இந்தியாவில் அவிழ்க்கப்படாத 7 மர்ம முடிச்சுகள்!!!
இந்தியா என்பது மர்மங்கள் நிறைந்த பூமியாகும். அறிவியல் விளக்கத்திற்கும் அப்பாற்ப்பட்டு இந்தியாவின் மூலை முடுக்குகளில் பல விஷயங்கள் நடந்து கொண்டிருக்கிறது. சில நேரம் அது வெறும் ஏமாற்று வேலை தான் என்றாலும் கூட சில நேரங்களில் அது நம்மை உறைய வைக்கும் உண்மையாக இருக்கும். இதில் பல மர்மங்களுக்கு விடை கிடைக்காமல் இன்னும் தீர்க்கப்படாமலேயே உள்ளது.
இதோ அப்படி இந்தியாவில் அவிழ்க்கப்படாத 7 மர்ம முடிச்சுகளைப் பற்றி தான் நாம் பார்க்க போகிறோம்.
நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் மரணம்
இந்திய சுதந்திரத்துகாக வெள்ளையர்களை எதிர்த்து போராடிய நேதாஜியைப் பற்றி அறியாதவரே இருக்க முடியாது. ஃபோர்மோசா (தைவான்) என்ற இடத்தில் அவர் சென்ற ஜப்பானிய விமானம் வெடித்ததால், ஆகஸ்ட் 18, 1945 ஆம் ஆண்டில் அவர் தீயில் கருகி இறந்து போனார் என தகவல்கள் கூறுகிறது. ஆனால் அவரின் ஆதரவாளர்களோ, குறிப்பாக வங்காளத்தில், அவர் இறந்து விட்டார் என்பதை அவர்கள் நம்பவில்லை. அவரின் மரணத்தை கேள்விப்பட்ட காந்திஜி இப்படி கூறியுள்ளார் “சுபாஷ் இறக்கவில்லை. சுபாஷால் இப்படி இறக்க வாய்ப்பில்லை”.
லால் பகதூர் சாஸ்திரியின் மரணம்
இந்தியாவின் இரண்டாம் பிரதம மந்திரியான சாஸ்திரி அவர்கள் 1966 ஆம் ஆண்டில் டாஷ்கென்ட் என்ற இடத்தில் டாஷ்கென்ட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட சில மணிநேரங்களில் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அரை நூற்றாண்டை கடந்த போதிலும், இன்று வரை அவர் மரணத்தில் மர்மம் நீடிப்பதாக கருதப்படுகிறது. 2009 ஆம் ஆண்டில் அனுஜ் தர் என்ற பத்திரிகையாளர், சாஸ்திரியின் மரணத்தைப் பற்றிய தகவல் வேண்டும் என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பிரதம மந்திரியிடம் கோரிக்கை விடுத்தார். ஆனால் அப்படி தெரிவித்தால் அது இந்தியாவின் வெளிநாட்டு உறவுகளில் பாதிப்பை உண்டாகும் என அவரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. அவரின் மரணத்தின் போது, அவருக்கு விஷம் கொடுக்கப்பட்டது என்ற சந்தேகத்தின் பேரில் ரஷிய நாட்டு சமையல்காரர் ஒருவர் கைது செய்யப்பட்டு, பின் விடுதலை செய்யப்பட்டார். அவருக்கு மாரடைப்பு என சொல்லப்பட்டாலும், அவர் விஷம் கொடுத்து கொல்லப்பட்டார் என அவரின் குடும்பத்தார் வலியுறுத்துகின்றனர்.
ரூப்குந்த் ஏரி
உத்தர்கண்ட் உள்ளூர்வாசிகளால் மர்ம ஏரி என அழைக்கப்படும் ரூப்குந்த் உறைபனி ஏரி உத்தர்கண்ட் மாநிலத்தில் உள்ளது. யாருமே வசிக்காத இந்த பகுதி, இமயமலையின் மீது 5,029 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. 2 மீட்டர் ஆழத்தை கொண்டுள்ள இந்த ஏரியின் முனையில் நூற்றுக்கணக்கான மனித எலும்புக்கூடுகளை காணலாம். ஆன்மீக ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் இதனைப் பற்றி பல கருத்துக்கள் கூறப்பட்டு வருகிறது. அதன் படி, 9-ஆம் நூற்றாண்டிற்கு முன்பிலிருந்தே இவை இங்கு கிடக்கிறது. இந்த எலும்புகளின் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைகழகம் ஆராய்ந்த போது அது 850 ஆம் வருடத்தை சேர்ந்ததாக இருக்கலாம் என தெரிவித்துள்ளது. ஆனால் எதுவும் உறுதியாக தெரியவில்லை.
