மேலைநாடுகளிலிருந்து வெற்றித்திருமகனாகத் தாய்நாட்டிற்குத் திரும்பிய சுவாமி விவேகானந்தர், ஸ்ரீ ராமகிருஷ்ணர் காட்டிய வழியில் வீடும் நாடும் நலம்பெறத் துறவிகள் நடத்தக்கூடிய ஒரு சங்கம் தோற்றுவிக்க மனம் கொண்டார். சமுதாயத்தில் மகிழ்ச்சி இருந்தாலொழியத் தனிமனித மோட்சம் உபயோகமற்றது என்றும் கருதினார். ஆனால், சக துறவி யோகானந்தர், சமூக சேவை வீடு பேறு பெற உதவாது.
சமூக சேவையை முன் வைத்தால், தாம் சங்கத்தில் இணைய முடியாது என்றும் சமூகசேவையை ஆன்மிகத்துடன் தொடர்பு படுத்துவது கிறிஸ்து மதத்தினர் செய்வது, இதை மேலை நாடுகளில் கண்டுவிட்டு வந்ததால் சுவாமி விவேகானந்தர் இப்படிப் பேசுகிறார் என்றும் கூறிவிட்டார். சுவாமி விவேகானந்தர் இதை ஒப்புக்கொள்ளவில்லை. ஒரு சமயம் இது பற்றிப் பேசும்போது தன் உணர்ச்சிகளை அருவியாகக் கொட்டிவிட்டார்:
“என்னைவிட நீ ஸ்ரீ ராமகிருஷ்ணரை நன்கு புரிந்துகொண்டுவிட்டாயோ? நீ ஞானத்தை உலர்ந்த சரக்காக எண்ணுகிறாய். அதைப் பாலைவனத்தின் வழியாக அடைய முயலுகிறாய். இதயத்தின் மென்மையான உணர்வுகளைக் கொன்றுவிட்டு வீடு பெற எண்ணுகிறாய். உனது பக்தி வெறும் அழுகுணிச்சரக்கு. மனிதனை ஆண்மையற்றவனாகச் செய்வது. ஸ்ரீ ராமகிருஷ்ணரை நீ புரிந்து கொண்ட வகையில் அவரைப் பற்றி மக்களுக்குச் சொல்ல நினைக்கிறாய்.
அவரை நீ அறிந்து கொண்டது தும்மாத்தூண்டு அளவுதான்! உன்னுடைய ராமகிருஷ்ணரைப் பற்றி யாருக்கு அக்கறை? உனது பக்தியும் முக்தியும் யாருக்கு வேண்டும்? உன்னுடைய சாஸ்திரங்கள் சொல்வதில் யாருக்கு அக்கறை? என்னுடைய தாய்நாட்டின் மக்களை எழுச்சிபெறச் செய்வதற்கு, அவர்களைத் தன்னம்பிக்கையுடன் நிமிர்ந்து நிற்க வைப்பதற்கு, கர்ம யோகத்தினை உள்ளது உள்ளபடி அறிந்து வாழவைப்பதற்கு, நான் ஆயிரம் நரகங்களுக்குச் செல்லத் தயாராக இருக்கிறேன். நான் இராமகிருஷ்ணருக்கோ, வேறு யாருக்கோ பின் செல்பவனல்ல. தனது பக்தி முக்தி பற்றிக் கவலைப்படாமல், தனக்கென வாழாப் பிறர்க்குறியாளனுக்கே நான் பின் செல்பவன்” -என்றார்.
இவ்வாறு சொன்ன பிறகு சுவாமிகளின் செயற்பாடுகளை மற்றவர்கள் எதிர்க்கவில்லை. தங்களது குரு ஸ்ரீ ராமகிருஷணரே அவர் மூலம் பேசுவதாகக் கருதினர். அதுசமயம் கொல்கொத்தாவில் ஏற்பட்ட பிளேக் நோயினால் பயங்கரமாகத் தாக்கப்பட்ட மக்களுக்கு ராமகிருஷ்ண மிஷன் சந்நியாசிகள் செய்த சேவையை உலகறியும். சுவாமி விவேகானந்தரின் தலைமையில் வெகு வேகமாக ராமகிருஷ்ண மிஷன் உலகளாவிய பெரியதொரு ஆலமரமாக வளர்ந்தது.
