மனிதர்கள் மூன்று வகை…
துடிப்போர்
எடுப்போர்
கொடுப்போர்!
பிறரைப் பற்றியே பேசுவோர்
தன்னைப் பற்றியே பேசுவோர்
தன்னைப் பற்றிப் பேச வைப்பவர்!
தவறு செய்வோர்
தண்டனை தருவோர்
தவறுகளையும் தவறின்றிச் செய்வோர்!
அறிவுரை கேட்போர்
அறிவுரை சொல்வோர்
அதன் படி வாழ்வோர்!
சிந்திப்போர்
செயல்படுவோர்
சிந்தித்துச் செயல்படுவோர்!
அறிவுடையோர்
ஆற்றலுடையோர்
அறிவை ஆற்றலுடன் வெளிப்படுத்துவோர்!
சிரிக்காதவர்
சிரிப்பவர்
சிரிக்கவைப்பவர்!
பேசாதவர்
பேசுபவர்
பேசவைப்பவர்!
மாறாதவர்
மாறுபவர்
மாற்றுபவர்!
கருவிகளை நம்புவோர்
கடவுளை நம்புவோர்
தன்னை நம்புவோர்!
வாழ்க்கையைத் தொலைத்தவர்
வாழ்க்கையைத் தேடுபவர்
வாழப் பிறந்தவர்!
காலத்தின் பின்னால் ஓடுபவர்
காலத்தின் முன்னல் ஓடுபவர்
காலத்துடன் செல்பவர்!
வாய்ப்பில்லை என வாடுவோர்
வாய்ப்புகளைத் தேடுவோர்
வாய்ப்புகளை உருவாக்குவோர்!
வரலாறு பேசுவோர்
வரலாறு படிப்போர்
வரலாறு படைப்போர்!
ஆசிரியர் ஒருவர் பாடம் நடத்திக் கொண்டிருக்கும் போது ” இவ்வுலகில் மூன்று வகை மனிதர்கள் இருக்கிறார்கள்.
தங்களைச் சூழ்ந்து உள்ளவர்களின் இனிமையைக் கெடுத்து அவர்களுக்குத் துன்பம் தருபவர்கள் முதல் வகையினர். இவர்கள் கொடியவர்கள். அடுத்தவர்கள் தங்கள் சுயநலத்திற்காக அடுத்தவர்களைச் சுரண்டி வாழ்பவர்கள். இவர்கள் தீயவர்கள். மூன்றாவது வகையினர் தாங்கள் இருக்கும் சூழலில் எல்லோரையும் மகிழ்ச்சியாக இருக்க வைப்பவர்கள். மேலும் மேலும் இனிமையைச் சேர்ப்பவர்கள். இவர்கள் நல்லவர்கள்.” என்றார்.
ஒரு மாணவன் எழுந்து, ” நீங்கள் சொல்வது எங்களுக்குப் புரியவில்லை” என்றான்.
உடனே அந்த ஆசிரியர் தன் பையில் இருந்து மூன்று பொம்மைகளை எடுத்தார். ஒன்று களிமண் பொம்மை, அடுத்தது பஞ்சுப் பொம்மை, மூன்றாவது சர்க்கரைப் பொம்மை.
மூன்று பாத்திரங்களில் தண்ணீர் ஊற்றினார்.
முதல் பாத்திரத்தில் களிமண் பொம்மையைப் போட்டார். தண்ணீரில் கரைந்த அது தண்ணீரையும் பாழாக்கி விட்டது.
இரண்டாவது பாத்திரத்தில் பஞ்சுப் பொம்மையைப் போட்டார். அந்தப் பொம்மை பாத்திரத்தில் இருந்த தண்ணீரை எல்லாம் உறிஞ்சிக் கொண்டது.
மூன்றாவது பாத்திரத்தில் சர்க்கரைப் பொம்மையைப் போட்டார். அந்தப் பொம்மை பாத்திரத்தில் இருந்த தண்ணீரில் கரைந்து தண்ணீரை இனிமை ஆக்கியது.
“இந்த மூன்று பொம்மைகள் மாதிரிதான் மூன்று வகை மனிதர்கள் இருக்கிறார்கள்”என்றார் ஆசிரியர்.
மாணவர்களுக்கு இப்போது புரிந்தது மூன்று வகை மனிதர்களைப் பற்றி…
இதில் நீங்க எந்த வகை மனிதராக இருக்கிறீர்கள் என்று தன்மதிப்பீடு செய்துகொள்ளுங்கள்..