ஆலன் கார்னர் (Alan Garner) – என்ற இங்கிலாந்தின் பிரபல எழுத்தாளர் ஒரு கதை எழுதினார்.
வானுலகத்திலிருக்கும் ஒரு தேவதை பூமியைப் பார்க்க ஆசைப்படுகிறாள். அவளை ஒரு நிபந்தனையோடு பூமிக்கு அனுப்புகிறார்கள். ‘உலகத்தில் உள்ள எல்லாவற்றையும் பார்த்து ரசிக்கலாம். ஆனால் எந்த இளைஞனையாவது பார்த்து காதல் வயப்படக்கூடாது. அப்படி காதல் வயப்பட்டு அவனை திருமணம் செய்து, ஒரு நாள் வாழ்ந்தாலும், அடுத்த நாளே பொன்னிறமான இறக்கையுள்ள தேவதையான நீ அழகில்லாத ஆந்தையாக மாறிவிடுவாய்’.
இப்படி எச்சரிக்கை செய்யப்பட்ட தேவதை, பூமிக்கு வந்தாள். வானுலகத்தில் இல்லாத பல துயரமான விஷயங்கள் பூமியில் இருப்பதைப் பார்த்து வருந்தினாள். ஆனால், இங்கு வாழும் மனிதர்களின் காதலும், அதில் வரும் தடைகளும் அவளுக்கு மிகவும் ரசனையாகத் தோன்றிவிட்டன. அதை நேரடியாக அனுபவிக்க தேவதை ஆசைப்பட்டுவிட்டாள். ஓர் இளைஞனைக் காதலிக்க ஆரம்பித்தாள்.
பிறகு அந்தச் சுகத்திலிருந்து மீளமுடியாமல் அவனைத் திருமணம் செய்ய முடிவெடுக்கும்போது அவளுக்கு வானுலகத்தின் எச்சரிக்கை மீண்டும் ஞாபகப்படுத்தப்பட்டது.
ஒரே ஒரு நாள் பூமியில் உள்ள இளைஞனுக்கு மனைவியாக வாழ்ந்து, அந்தச் சுகத்தை அனுபவித்துவிட்டுப் பிறகு அடுத்த நாளிலிருந்து காலம் முழுவதும் ஆந்தையாகத் துயரப்படுவதா அல்லது காதலைத் தியாகம் செய்துவிட்டு, சிறகடித்து வானுலகத்துக்கு அழகிய தேவதையாகப் பறந்து செல்வதா?
தீர்க்கமாக யோசனை செய்தாள். பிறகு உறுதியான ஒரு முடிவுக்கு வந்தாள். காதலனோடு ஒருநாள் வாழ்ந்தால்கூட போதும். அதற்குப் பிறகு என்ன ஆனாலும் பரவாயில்லை.
இந்த விஷயத்தைத் தன் காதலனிடம் சொன்னால் சம்மதிக்க மாட்டான் என்று கருதி தனது வானுலக சாப விஷயங்களை மறைத்து அவனைக் கல்யாணம் செய்து கொண்டாள். ஒருநாள் முழுவதும் இமைப்பொழுதும் பிரியாமல் அர்த்தமுள்ள முழு வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்தாள். அடுத்த நாள், அவள் உருவம் மெல்ல மெல்ல மாறியது. ஆந்தை ஆனாள்.
காதலின் உன்னதத்தை விளக்கவே, ஆலன் கார்னர் The Owl Service (1967) என்ற இந்தக் கதையை எழுதினார்.
சாதாரணமாக, ஆலன் கார்னர் கதை எழுதும்போது, அடித்துத் திருத்தி நிறைய மாற்றங்கள் செய்வார். ‘தேவதை’ கதை எழுதும்போது அடித்தல் திருத்தல் கூட இல்லாமல் கதையின் ஆரம்பத்திலிருந்து கடைசிவரை தங்கு தடையின்றி எழுதி முடித்தார். அதைப் பார்த்த அவரது உதவியாளர்கள், ‘எப்படி இவ்வளவு சுத்தமாக இந்தக் கதையை எழுதினீர்கள்?’ என்று கேட்டார்கள்.