பரிவ்ராஜ சந்நியாசியாக அவர் பாரதமெங்கும் பிரயாணித்தபோது ஒரு நாளைக்கூட வீணாக்கவில்லை. முக்கியமாக, நூல்கள் படித்தார், மற்றவர்களுடன் கலந்துரையாடினார், சுற்றுப்புறங்களில் நடப்பதைக் கூர்ந்து கவனித்தார், சிந்தித்தார், வாழ்க்கை காட்டும் பாடங்களை அறிந்துகொண்டார். கன்னியாகுமரியில், சமுத்திரத்தில் ஸ்ரீபாத பாறைக்கு நீந்திச்சென்று அங்கு தியானத்தில் ஆழ்ந்தார்.
கன்னியாகுமரியிலிருந்து சென்னை வந்தார். சென்னையில் அவரிடம் பல இளைஞர்கள் வந்து தங்களைச் சீடர்களாக இணைத்துக் கொண்டனர். அவர்களில் தலையானவர் திரு அளசிங்கப் பெருமாள். இவர் ஸ்ரீவைஷ்ணவர். ஸ்ரீ ராமானுஜர் காட்டிய கைங்கரிய (தொண்டு) வழியில் செல்பவர். அவருடன் ராமானுஜரின், வாழ்க்கை மற்றும் விசிஷ்டாத்வைதத் தத்துவம் பற்றிப் பேசுவதில் மகிழ்ச்சி கொண்டார்.
அமெரிக்கா சென்றபோது, ராமானுஜரின் தத்துவக் கிரந்தங்களை ஆழமாகப் படித்தார். அவருக்கு ராமனுஜரின் ஸ்ரீ பாஷ்யம் போன்ற உரை நூல்களை அளசிங்கப்பெருமாள் அனுப்புவார். ராமானுஜரின் வாழ்வும் வாக்கும் சுவாமி விவேகானந்தரிடம் பெரும் தாக்கம் ஏற்படுத்தியதாகத் தெரிகிறது. இந்தியாவெங்கும் சுற்றியபோது மக்கள் சிலரைத் தீண்டத்தகாதவர் என்று ஒதுக்கியதும், மதம் பற்றிய அவர்களது எண்ணங்கள் சுவாமிகளுக்குப் பிடிக்கவில்லை.
இதுவா பெரியோர் போற்றிய சனாதன தர்மம்? என்று ஆதங்கப்பட்டார். வேத காலம் தொடங்கிப் பாரதத்தில் தோன்றிய மாமனிதர்களை, ரிஷிகளைப் பற்றிப் படித்துச் சிந்திக்கும் போது, ராமானுஜர் அவரை மிகவும் கவர்ந்தார். இவரல்லவோ வேதாந்தப் பரமான வாழ்வியலுக்கு இலக்கணம் வகுத்தவர் என்று நினைத்தார். சாதியம் எனும் அரக்கனை அழிக்க வழியுண்டு என்பதை அறிந்தார். ராமானுஜரது வாக்கினை எடுத்துப்படிக்கும் ஒவ்வொருமுறையும் சுவாமிகளுக்குப் புதுமையான எண்ணங்கள் நெஞ்சில் வளர்ந்தன. ஆதிசங்கர பகவத்பாதாளையும் ராமானுஜரையும் ஒப்பிட்டு நோக்கிய சுவாமிகள் எழுதுகிறார்:
சங்கரர் திறந்த வழி அறிவு சார்ந்தது என்றாலும் பெருவாரியான மக்களால் அதை அடைய முடியாமல் போனது. இதற்கு முக்கியமானக் காரணம் சாதீயம் பற்றிய வரைமுறைகள்தான். அவ்வழியில் சாதாரணமானவர்களுக்கு மிகச் சிறிய இடம்தான் ஒதுக்கப்படுகிறது. அதில் வடமொழியை மாத்திரமே உபயோகிப்பதால், அதுவும் ஒரு தடையாக இருக்கிறது. ராமானுஜரது தத்துவமோ அன்றாட வாழ்க்கைக்கு ஒத்துப்போவதாக இருக்கிறது. ஆன்மிக ஆற்றல் முன்பு சாதித் தடைகள் விடுபட்டுப் போகின்றன. அன்றாடப் பேச்சுமொழியை உபயோகித்து மக்களை வேதநெறிக்கு அழைத்து வருகிறது.
