கல்வி வாழ்வே, இன்றைய உலகின் தேவை! என்றார் சுவாமி விவேகானந்தர். நாம் கல்வியை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று சுவாமிஜி பல சொற்களில் பல இடங்களில் பல வார்த்தைகளில் எடுத்துச் சொல்லிவிட்டுச் சென்றுள்ளார். அதில் நாம் ஒன்றன் பின் ஒன்றாக பார்ப்போம்.
அறிவு – மனிதனிடம் ஏற்கனவே உள்ளது!
நியூட்டன் புவி ஈர்ப்பைக் கண்டுபிடித்தார் என்று கூறுகிறோம். அந்தக் கண்டுபிடிப்பு ஒரு மூலையில் உட்கார்ந்து அவருக்காகக் காத்துக் கொண்டா இருந்தது? அது அவரது மனதில் இருந்தது. தருணம் வந்தது, அவர் கண்டுபிடித்தார்.
கல்வியின் சாரம்!
கல்வி என்பது என்ன? அது புத்தகப் படிப்பா? இல்லை பலவகைப்பட்ட அறிவைத் தேடிக் கொள்வதா? இப்போது கிட்டத்தட்ட செத்துவிட்ட நிலையில் உள்ளதே, அதுவா கல்வி? கல்வி என்பது ஏராளமான உண்மைகளை மனதில் நிறைப்பதல்ல. மனதைப் பூரணமாக்கி முழுவதுமாக அதை அடக்குவதே கல்வியின் நோக்கம். ஒருவனைச் சொந்தக் கால்களில் நிற்கச் செய்கின்ற கல்வியே தேவை.
ஆசிரியர்- மாணவர் நெருங்கியத் தொடர்பு!
குருகுல வாசம்; அதாவது ஆசிரியருடன் வாழ்ந்து கற்கும் போது தான் கல்வி பற்றிய அறிவை முழுமையாக உள்வாங்கிக் கொள்ள முடியும். ஆசிரியருடைய வாழ்க்கையின் தாக்கம் இல்லாத கல்வி கல்வியாகாது. நெருப்பைப் போல களங்கமற்ற ஒழுக்கம் உடையவர்களுடன் இளமையில் இருந்தே சிறுவர்கள் வாழ வேண்டும்.
கல்வியும் ஆன்மிகமும்!
ஆன்மிகம் என்பது தான் கல்வியின் உட்சாரம். ஆன்மிகமே அடிப்படையானது. ஆன்மிகமே சோறு; ஆன்மிக ஞானத்தைப் போதித்தால், அதன் பின்னர் உலக அறிவும் நீங்கள் விரும்புகின்ற மற்ற எல்லா அறிவும் உங்களைத் தொடர்ந்து வரும்.
மதம் சார்ந்த கல்வி – சுவாமிஜியின் திட்டம்!
நமக்கும் கட்டாயமாக ஒரு கோயில் வேண்டும். இந்துக்களை பொருத்த வரை முதலில் மதம். நாம் அதை எந்த நெறியும் சாராத கோயிலாகக் கட்டுவோம். எல்லாப் பிரிவினரும் ஏற்றுக்கொண்டு வருவது ‘ஓம்’ மட்டுமே. நமக்குக் கட்டாயமாக பொதுக் கோயில் வேண்டும். அதனுடன் பொதுக் கல்வி வேண்டும். இதை எளிதாகச் செய்ய முடியும். படிப்படியாக இந்தியா முழுவதும் இது போன்ற கோயில்கள் உருவாக வேண்டும். இது தான் என் திட்டம் என்று சுவாமிஜி கூறுகிறார்.
தனக்குத் தானே உதவுதல் – நமது குறிக்கோள்!
தமக்குத்தாமே உதவிக் கொள்ளுமாறு மக்களுக்குப் பயிற்சி தராவிட்டால், உலகின் செல்வம் அனைத்தையும் சேர்த்தாலும் ஒரு சிறிய இந்திய கிராமத்துக்குக் கூட உதவி செய்ய முடியாது. நமது பணி முக்கியமாக கல்விப் பணியாக இருக்க வேண்டும். ஒழுக்கம், கல்வியறிவு இரண்டையும் புகட்ட வேண்டும். அது போதும், மக்கள் வருங்காலப் பஞ்சங்களில் இருந்து தங்களைப் பாதுகாக்கக் கற்றுக் கொள்வார்கள்.
அறிவு மனிதனில் ஏற்கனவே உள்ளது; கல்வியின் சாரம், ஆசிரியர்-மாணவர் நெருங்கிய தொடர்பு, கல்வியும் மதமும், மதம் சார்ந்த கல்வி, தமக்குத் தாமே உதவுதல் – இவை தான் சுவாமிஜியின் திட்டம்.
பாமர மக்களுக்குக் கல்வி, பெண் கல்வி, வட்டார மொழிகளில் கல்வி போன்றவற்றைப் பற்றி எளிதாக சுவாமிஜியின் வரலாற்றில் கூறப்படுகிறது.