ஸ்ரீராமகிருஷ்ணர் ஒரு நாள் ‘ஜெய் ராதே பிரேமமயீ. நரேன் உலகிற்குப் போதிப்பான்’ என்று கைப்பட எழுதி சுவாமிஜியின் ஆசார்யத்துவத்தை சாசனம் செய்தார்.
சாஸ்திரங்களின் கருத்துகளையும் விதிகளையும் கற்றுத் தெளிந்து, கடைப்பிடித்து, தற்கால மக்களுக்கு ஏற்றபடி அளித்து மக்களை உயர்த்துபவரே ஆசார்யர்.
“நாராயணம் பத்மபுவம் வஸிஷ்டம் சக்திஞ்ச தத்புத்ர
பராசரம் ச வ்யாஸம் சுகம் கௌடபதம் மஹாந்தம்”
-என்பது நாம் போற்றும் ஆசார்ய பரம்பரை. பின் ஆதிசங்கரர், ஸ்ரீ ராமானுஜர், ஸ்ரீமத்வர், ஸ்ரீசைதன்யர், ஸ்ரீராமகிருஷ்ணர் என ஆசார்யர் பரம்பரை பல கிளைகளாகத் தொடர்கிறது.
வேதாந்த தேசிகர் ஆசார்யருக்குரிய குணங்களை ‘ந்யாஸ விம்ஷதி’யில் எடுத்துக்காட்டுகிறார்.
ஸித்தம் ஸத்ஸம்ப்ரதாயே ஸ்திரதியமநகம்
ச்ரோத்ரியம் ப்ரஹ்ம நிஷ்டம்
ஸத்வஸ்தம் ஸத்ய வாசம் ஸமய நியதயா
ஸாது விருத்யா ஸமேதம்
டம்பாஸுயாதி முக்தம் ஜித விஷய கணம்
தீர்க்க பந்தும் தயாலும்
ஸ்காலித்யே ஷாஸிதாரம் ஸ்வபரஹிதபரம்
தேசிகம் பூஷ்ணு ரீப்ஸேத்||
பொருள் : சிறந்த ஆசார்யப் பரம்பரையில் கற்றுத் தேர்ந்தவர், சஞ்சலமற்றவர், குறையே இல்லாதவர் வேதம் கற்று பிரம்மத்தில் நிலைபெற்றவர், சத்வகுணம் படைத்தவர், சத்தியவாதி, காலத்திற்கேற்ற முன்னோர் ஒழுகிய ஒழுக்கமிக்கவர், பெருமை-பொறாமை இல்லாதவர், புலனடக்கம் பெற்றவர், தொடர்ந்து உதவுபவர், கருணையுள்ளவர், தவறைக் கண்டுபிடிப்பவர், தன்னோடு பிறர்நலத்தையும் நாடுபவர் – அப்படிப்பட்ட ஆசார்யனை சீடன் தேர்ந்தெடுக்க வேண்டும்.
இந்த 16 குணங்களும், ஸ்ரீராமகிருஷ்ணரின் 16 சீடர்களில் முதன்மைச் சீடரான சுவாமிஜிக்கு மிகவும் பொருந்துகின்றன. அவற்றைப் பார்ப்போம்:
ஸித்தம் ஸத் சம்ப்ரதாயே – நல்ல ஆசார்யப் பரம்பரையில் வருபவர்
சாட்சாத் நாராயணனிடமிருந்து தோன்றி பிரம்மா, வசிஷ்டர், சக்தி, சுகப்பிரம்மம் வரிசையில் ஆதிசங்கரரின் பரம்பரையான புரி என்ற தசநாமி சம்பிரதாயத்தில் தோன்றிய தோதாபுரியிடமிருந்து துறவறம் பெற்றவர் ஸ்ரீராமகிருஷ்ணர். அவரது சீடரான விவேகானந்தர், ஆசார்யப் பரம்பரை என்ற தங்க கிரீடத்தில் அமைந்த ஒரு வைரக்கல்.
