Home » சிறுகதைகள் » ஏசுவின் ராஜ்யம்
ஏசுவின் ராஜ்யம்

ஏசுவின் ராஜ்யம்

1900 வருடத்துப் பக்கம். கொல்கத்தா மாநகரம்.

‘உத்போதன்’ ராமகிருஷ்ண மிஷனின் வங்கமொழிப் பத்திரிகை. அதில்  சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் ஆற்றிய ஆங்கிலச் சொற்பொழிவை வெளியிட்டு வந்தனர்.

மடத்தின் பிரம்மசாரியான ப்ரீதி மகராஜும், அச்சுக்கூடத்தின் பணியாளரான துலாலும் பேலூர் மடத்திற்கு வந்திருந்தனர். ப்ரீதி மகராஜின் கையில் ப்ரூஃப் கட்டுக்கள், பையில் சுவாமிஜியின் சில நூல்களும் இருந்தன.

“இன்று என்ன மடம் புதுப் பொலிவுடன் காணப்படுகிறதே, மகராஜ்?” என்று துலால் கேட்டான்.

உனக்குத் தெரியாதா? இன்று சுவாமி விவேகானந்தர் தமது  யாத்திரையை முடித்துக் கொண்டு  பேலூர் மடம் திரும்பியுள்ளார். இன்று சுவாமிஜியைத் தரிசிக்கப் பல பக்தர்களும் இளைஞர்களும் காத்திருக்கிறார்கள்” என்றார்.

“அதோ, அங்கு சிலுவையை அணிந்து வந்துள்ள அவர்கள் யார்?” என்றான் துலால்.

“கிறிஸ்தவ மிஷனரிகள்” என்றார் ப்ரீதி மகராஜ்.

“இவர்கள் இங்கே எதற்கு வந்திருக்கிறார்கள்?”

“எப்போதும் நம்மைக் குறை கூறிப் பிழைக்கும் மிஷனரிகளின் நோக்கம் வேறு என்னவாக இருக்கும்…! இத்தகையவர்களை சுவாமிஜி அமெரிக்காவில் இருந்தபோதே நன்றாகச் சாடியிருக்கிறார், தெரியுமா?” என்றார் ப்ரீதி மகராஜ்.

“அப்படி என்ன சொன்னார் சுவாமிஜி?”

“அட, நேற்று நீயும் நானும் தானே ‘கம்போஸ்’ செய்தோம்! அந்த ‘ப்ரூஃபை’ சுவாமிஜியிடம் காட்டத் தானே இப்போது வந்துள்ளோம். இதோ பார்” என்று கூறி,  ப்ரூஃபில் ஒரு குறிப்பிட்ட பக்கத்தை அவர் காண்பித்தார். துலால் அதைப் படித்தான்:

“(அமெரிக்க அன்பர்களே) …உங்கள் பாதிரிகள் எங்களைக் குறைகூறும்போது ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். இந்தியர் அனைவரும் சேர்ந்து, இந்து மாக்கடலிலுள்ள எல்லா மண்ணையும் அள்ளி, மேலைநாடுகளின் மீது வீசி எறிந்தால்கூட அது, நீங்கள் எங்களுக்குச் செய்கிற தீமையில் அணுவளவு கூட ஆகாது…”

“…இரக்கமின்றிக் குறைகூறுவது என் நோக்கமல்ல. பயிற்சி அளித்து, கல்வி கற்பித்து, உடுக்க ஆடை தந்து, சம்பளம் கொடுத்து, எதற்காக உங்கள் மக்களை எங்கள் நாட்டிற்கு அனுப்புகிறீர்கள்? எங்கள் முன்னோர்களையும், எங்கள் மதத்தையும் எங்களைப் பற்றிய ஒவ்வொன்றையும் அவர்கள் பழிக்கும்படியும் ஏசும்படியும் செய்யவா?”

“அவர்கள் எங்கள் கோயிலில் வந்து, ‘நீங்கள் விக்கிரகங்களை வழிபடுகிறீர்கள். ஆகவே நரகத்திற்குத்தான் போவீர்கள்’ என்கிறார்கள்.  இந்தியாவிலுள்ள முகமதியர்களிடம் இவ்வாறு சொல்ல அவர்களுக்குத் தைரியம் இல்லை. ஏனெனில் அவர்கள் உடனே வாளை உருவிவிடுவார்கள்.  ஆனால் இந்து மிகவும் அமைதியானவன், ‘மூடர்கள் பேசட்டும்’ என்று கூறிவிட்டுப் புன்முறுவலுடன் அகன்றுவிடுவான். இது அவனது மனப்போக்கு.’  (*1)

சுவாமிஜியின் இந்த உரையைப் படித்து முடித்த  துலால், அப்படியானால்  “சுவாமிஜிக்கு ஏசுநாதரையும் சர்ச்சுகளையும் பிடிக்காதா?” என வெகுளியாகக் கேட்டான்.

“இல்லை தம்பி, ஏசுநாதர் மீது சுவாமிஜிக்கு மிகுந்த பக்தி உண்டு. ஒரு சம்பவத்தைக் கேள். அமெரிக்காவில் ஒரு நாள் ‘CHRIST THE MESSENGER’ என்ற தலைப்பில் சுவாமிஜி உரையாற்றினார். அதைக் கேட்டவர்கள் எல்லோரும் கிறிஸ்தவர்கள். அவர்கள் மெய்மறந்து போயினர். அங்கிருந்த மிஸ். மேக்லவுட் என்ற அமெரிக்கப் பெண்மணி ‘ஏசுநாதரே வந்து பேசுகிறாரோ’ என எண்ணினாராம்” என்றார் ப்ரீதி மகராஜ்.