ராமானுஜர் (1017-1137) நீண்ட ஆயுளைப் பெற்றிருந்தார். நல்லதொரு சீடனாகப் பெயர் பெற்ற ஸ்ரீ ராமானுஜர், நல்லதொரு ஆசானாகவும் புகழ் பெற்றார். அவர் பெற்ற தெய்வீக அனுபவங்கள் காரணமாக அவரால் உலகை மாயை என்று தள்ள முடியவில்லை. பிரம்மம் என்பது ஒன்றே பேருண்மை என்றார். ஆயினும், இந்தப் பிரும்மத்தில் மலர்ந்த இவ்வுலகம் என்பதும் உண்மையே என்றார். அதனால் தான் அவரது தத்துவ தரிசனத்தை விசிஷ்ட-அத்வைதம் (பிரத்தியேகமான அத்வைதம்) என்று அழைக்கிறோம்.
ராமானுஜரது வாழ்க்கையில் அவர் கருணையுடன் நடந்துகொண்ட காட்சிகள் பல உண்டு. தீண்டத்தகாதவர் என்று சமூகத்தால் ஒதுக்கப்பட்ட மக்களை அவர் அரவணைத்தது இவற்றில் முக்கியமானது. ஸ்ரீவைஷ்ணவர்களின் ஆன்மிக குருவாகவும் ஸ்ரீவைஷ்ணவர்களின் தலையாய திருவரங்கம் கோயிலை நிர்வகிப்பவராகவும் எழுந்தருளியிருந்த ஸ்ரீ ராமானுஜர், பணிவே உருவானவர். இந்த ஆசான் முனைந்த சேவைகள் ஒன்றா, இரண்டா? ஆன்மிகம், தத்துவம், சமயம் சார்ந்த பணிகள், மருத்துவம், கல்வி, சமூக சேவை எனப் பலப்பல. தன்னையே ஒரு முன்னுதாரணமாக வைத்தவர். அதனால் அனைத்துச் சாதிகளின் நம்பிக்கையைப் பெற்றார். ஓர் எடுத்துக்காட்டு. காவிரியில் நீராடிவிட்டுத் திரும்பும்போது பார்ப்பனரல்லாத சீடர், உறங்காவில்லிதாசர் தோளில் அல்லவா தனது கையை ஊன்றிக்கொண்டு ராமானுஜர் மடத்திற்குத் திரும்புவார்.
ஒரு முறை திருவரங்கத்தின் வயது முதிர்ந்த பிராமணரான பெரிய நம்பி, சேரியில் நோயுற்று வாடும் மாறநேர் நம்பி எனும் பக்தருக்கு உணவு எடுத்துச்செல்ல வேண்டியிருந்தது. அப்பொழுது ஸ்ரீ ராமானுஜர் அவரைத் தடுக்கவில்லை. மாறநேர் நம்பி உயர்ந்த மனிதர். பரம பக்தர். அவருக்கு உதவிட வேண்டும். பெரிய நம்பி போன்ற சிறந்த ஸ்ரீ வைஷ்ணவர் அவருக்கு உதவினால், அவரது இறுதி நாட்கள் இனிமையாக இருக்குமல்லவா?
அப்படியே நேர்ந்தது. மாறநேர் நம்பி பரமபதித்தபின், அவருக்கு அந்திம சமஸ்காரத்தையும் பெரிய நம்பியே செய்தார். என்ன? ஒரு பிராமணர் தீண்டத்தகாத குலத்தைச் சேர்ந்தவனுக்கு இறுதிக்கடன் செய்வதா? என்று ஸ்ரீ ரங்கத்தில் இருந்த ஸ்ரீவைஷ்ணவர்கள் கோபம் கொண்டனர். ஸ்ரீ ராமனுஜரிடம் சென்று முறையிட்டனர். அவர் சற்றுகூட அசைந்து கொடுக்கவில்லை. பெரிய நம்பியின் செய்கையில் தவறு காணவில்லை. மாறாக, இவர்களையா தீண்டத்தகாதவர்கள் என்று சொல்வது? என்றார்.
இவர்களும் தாயாரின் குழந்தைகளே என்று நினைத்து அவர்களுக்குத் திருக்குலத்தார் (லக்ஷ்மியின் குலம்) என்ற பெயரிட்டார். மகாத்மா காந்தி ஹரிஜன் என்று அழைப்பதற்குத் தொள்ளாயிரம் ஆண்டுகள் முன்பே ராமானுஜர் இந்தப் புரட்சி செய்திருப்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
கிட்டத்தட்ட ஆயிரமாண்டுகள் முன்பே ஸ்ரீ ராமானுஜரால் இவ்வளவு செய்ய முடிந்தால், ஒரு சங்கம் தோற்றுவித்து அதன்மூலம் இது போன்ற சமூக மாற்றங்களைச் செய்ய முடியாதா என்று அவர் யோசித்திருக்கிறார். இதனை சுவாமி விவேகானந்தர் சொல்கிறார்:
ராமானுஜர், கீழ்சாதி என்று ஒதுக்கப்படுவோருக்காக எவ்வளவு வருந்தியிருக்கிறார்! தம் குலத்தில் பறையனையும் சேர்த்துக்கொள்ளப் பாடுபட்டவராச்சே!
முகம்மதியர்களைக்கூட வரவேற்க அவர் சித்தமாயிருந்தார்! ஸ்ரீ ராமானுஜர் தில்லி சென்று சுல்தானை மகிழ்வித்து அவன் ஸ்ரீரங்கத்தைக் கொள்ளையடித்தபோது எடுத்துச்சென்ற அழகிய மணவாளன் விக்கிரகத்தை மீட்டுவந்த சரித்திரத்தைச் சுவாமிகள் கேட்டு மகிழ்ந்ததுண்டு. ஒருமுறை தில்லி சுல்தான் தலைமையில் இசுலாமியர்களது படை திருவரங்கத்தை அழித்து, கோவிலில் சேதம் விளைவித்தது. விக்கிரகங்களை எடுத்துச்சென்றது. உத்சவ விக்கிரகமான அழகிய மணவாளனைச் சுல்தானின் மகள் ஜெனானாவிற்கு எடுத்துச்சென்று பத்திரமாக வைத்திருந்தாள்.
தனது பேச்சாற்றலாலும், கருணைபொங்கும் விழிகளினாலும் சுல்தானை மகிழ்வித்த ஸ்ரீ ராமானுசரிடம் விக்கிரகத்தைச் சுல்தான் கொடுத்து விட்டான். அவரும் திருவரங்கம் திரும்பி வந்து மீண்டும் பூஜை முதலியன ஆரம்பித்தார். சுல்தானின் பெண் தன்னுடைய இனிய விக்கிரகத்தைத் தேடி திருவரங்கம் வந்து, அரங்கனுடன் ஐக்கியமானாள் என்பது கர்ண பரம்பரைச் செய்தி. அவளுக்கு ஸ்ரீ ராமானுஜர் ஏற்படுத்தியதாகச் சொல்லப்படும் சந்நிதி அர்ஜுன் மண்டபத்தில் இருக்கிறது. துலுக்க நாச்சியார் சந்நிதி என்று அழைக்கப்படுகிறது. இன்றுவரை இந்தச் சந்நிதியில் ரொட்டியும் வெண்ணையும் பிரசாதமாக அளிக்கப்படுவது விசேஷம்.
சுவாமி விவேகானந்தருக்கு இதுபோன்ற கர்ண பரம்பரைக் கதைகள் மற்றும் ஸ்ரீ ராமானுஜரின் வேதாந்தம் பெருத்த உற்சாகம் அளித்தது. ராமானுஜரைப் பற்றிப் பேச்சு வந்தால் சுவாமிக்கு உற்சாகம் வந்துவிடும்.
அவரே வேதாந்தி, மற்றும் வடமொழியினை நன்கு கற்றவர். வேதார்த்த சங்கிரகம், ஸ்ரீ பாஷ்யம் (ப்ரும்ம சூத்திரங்களுக்கு உரை), கீதா பாஷ்யம், வேதாந்த தீபம் மற்றும் வேதாந்தசாரம் ஸ்ரீ ராமானுஜர் எழுதியவை. அன்றாடம் நாம் மேற்கொள்ளவேண்டிய வாழ்க்கை முறையை அவரது நித்யா எனும் நூல் சொல்லித் தருகிறது. ஆகாரம் மூலம் புறத்தூய்மையினையும், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதன் மூலம் அகத்தூய்மையினையும் பெறலாம் என்று அவர் சொல்வது சுவாமிஜிக்குப் பிடித்தது.
பக்தி என்னும் மண்டபம் தூய்மை எனும் அடித்தளத்தின் மேல் எழுப்பப் பட்டிருக்கிறது. உடலைச் சுத்தப்படுத்துவதோ, உணவினை உட்கொள்வதோ சுலபம்தான். ஆனால் அகத்தூய்மை இல்லாவிடில், புறவாழ்வில் நமது நடத்தை உயர்வாக இருந்தும் பயனில்லை. ஸ்ரீ ராமானுஜர் தூய்மைப்படுத்தும் முக்கியமான குணங்களைப் பட்டியலிட்டிருக்கிறார்.
அவை : சத்தியம், வாய்மை; ஆர்ஜவம் எனும் ச்ரத்தை; தயை அதாவது பலன் எதிர்பார்க்காமல் உதவுவது; அஹிம்சை என்பது மற்றவர்களுக்குச் சொல்லாலும் செய்கையாலும் மனத்தாலும் தீங்கு நினைக்காமை; அனபிதியை என்பது மற்றவர்கள் பொருளுக்கு ஆசைப்படாதிருத்தல், சாரமற்ற நினைவுகளில் பொழுதை வீணாக்காமல் இருப்பது; அதேபோல் மற்றவர்கள் செய்துவிட்ட தீங்கை நினையாதிருத்தல். இவற்றில் அஹிம்சைக்கு விசேஷமான இடம் உண்டு. உயிர்கள் அனைத்திடமும் இந்த அஹிம்சையைக் கடைப்பிடிக்கவேண்டும் என்பது நமது கடமை.
ராமானுஜர் சிறந்த வேதாந்தி என்றாலும், ஆன்மிகத்தின் கீழ்ப்படியில் இருக்கும் சாதாரண மனிதர்கள் பற்றி ஆழமாகச் சிந்தித்தார் என்பதைச் சுவாமிகள் கண்டுகொண்டார். ராமானுஜர் உயிர்ப்பலியை மெல்ல மெல்லத் தடுத்து, சாத்வீகமான வழிபாடுகளை மக்கள் ஏற்கும்படி செய்தார். இறைவன் – இறைவி திருவுருவங்களை அலங்கரிப்பது, கல்யாணம் போன்ற திருநாட்கள், திருக்குளங்களில் திருப்பள்ளியோடக் காட்சிகள், திருத்தேர் என்று ஊர் முழுவதும் ஒருங்கிணைந்து பங்கேற்கச் செய்தார். வயது முதிர்ந்தும், நோய் காரணமாகவும் கோவில் செல்லமுடியாதவர்களுக்கென எம்பெருமானை கருடன், ஹம்ஸம், யானை, யாளி, குதிரை, அனுமன், ஆதிசேஷன் என்று பல வாகனங்களில் வீதி வலம் வந்திட ஏற்பாடு செய்தார். ஸ்ரீ ராமானுஜர் கோவில்களில் மலர்களுக்காகவும் மூலிகைகளுக்காகவும் நந்தவனம் அமைத்தார்.
இதுபற்றி எல்லாம் திரு. அளசிங்கப்பெருமாள் மற்றும் சென்னையில் அவரைச் சூழ்ந்துகொண்ட சீடர்கள் உற்சாகமாகப் பேசும்போது சுவாமிகள் தெரிந்து கொண்டிருக்க வேண்டும். சுவாமிகள் எழுதும்போது, சங்கரர் மாபெரும் அறிஞர். ஆனால் அவருக்கு ராமானுஜர் போல விசாலமான இதயம் இருந்ததா என்பது கேள்விக்குறி. ஸ்ரீ ராமானுஜரின் இதயம் பென்னம் பெரியது. தாழ்த்தப்பட்டவர்களுக்காக அவர் வருந்தினார். அவர்களுக்கு உதவ முனைந்தார்.
இறைவனை உருவம் மூலம் வழிபடுவதால் மனநிறைவு பெறும் மக்களுக்காகப் புது வழிபாட்டு முறைகளை ராமானுஜர் தோற்றுவித்தார். அதேசமயம், பிராமணனிலிருந்து பறையர் வரை இறைவனை அடையக் கூடிய உயர்ந்த வழிகளையும் முன்வைத்தார். இதுவே ராமானுஜரின் சாதனை. அவரது சாதனை வட இந்தியாவில் பரவியது. பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் தோன்றிய ராமானுஜர், பக்தர்களில் தலையானவர், சைதன்ய மகாபிரபு.
அமெரிக்காவில் இருந்தபோது சுவாமி விவேகானந்தர் ஸ்ரீ ராமானுஜரின் ஸ்ரீ பாஷ்யத்தை ஊன்றிப் படித்தார். பிரம்ம சூத்திரங்களுக்கு வடமொழியில் இயற்றப்பட்டிருக்கும் இந்த அற்புதமான உரையை அவருக்கு அளசிங்கப் பெருமாள் அனுப்பிவைத்தார்.
அதில் மனம் ஒன்றிய சுவாமிகள், இந்த உரைக்கு ஆங்கில ஆக்கம் செய்யப்படவேண்டுமென்று விரும்பினார். அதன்படியே பேராசிரியர் ரங்காச்சாரியாரும் திரு. வரதராஜ அய்யங்காரும் மொழிபெயர்த்துச் சுவாமிகள் கட்டளைப்படி அளசிங்கப்பெருமாள் நடத்திவந்த ‘பிரும்மவாதின்’ பத்திரிகை வெளியீடாக 1899-இல் அது வெளிவந்தது. அற்புதமான வெளியீடு. இன்றுகூட இந்நூலின் பைண்டிங் உறுதியாக இருக்கிறது. என் தந்தையார் பழைய புத்தகக்கடையில் 1933-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இதை வாங்கி இருக்கிறார். என்னுடைய பிறந்த வீட்டுச் சீர் என்றே சொல்லலாம்.
ஸ்ரீ ராமானுஜரிடம் சுவாமிகளுக்கு இருந்த ஈடுபாடு பற்றி நன்கறிந்தவர் ராமநாதபுரம் அரசர், ராஜா முத்துவிஜய பாஸ்கரசாமி சேதுபதி அவர்கள். அவர் இந்த வெளியீட்டிற்கு நிதியுதவி செய்துள்ளார். திலகர் நடத்திவந்த தி மராட்டா பத்திரிகை தனது மார்ச் 11, 1900 இதழில் இதற்கு நல்லதொரு விமரிசனம் வெளியிட்டது. முதன் முதலாக ராமானுஜரது ஸ்ரீபாஷ்ய உரையை ஆங்கிலத்தில் வெளியிடச் செய்து, விசிஷ்டாத்வைதத் தத்துவம் பற்றி மேலை நாடுகளில் ஆய்வு செய்யும் பேரறிஞர்களுக்கு உதவி செய்தவர் சுவாமிகள் என்பதை நாம் நன்றியுடன் நினைவுகூர வேண்டும்.