‘இந்தக் கதையை நான் எழுதவில்லை. இதில் வரும் கதாநாயகியான தேவதையே எழுதியதால்தான் அடித்தல் இல்லாமல் இருக்கிறது’ – ஆலன் கார்னர் சிரித்துக்கொண்டே சொன்னார். விளையாட்டாக அப்படிக் கூறியதில் இருந்த ஓர் அதிசய உண்மையை அவர் அப்போது உணரவில்லை. அதுதான்
சில நாட்களில் அவர் எழுதிய கதை மிகவும் பிரசித்தி பெற்றது. அதை டிவியில் தொடர் நாடகமாக எடுக்க விரும்பினார்கள். ஆலன் கார்னர் மேற்ப்பார்வையில் டிவி படப்பிடிப்பு ஏற்பாடுகள் நடந்தன.
தேவதை ஒரே ஒருநாள் காதலனுடன் வாழ்ந்ததாகக் கதையில் சொல்லப்படும் வீட்டைப் போல, பொருத்தமான ஒரு வீட்டை ஆலன் கார்னர் தேடினார்.
வேல்ஸ் என்ற இடத்துக்கு அருகில் உள்ள ஒரு மலையடிவாரம் அவர் மனதுக்கு ரம்மியமாகப்பட்டது. அங்கே போனார். அந்த சூழ்நிலையில் எங்காவது ஒரு வீடு படப்பிடிப்புக்குக் கிடைக்குமா என்று தேடினார். தூரத்தில் மலையடிவாரத்தில் மரங்கள், செடிகள் அடர்ந்த சோலை மாதிரி இருந்த இடத்தின் நடுவில் ஒரு வீட்டைப் பார்த்தார். அந்த வீட்டில் யார் இருக்கிறார்கள், படப்பிடிப்புக்கு அனுமதி தருவார்களா என்று விசாரிக்கச் சென்றார். அருகே சென்று அந்த வீட்டின் அமைப்பைப் பார்த்ததுமே அதிர்ச்சியடைந்தார்.
தன்னுடைய தேவதைக் கதையில் வருணித்த மாதிரியே ஒவ்வொரு அமைப்பும் இருந்தது. கதவில் செதுக்கப்பட்ட சிற்ப வேலைப்பாடுகள்கூட அச்சுபிசகாமல் அப்படியே இருந்தன.
அந்த வீட்டில் யாரும் குடியிருப்பதற்கான அறிகுறியே இல்லை. அக்கம்பக்கத்தில் விசாரித்தார். அந்த வீட்டின் சாவி, வேறு ஒருவரிடம் இருந்தது. அவர் வந்து திறந்து காட்டினார். உள்ளே போன ஆலன் கார்னருக்கு தலைசுற்றி மயக்கமே வந்துவிட்டது. படுக்கை அறை, சமையற்கட்டு, ரிசப்ஷன் ஹால், ஜன்னல்கள்கூட அவர் கற்பனையாக கதையில் வர்ணித்தபடியே இருந்தன.
எப்படி இந்த அதிசயம் நிகழ்ந்தது? ஆலன் கார்னருக்கு ஒன்றுமே புரியவில்லை.
‘இந்த வீட்டில் யார் இருக்கிறார்கள்! அவர்கள் எங்கே?’ – விசாரித்தார்.
‘இந்த வீட்டின் சொந்தக்காரன் ஒரு பைத்தியம். அவன் எப்போதாவதுதான் வருவான். அவனைப் பற்றி கவலைப்பட வேண்டாம். நீங்கள் விரும்பினால் இங்கேயே படப்பிடிப்பை நடத்துங்கள்’ என்றார் வீட்டின் சாவியை வைத்திருப்பவர்.
ஆலன் கார்னர், இவ்வளவு பொருத்தமான வீடு கிடைத்ததே என்ற சந்தோஷத்தில் அங்கே படப்பிடிப்பை ஆரம்பித்தார். முதல் நாள் படப்பிடிப்பு முடியும்போது ஒரு பெரிய ஆந்தை, ஆலன் கார்னரின் தலைக்கு மேல் பறந்துவிட்டுப் போனது. அடுத்த பத்து நாட்கள் தொடர்ந்து அந்த வீட்டின் படப்பிடிப்பு நடந்தது. ஆனால் அப்போதெல்லாம் அந்த ஆந்தை வரவில்லை.
