Home » பொது » கிறிஸ்துமஸ் பற்றி உலகெங்கும் உள்ள சில சுவாரஸ்யங்கள்!!!
கிறிஸ்துமஸ் பற்றி உலகெங்கும் உள்ள சில சுவாரஸ்யங்கள்!!!

கிறிஸ்துமஸ் பற்றி உலகெங்கும் உள்ள சில சுவாரஸ்யங்கள்!!!

உலகின் பெரும்பாலான மக்களால் நினைவுகூறப்படுகிற ஒரு பண்டிகை உண்டென்றால் அது கிறிஸ்துமஸ் என்னும் உலக இரட்சகரான இயேசு கிறிஸ்து பிறந்ததை நினைவுகூறும் பண்டிகையே என்பது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய உண்மையே.

அனேக பாரம்பரிய மற்றும் பல கிறிஸ்தவ தேவாலயங்களில் அலங்கரிப்பதும் பிறப்பின் பாடல் ஆராதனைகள்  நடத்துவதும், ஸ்டார் கட்டுவதும் கிறிஸ்துமஸ் மரம் வைத்து அலங்கரிப்பதும், கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டை அனுப்புவதும் என்று மிகவும் சுறுசுறுப்பாக இயங்கக்கூடிய காலமித.

இது எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக சாண்டா கிளாஸ் எனக்கூடிய கிறிஸ்துமஸ் தாத்தா பெரியோர் முதல் சிறியோர் வரை அனைவரையும் மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்துவதை காண முடியும், சிறு பிள்ளைகளை மிகவும் உற்சாகத்தில் ஆழ்த்தக்கூடிய இத்தருணங்கள் யாரால் எப்படி தோற்றுவிக்கப்பட்டது என்பதை நாம் அறிவதும் அவசியம் என்பதற்காக, இந்த பதிவை உங்கள் முன் வைப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

பெத்லகேமில் கிறிஸ்துமஸ்இயேசு கிறிஸ்து பிறந்த இடமான பெத்லகேமில்  உள்ள “சர்ச் ஆப் நேட்டிவிட்டி” யில் எளிமையான, இனிமையான கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நடைபெறுகிறது. மேற்குக் கரையில் உள்ள சிறுநகரான பெத்லகேமில் ஒவ்வொரு ஆண்டும் உலகெங்கிலும் இருந்து வரும் கிறிஸ்தவர்களும், உள்ளூர் மக்களும் கிறிஸ்துமஸ் பண்டிகையைச் சேர்ந்து கொண்டாடுகிறார்கள்.

இதையொட்டி “சர்ச் ஆப் நேட்டிவிட்டி”, வண்ண வண்ணக் கொடிகளாலும், அலங்கார விளக்குகளாலும் அலங்கரிக்கப்படுகிறது. நாடகங்களுடன் கூடிய ஊர்வலம் ஒன்றும் நடத்தப்படுகிறது. இதில், அலங்கரிக்கப்பட்ட குதிரைகளில் அமர்ந்தவர்கள் முன்னிலை வகித்துச் செல்கிறார்கள்.

பெருவாரியான மக்கள், மத குருக்கள், பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் இதில் கலந்து கொள்கிறார்கள். தேவாலயத்தில் தெய்வக் குழந்தையின் சொரூபமும், அதன் பிறப்பைக் குறிக்கும் வெள்ளி நட்சத்திரமும் அமைந்திருக்கும் இடத்தில் ஊர்வலம் முடிவடைகிறது.