சிருஷ்டியை வேதாந்தபரமாகப் பார்க்கும்போது, சுவாமிகள் ஒரு அத்துவைதி. அதேசமயம் பிரம்ம சூத்திரங்களுக்கும், உபநிஷத்துகளுக்கும், கீதைக்கும் (இவை மூன்றும் பிரஸ்தான த்ரயம் எனப்படுபவை) இருந்த பல வடமொழி உரைகளைப் படித்து, ஆழமாகச் சிந்தித்தார்.
அவர் ராமனுஜரைப் பற்றிப் பேசும்போது ஒரு குழந்தைக்கூடப் புரிந்து கொள்ளும்படி எழுதுவார்:
ராமானுஜர், இறைவனுக்கு சைதன்ய நிலை உண்டு என்கிறார். முழு அத்துவைதிகள் இறைவனுக்கு எப்படிப்பட்ட நிலையும் இல்லை என்கிறார்கள். சத் (உள்ளது)திற்கு, நாமறியும் வகையிலே பொருளேதுமில்லை என்பர். ராமானுஜரோ இறைவன் சைதன்னிய அறிவே வடிவானவன், வேறுபாடுகள் அற்ற இச் சைதன்னியம், வேறுபடுத்தப்படும்போது உலகமாக ஆகிறது.
குமாரில பட்டர், ஆதிசங்கரர், ஸ்ரீ ராமானுஜர் என்று அனைத்துச் சனாதன தர்மச் சான்றோர்கள் சனாதன தர்மத்தைக் காப்பாற்றியதுமன்றி, இப்பழமையான தர்மம் புது சிகரங்களை எட்ட வழிகளும் வகுத்தனர். சரித்திரப் பிரக்ஞை நிறைந்த சுவாமி விவேகானந்தர், ராமானுஜர் நெறி ஏன் வேகமாக நாடெங்கும் பரவியது என்று சிந்தித்திருக்கிறார்.
கண்ணையும், மனத்தையும் கவரும் தெய்வ வழிபாடுகள் ஒரு காரணமே. திருமஞ்சனம், திருக்கல்யாணம், ஊஞ்சல் உத்சவம், தேருக்கு வடம் பிடித்தல் முதலியவை அனைவரையும் ஈர்த்தன. மேலும், பெருமாள் கோவில் என்றால், பொங்கல் போன்ற பிரசாதங்களும் ஒரு கவர்ச்சியான மகிழ்ச்சியே. அனைத்திற்கும் மேலான ஒன்றும் இருந்தது என்கிறார் சுவாமிகள்.
சுவாமி விவேகானந்தரின் சரிதத்தைப் படிக்கும்போது அவருக்கு வடமொழி சுலோகங்களைச் சொல்வது பிடிக்கும் என்று தெரிகிறது. பல வடமொழி சுலோகங்கள் இயற்றி இருக்கிறார். அவர் வடமொழியில் பெரும்புலமை பெற்றிருந்தார். பாணினியின் இலக்கணத்தை முழுமையாகக் கற்றவர். வடமொழியில் கடிதங்கள் எழுதுவார். ஆயினும், அவர் தம்புராவை மீட்டிக்கொண்டு பாட ஆரம்பித்தால், அதிகமாக வங்க மொழியில் உள்ள சியாமா சங்கீதம், பிரம்மோ சங்கீதம் பாடல்களையும் ரவீந்திரநாத் தாகூரின் வங்க மொழிப் பாடல்களையும் பாடுவதில் இன்பம் கண்டார்.
அவ்வப்பொழுது வங்கமொழிப் பாடல்கள் பகவான் ராமகிருஷ்ணரைச் சமாதி நிலைக்கு ஏற்றிட, அவர் நடனமாடுவார். உடன் மற்றவர்களும் ஆடுவார்கள். சுவாமிகளும் அவர்களுடன் சேர்ந்து கொள்வார். ஆதிசங்கரர் தமது எழுத்து, சொற்பொழிவு, துதிகள் அனைத்திற்கும் வடமொழியையே கையாண்டார். மக்களின் பேச்சு மொழியான மலையாளம், தமிழ் போன்றவற்றை உபயோகிக்கவில்லை. ஸ்ரீ ராமானுஜரோ தடங்கலின்றி ஆழ்வார்களது திவ்வியப்பிரபந்தப் பாசுரங்களைத் தமது பொழிவுகளில் உபயோகித்தார்.