ஸ்திரதியம் – எந்த நிலையிலும் சஞ்சலமின்றி ஸ்திரமாக இருப்பவர்
அமெரிக்காவில் ஒருமுறை சுவாமிஜியின் மனநிலையைச் சிலர் சோதிக்க எண்ணினர். ஒரு மரப்பெட்டியின் மீது ஏறி நின்று பேசும்படி கேட்டுக் கொண்டனர். சுவாமிஜி பேச ஆரம்பித்தார். திடீரென்று காதைப் பிளக்கும் ஓசை. துப்பாக்கிக் குண்டுகள் வெடித்தன. சுவாமிஜியின் காதின் அருகேயும் சில குண்டுகள் பாய்ந்து சென்றன. சுவாமிஜி இந்தச் சூழ்நிலையால் சிறிதும் பாதிக்கப்படாமல் பேசிக் கொண்டிருந்தார். இதைக் கண்ட அந்த இளைஞர்கள் சுவாமிஜியின் மனஉறுதியைக் கண்டு திகைத்தனர். மன்னிப்பு கேட்டனர்.
அனகம் – எந்தக் குறைகளும் இல்லாதவர்
பொய், கொலை தான் பாவ காரியம் என்றில்லை. ஆசையும் பாபத்திற்கு வித்திடுவதே. ஆசையின் விளைவுகளான பயமும், துன்பமும் இல்லாதிருத்தல் வேண்டும்.
இளம் வயதில் தந்தையை இழந்து குடும்ப வறுமையில் தவித்தார் சுவாமிஜி. அப்போது அவரது நண்பர்கள் பலரும் அவரைத் தீய வழியில் சம்பாதிக்கத் தூண்டினர். சுவாமிஜி வறுமையில் வாடியபோதும் ஒழுக்கத்திலிருந்து ஒரு சிறிதும் மாறவில்லை.
சர்வமத மகா சபையில் பேசி முடித்து உலகப் புகழுடன் வெளிவந்தபோது, பல அழகிய பெண்கள் சுவாமிஜியைச் சூழ்ந்து கொண்டனர். ஆனால் ஆசையை வென்ற சுவாமிஜியை அப்பெண்களின் ஆர்வக் கோளாறு பாதிக்கவே இல்லை.
ஸ்ரோத்ரியம் – வேத வேதாந்தங்களைக் கற்றுத் தெளிந்தவர்
வேத வேதாந்தங்களைக் கற்று அதன் சாராம்சங்களை மக்கள் புரிந்து கொள்ளும் வகையில், அவர்களின் தேவைக்கேற்ப தருபவரே ஸ்ரோத்ரியன்.
குஜராத்தில் உள்ள போர்பந்தரில் பெரும் பண்டிதரான சங்கர பாண்டுரங்க் என்பவரை சுவாமிஜி சந்தித்தார். இவர் சாஸ்திரங்களைக் கசடறக் கற்று மேலைநாடுகளுக்குப் பலமுறை சென்று வந்தவர். அவர் சம்ஸ்கிருத சாஸ்திரங்களை மொழிபெயர்த்துக் கொண்டிருந்தார். சுவாமிஜியின் ஆழ்ந்த சாஸ்திர ஞானத்தைக் கண்ட பண்டிதர் தமது மொழிபெயர்ப்புப் பணியில் சுவாமிஜியின் உதவியை நாடினார்.
சுவாமிஜி சர்வமத மகாசபையில் பேசுவதற்குச் சிபாரிசு கடிதம் கேட்டபோது ஜான் ரைட் எனும் அறிஞர் நமது ‘பேரறிஞர்கள் அனைவரையும் ஒன்று கூட்டினால்கூட சுவாமிஜியின் ஆற்றலுக்கு ஈடில்லை. அந்த ஞானசூரியனுக்கு யார் அனுமதி தர வேண்டும்?’ என்று சுவாமிஜியைப் போற்றுகிறார்.