கிறிஸ்துமஸை ஒட்டி பெத்லகேமில் உள்ள ஒவ்வொரு கிறிஸ்துவரின் இல்லத்திலும் முன் கதவில் “சிலுவை” தீட்டப்படுகிறது. தொழுவத்தில் இயேசு பிறப்புக் காட்சியை உருவாக்கி வைக்கிறார்கள்.
ஈரானில் கிறிஸ்துமஸ்
இஸ்லாமிய நாடான ஈரானிலும் கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுகிறது. இயேசு அவதரித்த போது அவரைக் காண வந்த வான சாஸ்திரிகளில் சிலர் வசித்த நாடாக ஈரான் கருதப்படுகிறது. ஈரானிய கிறிஸ்துவர்கள் கிறிஸ்துமஸை ஒட்டி டிசம்பர் 1-ம் தேதி முதல் நோன்பு இருக்கின்றனர். இக்காலத்தில் அவர்கள் அசைவம் உண்பதில்லை. இது “சிறுநோன்பு” எனப்படுகிறது. (ஈஸ்டருக்கு முந்தைய ஆறு வார காலத்தில் அவர்கள் “பெருநோன்பு” நோற்கின்றனர்.) கிறிஸ்துமஸ் அன்று தடபுடலான விருந்து உண்டு.
சீனாவில் கிறிஸ்துமஸ்
கம்யூனிச நாடான சீனாவில் கிறிஸ்தவம், அரசாங்கத்தால் அதிகாரப்பூர்வமாக ஏற்கப்பட்ட மதமல்ல. ஆனால் இங்கும் ஆண்டுக்காண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களைகட்டி வருகின்றன.
கிறிஸ்துமஸ் தாத்தா
கிறிஸ்துமஸ் காலத்தில் வெள்ளைத் தாடி, சிவப்புத் தொப்பி-ஆடையில் வரும் “சான்டா கிளாஸ்” எனப்படும் கிறிஸ்துமஸ் தாத்தா, இரவில் யாருக்கும் தெரியாமல் பரிசுப் பொருட்களை வீட்டுக்குள் எறிந்துவிட்டுப் போவதாக உலக மழலைகள் நம்புகிறார்கள்.
துருக்கி நாட்டைச் சார்ந்த “செயின்ட் நிக்கோலஸ்” என்ற பாதிரியார்தான் கிறிஸ்துமஸ் தாத்தா ஆனதாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு வரலாற்று ரீதியான ஆதாரம் இல்லை என்று சொல்வோரும் உண்டு. ஆனாலும் அன்பின் அடையாளமாக கிறிஸ்துமஸ் தாத்தா உலா வருவது சிறுவர்களை மகிழ்விக்கிறது.
கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டை 1843-ம் ஆண்டு சர்.ஹென்றி கோல் என்பவரால் முதல் கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டை அனுப்பப்பட்டது. 1846-ல் ஜோசப் அன்டால் என்ற ஓவியர் ஆயிரக்கணக்கில் வாழ்த்து அட்டைகளை அச்சிட்டார். மக்கள் வாழ்த்து அட்டைகளில் வடிவு, நேர்த்தி, தொழில் நுட்பம் என பல்வேறு வகைகளிலும் கவரப்பட்டு கோடிக்கணக்கான மில்லியன் டாலர் வியாபாரப் பொருளாக வாழ்த்து அட்டை புழக்கத்திற்கு வந்தது. கிறிஸ்துமஸ் விழாவின் போது உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் வாழ்த்தும் அன்பும் அறிவித்து அன்புறவை புதுப்பிக்கும் பணியை வாழ்த்து அட்டைகள் செய்கின்றன.

கிறிஸ்துமஸ் நட்சத்திரம் 

அரேபிய நாடான சிரியா நாட்டைச் சேர்ந்த வானசாஸ்திரிகள் இயேசு பிறந்த இடத்தை காட்டிய வான் நட்சத்திரத்தை வாழ்த்தவும் அப்புதுமையை நினைவுபடுத்தவும் கிறிஸ்துமஸ் நட்சத்திரம் தொங்க விடப்படுகிறது.

கிறிஸ்துமஸ் குடில்

1223-ம் ஆண்டு இத்தாலி நாட்டில் பிரான்சிஸ் அச்சி என்ற புனிதரால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இயேசுவின் பிறப்பை வெளிப்படுத்தும், நினைவூட்டும் சிலைகளின் வழிபாடே கிறிஸ்துமஸ் குடில் வழிபாடு எனப்படுகிறது. இறை இயேசு பிறந்த மாட்டுக் குடில், இறை இயேசுவின் பெற்றோர்கள் இறை இயேசு என அன்றைய பெத்லகேமை ஒவ்வொரு ஊரிலும் அமைப்பதே மாட்டுக் குடிலும், தேவபாலமும் என்ற கிறிஸ்துமஸ் குடிலின் அமைப்பாகும். பிறந்த இயேசு பாலனை முத்தமிட்டு மகிழும் உள்ளங்களில் அன்பு, அமைதி, சமாதானம் என்று இறை இயேசு பிறக்கிறார் என்கிற நம்பிக்கையை உருவாக்க அமைக்கப்படுகிறது.

கிறிஸ்துமஸ் மரம்

மனித வழிபாட்டு முறைகளின் துவக்கம் இயற்கை வழிபாடாகும். மனிதன் இயற்கையை வணங்கினான். ஸ்காண்டி நேவியர்கள் மரத்தை வழிபடுபவர்கள். அவர்கள் கிறிஸ்துவ மதத்திற்கு மனம் மாறினார்கள். கிறிஸ்தவ மதக் கோட்பாடுகளினபடி கலாச்சார மயமாகுதல், பண்பாடு மயமாகுதல் என்ற நெறிப்படி புதிய கிறிஸ்துவ மதத்திலும் ஸ்காண்டி நேவிய மக்களுக்கு மரத்தை வழிபட வழியிருந்தது. அவர்கள் மரங்களை மின் விளக்குகளால் அலங்கரித்து வணங்கினர். 500 ஆண்டுகளுக்கு முன் ஜெர்மனியர்கள் கிறிஸ்துமஸ் மரத்தை அலங்கரிக்க ஆரம்பித்தனர். 1841-ம் ஆண்டு இங்கிலாந்து இளவரசர் ஆல்பர்ட் தனது ராஜமுறை கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டத்தில் கிறிஸ்துமஸ் மரத்தை அறிமுகப்படுத்தினார்.கிறிஸ்துமஸ் கேக் 