அவரது முந்தைய ஆசாரியர்கள் தொடங்கி வைத்த திருவாய்மொழி -திருமொழி திருநாட்களை மீண்டும் விஸ்தரித்து அனைத்துக் கோவில்களிலும் நடத்தியதால், மக்களிடம் ஸ்ரீவைஷ்ணவம் பற்றிய ஆர்வம் பொங்கி எழுந்தது. வடமொழி வேதம்; தமிழ் மறை. ஆன்மிகத்தின் சிகரங்களை எட்டிய நாட்டின் வளமான பண்பாட்டினை இவ்விரண்டு வற்றா ஜீவ நதிகளும் வளர்த்தன. அவை ஒன்றுக்கு ஒன்று மாறுபடவில்லை.
இணைந்த நதிகள். தமிழ்மறை – வடமொழி வேதத்திலிருந்து மலர்ந்தவை. வடமொழி வல்லுனராக, ஸ்ரீ பாஷ்யத்தை அருளிய ராமானுஜர், திருவரங்கத்து வீதிகளில் பிக்ஷை எடுக்கப் போகும்போது ஆண்டாளது திருப்பாவை முப்பது பாசுரங்களையும் அனுசந்தித்தவாறு சென்றதால், அவரை திருப்பாவை ஜீயர் என்று மக்கள் அழைத்தார்கள். இப்படிப் பழகுமொழியினைச் சமயத்துடனும் ஆன்மிகத்துடனும் இணைத்ததே ஸ்ரீ ராமானுஜரது மிகச்சிறந்த கொடை என்று சுவாமிகள் நினைத்தார்.
ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷனைத் தோற்றுவித்தபோது, சுவாமிகள் மக்களுக்கு ஜாதிப் பாகுபாடு பற்றிய ஒரு சிறந்த செய்தியைத் தெரிவிக்க எண்ணினார். 1898-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22-ஆம் தேதி அன்று ஐம்பது பிராமணரல்லாத ஆண்களுக்குப் பூணூல் போட்டு, காயத்ரி மந்திரத்தை உபதேசித்தார். இது மிகத் துணிச்சலான செயல். இன்றிலிருந்து நீங்கள் மறைகளை ஓதலாம் என்று கூறி, அவர்களது தலைமேல் ஸ்ரீ பாஷ்யப் பிரதியை வைத்து ஆசீர்வதித்தார். அன்று அவர்களுக்கு ராமானுஜரது சரித்திரத்தை அவர் சொல்லியிருக்கலாம். தீண்டத்தகாதவர்களுக்குத் திருக்குலத்தார் என்று பெயரிட்டு, நீங்களும் கோவிலுள் சென்று வணங்கலாம் என்ற உடையவரது மாண்பினை விளக்கியிருக்கலாம். அரங்கனைப் பற்றிப் பாடிய திருப்பாணாழ்வார் குறித்தும் பேசியிருக்கலாம்.
சுவாமிகள் தமது சொற்பொழிவுகளில் அநேகமுறை ஸ்ரீ ராமானுஜரது சரித்திரத்தை எடுத்துக்காட்டுகிறார். அவர் அடிக்கடி உடையவர் பற்றிப் பேசியதால், வங்க மக்களுக்கு இவ்வாச்சாரியர் மேல் மிகுந்த பிடிப்பு உண்டாயிற்று. அவர்கள் விருப்பத்திற்கிணங்க, சென்னையில் பல ஆண்டுகள் வசித்த சுவாமி இராமகிருஷ்ணானந்தர் ஸ்ரீ ராமானுஜரின் சரிதத்தை விவரமாக எழுதி வெளியிட்டார். இந்த நூல் தற்சமயம் வங்க இலக்கியத்தின் ஒரு பொற்சுடராகக் கருதப்படுகிறது.
.