பிரும்ம நிஷ்டம் – எப்போதும் பரம்பொருளில் நிலைத்தவர்
எப்போதும் பரமானந்த நிலையில் இருக்க வேண்டும் என வேண்டியபோது, ஸ்ரீராமகிருஷ்ணர் சுவாமிஜியிடம், “ஜகன்மாதா உனக்கு ஆனந்தத்தின் ஒரு கதவைத் திறந்து விட்டிருக்கிறாள். அதைப் பூட்டிச் சாவியை நான் வைத்துள்ளேன். நீ உலகிற்குப் பணி செய்யப் பிறந்திருக்கிறாய். உன் பணி முடிந்த பின் அந்தச் சாவி உனக்குத் தரப்படும்” என்று கூறி அவரது நித்ய சுத்த சத்துவமான இறை நிலையைச் சற்றே மறைத்து மக்களுக்குப் பணி செய்யப் பணித்தார்.
சத்வஸ்தம் – சத்வ குணத்தில் நிலைத்தவர்
சுவாமிஜி காமம், குரோதம் இவற்றால் பாதிக்கப்படாமல் உயர் நிலையிலேயே இருந்தார். அவர் அமெரிக்காவில் இருந்தபோது உரையாற்றுவதற்காக, ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு ரயிலில் நெடுந்தூரம் பயணம் செய்வார். அப்போது ரயிலிலேயே அவ்வளவு கூட்டத்தின் நடுவிலும் அவர் அகமுகமாகி தியானத்தில் ஆழ்ந்துவிடுவதுண்டு. சமயத்தில் சில மணி நேரங்கள்கூட அவர் அந்த நிலையிலேயே நிலைத்திருப்பார்.
சத்யவாசம் – சத்திய வழியில் நிற்பவர்
நமக்கு உண்மையே பேசுவது என்பது பயிற்சி மூலமாக அமையும். சுவாமிஜிக்கோ அது இயற்கையிலேயே வாய்த்திருந்தது. மேலும் அவர் பேசுவதெல்லாமே சத்தியமானது.
நாம் அடிமையாக இருக்கிறோம், இந்தியா சுதந்திரம் பெற முடியாது என்று நம் மக்கள் எண்ணிக் கொண்டிருக்கையில், 1897-ல் சுவாமிஜி “இன்னும் 50 ஆண்டுகளில் இந்தியா சுதந்திரம் பெற்றுவிடும்” என்றார். அதுவே உண்மையாகவும் ஆனது.
ஜெய்ப்பூரில் இருந்த சர்தார் ஹரிசிங், உருவ வழிபாட்டில் நம்பிக்கையற்றவர். ஒரு நாள் ஸ்ரீகிருஷ்ணர் விக்கிரகம் ஏந்தி சிலர் வீதி உலா வந்தபோது, ஹரிசிங் அதை அலட்சியமாகப் பார்த்தார். அப்போது சுவாமிஜி அவரைத் தொட்டு “அதோ கிருஷ்ணரைப் பாருங்கள்” என்று ஸ்பரிச தீட்சையின் மூலம் அந்தக் கணத்திலேயே இறைவனைத் தரிசிக்கச் செய்தார்.
பிரகலாதனுக்குத் தூணிலும் இறைவன் காட்சி கொடுத்தார். ஒரு பக்தனோ, ஆசார்யனோ இங்கு இறைவன் இருக்கிறான் என்று திடமாகக் கூறும்போது அங்கே இறைவன் எழுந்தருளினான். சுவாமிஜி விஷயத்திலும் அது சரியானது.
சமய நியதயா ஸாது விருத்யா ஸமேதம் – காலத்திற்கேற்ற முன்னோர் வழி நின்றஒழுக்கமுடையவர்
ஸ்மிருதிகளை அனுசரித்து, உண்டாக்கப்பட்ட ஜாதி, வர்ணங்களில் சேர்ந்துவிட்ட ஏற்றத்தாழ்வுகளைக் களைவது ஒரு புரட்சி. பல ஆண்டுகளுக்கு முன்பே ஆதிசங்கரர், ஸ்ரீராமானுஜர் போன்ற மகான்கள் இந்தப் புரட்சியைச் செய்து காட்டினர்.
அந்த ஆன்மிகப் பரம்பரையில் வந்த சுவாமிஜி அதை வாழ்ந்து காட்டினார். கிணற்றுத்தவளைகளாக ஆன்மிகவாதிகள் இருந்த அந்தக் காலத்தில், சுவாமிஜி நம் ஆன்மிகத்தை அயல்நாடுகளுக்குத் தந்துதவி, மேற்கத்திய நாடுகளின் அறிவியல் வளர்ச்சியை நாம் பெற்றுக் கொள்வோம் என்று புரட்சியைத் தொடங்கினார். இதுவே விஞ்ஞானத்திலும் மற்ற துறைகளிலும் இன்று நாம் உயர்ந்திருப்பதற்குக் காரணம்.
“காடுகளிலும், மலைகளிலும், குகைகளிலும் இருக்கும் உபநிஷத கருத்துகளை ஜாதி, வர்ண பேதமின்றி எங்கும் அள்ளித் தெளியுங்கள்” என்றார் சுவாமிஜி. இன்று ஸ்ரீராமகிருஷ்ண மடம் சுவாமிஜியின் விருப்பத்தை நிறைவேற்றி வருகிறது.
டம்பாஸூயாதிமுக்தம் – தற்பெருமை, பொறாமை முதலியவை இல்லாதவர்
டம்பா = தற்பெருமை, அஸூயி = பொறாமை. ஆசார்யனுக்கு இரண்டுமே இருக்கக் கூடாது.
சுவாமிஜி விவேகானந்தர் இல்லத்தில் தன் சொற்பொழிவை முடித்துவிட்டு, நான் சொல்வது எல்லாம் என் குருதேவரின் உபதேசங்களே. அதில் தவறு இருப்பின் அது மட்டும் என்னுடையது என வினயத்துடன் கூறினார்.
சுவாமிஜி எப்போதும் கற்பதில் கவனமாக இருந்தார். தம்மைவிட அதிக ஞானமுள்ளவரிடம் ஒரு சீடனாக இருந்து கற்றுக்கொள்ள அவர் தயங்கியதில்லை. பவஹாரி பாபாவிடம் அவர் அப்படித்தான் கற்றார்.
சுவாமிஜி, தம்மோடு இருப்பவரிடம் உள்ள மேன்மையை, தற்பெருமையும் பொறாமையும் இல்லாமல் மனமுவந்து பாராட்டவும் தயங்கியதில்லை. அவ்வாறுதான் சுவாமி பிரம்மானந்தரை ஆன்மிக டைனமோ என்று போற்றினார்.
ஜித விஷய கணம் – புலன்களை வென்றவர்
காம, குரோத, லோப, மோக, மத, மாத்சர்யம் ஆகியவற்றால் பலர் துன்பப்படுகிறோம். இதை வென்றவர் சுவாமிஜி.
சுவாமிஜி பரிவ்ராஜகராக நாட்டின் பல பகுதிகளில் சுற்றினாலும் பசி தாகத்தை வென்றிருந்தார். அரண்மனைகளில் யாருமில்லாத நேரத்தில் இரவெல்லாம் பணிப்பெண்கள் அவருக்கு விசிறிக் கொண்டிருந்தபோதும் அவர் என்றும் புலன்களை வென்ற நிலையிலேயே இருந்தார்.
கன்னியாகுமரி பாறையில் டிசம்பர் மாதத்தில் கடுங்குளிரில் மூன்று நாட்கள் பாரதத்தின் மேன்மைக்காகத் தியானித்தவர் சுவாமிஜி. ஜீவன்களுக்கு அடிப்படையான நீரையும் உணவையும் பற்றிக் கூட கவலைப்படாமல் தவத்தில் மூழ்கியிருந்த ஜிதேந்திரியர் அவர்.
தீர்க்கபந்தும் – இம்மைக்கும் மறுமைக்கும் நம்மை வழி நடத்துபவர்
என்றென்றும் நம்மோடு இருந்து எல்லோரது முன்னேற்றத்திற்கும் பாடுபடுபவர் சுவாமிஜி. அவர் தன் சிந்தனைகள் மூலமாகவும், பேராற்றல் மிக்க கருத்துகளாலும், ஆசியாலும் என்றென்றும் வழிநடத்திக் கொண்டிருக்கிறார்.
