அதன்பின் பாலியெஸ்டர் உற்பத்திக்கான மூலப்பொருள்களை உருவாக்குவது, அந்த மூலப்பொருள்களின் ஆதாரமான பெட்ரோலிய சுத்திகரிப்பு, அங்கிருந்து பெட்ரோலையே தரையிலிருந்தும், கடலுக்கு அடியிலும் தோண்டுவது என்று படிப்படியாக, பார்த்துப் பார்த்து தன் தொழிற்சாலைகளைக் கட்டியவர். அம்பானி 70 mm அளவுக்கு விரிந்த திரையில் கனவு கண்டார். பிரம்மாண்டமாக மட்டுமே யோசித்தார். அதன் விளைவுதான் இன்று ரிலையன்ஸ் இந்தியாவிலேயே மிகப்பெரிய தனியார் நிறுவனமாக உள்ளது.
ஆனால் இத்தனையும் அதிர்ஷ்டத்தால் வந்ததல்ல. உழைப்பால், தைரியத்தால், முயற்சியால் வந்தது. அதே சமயம் காலத்துக்குத் தகுந்தாற்போல அரசுகளையும் அதிகாரிகளையும் தனக்குச் சாதகமாக வளைத்துக் கொள்வதன் மூலமும் அரசு உத்தரவுகளை தன் வசதிக்கேற்றவாறு புரிந்துகொள்வதன் மூலமும் அம்பானி தன் நிறுவனத்தை வளர்த்தார். அம்பானி, தன்னை எதிர்ப்பவர்களை அவர்களது ஆயுதங்களைக் கொண்டே மழுங்கடித்தார்.
இன்றைய காலகட்டத்தில் திருபாய் அம்பானியின் சில செயல்கள் நமக்கு ஏற்புடையதாக இருக்காது. ஆனால் அவரது விடாமுயற்சி, தன்னம்பிக்கை, இந்தியா மீதான பற்று, சக ஊழியர்கள் மீதான மரியாதை, தொழில் மீதான ஆழ்ந்த பக்தி ஆகியவை இன்றைக்கும் நம் அனைவருக்கும் வழிகாட்டக் கூடியவை. இந்தப் புத்தகம் அம்பானியின் வாழ்க்கை வரலாறு மட்டுமல்ல, கடந்த நாற்பதாண்டுகளில் இந்தியாவின் தொழில்துறையின் வரலாறும் இதில் அடங்கியிருக்கிறது.
இறப்பு
மும்பையில் முல்ஜி-ஜீதா துணிச் சந்தையில் ஒரு சிறு வணிகராக தன்னுடைய வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கிய திருபாய் அம்பானி அவர்கள், 2002 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 6 ஆம் தேதி தன்னுடைய 69 ஆம் வயதில் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
விருதுகளும், மரியாதைகளும்
- 2000 – இந்தியாவின் வேதித் துறையின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு அவருடைய பங்களிப்பைப் பாராட்டி, கெம்டெக் ஃபவுண்டேஷன் மற்றும் கெமிக்கல் இன்ஜினியரிங் வோர்ல்ட் அமைப்புகள் அவருக்கு, ‘நூற்றாண்டின் சிறந்த மனிதர் விருதினை’ வழங்கி கௌரவித்தது.
- 1996, 1998 மற்றும் 2000 ஆம் ஆண்டிடு ஆசியா வீக் இதழ் வெளியிட்ட ‘பவர் – 50 ஆசியாவின் மிகவும் சக்திவாய்ந்த மனிதர்கள்’ பட்டியலில் இடம்பெற்றார்.
- 2001 – தி எக்கனாமிக் டைம்ஸ், பெருநிறுவன சிறப்பு செயல்பாட்டிற்கான ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கியது.
- இந்திய வணிக அமைப்புகளின் கூட்டமைப்பின் மூலம் ‘இருபதாம் நூற்றாண்டின் சிறந்த மனிதராக’ தேர்வு செய்யப்பட்டார்.
- 2000 – டைம்ஸ் ஆஃப் இந்தியா நடத்திய கருத்துக் கணிப்பில், ‘நூற்றாண்டுகளில் மிகப்பெரும் சொத்து உருவாக்க சாதனையாளராக’ தேர்வு செய்யப்பட்டார்.
உழைப்பு, ஒழுக்கம், தன்னம்பிக்கை என அனைத்தையும் தன்னுடைய முன்னேற்றத்தின் மூலதனங்களாக சமர்பித்து, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் என்னும் மாபெரும் தனியார் நிறுவனத்தை உருவாக்கி, இந்தியாவை மற்ற நாடுகள் எல்லாம் வியப்போடு பார்க்கிற வகையில், வணிகத்தில் மாபெரும் புரட்சிக் கண்டவர் திருபாய் அம்பானி அவர்கள். குறிப்பாக சொல்லப்போனால், திறமையும் உழைப்பும்தான் முக்கியமான விஷயம் எனக் கூறிய திருபாய் அம்பானி, இன்று சுயமாகத் தொழில் செய்யும் ஒவ்வொருவரின் வழிகாட்டியாகத் திகழ்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது.