காலை தொழுகை முடிந்து தொப்பியை எடுத்து இடுப்பில் சொருகிகிகொண்டான். வானம் விடியலாமா என யோசித்துக் கொண்டிருப்பதாய் பட்டது. சைக்கிள் பழக்கப்பட்ட மாடு மாதிரி வழக்காடி டீக்கடை பக்கம் சென்றது.
மோதியார் தனக்கும் முன்பே அங்கு ஆஜராயிருந்தது குரலில் தெரிந்தது.
“பால் கூடினாலும் பரவாயில்லை சீனியை குறைச்சுராதடே”
வழக்கமான புளிச்ச ஜோக்.
ஒரு பன்னை தின்று தனக்கு வந்த டீயை குடித்தான்.
மோதியார் அருகில் வந்து குசுகுசுத்தார்.
“மருமக பெத்திருக்கா நல்ல பூச்சிகாரலோ, விளமீனோ வாங்கிட்டு வந்துருடே மறக்காம”
” ஆட்டும் மாமா ”
காசு வாங்குவதற்குள் தான் பெரும் பாடு. சாமானியத்தில் தரமாட்டார் இருந்தாலும் பிள்ளை பெத்தவளுக்கு பால் ஊற உதவுவது புண்ணியம் தான் மறக்காமல் கொண்டு வரவேண்டும்.
கன்யாமரி பத்து மைல் இப்ப போனால் தான் பதினோரு மணிக்குள் வீடு திரும்ப முடியும். தனக்கு தானே பேசிக்கொண்டோ நல்ல மூடு இருந்தால் ஒரு நாகூர் ஹனீபா பட்டை படிக்கொண்டோ ஓட்டினால் சீக்கிரம் தொறை வந்துரும்.
தன சைக்கிள் பெல் கேட்டு தான் ஊரில் பாதி பேர் உலையே எத்துவார்கள் என்ற எண்ணம் பெருமிதமாக இருந்தது. இப்பெல்லாம் முந்தி மாதிரி சைக்கிள் மிதிக்க இயலவில்லை அக்பர் ஒரு மொபெட் வாங்கிட்டு புர்ருன்னு போறான் வீட்டில் ஐஸ் பெட்டி வச்சிருக்கானாம் சனிக்கிழமை மீனை ஐஸ் போட்டு ஞாயிற்று கிழமைகளிலும் நல்ல விலைக்கு விக்கிறான். சிலருக்கு ஏன்தான் ஏழு நாளும் மீன் கேக்குதோ ஆச்சரியம் தான். அது மாதிரி ஒரூ மொபெட் வாங்கனாலும் நல்லது தான் ஆனா யாரு ஓட்டுறது.
எம்பிள்ளை பெருசானதும் வாங்கலாம். அவன் பெருசானா இந்த வேலைக்கு ஏன் வாரான் பேண்டு சட்டை போட்டுட்டு கபீபு மச்சான் மாதிரி ஆபீசரு தான் ஆவணும்.
ஆனா பயபுள்ளை எந்நேரம் பார் மீன் விக்கிற விளையட்ட தான் விளையாடுதான் சீலாந்தி இலையும் பூவும் பறிச்சு வித விதமான மீன் கூறாக்கி வித்து கணக்கெழுதி காசுவாங்கி இதே விளையாட்டு தான். திட்டி பாத்தாலும் திருப்பியும் … டாக்டர் வீட்டு பிள்ளை தான் டாக்டர் நோயாளி விளையாடுமோ அப்படி விளையாடினால் தான் டாக்டர் ஆக முடியோமோ என்னவோ … மத்தியாஸ் குடும்பத்தில எல்லோரும் டாக்டர்கள்தான் சுப்பையா அண்ணாச்சி மொவன் பம்ப்செட் வைச்சு தண்ணி பாய்ச்சி விளையாடுதான்.
தானும் படிக்காதது மிக வருத்தமாக இருந்தது. கிளாசுக்கு தண்ணி பாம்பு கொண்டு போய் பீட்டி சார் கிட்ட அடி வாங்கியதுநினைவுக்கு வந்தது ஐடியா கொடுத்து எழக்கி விட்ட தாவுது இப்ப தாசில்தாரா இருக்கான் நல்ல வேளை அவன் பேரை இழுத்து விடல்ல அவனாவது படிச்சானே இப்ப பாத்தாலும் “என்ன மக்கா எப்படியிருக்கே” ன்னு கேப்பான்.