மன்மதநாத் கங்குலி என்பவர், “சுவாமிஜி, நான் ஆன்மிக வாழ்விலிருந்து தவறிவிட்டால் என்னைக் கைவிட்டுவிடுவீர்களா?” என ஒருமுறை கேட்டார்.
அதற்கு சுவாமிகள், “என் சீடனான நீ நரகத்திற்கே சென்றாலும் உன் சிண்டைப் பிடித்தாவது உன்னை அங்கிருந்து காப்பாற்றுவேன்” என்றார்.
“நான் எப்போதும் மனிதகுல நன்மைக்காகத் தொடர்ந்து வேலை செய்து கொண்டிருப்பேன்” என்று சுவாமிஜி கூறினார் அல்லவா!
தயாலும் – கருணாமூர்த்தி
தயை, மகான்களின் மேலோங்கிய குணம். சுவாமிஜி மேலைநாடுகளிலிருந்து திரும்பியதும், ஸ்ரீராமகிருஷ்ண இயக்கத்தை உருவாக்கினார். அதைத் தன் உயிரினும் மேலாக நேசித்தார்.
அப்பேர்ப்பட்ட இயக்கத்திற்காக வாங்கிய நிலத்தை, கல்கத்தாவில் கடும் பிளேக் நோய் மக்களின் உயிரைப் பறித்தபோது, மக்களின் துன்பத்தைத் தீர்க்க, பணத்தேவைக்காக விற்றுவிட எண்ணினார். அப்படி ஒரு தயை அவரிடம் இருந்தது.
ஒருமுறை பிஜித் தீவில் ஒரு எரிமலை வெடித்துப் பலர் கோரமாக மாண்டனர். அந்தக் கொடும் விபத்து நடந்த அதே நேரத்தில் சுவாமிஜி தமது சக சீடரிடம் “உலகில் எங்கோ பெரிய விபத்து நடந்திருக்கிறது. மக்கள் பெரிதும் அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்” என்று முன்கூட்டியே கூறித் தவித்தார்.
ஸ்காலித்யே ஷாஸிதாரம்–தவறைக் கண்டிப்பவர்
தம்முடன் இருப்பவர்கள் தவறு செய்யுங்கால் அவர்களைத் திருத்தி ஏற்றுக்கொள்ளும் ஆசார்ய குணம். உடுத்தியிருந்த துணியைத் தவிர வேறொன்றையும் உடைமையாகக் கொண்டிராத ஒரு துறவி, மைசூர் மன்னரிடம் நேருக்கு நேர் வாதாடி, தனக்கு என்ன நேர்ந்தாலும் கவலையில்லை என உண்மையை உணர்த்தி ஆட்கொண்டார்.
ஸ்வபரஹிதபரம் – தனது மற்றும் அனைவரது மேன்மையையும் விரும்புபவர்
இதைத் தான் ‘ஆத்மனோ மோக்ஷார்த்தம் ஜகத் ஹிதாய ச’ என்றார் சுவாமிஜி. தம் முக்திக்கும் பிறர் நலனுக்கும் வழிகாட்டியாக இருப்பவர். ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் முக்கிய குறிக்கோளும் இதுவே.
“வாழும் கடவுளையே நாம் வழிபட விரும்புகிறோம். உலகமாகிய இந்த நரகத்தில் ஒருவன் ஒரு நாளாவது பிறரது இதயத்திற்குச் சிறிது இன்பமும் அமைதியும் தர முடியுமானால் அதுவே உண்மை. வாழ்நாள் முழுவதும் கஷ்டப்பட்ட பிறகு நான் இந்த உண்மையை அறிந்தேன்” என்றார் சுவாமிஜி.
ஆக, இந்தப் பதினாறு குணங்களும் பூரணமாக அமையப் பெற்ற சுவாமிஜி என்ற மகாசார்யனை நாம் பெற்றிருக்கிறோம். இன்று அவரது திருவடி நிழலில் நாம் இருக்கிறோம்.
அவர் காட்டிய வழியில், அவர் வாழ்க்கையைப் பின்பற்றி நடப்பதே நம் அனைவருக்கும் உகந்த வழி.