Home » சிறுகதைகள் » ராமாயி தேடிய‌ தனபாலன்

ராமாயி தேடிய‌ தனபாலன்

“இப்ப இன்னான்ற? வந்ததுலேந்து பாக்கறேன், சொம்மா கூவிக்கினே இருக்க?”

“எங்க போன? அத சொல்லேன் மொதல்ல.”

“சொல்லாங்காட்டி இன்னா செய்வ? நானே அல்லாடிட்டு வந்துருக்கேன். சொம்மா நொய் நொய்னு நொச்சுக்கினு. போ அப்பால. சொல்றேன்ல, போய்யா அப்பால.” கண்ணை கசக்கிக்கொண்டே அடுப்பை ஊதி ஊதி சோறு பொங்கிக்கொண்டிருந்த ராமாயி எரிந்து விழுந்ததில் தனபாலன் முனகிக்கொண்டே மூலையில் சென்று முடங்கிக்கொண்டான்.

அரை மணி பொறுத்து, இரண்டு தட்டுகளில் சோறு, குழம்பு, பொரியல் என்று எடுத்து வைத்து, பேருக்கு இவனை அழைத்துவிட்டு அவள் சாப்பிட தொடங்கினாள். அவள் உண்டு முடித்து அடுப்படியை சுத்தம் செய்த பிறகும், இவன் இடத்தை விட்டு அசையாமல் இருக்கவே, அவன் தட்டை மூடி வைத்து விட்டு முணுமுணுத்துக்கொண்டே பாயை விரித்து, தலையை சாய்த்த சுருக்கிலேயே உறங்கியும் விட்டாள்.

முன்னெல்லாம் இவள் இப்படி இல்லையே. பயந்த சுபாவம் இல்லை தான். ஆனாலும் தன்மையாக தானே இருந்தாள். புருஷன் கொண்டு வந்த கூலியில் கூழோ கஞ்சியோ என்று இல்லாமல் அவ்வப்பொழுது நல்ல சாப்பாடும் சமைத்துக் கச்சிதமாக குடும்பம் நடத்திக்கொண்டு குறை எதுவும் இல்லாதவள் போல தான் இருந்தாள். எல்லாம் அந்த பாழாய் போன மீனாக்காவோட கூட்டு சேர்ந்த பிறகு தான் இவள் போக்கு மட்டுமில்ல, பேச்சும் கெட்டுவிட்டது.

ஒரு மனிதனுக்கு பொருட்செல்வம் கொடுப்பதில் கஞ்சத்தனம் காட்டும் அதே நேரத்தில் அவனுக்கு மக்கட்செல்வம் தருவதில் மட்டும் வஞ்சனையே காட்டமாட்டான் என்று ஆண்டவனை குறைசொல்லி என்ன புண்ணியம்? ஆண் மகவு வேண்டும் என்பதற்காக தொடர்ந்து மூன்று பெண்களை பெற்று நான்காவது பிரசவத்தில் மனைவியையும் பிறந்த மகனையும் இழந்தவர் ராமசாமி. அவருடைய மூத்த பெண் ராமாயிக்கு இலவச கல்வி கிடைத்தும் படிப்பு ஏறவில்லை. சத்துணவு சாப்பிட தங்கைகளை அனுப்பிவிட்டு சிறுவயதிலேயே மண்பானை செய்ய தந்தையுடன் போய்விடுவாள்.

பெண்டாட்டியை சீராடி கொண்டாடவேண்டுமே தவிர அவள் கொண்டு வரும் சீரை இல்லை என்று கொள்கை கொண்ட தனபாலன், ராமசாமிக்கு கடவுள் தந்த வரமாக தோன்றினான். பெண்ணுக்கு திருமண வயது பதினெட்டு என்று சட்டம் இருந்து என்ன? ராமாயி தனமே இல்லாத தனபாலனுக்கு பதினேழு வயதிலேயே மனைவியானாள். இரண்டு மூணு வருஷம் கழித்து பிள்ளை பெற்று கொள்ளலாம் என்று பெண்டாட்டி கோரிக்கை வைக்க தனபாலன் ஒத்துக்கொண்டான். மனைவியே குழந்தை போல இருக்க, ஒரு குழந்தையை வளர்க்க அவளுக்கு முதலில் முதிர்ச்சி வரட்டும் என்று அவனுக்கும் தோன்றி இருக்க வேண்டும்.

