Home » தன்னம்பிக்கை » வெற்றிக்குணங்கள் 13
வெற்றிக்குணங்கள் 13

வெற்றிக்குணங்கள் 13

ஒரு துறையில் வெற்றியடைந்து சாதனையாளராக உலகால் அடையாளம் காணப்படுவது சிறப்பு என்றால் பலதரப்பட்ட துறைகளில் பல சாதனைகள் புரிந்து சரித்திரம் படைக்க முடிவது சிறப்பின் சிகரமே. அப்படிப்பட்ட சிகரங்கள் சரித்திரத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவு அபூர்வமே. ஏனென்றால் ஒரு துறையில் சாதனை புரியவே ஒரு வாழ்க்கை ஆயுள் போதாதென்று பலரும் எண்ணுகையில் அந்தக் குறுகிய வாழ்க்கையில் பல துறைகளில் சாதனைகள் புரிந்திட ஒருவரால் முடிகிறது என்றால் அது கவனிக்கப்பட வேண்டிய வாழ்க்கை அல்லவா? அது எப்படி சாத்தியமாயிற்று என்றறிய ஆர்வம் காட்டுதல் வெற்றியடையத் துடிக்கும் அனைவருக்குமே இயல்பல்லவா?

எழுத்தாளர், விஞ்ஞானி, அரசியல் வல்லுனர், கல்வியாளர், பத்திரிக்கையாளர், இசைக்கலைஞர், தத்துவஞானி, நாட்டின் உயர்பதவிகள் பலவற்றை அலங்கரித்தவர் என்றெல்லாம் ஒரே மனிதரைப் பற்றி சொல்ல முடியும் என்றால் அது பிரமிக்க வைக்கும் செய்தியே. ஏனென்றால் இவற்றில் சில ஒன்றுக்கு ஒன்று சிறிதும் சம்பந்தப்படாத, அல்லது நேர்மறையான துறைகளே. அவர் சாதனை புரிந்த துறைகளாக வேறு சிலவற்றின் பெயர்களைக் கூடக் கூறலாம். இத்தனை அடைமொழிகளுக்கும் பொருந்தக் கூடிய ஒரு மனிதராக உலகம் ஒரே ஒருவரைத் தவிர வேறொருவரை இதுவரை கண்டதில்லை. அவர் தான் பெஞ்சமின் ·ப்ராங்க்ளின்.

அவர் – அமெரிக்க சுதந்திரப் பிரகடனத்தை எழுதிக் கையெழுத்திட்ட ஐவரில் ஒருவர், அமெரிக்காவை உருவாக்கியவர்களில் ஒருவர், இடிதாங்கியைக் கண்டுபிடித்தவர், மின்சாரம் குறித்த பல ஆராய்ச்சிக் கண்டுபிடிப்புகளை வெளியிட்டவர், அர்மோனிகா என்ற ஒருவகைக் கண்ணாடியைக் கண்டுபிடித்தவர், பெனிசில்வேனியா பல்கலைக்கழகம் அமையக் காரணமாய் இருந்தவர், வயலின் மற்றும் கிடார் கலைஞர், சிறந்த செஸ் ஆட்டக்காரர், நிறைய விஷயங்களைப் பற்றி நிறைய எழுதியவர் – இப்படி இன்னும் எத்தனையோ சொல்லிக் கொண்டு போகலாம். ஒரு வாழ்க்கையில் இத்தனை முத்திரைகள் பதிக்க முடிந்தவர் தன் வாழ்க்கையில் மிக நல்ல மனிதர் என்றும் அறிந்தவர்களால் கருதப்பட்டார். இதை விடப் பெரிய வெற்றி வாழ்க்கை இருக்க முடியுமா?

அப்படிப்பட்ட வெற்றி வாழ்க்கை வாழ்ந்த மனிதர் தான் பின்பற்ற வேண்டிய பண்புகளாகப் பதின்மூன்று குணங்களை தன் இளமையிலேயே குறித்துக் கொண்டு வாழ முயற்சித்ததாகக் கூறினார். அவை-

1) மிதத்தன்மை : உண்பதிலும், அருந்துவதிலும் மிதத்தன்மை முக்கியம். ஊக்கத்தைக் கெடுக்கும் அளவு உண்ணாதே. வெறி கொள்ளும் அளவு குடிக்காதே.

2) நாவடக்கம் : பிறருக்கோ, உனக்கோ நலம்புரியும் சொற்களை அன்றி வேறு சொற்க¨ளைப் பேசாதே. வெறும் நேரம் போக்கும் பேச்சில் எப்போதும் கலந்து கொள்ளாதே.

3) ஒழுங்குமுறை : உன் பொருள்கள் ஒவ்வொன்றையும் உரிய இடத்தில் வைக்கப் பழகு. உன் தொழிலின் ஒவ்வொரு பகுதிக்கும் உரிய ஒரு காலத்தை ஒதுக்கி வை.