பாம்பு ஐடியா தான் அவனது ஆனா அடிவாங்கியதுக்கு பதிலா ராத்திரியோட ராத்திரியா சாக்பீஸை தண்ணில நனைச்சு பீட்டி வாத்தியாரை கெட்ட கெட்ட வார்த்தையாக கையாட்டி ரோடு பூர எழுதிப்போட்டது நான் தான். இதிலெல்லாம் கொடுமை கையெழுத்தை மாத்தி மாத்தி எழுதினா கண்டுபிடிக்க முடியாதுன்னு முட்டா தனமா நெனைச்சது. அடுத்த நாளில் படிப்பு முடிந்து விட்டது.
காற்றில் சில்லென்ற ஈரப்பதம் துறை நெருங்கிவிட்டதை உணர்த்தியது. நல்ல மீன் பாடு துண்டு மீனுக்கு வாங்கிய பின் தேடி தேடி மோதியாருக்கு பூச்சிகாரலும் குதிப்பும் வாங்கிக்கொண்டான். தன் பொண்டாட்டி ஏழு வருஷம் களிச்சு உண்டாயிருக்கும்போ இதைப்போல் தேடி வாங்கலையேன்னு ஒரு வருத்தம் வந்தது.
திருப்பி மிதிக்கும் பொது ஒரு உற்சாகம் வந்து ஒட்டிக்கொண்டது. காத்தும் வாகாய் அமைந்து விட்டது. ஊர் எல்லைக்குள் வரும் போது எல்லை கோட்டை தொட வரும் வீரனை போல எண்ணினான். சைக்கிள் மணியை அடித்துக்கொண்டே பள்ளித்தோப்பை வந்தடைந்தான்.
பாயை விரித்து கத்தியை தீட்டி மீன் துண்டு போட துவங்கினான் பாம்பாட்டியை சுற்றிய கூட்டமாக மக்கள்…
“எடு அல்வா துண்டு … நாளைக்கு கிடைக்காது” ஒரு பெரிய கொழுவை பாரை சிறிய துண்டுகளாகிக் கொண்டிருந்தது.
“பாத்து வெட்டுடெ கையை வெட்டிராதே” துண்டுகள் சின்னதாக இருப்பதாக நினைப்பவரின் நக்கல். ஒவ்வொருவராக தாளில் ஒரு பங்கு ரெண்டு பங்குன்னு வியாபாரம் பறந்தது. விற்றவை கணக்காக பானுவின் நோட்டிற்குள் நீண்டு கொண்டிருந்தன ஒவ்வொரு பேருக்குப்பின்னும் ஒரு பட்டப்பெயர் உண்டு.
அநேக நாட்களைப்போல் இன்றும் விற்று தீர்ந்து விட்டது கறிக்கு ஒரு தலைதான் மிச்சம். நிறைய மீந்து விட்டால் பானுக்கு தான் வேலை உப்புபோட்டு உலர வைக்கணும் .
கணவனும் மனைவியும் திருப்தியாய் வீடடைந்தனர் .
மகன் இன்றும் மீன் யாவாரம் தான் விளையாடிக்கொண்டிருந்தான். அவனே மீன் காரனாயும் மனைவியாகவும்.
“ஏ இவளே எல்லாம் வித்தாச்சு ”
” கறிக்கு என்ன செய்ய ”
“இந்தா தலையை கறிவை”
“நீ எல்லாம் ஒரு மனுஷனாய்யா பொண்டாட்டி பிள்ளைக்கு ஒன்னும் வைக்காமயா விப்பா. ஊருக்கெல்லாம் நல்ல மீனு எனக்கு மட்டும் என்னைக்கும் நாற மீன் தானா ? ”
பொட்டில் அறைந்தது போலிருந்தது. கையில் இருந்த கவரை அப்படியே குப்பையில் போட்டான்
பானுக்கு துப்பாளை ரொம்ப பிடிக்கும் நாளைக்கு கட்டாயம் வாங்க வேண்டும். இனிமுதல், முதல் மீன் வீட்டுக்குத்தான்.