Home » சிறுகதைகள் » கருத்துகள் எல்லாம் தீர்ப்புகள் அல்ல
கருத்துகள் எல்லாம் தீர்ப்புகள் அல்ல

கருத்துகள் எல்லாம் தீர்ப்புகள் அல்ல

பெரும்பாலான மனிதர்கள் எதனுடைய மதிப்பையும் அடுத்தவர்களுடைய கருத்துகளை வைத்தே எடை போடுகிறார்கள். பலரும் ஒரு சாதாரண விஷயத்தை ஒஹோ என்று புகழ்ந்தால் அது உன்னதமாகத் தெரிகிறது. ஒரு உயர்ந்த விஷயத்தையும் பலரும் பரிகசித்தால் அது செல்லாக் காசாகி விடுகிறது. ஆனால் உண்மையான மதிப்பை பெரும்பாலானோரின் கருத்துகளை வைத்து எடை போடுவது சரியானதாக இருக்காது. ஏனென்றால் எல்லோரும் ஆழமாக அறிந்தே ஒன்றைப் பற்றிக் கருத்து கொள்ள வேண்டும் என்பது கட்டாயமில்லை. பெரும்பாலான மனிதர்கள் தங்கள் அறிவிற்கேற்பவே கருத்து கொள்கிறார்களே ஒழிய உண்மையான தன்மையின் அடிப்படையில் அல்ல. அவரவர் மனநிலை, அறிவு, அனுபவம், விருப்பு வெறுப்புகளை ஒட்டியே விமரிசனங்கள் எழுகின்றன. சிலர் அந்த சிரமத்தைக் கூட மேற்கொள்வதில்லை. அவர்கள் மதிப்பவர்கள் என்ன சொல்கிறார்களோ அதுவே அவர்களுடைய கருத்தாகியும் விடுகின்றது.

நோர்மா ஜீன் பேக்கர் என்ற இளம்பெண் மாடலாகும் கனவுடன் ஒரு மாடலிங் கம்பெனிக்குச் சென்று வாய்ப்பு கேட்டார். அங்கே அவளை “நீயா, மாடலா?” என்று பரிகசித்தார்கள். “ஏதாவது குமாஸ்தா வேலைக்குச் செல். இல்லா விட்டால் திருமணம் செய்து கொண்டு வீட்டைக் கவனி” என்று அறிவுரையும் செய்து அனுப்பினார்கள். அவர்கள் கருத்தைத் தீர்ப்பாக எடுத்துக் கொண்டு தன் கனவை கலைத்து விட்டிருந்தால் ஹாலிவுட் உலகத்திற்கு “மர்லின் மன்றோ” என்ற அற்புதக் கதாநாயகி கிடைத்திருக்க மாட்டார். இன்றும் பேசப்படும் சிறப்பை இழந்திருப்பார்.

தமிழ்நாட்டில் அந்தக் காலத்தில் ஸ்ரீதர் ஒரு மிகப் பெரிய இயக்குனர். அப்படிப்பட்டவரிடம் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டு ஒரு தமிழ்ப்பெண் சென்றார். ஸ்ரீதர் “இந்த முகம் காமிராவுக்குப் பொருத்தமல்ல” என்று சொல்லி அனுப்பி விட்டார். அந்தப் பெண் தான் ஹிந்தித் திரையுலகில் கனவுக் கன்னியாக பல ஆண்டுகள் கோலோச்சிய ஹேமா மாலினி. “இவ்வளவு பெரிய இயக்குனர் சொல்லி விட்டாரே. உண்மையில் எனக்கு திரையுலக முகம் இல்லை” என்று திரும்பி இருந்தால் ஹேமா மாலினி அடையாளம் காணப்படாமலேயே போயிருப்பார்.

“மிகவும் மந்த புத்திக்காரன். அறிவு கூர்மை போதாது” என்று ஆசிரியர்களால் கருதப்பட்ட ஒரு இளைஞர் அதை ஏற்றுக் கொண்டு தன் திறமைகளில் நம்பிக்கை இழந்து பின்வாங்கி இருந்தால் இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற விஞ்ஞானியாக உலகம் கருதும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனை உலகம் இழந்திருக்கும்.

விமான இயந்திரவியல் படிக்க விண்ணப்பித்து பன்னிரண்டு பேர் டேராடூனில் நேர்முகத் தேர்வுக்குச் சென்றார்கள். அந்தப் பன்னிரண்டு பேர்களில் ஒருவர் மட்டும் தகுதியில்லை என்று நீக்கப்பட்டார். அவர் தான் டாக்டர் அப்துல் கலாம். விமான இயந்திரவியலுக்குத் தகுதியில்லை என்று நீக்கப்பட்டவர் பின்னாளில் இந்திய விண்வெளி ஆராய்ச்சித் துறையில் இயக்குனர் பதவி வகுத்து பல சாதனைகள் புரிந்தது விந்தையல்லவா?

பள்ளிக்கூட கூடைப்பந்தாட்டக் குழுவில் விளையாடத் தகுதியில்லாதவர் அன்று மறுதலிக்கப்பட்ட ஒருவர் பின்னாளில் உலகப் புகழ்பெற்ற கூடைப் பந்தாட்ட வீரராகப் புகழ்பெற்றார். அவர் தான் மைக்கேல் ஜோர்டான். பள்ளிக்கூட அளவிலேயே அவர் சோர்ந்து ஆடுவதை விட்டிருந்தால் வாழ்ந்த சுவடு தெரியாமல் அவர் போயிருப்பார்.

“ஒரு மெழுகுவர்த்தியைக் கொளுத்தக் கூடத் திராணியற்றவள்” என்று கேவலமாக ஒரு கன்னியாஸ்திரீயைப் பார்த்து பெரிய மதகுரு சொன்னார். தன் இயக்கத்திற்காக லொரெட்டோ கன்னிமடத்தைத் துறக்க அனுமதி கேட்ட போது தான் இந்த வார்த்தைகளை அவர் கேட்க வேண்டி வந்தது. இதற்குக் கூடத் திராணியில்லாத நீ ஒரு இயக்கத்தையா வழிநடத்தப் போகிறாய் என்கிற ரீதியில் பேசப்பட்ட கன்னியாஸ்திரீ வேறு யாரும் அல்ல கல்கத்தா வீதிகளில் பெரும் சேவை புரிந்த, நோபல் பரிசு பெற்ற அன்னை தெரசா தான்.

ஒரு செய்தித்தாளில் “கார்ட்டூனிஸ்டா”கத் தன் வேலையை ஆரம்பித்த இளைஞருக்கு வேலை சில நாட்களிலேயே போய் விட்டது. அந்தப் பத்திரிக்கையின் ஆசிரியர் சொன்ன காரணம் “உனக்குக் கற்பனைத் திறமையே இல்லை” அந்த இளைஞர் யார் தெரியுமா? கார்ட்டூன் உலகின் மேதை வால்ட் டிஸ்னி. அவர் உருவாக்கிய டிஸ்னிலேண்ட் என்ற பரவச உலகம் பல நாடுகளில் இன்றும் கற்பனைத் திறனின் சிகரமாகக் கருதப்படுகிறது.

இப்படி உதாரணங்களால் நூற்றுக்கணக்கான பக்கங்களை ஆதாரத்தோடு நிரப்ப முடியும் என்றாலும் செய்தி இது தான் – மற்றவர்களுடைய மோசமான கருத்துக்களை தீர்ப்புகளாக எடுத்துக் கொள்ளாதீர்கள். மனம் சோர்ந்து விடாதீர்கள். உங்களுக்குள் இருக்கும் உற்சாகத் தீயை அணைந்து விட அனுமதிக்காதீர்கள். அப்படி அணைய விடும் போது தான் அவர்கள் கருத்து தீர்ப்பாகிறது. எதில் உங்களுக்கு அளவிட முடியாத ஆர்வம் இருக்கிறதோ, அதற்காக உழைக்கவும் நீங்கள் தயாரோ அதில் நீங்கள் தாக்குப்பிடித்தால் போதும், நிச்சயமாக வெற்றியடைவீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top