மகிழ்ச்சி தான் செல்வம் என்றால் தனபாலன் ராமாயி தம்பதி பணக்காரர்கள் தான். தனபாலனின் தினக்கூலியிலும், வாக்கு வங்கிக்காக அரசாங்கம் தரும் இலவசங்களிலும் வாழ்க்கை அதன் போக்கில் தடையின்றி தான் போய்கொண்டிருந்தது, எல்லாம் ஒரு ஆறு மாசம் முன்பு வரை. பக்கத்து குடிசைக்கு பெரிய கொண்டையும், நெற்றியில் பத்து ரூபாய் நாணய அளவில் சிகப்பு பொட்டும், பெரிய சரீரமும், அதைவிட பெரிய சாரீரமும் கொண்ட மீனா என்ற நாற்பது வயது மதிக்கத்தக்க பெண் வந்ததிலிருந்து தான் நிலைமை மாறியது. அவளை பார்த்தாலே தனபாலனுக்கு பயமாக இருக்கும், ஆனால் ராமாயி மீனாக்கா மீனாக்கா என்று அவளுடன் முதலிலிருந்தே ஒட்டிக்கொண்டாள்.

முதலில் சாதாரணமாக அண்டை வீட்டு நட்பு போல தான் அவர்களுக்குள் உறவு இருந்தது. ஆனால் நாள் செல்ல நாள் செல்ல, ராமாயி மீனாக்காவுடன் வெளியே செல்வது அதிகமாகி இப்பொழுதெல்லாம் தினமும் காலையில் சென்றால், மாலை விளக்கு போடும் நேரத்திற்கு தான் வருகிறாள். இவன் கூலி கொண்டு வராத நாட்களில் கூட அடுப்பு எரிந்தது பெரிதில்லை, ஆனால் வீட்டில் புதிது புதிதாக பொருட்கள், அதில் சிலது தேவை இல்லாதது கூட குடியேறியதில் தான் தனபாலன் வேதனை அதிகமானது. முன்பெல்லாம் அவன் களைத்து வரும் போது சுடு தண்ணி எடுத்து வந்து இதமாக இவன் கை கால்களை பிடித்து விட்டவள், இப்பொழுது இவனை அதிகம் கண்டு கொள்வதில்லை. பேச்சும் குறைந்துவிட்டது. அப்படியே பேசினாலும் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

அவள் கொண்டு வந்த காசில் கிடைத்த சாப்பாட்டை தொடக்கூடாது என்ற வைராக்கியம் வயிற்றை கிள்ளிய பசியில் பஞ்சாய் பறந்து போனது. தட்டை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்தான். பக்கத்து குப்பை மேட்டில் இருந்து வந்த நாற்றத்தை பொருட்படுத்தாமல் ஒரு கல்லின் மீது அமர்ந்து அவசரமாக சாப்பிட தொடங்கினான். எங்கிருந்தோ நாய் ஒன்று ஓடி வந்து இவன் பக்கத்தில் நின்றது. அதற்கும் ரெண்டு பிடி போட்டான். சாப்பிட்டு விட்டு வாலை ஆட்டியது. ‘ஒனக்கும் எனக்கும் வால் ஒன்னு தான் வித்தியாசம்’ என்று விரக்தியுடன் நினைத்தான். சுற்றி பார்க்கையில் தூரத்தில் பல அடுக்கு மாடி கட்டிடங்களில் பெரிய பெரிய கிரேன்கள் மூலம் வேலை நடந்துகொண்டிருப்பது தெரிந்தது. பெருமூச்சுடன் தன் சிறிய குடிசைக்குள் நுழைந்து கதவை சாத்தினான்.

காலை வெளியே கதிரவன் தகித்துக்கொண்டிருக்க, வேர்த்து ஊற்றியதில், உடம்புடன் சட்டை ஒட்டிக்கொண்டது. அரை மணி நேரம் சித்தாலபாக்கம் நிறுத்தத்தில் வெள்ளை பலகை பேருந்திற்கு வெயிலில் காய்ந்த பிறகு ஒரு பேருந்து தூரத்தில் வருவது தெரிந்தது. அதில் தொங்கிய கூட்டத்தில் பேருந்து சாய்ந்து விழாமல் வந்து கொண்டிருந்தது விந்தையிலும் விந்தை. கஷ்டப்பட்டு ஏறி கூட்டத்தில் முண்டி அடித்து நுழைந்து நடத்துனரை தாண்டி, இரண்டு மூன்று பேரின் கால்களை மிதித்து, ஆண் பெண் என்று பேதம் இன்றி சென்னை தமிழில் அர்ச்சனை வாங்கிக்கொண்டு, பிஸா நகரத்து கோபுரம் போல தனபாலன் நின்று கொண்டான்.