ஒவ்வொரு விழாக்களுக்கும் ஓர் சிறப்பான உணவு, விழா உணவாக கருதப்படும்,அந்தவகையில் கிறிஸ்துமஸ் கேக் மேற்கித்திய கலாச்சாரத்தின்படி  கிறிஸ்துமஸ் விழாவின் சிறப்பான உணவு பொருளாக இருக்கிறது.

கிறிஸ்துமஸ் பூ
மெக்சிகோவில் “போய்ன்செட்டியா” என்பது கிறிஸ்துமஸ் மலராகக் கருதப்படுகிறது. இதைப் “புனித இரவின் பூ” என்கிறார்கள்.
கிறிஸ்துமஸ் ஆடு
ஸ்வீடனில் கிறிஸ்துமஸ் அலங்காரங்களில் ஒன்றாக “ஜுல்பக்” என்ற வைக்கோலால் ஆன வெள்ளாடு இடம் பெறுகிறது.
கிறிஸ்துமஸ் நம்பிக்கைகள்

கிறிஸ்துமஸ் குறித்து கிறித்தவர்களிடம் வேறு சில நம்பிக்கைகளும் நிலவுகின்றன. அவை;

 

கிறிஸ்துமஸ் நாளில் பிறக்கும் குழந்தைக்குச் சிறப்பு அதிர்ஷ்டம் உண்டு.

 

கிறிஸ்துமஸ் நாளில் பனி பொழிந்தால் ஈஸ்டர் காலம் பசுமையாக இருக்கும்.

 

கிறிஸ்துமஸ் நாளில் நீங்கள் எத்தனை வீடுகளில் விருந்து உண்கிறீர்களோ, வரு கிற ஆண்டில் அத்தனை மாதங்கள் உங்களுக்கு மகிழ்ச்சியானதாக இருக்கும்.

 

கிறிஸ்துமஸ் கேக்குகளில் நாணயம், மோதிரம் போன்றவற்றை மறைத்து வைத்துப் பரிசளிப்பது மேலை நாடுகளில் வழக்கம். நாணயம் கிடைக்கப் பெற்றவர் பணக்காரராவர். மோதிரம் கிடைத்தால் விரைவில் திருமணமாகும் என்பது பொதுவான நம்பிக்கை.

 

கிறிஸ்துமஸ் மாலையில் நீங்கள் ஓர் ஆப்பிள் சாப்பிட்டால் அடுத்த ஆண்டு முழுவதும் ஆரோக்கியமாக இருப்பீர்கள்.

 

கிறிஸ்துமஸ் நள்ளிரவில் பரலோகத்தின் கதவுகள் திறக்கின்றன. அப்போது அமரராவோர் நேராக பரலோகத்தை அடைவர்.

 

கிறிஸ்துமஸ் இரவில் ஏற்றப்படும் மெழுகுவர்த்திகள் மறுநாள் காலையில் அவை தானாக அணையும்வரை அணைக்கப்படக் கூடாது.

 

கிரேக்க நாட்டில், தொடர்ந்து வரும் ஆண்டில் தங்களைத் துரதிர்ஷ்டம் தீண்டக்கூடாது என்பதற்காக மக்கள் கிறிஸ்துமஸ் காலத்தில் பழைய காலணிகளை எரிக்கிறார்கள்.

 

உக்ரைனில், கிறிஸ்துமஸ் நாளில் வீட்டில் புதிதாக சிலந்தி வலை அமைத்திருந்தால் அது அதிர்ஷ்டகரமானதாகக் கருதப்படுகிறது.

 மேலே உள்ள குறிப்புகளெல்லாம் உங்கள் சிந்தனைக்காகவே கொடுக்கப்படுகிறது, நல்லதை தெரிந்துக்கொண்டு, கிறிஸ்தவம் போதிக்காத மூட நம்பிக்கைகளை தூர தள்ளிவிடுங்கள், மெய்யான கிறிஸ்துமஸ் எதுவென்றால் கிறிஸ்து உங்கள் உள்ளத்தில் பிறப்பதுதான் உண்மையான கிறிஸ்துமஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top