கடைசி நாள் கிளைமாக்ஸ். ஆலன் கார்னர் கதைப்படி (தேவதை ஆந்தையாக மாறும் காட்சியை) அந்த வீட்டின் பெட்ரூமில் காலை பத்து மணிக்கு எடுக்க ஆரம்பித்தார். திடீரென்று அந்த ஆந்தை அறைக்குள் பறந்து வந்துவிட்டது. படப்பிடிப்புக் குழுவினர் எவ்வளவு விரட்டியும் அந்த ஆந்தை அந்த அறையை விட்டுப் போகவில்லை. ஆலன் கார்னர் அதை விரட்ட வேண்டாம் என்று கூறிவிட்டு கிளைமாக்ஸ் காட்சியை எடுத்து முடித்தார்.
அதற்குப் பிறகே அந்த ஆந்தை அறையைவிட்டுப் பறந்து சென்றது.
அந்த ஆந்தைக்கும் தன் தேவதைக் கதைக்கும் எதோ, நெருங்கிய தொடர்பு இருப்பதாக ஆலன் கார்னர் நம்ப ஆரம்பித்தார். ஆனால் ஆந்தை படப்பிடிப்பின்போது வந்தது தற்செயலான நிகழ்ச்சி என்றுதான் மற்றவர்கள் கூறினார்கள். ஆலன் கார்னர், அதை ஒப்புக்கொள்ளவில்லை.
அவருக்கு ஒரு யோசனை உதித்தது. அந்த வீட்டின் சொந்தக்காரன் எங்கே இருக்கிறான் என்று கண்டுபிடித்து அவனை விசாரித்தால், இந்த வீட்டைப் பற்றி ஏதாவது புதிய விஷயங்கள் கிடைக்கும் என்று நினைத்து அவனைப் பற்றி பல இடங்களில் விசாரித்தார்.
வீட்டின் சொந்தக்காரனைக் கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. பலர் பலவிதமாக அவனைப் பற்றிக் கூறினார்கள். சிலர் அவனைப் பைத்தியம் என்றனர். இன்னும் சிலர், அவன் பகல் முழுவதும் எங்காவது அடர்ந்த காட்டில் மரங்களுக்கு அடியில் தூங்குவான் என்றும், இரவு நேரங்களில் காடுகளில் சுற்றித் திரிவான் என்றனர். அந்த மலையடிவாரத்தில் வேட்டையாடும் சிலர், தாடி மீசையோடு இரவு நேரங்களில் அவன், ஆவி மாதிரி சுற்றித் திரிந்ததைப் பார்த்ததாகச் சொன்னார்கள்.
ஆலன் கார்னர் அவனை எப்படியாவது பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். வேட்டையாடும் ஒரு கோஷ்டியுடன் இரவில் காட்டுக்குப் போனார். நடுநிசி வரை தேடித் பார்த்தும் யாரும் அந்தக் காட்டில் இருப்பதாகத் தெரியவில்லை.
அப்போது தூரத்தில் ஆந்தையின் சத்தம். பலமுறை விட்டு விட்டுக் கத்தியது, ஆலன் கார்னர் தனது படப்பிடிப்பின்போது வந்து கத்திய ஆந்தையின் சத்தம் போலவே உணர்ந்தார். ஆனால், ஒரே இனத்தைச் சேர்ந்த பறவைகளின் சத்தங்களில் அப்படியொன்றும் அதிக வித்தியாசம் இருக்காது என்று வேட்டையாட வந்தவர்கள் கூறினர், மேற்கொண்டு அந்த பைத்தியமாகத் திரியும் வீட்டுக்காரனைத் தேட இன்னும் சற்று தூரம் போக முயன்றனர்.
ஆனால் விடாமல் சிக்னல் மாதிரி அந்த ஆந்தை கத்தியது. அந்தச் சத்தம், ஆலன் கார்னரை அழைத்த மாதிரியே இருந்தது. அந்த ஆந்தை சத்தமிடும் இடத்துக்குப்போகலாம் என்றார் ஆலன் கார்னர்.
பாதை மிகவும் மோசமாக புதர்கள் மண்டிக் கிடந்தது. உடன் வந்தவர்கள் அங்கே போகத் தயங்கினார்கள். ஆலன் கார்னர் ஒரு டார்ச்சை மட்டும் வாங்கிக் கொண்டு அந்த இடத்துக்குப் போனார்.