“கூட் ரோடு ஒன்னு”, தனபாலன் கசங்கிய ஐந்து ரூபாயை நீட்டினான்.

“யோவ், ஏறும் போது பார்த்து ஏறமாட்ட? இது கட் சர்வீஸ், மேடவாக்கம் தான் போகும்.”

“அப்ப, பஸ்ஸை கொஞ்சம் நிப்பாட்டுங்க. அடுத்த வண்டில போறேன்”, தனபாலன் சொன்னது தான் தாமதம், நடத்துனர், பயணிகள் என்று பலரும் சகட்டு மேனிக்கு அவனை திட்டினர்.

யாரை குறை கூறுவது? இத்தனை கூட்டத்தையும், சில்லறையையும் சமாளிக்க வேண்டிய பொறுப்பில் கடுப்படிக்கும் நடத்துனரையா? பணிக்கு ஏற்கனவே நேரமாகிவிட்டது என்ற பதைபதைப்பில் இருக்கும் பயணிகளையா? குறுகலான பாதைகளிலும், டிவைடர் அருகில் படுத்திருக்கும் மாடுகளை தவிர்த்து, திடீர் திடீரென்று குறுக்கே பூந்து வரும் இரண்டு சக்கர வாகனங்களை சமாளித்து, நேரத்திற்குள் ட்ரிப் முடிக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ஓட்டுனரையா, இல்லை அதிக கட்டணத்திற்காக ஓடி ஓய்ந்து போன பேருந்துகளில் கூட தாழ் தள சொகுசு, விரைவு அல்லது ‘எம்’ சர்வீஸ் என்று தடம் எண் பலகைகளை மட்டும் மாற்றி, சாதாரண வெள்ளை பலகை பேருந்துகளின் எண்ணிக்கை மிகவும் குறைய காரணமான போக்குவரத்து துறையையா? இது எல்லாவற்றிற்கும் மேலாக உடலில் எரிச்சலையும், மனதில் இனம் புரியாத கோபத்தையும் வெளிப்படுத்தும் வெயிலின் தாக்கத்தையா? தனபாலன் தன் விதியை நொந்துகொண்டு மேடவாக்கத்திற்கு பயணச்சீட்டு வாங்கினான்.

ஒருவழியாக மேடவாக்கத்திலிருந்து கூட் ரோடிற்கு நடந்து போய் சேருவதற்குள் ஏஜெண்ட் அன்றைய கூலிக்கு பெரும்பாலான ஆட்களை அனுப்பிவிட்டிருந்தான். ஒன்று இரண்டு பேரு தான் நடை பாதையில் குத்திட்டு உட்கார்ந்திருந்தனர்.

“என்ன லேட்டு தனபால்? வீட்டு வேலை எல்லாம் முடிச்சிட்டு வரீயா?” பீடி புகையை தனபாலன் முகத்தில் ஊதியவாறு குத்திட்டு இருந்தவனில் ஒருவன் நக்கலாக கேட்டான். அவனும் தினக்கூலி தான், இருந்தாலும் சதா மிதப்பாக இருப்பவன். குடி உண்டு, வீட்டில் தங்கமான முறை பெண் மனைவியாக வாய்த்து, இரண்டு குழந்தைகள் இருந்தும், வேறு பெண் சகவாசம் உண்டு. அவனுக்கும் தனபாலன் வயது தான் இருக்கும். தனபாலனை ஒரு கிள்ளுக்கீரையாக தான் நடத்துவான். தனபாலன் பதில் ஒன்றும் சொல்லாமல் சுவற்றில் சாய்ந்து நின்றான்.