ஓம் பன்னா
ஓம் பன்னா என்பது ஜோத்பூரில் உள்ள பாளி மாநகராட்சியில் உள்ள மோட்டார் பைக் கோவிலாகும். பாதுகாப்பான பயணத்திற்கு இங்குள்ள 350 சிசி ராயல் என்ஃபீல்ட் புல்லட்டை தான் கடவுளாக அனைவரும் வழிபடுகின்றனர். 1988 ஆம் ஆண்டில் ஓம் பன்னா தன் மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்த போது ஒரு மரத்தில் மோதி அங்கேயே இறந்துள்ளார். மறுநாள் காலை அந்த பைக்கை காவலர்கள் அருகிலுள்ள காவல் நிலையத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். ஆனால் மறுநாள் அந்த பைக் விபத்து நடந்த பகுதியில் இருந்துள்ளது. அதனை மீண்டும் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்த காவலாளிகள் பைக்கில் இருந்த பெட்ரோலை எடுத்து விட்டு, அதனை சங்கிலியால் கட்டி போட்டு வைத்துள்ளனர். ஆனால் மீண்டும் அது மாயமாகி, விபத்து நடந்த பகுதிக்கு சென்றுள்ளது. இது பல தடவை நடந்திருக்கிறது. அதிசயமாக பார்க்கப்பட்ட இச்சம்பவத்தால் அனைவரும் அந்த பைக்கை வணங்க தொடங்கினர். அன்றாடம் அந்த பாதையை கடப்பவர்கள் அந்த பைக்கையும் ஓம் பன்னாவையும் வணங்கி விட்டு தான் செல்கின்றனர். சில ஓட்டுனர்கள் மதுபானத்தையும் அதற்கு படைக்கின்றனர்.
ஸ்டோன்மேன்
யாரென்று கண்டுபிடிக்க முடியாத ஒரு தொடர்ச்சி கொலைகாரனுக்கு அளிக்கப்பட பெயரே ஸ்டோன்மேன். இவன் கொல்கத்தாவில் 1989 ஆம் வருடம் வீடு இல்லாத 13 நபர்களை கொன்றுள்ளான். 6 மாதத்தில் 13 பேர்களை கொன்றதாக கூறப்படும் அவன், இதை தனியாக செய்தானா அல்லது கூட்டாக செய்தானா என்பது தெரியவில்லை. இன்று வரை இந்த குற்றத்திற்காக யாருமே கைது செய்யப்படவில்லை. இதனை யார் செய்தது என கொல்கத்தா காவலர்களால் கடைசி வரியா கண்டுபிடிக்க முடியவில்லை. இதே போலான தொடர்ச்சி கொலைகள் மும்பையிலும் குவாஹத்தியிலும் நடந்துள்ளது.
சாந்தி தேவி
1930-களில், டெல்லியை சேர்ந்த 4 வயதான சாந்தி தேவி என்ற குழந்தை, தான் இதற்கு முன் மதுராவில் வாழ்ந்ததாக தன் பெற்றோர்களிடம் கூறியுள்ளது. தான் 3 குழந்தைகளுக்கு தாய் என்பதையும் ஒரு பிரசவத்தின் போது இறந்து விட்டதாகவும் கூறியுள்ளது. இதற்கு முன் தன் பெயர் லுட்கி எனவும் கூறியுள்ளது. இதனை கேட்ட அவளின் பெற்றோர்கள் விசாரணையில் இறங்கிய போது, மதுராவில் லுட்கி என்ற பெண் சமீபத்தில் இறந்தது தெரிய வந்தது. சாந்தி தேவியை அந்த கிராமத்திற்கு அழைத்து சென்ற போது, அவள் உள்ளூர் மொழியில் சரளமாக பேச தொடங்கினால். தன் பூர்வ ஜென்ம கணவன் மற்றும் குழந்தைகளை அடையாளம் கண்டால். இதனை கேள்விப்பட்ட மகாத்மா காந்தி, இதனை விசாரிக்கும் படி ஒரு குழு ஒன்றை நியமித்தார். அதன் படி 1936 ஆம் ஆண்டு ஒரு அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டது. அதன் படி அப்பெண் லுட்கியின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களில் இருந்து 24 சரியான தகவல்களை அளித்துள்ளார்.
ப்ரஹ்லாத் ஜானி
மாதாஜி என்றழைக்கப்படும் ப்ரஹ்லாத் ஜானி, 1940 ஆம் ஆண்டு முதல் தண்ணீர் மற்றும் உணவருந்தாமல் வாழும் ஒரு துறவியாகும். தனக்குள் கடவுள் இருப்பதாக அவர் கூறுகிறார். அவரை வைத்து இரு முறை சோதனை ஆய்வுகள் நடைப்பெற்றுள்ளது. 2010-ல் நடந்த அந்த இரண்டாம் ஆய்வில், தொடர்ச்சியாக 15 நாட்களுக்கு அவர் 24 மணிநேர வீடியோ கண்காணிப்பில் வைக்கப்பட்டார். இந்த 15 நாட்களுக்கு அவரின் ஆரோக்கியத்தை 35 விஞ்ஞானிகள் கண்காணித்து வந்தனர். ஆனாலும் அவர் தண்ணீர் மற்றும் உணவருந்தியதற்கு எந்த ஒரு சான்றும் இல்லை. இந்த 15 நாட்கள் முடியும் வரை அவருடைய உடலில் பசி அல்லது நீர்ச்சத்து குறைவதால் ஏற்படும் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை. யோகா உடற்பயிற்சிகளால் அவரின் உடல் இப்படி மாறியிருக்கலாம் என ஒரு காரணம் கூறப்படுகிறது. இரண்டு வாரம் உண்ணாமல் இருந்த பிறகு அவர் 40 வயது மனிதனை விட ஆரோக்கியமாக இருந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.