ஆந்தை கத்திய மரத்தடியில் ஒரு மிருகம் அசைவது இருட்டில் அரைகுறையாகத் தெரிந்தது. டார்ச் அடித்துப் பார்த்தார். அது மிருகம் இல்லை. ஆனால் கூன் விழுந்து வயது முதிர்ந்த ஓர் உருவம் தாடி மீசை நீளமாக வளர்ந்த நிலையில் நின்றிருந்தது. அந்த ஆள்தான் வீட்டுக்காரனாக இருக்கலாம் என்று நெருங்கி அவனருகில் போனார். அந்த உருவம் காட்டில் பறித்த கனிகளைத் தன் கைகளில் வைத்துக் கொண்டு மரத்தின் உச்சியில் அமர்ந்திருந்த ஆந்தையையே பார்த்துக் கொண்டிருந்தது.
சிறிது நேரத்தில் மரத்தின் மேலிருந்து அந்த ஆந்தை சிறகடித்துப் பறந்து கிழே வந்தது. ஆலன் கார்னர் டார்ச் வெளிச்சத்தில் நன்றாகப் பார்த்தார். படப்பிடிப்பில் வந்த ஆந்தை தான் அது என்று அதன் உருவ அமைப்பிலிருந்து தெரிந்து கொண்டார்.
அந்த ஆந்தை பறந்து வந்து ஆலன் தலைக்குமேல் ஒரு வட்டமடித்து விட்டு பிறகு, தாடி வைத்த அந்த வயதான மனிதனின் தோளில் போய் அமர்ந்தது. அந்த ஆள், தன் கையிலிருந்த பழங்களை அதனிடம் நீட்டினான். அந்த ஆந்தையும் அந்தப் பழங்களைக் கொத்திக் கொண்டு மீண்டும் மரத்தை நோக்கிப் பறந்து சென்றது. எல்லாவற்றையும் பார்த்த ஆலன் கார்னர் வியப்பில் ஆழ்ந்தார். அந்த மனிதனின் அருகில் போனார்.
‘உங்கள் பெயர் என்ன என்று தயவு செய்து சொல்ல முடியுமா?’ என்று கேட்டார்.
அந்த வயதானவர் அப்போதுதான் ஆலன் கார்னரைத் திரும்பிப் பார்த்தார். ஆனால், பதில் பேசவில்லை.
‘எதற்க்காக நீங்கள் இந்தக் காட்டில் இரவு நேரத்தில் இப்படிச் சுற்றிக்கொன்டிருக்கிறிர்கள்?’
அதற்கும் அந்த வயதானவர் பதில் சொல்லவில்லை.
‘பழங்களை எதற்க்காக ஆந்தைக்குக் கொடுக்…’
ஆலன் கார்னர் பேசி முடிக்கும் முன் அந்த வயதான ஆள் ‘உஷ்’ என்று வாயில் விரலை வைத்து சைகை காட்டினார்.
‘ஆந்தை இல்லை… அது தேவதை!’ – என்று மரத்தின் உச்சியை, ஆந்தை பறந்துபோன திசையைச் சுட்டிக் காட்டினார். ஆலன் கார்னர் உணர்ச்சி மேலீட்டால் அப்படியே ஸ்தம்பித்துப் போனார்.
ஆனால் எதையும் லட்சியம் செய்யாமல் அந்த வயதானவர் அந்த அடர்ந்த காட்டின் இருட்டில் மெதுவாக நடந்து போனார். மரத்தின் உச்சியில் ஆந்தையாக இருந்த அந்த உருமாறிய தேவதை அவர் போன திசையில் பறந்து போனது.
இந்தக் காட்சிகளைப் பார்த்த ஆலன் கார்னருக்கு பல விஷயங்கள் புரிந்தன. தேவதை என்று, தான் எழுதிய கதை, கற்பனை அல்ல. அது ஆந்தையாக உருமாறிய தேவதையே, தன்னை எழுத தூண்டிய உண்மைக் கதைதான். அத தேவதையின் காதலன்தான் அவள் ஆந்தையாக உருமாறிய பிறகு இப்படிக் காட்டில் அலைந்து திரிகின்றான். நம்ப முடியாத அதிசயத்தை நேரில் பார்த்த அதிர்ச்சியுடன் அந்த கானகத்தை விட்டு வெளியேறினார்.