“ஒனக்கென்னப்பா? பொண்டாட்டி தளதளனு இருக்கா. அவ அளக பார்த்தா எந்த காண்ட்ராக்டர் மடையனும் மயங்கிடுவான். ஒன்ன விட அதிகமா கூலி சம்பாறிக்குதாமே”, பீடிக்காரன் விடாமல் சீண்ட பொங்கும் கோபத்தை தனபாலன் அடக்கினான். தான் நிம்மதியாக இருக்கிறோமோ இல்லையோ மற்றவர் நிம்மதியாக இருக்கக்கூடாது என்று அடுத்தவன் வாழ்வில் கல் எறியும் மனவியாதியை என்ன செய்வது?

“என்னடா, உண்மையை சொன்னா கசக்குதா? என்ன அடிக்கணும் போல தோணுதா, அடிடா, அடி”, என்று எழுந்து நின்று சட்டையை கழற்றி நெஞ்சை காட்டினான். அதற்கும் தனபாலன் அமைதி காக்கவே, அவன் சீண்டல் தொடர்ந்தது.

“காலாகாலத்துல பொஞ்சாதி வயத்துல பிள்ளையை குடுத்து வீட்டுல அடக்கி வைக்க தெரில்ல, அதான் அது வெளிய அலையுது.”  இதற்கு மேல் பொறுக்கமாட்டாமல் தனபாலன் பீடிக்காரனை அடிக்க போக, அவன் இவனை திருப்பி அடிக்க, ஏஜெண்ட்டும் வேறு சிலரும் வந்து இவர்களை பிரித்து வைத்து சமாதானப்படுத்தினர். பீடிக்காரன் போகிற போக்கில் இவனை ‘பொட்டை பய’ என்று பட்டப்பெயர் வேறு தந்து விட்டு செல்ல, தனபாலனுக்கு அவமானம் பிடுங்கி தின்றது. அந்த நேரத்திலும் அவன் ராமாயியின் நடத்தையை பற்றி துளி கூட சந்தேகம் கொள்ளவில்லை. அவனுடைய கையாலாகாத்தனம் தான் அவனை பெரிதும் பாதித்தது. அந்த இடத்தை விட்டு நகர்ந்து கால் போன போக்கில் நடக்க தொடங்கினான்.

சுவற்றில் பச்சை, நீலம், ஆரஞ்சு, சந்தனம் என்று விதவிதமான நிறங்களில் வரையப்பட்ட அரசியல் தலைவர் முகமோ, அதற்கு பத்தடி தூரத்தில் பைக்கை நிறுத்திவிட்டு அவசரமாக சுவற்றை நனைத்துக்கொண்டிருந்தவனோ, இன்னும் சில அடி தூரத்தில் தள்ளு வண்டியில் நன்னாரி, தர்பூசணி சாறு விற்றுக்கொண்டிருந்த கிழவியோ எதுவும் அவன் கண்ணில் படவில்லை. அவன் நடை தொடர்ந்தது. நன்மங்கலம் வனப்பகுதியில் ஆள் நடமாட்டமும் குறைந்து யூகலிப்டஸ் மரக்காற்று லேசாக வீசியது. சட்டென்று வேலியில்லாத வனப்பகுதிக்குள் நுழைந்தான். சிறிது தூரம் சென்று ஒரு மரத்தடியில் அமர்ந்தான். சட்டையில் பொத்தென்று எதோ விழ, நிமிர்ந்து பார்த்தால், ஒரு காகம் எச்சமிட்டிருந்தது. கீழே கிடந்த காய்ந்த இலையால் சுத்தம் செய்துவிட்டு மீண்டும் நிமிர்ந்து பார்த்தான். மரத்திலிருந்து ஒரு தாம்பு கயிறு தொங்கிக்கொண்டிருந்தது. என்ன தோன்றியது என்று தெரியவில்லை, சரசரவென்று மரத்தின் மீது ஏறி, கிளையில் அமர்ந்தான். கயிற்றை கழுத்தை சுற்றி வந்து முடி போட்டு குதித்தும் விட்டான். சரியாக அந்த நேரத்தில் வண்டியை நிறுத்திவிட்டு மரத்தை நனைக்க வந்த ஒரு ஆட்டோகாரன் மேல் தனபாலன் கால் பட, திடுக்கிட்டு போனவன் மேலே பார்த்தான். சட்டென்று தனபாலன் கால்களை தூக்கி பிடித்தவாறு ஆட்டோகாரன் போட்ட கூச்சலில் ரோடில் போய்கொண்டிருந்த வேறு ஒருவரும் ஓடிவந்து இருவரும் சேர்ந்து இவனை காப்பாற்றிவிட்டனர். மரத்தடியில் படுக்க வைத்து, ஓடிச்சென்று ஆட்டோவில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து, அவன் முகத்தை துடைத்து, மாறி மாறி திட்டுவதும் சமாதானமாக பேசுவதாகவும் இருந்தனர்.