4) உறுதியுடைமை : செய்ய வேண்டியவற்றைச் செய்ய உறுதி கொள். உறுதி கொண்டவற்றைத் தவறாது செய்.

5) சிக்கனம் : உனக்கோ, பிறருக்கோ நன்மை செய்வதற்காக அல்லாமல் வேறெதற்காகவும் பணத்தை செலவழிக்காதே. அதாவது, வீண் செலவு செய்யாதே.

6) முறையான உழைப்பு : காலத்தை சிறிதும் இழக்காதே. எப்போதும் பயனுள்ள எதையாவது செய்து கொண்டிரு. தேவையற்ற செயல்கள் யாவையும் ஒழித்து விடு.

7) வாய்மை : பிறரைப் புண்படுத்தும் சூழ்ச்சி செய்யாதே. இரண்டகமில்லாமலும், நேர்மையுடனும் சிந்தனை செய். பேசும் போதும் அப்படியே பேசு.

8) நேர்மை : தீங்கு செய்து அதன்மூலம் யாருக்கும் தீமை உண்டாக்காதே. அது போல கடமைகளை செய்யாமல் விட்டும் அடுத்தவருக்கு தீங்கு செய்யாதே.

9) நடுநிலையுணர்வு : எதிலும் அதீதத் தன்மையை விலக்கு. உனக்கு இழைத்த தீங்குகளுக்காகக் கூட நீ அடுத்தவரிடம் சினம் கொள்ளாதிரு.

10) துப்புரவு : உடல், உடை, இருக்குமிடம் ஆகியவற்றில் எத்தகைய துப்புரவுக் கேட்டுக்கும் இடம் அளிக்காதே.

11) மன அமைதி : சின்னச் சின்ன விஷயங்களுக்காகவோ, தவிர்க்க முடியாத மற்றும் தற்செயலாய் நிகழும் நிகழ்ச்சிகளுக்காகவோ மன அமைதி இழக்காதே.

12) ஒழுக்கமுடைமை : அயர்வு அல்லது பலவீனம் அடையும் அளவுக்கோ, உன்னுடைய மற்றும் அடுத்தவருடடைய அமைதிக்கோ, புகழுக்கோ கேடு உண்டாக்கும் அளவுக்கோ இன்பம் நுகராதே.

13) பணிவுடைமை : இயேசுநாதரையும், சாக்ரடீசையும் பின்பற்று.

பெஞ்சமின் ·ப்ராங்க்ளின் இந்த பண்புகளைத் தன் வாழ்க்கையில் இளமையில் இருந்தே பின்பற்றத் துவங்கியது தான் தன் வெற்றிகளுக்கும் மன அமைதிக்கும் காரணம் என்று கருதினார். எல்லா நேரங்களிலும் இதைப் பின்பற்றியதில் வெற்றி பெற முடிந்ததில்லை என்பதை ஒத்துக் கொள்ளும் அந்தப் பேரறிஞர் ஆனாலும் திரும்பத் திரும்ப இவற்றைத் தன் வாழ்க்கையில் பின்பற்ற முயன்றதாகவும் சிறிது சிறிதாக பின்பற்றுவதில் வெற்றி பெற முடிந்ததாகவும் கூறுகிறார்.

அவர் வாழ்வில் எளிய வாழ்க்கையே இந்தப் பண்புகளுக்கு அஸ்திவாரமாக இருந்தது என்றும் சொல்லலாம். தன் சுய சரிதத்தில் ஓரிடத்தில் கூறுகிறார். “நான் எளிய வாழ்க்கையையே முக்கியமாக எடுத்துக் கொண்டேன். ஏனென்றால் நல்லறிவையும் மூளைத் தெளிவையும் தரத் தக்க பண்பு அதுவே. வாழ்க்கையில் இடைவிடாது குறுக்கிடும் மாயக்கவர்ச்சிகளை எதிர்த்து நிற்கவும், பழைய பழக்கங்களின் ஓய்வொழிவில்லாத ஈர்ப்பாற்றலைத் தடுத்து சமாளிக்கவும் தளராத விழிப்புணர்வு தேவை. மூளைத் தெளிவும் அமைதியும் இல்லா விட்டால் இந்தத் தளரா விழிப்புணர்வு ஏற்படாது”

பல துறைகளில் வெற்றி பெறுவதில் மட்டுமல்லாமல் தனிப்பட்ட மனநிலையிலும் ஒரு நிறைவை அவர் காண இந்த 13 பண்புகளும் அவருக்கு உதவியிருக்கின்றன என்பதில் எள்ளளவும் சந்தேகமிருக்க முடியாது. ஏனென்றால் இந்தப் பதின்மூன்றில் எந்த நல்ல பண்பும் விட்டுப் போகவில்லை. ஒரு மாபெரும் வெற்றியாளர் பின்பற்றி வெற்றி பெற்ற பண்புகளை நாமும் ஏன் பின்பற்றி வெற்றி பெறக் கூடாது?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top