“இங்கேயே இரும்மா, என்ன ஆச்சுனு பார்த்துட்டு வரேன்”, தன் மகளிடம் சொல்லிவிட்டு ஆட்டோவில் இருந்து இறங்கி வந்த பெரியவர் தனபாலனை பார்த்து தன்னை மறந்து கத்திவிட்டார், “ஐயோ மருமக பிள்ள, என்னாச்சு?”

“ஏங்க, இவர் உங்க மருமகனா?”

“ஆமாங்க, இவரு வீட்டுக்கு தான் போய்கிட்டு இருக்கோம்.”

“என்ன கஷ்டமோ கயித்த கழுத்துல மாட்டிக்கிட்டு குதிச்சிட்டாரு. யாரு செஞ்ச புண்ணியமோ, ஒதுங்க வந்த என் கண்ணுல பட்டாரு”, ராமசாமி ஆட்டோகாரன் கையை பிடித்து கண்ணில் ஒற்றிக்கொண்டார்.

“தற்கொலை முயற்சி கூட சட்டப்படி குத்தம் தான், போலீஸ்காரன் கேசு எழுதிட்டா இருக்கற தலைவலி போறாதுனு பெரிய ப்ரச்சனை ஆகிடும்”, மற்றவர் சொல்ல, ராமசாமி அவரை பார்த்து கைக்கூப்பினார், “எதுவும் புகார் செஞ்சுடாதீங்கய்யா.”

“இல்ல பெரியவரே, அப்படி எதுவும் நான் செய்ய மாட்டேன், அப்புறம் எனக்கும் தலை வலி தான்.” மீண்டும் தனபாலனை திட்டி விட்டு அவர் கிளம்பிப்போக, ஆட்டோகாரன் உதவியுடன் கைத்தாங்கலாக தனபாலனை ராமசாமி ஆட்டோவிற்கு அழைத்து வந்தார்.

“மாமா, என்ன காரியம் செய்ய துணிஞ்சீங்க?” விஷயம் தெரிந்த லட்சுமி துடித்தாள். மைத்துனியின் முன் தனபாலன் வெட்கி தலை குனிந்தான். லட்சுமிக்கு தெரிந்த அளவில் பெண்டாட்டியின் தங்கைகளையும் கள்ளப்பார்வை பார்க்கும் ஆண்களுக்கு இடையே பேச்சு, பார்வை, நடத்தை என்று எல்லாவற்றிலும் ஒரு சகோதர கண்ணியத்தை காட்டிய தனபாலனிடம் அவளுக்கு என்றும் நிறைய மதிப்பு உண்டு.

“வீட்டுக்கு போலாம் வாங்க”, ராமசாமியின் அழைப்புக்கு தனபாலன் தலை அசைத்து மறுப்பு தெரிவிக்க, சட்டென்று ஒரு முடிவு எடுத்தவராய் தாம்பரம் ரயில் நிலையத்திற்கு ஆட்டோவை திருப்ப சொன்னார், பெரியவர். எம் சி சி அருகில் வண்டி நிற்க, ராமசாமி கொடுத்த பணத்தை ஆட்டோகாரன் வாங்க மறுத்துவிட்டான். “ஒரு நல்ல காரியம் செய்ய கர்த்தர் எனக்கு சந்தர்ப்பம் குடுத்தாரு… அரண்டு போயிருக்கேங்க… வீட்டுக்கு போகணும்.”

கண்களில் கண்ணீர் பொங்க அவனுக்கு மீண்டும் மீண்டும் நன்றி சொல்லி வாழ்த்திவிட்டு, பெண்ணையும், மூத்த மருமகனையும் அழைத்து கொண்டு ரயில் நிலையம் நோக்கி நடந்தார். போகும் வழியில் அரை சீப்பு வாழைப்பழத்தை வாங்கிக்கொண்டு அடுத்த வந்த செங்கல்பட்டு வண்டியில் ஏறி பரனூர் போய் சேர்ந்தனர்.

தங்கள் வீட்டுக்குள் நுழைந்தவுடன் கிடுகிடுவென்று லட்சுமி கஞ்சி வைத்து கொடுக்க, பழத்தையும் கஞ்சியும் சாப்பிட வைத்து, தனபாலனை தூங்க வைத்தனர். தெய்வாதீனமாக அதிர்ச்சி தவிர அவனுக்கு காயம் என்று பெரிதாக எதுவும் ஏற்பட்டிருக்கவில்லை. மாலையில் அவன் மனம் நோகாதவாறு பேச்சு கொடுத்து அவன் பிரச்சனையை புரிந்து கொண்டு விட்டார்.

“என் பொண்ணு சார்பா நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்கறேன், மருமக புள்ள.”

“இல்ல மாமா, அவ தப்புனு அதிகமா இல்லை, நான் தான் கோழையா போயிட்டேன்.”

ஐயோ இப்படி ஒரு புருஷனை மகள் சரியாக புரிந்துகொள்ளவில்லையே என்று அந்த பெரியவர் மனம் கசிந்து உருகியது.

“நீங்க எங்க அங்க வந்தீங்க, மாமா?” தன் பிரச்சனையிலேயே உழன்று கொண்டிருந்தவனுக்கு இப்பொழுது தான் இந்த கேள்வி கேட்க தோன்றியது.

“நம்ம லட்சுமி பன்னண்டாம் வகுப்புல நெறைய மதிப்பெண் எடுத்து தேறியிருக்கு, அவ டீச்சரம்மா அவள இன்னும் நிறைய படிக்க வெக்கணும்னு எப்பவும் சொல்லுவாங்க. ‘கல்லூரி படிப்புகெல்லாம் பணத்துக்கு நான் எங்க போவேன், இதெல்லாம் சரிப்படாதுங்க’ சொல்லுவேன். ஆனா அவங்க அத்தனை சுளுவா விடல. எங்க எங்கேயோ விசாரிச்சு, வெளிநாட்டுலேர்ந்து திரும்பி வந்த ஒரு குடும்பத்தை பிடிச்சிட்டாங்க. அந்த மகராசி அம்மா நம்ம லட்சுமி போல பிள்ளைங்களுக்கு உதவி செய்யறவங்களாம். டீச்சர் சிபாரிசுல அவங்க லட்சுமியோட படிப்பு செலவு ஏத்துக்கிட்டாங்க. அது மட்டுமில்ல அவங்களுக்கு வந்தவாசி பக்கத்துல விவசாய நிலம் இருக்காம், பார்த்துக்கறியானு என்னை கேட்டாங்க, இந்த பொட்ட புள்ளங்களை விட்டுட்டு நான் எங்க போறது? கவுரிவாக்கம் பக்கத்துல இருக்கற கல்லூரில லட்சுமிக்காக விசாரிச்சிட்டு அப்படியே உங்க ரெண்டு பேரையும் பார்க்க தான் அங்க வந்தோம்”, ராமசாமி பெருமூச்செறிந்தார். லட்சுமியும் மல்லிகாவும் கீழே மௌனமாக அமர்ந்து இவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்தனர்.

“சரிங்க மருமக பிள்ள, இங்க ரெண்டு நாள் தங்கி ஓய்வெடுத்துக்கங்க. நான் ராமாயியை பார்த்துட்டு வரேன். லட்சுமி, மல்லிகாவை உங்க பொறுப்புல விட்டுட்டு போறேன், அவங்களுக்கு நீங்க தான் தொணை. லட்சுமி, மல்லி மாமனுக்கு பிடிச்சதா ஆக்கி போடுங்க”, ராமசாமி அப்பொழுதே கிளம்பினாலும் சித்தாலப்பாக்கம் போய் சேர இரவு மணி பத்தாகிவிட்டது.

லட்சுமியும் மல்லிகாவும் உள்ளே சமையல் வேலை செய்ய போனாலும், மல்லிகா அடிக்கடி மிரட்சியுடன் அவனை எட்டி எட்டி பார்த்து விட்டு செல்வதை பார்க்க தனபாலனுக்கே கண்றாவியாக இருந்தது. அவள் அடுத்த முறை வெளியே வந்தபோது அவளை கூப்பிட்டான், “மல்லி, மாமன் ஒரு முறை செஞ்ச முட்டாள்தனத்தை மறுபடி செய்ய மாட்டேன், உங்க ரெண்டு பேரு மேல ஆணையா. கலங்காம இரு கண்ணு”

மாலை வேலையிலிருந்து திரும்பி வந்த ராமாயி, முகம் கை கால் கழுவிவிட்டு வந்தாள். தனக்கு முன்னே வீட்டுக்கு வந்துவிடும் தனபாலனை இன்று காணவில்லை. வந்துவிடுவான் என்று அடுப்பை மூட்டினாள். மணி ஏழான போதும், பஸ் கிடைத்திருக்காது என்று சமாதானம் செய்து கொண்டாள். எட்டாகவும் முதன்முறையாக வயிற்றை என்னவோ செய்தது. பக்கத்து வீட்டு மீனா அக்காவை உரக்க அழைத்து கவலையாக தனபாலன் வராதது குறித்து புலம்பினாள். “வந்துடுவார், கவலை படாம இரு ராமாயி”, என்று அவள் சமாதானம் சொல்ல, மீண்டும் குடிசைக்குள் வந்தாள். ஒன்பது மணிக்கு குடிசை கதவு திறக்க தொடங்க, ஓடி சென்று நன்றாக திறந்தவள் அதிர்ச்சியுடன் பின்வாங்கினாள். நாலு குடிசை தள்ளியிருந்த முத்துராஜ் சிவந்த கண்களுடன் தள்ளாடியபடி வந்து இவள் கையை பிடித்து இழுத்தான். இவள் போட்ட கூச்சலில் மீனா வந்து அவனை அறைந்து வெளியே தள்ளினாள். “நீ எங்கிட்ட புலம்பினத கேட்டு தான் இந்த களுதைக்கு தைரியம் வந்து துணிஞ்சிருக்கு. உன் புருசன் வர வரைக்கும் நான் இருக்கேன்”

மணி பத்தாகியும் தனபாலன் வரவில்லை. பதிலாக எதிர்பாராதவிதமாக களைப்புடன் தந்தை வந்து சேர்ந்தார். அவர் வந்தவுடன், மீனா ஒரு தலை அசைவுடன் தன் வீட்டுக்கு போய்விட்டாள்.

“வாங்கப்பா, நல்லாயிருக்கீங்களா?” சொம்பு நீரை அவரிடம் கொடுத்தாள். அதை குடித்து முகத்தை தோள் துண்டால் துடைத்தவாறு மகளை நோக்கினார்.

“ம்… இருக்கேன். நல்லாயிருக்கியாம்மா? எங்க தனபாலனை காணலை?”

“வெளியூருக்கு வேலைக்கு போயிருக்கு. சாப்பிட்டீங்களாப்பா?”

“இல்லம்மா”

சமைத்து வைத்ததை தந்தைக்கு பரிமாறிவிட்டு, அவருக்கு படுக்கையையும் விரித்துவிட்டு தான் மட்டும் ஒன்றும் சாப்பிடாமல் ஒரு மூலையில் சுருண்டு கொண்டாள். தூக்கம் வரவில்லை. கணவனுக்கு இப்படி ஆச்சா அப்படி ஆச்சா என்று மனம் கற்பனையில் தறிகெட்டு ஓட அழுகை அழுகையாக வந்தது. முத்துராஜ் நினைவு வேறு இடை இடையே வந்து வயிறு கலங்கியது. தந்தை திடீரென்று எப்படி வந்தார் என்று யோசிக்க கூட அவளுக்கு தோன்றவில்லை. புரண்டு புரண்டு படுத்து தூங்க முடியாத அவஸ்தையில் இருந்த மகளை தந்தையும் கவனித்துக்கொண்டிருந்தார். அவள் விசும்பல் கூட கேட்டதாக தோன்றியது. சரி காலையில் பார்த்துக்கொள்ளலாம் என்று அலுப்பில் உறங்கிவிட்டார்.

காலை யாரோ பிடிப்பதாக தோன்ற உறக்கம் கலைந்து எழுந்த தந்தையின் கண்களில் கதறி அழும் மகள் தென்பட்டாள்.

“என்னம்மா, என்னாச்சு?”

“அவர காணோம்ப்பா”

“வெளியூர் போனதா சொன்னியே”

“என்ன சொல்றதுன்னு தெரியாம பொய் சொல்லிட்டேன்ப்பா”

தந்தை பெருமூச்செறிந்தார். “எப்பலேர்ந்து காணோம்?”

“நேத்து நான் வேலைக்கு போன பிறகு அவர பார்க்கலப்பா. சாயல்ல எனக்கு முன்னாடியே வர மனுசன் இது வரைக்கும் வரலை.”

“சரி கலங்காத கண்ணு. அவருக்கு எதுவும் ஆவாது. கடவுள் பார்த்துட்டு இருக்கான். நான் போய் தேடி பார்த்துட்டு வரேன்.” ராமசாமி கிளம்பி போனார்.

தான் வேலைக்கு வரவில்லை என்று மீனாக்காவிடம் சொல்லிவிட்டாள். மாலை வரை தனபாலனும் வரவில்லை, தந்தையும் திரும்பி வரவில்லை.  ஆறு மணி போல திரும்பி வந்து தந்தை உதட்டை பிதுக்கினார். “புகார் குடுத்துட்டு வந்திருக்கேன்மா. நீ இங்க தனியா இருக்க வேணாம், பெட்டியை எடுத்திட்டு கிளம்பு. அங்க வேற மல்லியும் லட்சுமியும் தனியா இருக்காங்க. ஊருக்கு போலாம்.”

தனபாலனை காணாமல் தந்தையுடன் போக தயங்கினாலும், முத்துராஜ் போன்ற கேடுகெட்ட ஜென்மங்களை நினைத்து நடுங்கினாள். அவனுடன் ஒப்பிடுகையில தன் கணவன் எப்படிப்பட்ட பொக்கிஷம் என்பது புரிந்தது.

மீனாக்காவிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு கிளம்பிவிட்டாள். கலங்கிய மனத்துடன் ரயில் ஜன்னல் கம்பிகளில் தலை சாய்த்து வெளியே வெறித்தவள் சிந்தனையை ராமசாமி கலைக்கவில்லை.

பரனூரில் தன் பிறந்த வீட்டு கதவை திறந்து வெளியே வந்த தனபாலனை கண்டு ராமாயி பிரமித்துப்போனாள். அவள் கணவனிடம் செல்லும் முன் தங்கைகள் இருவரும் அக்கா அக்கா என்று அவளை உள்ளே கொண்டு போய்விட்டனர். போட்டி போட்டி போட்டுக்கொண்டு இருவரும் விவரம் தர, வெளியே ஓடி வந்து தனபாலனை கட்டி தழுவிக்கொண்டு கதறி தீர்த்தாள். தனபாலன் கண்களும் நிரம்ப குடும்பமே இவர்களுடன் சேர்ந்துக்கொள்ள பூமி இவர்கள் கண்ணீரால் குளிர்ந்தது.

“நான் இனி வேலைக்கு போகல, மச்சான்.”

“இல்ல ராமாயி, நம்ம லட்சுமி மல்லியை பார்த்த அப்புறம் தான் எனக்கும் ஒரச்சுது. வெறும் என்னோட தெனக்கூலிய மட்டும் வெச்சு நமக்கு பொறக்க போற குழந்தைகளை நல்லா வளர்க்க முடியாது.”

“மருமக புள்ள, அம்மா ராமாயி நீயும் கேட்டுக்க. நான் சொல்லல, லட்சுமிக்கு உதவின மகராசி அவங்க நிலத்தை பார்த்துக்க ஆளு கேட்டாங்கனு. அவங்கள போய் நான் பார்த்து பேச்சிட்டு வந்துட்டேன். உங்களுக்கு விருப்பம் இருந்தா நீங்க ரெண்டு பேரும் வந்தவாசி போங்க. சேர்ந்து வேலை செய்யுங்க. மாச சம்பளமா ஐயாயிரம் தரேனு சொல்றாங்க. விளைச்சல்லேயும் பங்குண்டு.”

“என்ன சொல்ற, ராமாயி?”

“மச்சான், உனக்கு சரின்னா எனக்கும் சரி.”

“போறோம், மாமா”, தனபாலன் குரலிலும் மனதிலும் நம்பிக்கை நிறைந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top