பிறகு ப்ரீதி மகராஜ் மடத்திற்குள் சென்றார்.   மடத்தையொட்டி ஓடும் கங்கையைத் தரிசிப்பதில் துலாலுக்குத் தனி சுகம்.  ‘ஆ, இதே  கங்கையில் தானே பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் நீராடினார்’ என நினைத்தபடி துலால் கங்கையின் பக்கம் சென்றான்.

வழியில் சியாமா என்ற ஒரு பக்தை வந்தார். அவர் அன்று சுவாமிஜியைத் தரிசிக்க முடியுமா என்று கேட்டார். துலால் நிலைமையைக் கூறினான். “நானும் பார்த்தேன் தம்பி, இரண்டு வெள்ளைக்காரர்கள்கூட வந்துள்ளார்களே?” என்று கேட்டார்.

இரண்டு பக்தர்கள் சேர்ந்துகொண்டால் தங்கள் உள்ளம் கவர்ந்தவரின் உன்னதங்களைப் பற்றி உரையாடத் தானே செய்வார்கள்?  துலால் அன்று காலையில் ப்ரூஃப் படித்ததையும், ப்ரீதி மகராஜிடம் விசாரித்து அறிந்ததையும் சியாமாவிடம் கூறினான்.

“அமெரிக்காவில் சுவாமிஜி இருந்தபோதே மிஷனரிகள் பலர் அவருக்குத் தொந்தரவு கொடுத்தார்கள்” என்றார் சியாமா.

“இப்போது இவர்கள் எதற்காக வந்துள்ளார்களோ, தெரியவில்லையே…?” என்றான் துலால்.

“அவர்கள் எந்த நோக்கத்தோடு வந்திருந்தாலும் அவர்களை சுவாமிஜி பக்குவப்படுத்தி அனுப்பிவிடுவார். தம்பி, சென்னையில் சில வருடங்களுக்கு முன் நடந்தது உனக்குத் தெரியுமா?” என்று கேட்டு அதைக் காட்சியாகவே விளக்கினார் சியாமா.

துலால் ஆச்சரியத்துடன் கேட்டான்.
சென்னை கடற்கரையில் பிரம்மாண்டமாக விளங்கும் ‘ஐஸ் ஹவுஸ்’ஸில் சுவாமிஜி தங்கியிருந்த சமயம். அவரது  அருளுரைகளைக் கேட்கப் பல்லாயிரம் மக்கள் தினமும் கூடுவர்.

சுவாமிஜியின் கருத்துக்களால் பெரிதும் ஈர்க்கப்பட்ட ஓர் ஆங்கிலேய இளம்பெண் அவரிடம் அன்று  பேச வந்தாள். அவளுக்குச் சேவையின் அவசியத்தைப் பற்றி விளக்கினார் சுவாமிஜி.

அதனால் மிகவும் கவரப்பட்ட அவள் அடுத்த நாள் தனது தந்தையையும் (அவர் ஒரு  பாதிரியார்) அழைத்து வந்தாள்! இருவரும் சுவாமிஜியிடம் பல கேள்விகள் கேட்டுத் தெளிவு பெற்றனர்.

முடிவில் அவள், சுவாமிஜி, உங்களது அற்புதமான உரையைக் கேட்ட பிறகு, ‘இனி சாதாரண வாழ்க்கை வாழக் கூடாது’ என  முடிவெடுத்துவிட்டேன். லண்டன் திரும்பிய பிறகு நான் என் நாட்டு மக்களுக்காகப் பாடுபடுவேன்” என்றாள் உற்சாகமாக. சுவாமிஜி அவளை ஆசீர்வதித்து அனுப்பி வைத்தார், ஒரு தந்தையாக!

கண்கள் பனிக்க இதைக் கூறிவந்த சியாமா, “ஆஹா, சுவாமிஜியின் ஆன்மிகச் சக்தி எப்படிப்பட்டது, பார்த்தாயா?”  என்றார்.

துலாலும் சியாமாவும் சுவாமிஜியைத் தரிசனம் செய்வதற்காக அங்கேயே அமர்ந்து சுவாமிஜியைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

மிஷனரிகள் பற்றி துலால் கேட்ட கேள்விக்குப் பதில் உண்டா? ஆம், அந்த மிஷனரிகள் வந்திருப்பதன் உள்நோக்கம் ஒன்று உண்டு!

அடிமை இந்தியாவில் மிஷனரிகளின் மதமாற்ற அறுவடை மகசூலை விரிவாக்க வேண்டும் என்ற திட்டம் சர்ச் தலைமைப் பீடத்தில் இருந்தது. அதற்காக அது பல முயற்சிகளை முடுக்கிவிட்டிருந்தது.

‘இந்த விவேகானந்தர் தமது சக்தி வாய்ந்த உரைகளினால் இந்தியாவையே தன் பக்கம் திருப்பிவிட்டிருக்கிறார். இளைஞர் – முதியோர், படித்தவர்- பாமரர், நாத்திகர் – ஆத்திகர் என எல்லோரும் இவரது உரையைச் செவிமடுக்க, கால்கடுக்க நிற்கிறார்கள்.  மேலும், விவேகானந்தர் ஏசுவிடம் பக்தியுள்ளவர். அப்படிப்பட்ட சக்தி மிக்க ஒருவரை நாம் நம் வலைக்குள் இழுத்துக் கொண்டால், சில லட்சம் இந்துக்களாவது கிறிஸ்தவ மதத்தின் அனுதாபிகள் ஆவது நிச்சயம்’ என்று சர்ச்சின் மூளை யோசித்து அதற்கான திட்டங்களை வகுத்தது.

அதைச் செயல்படுத்த, இதோ, சுவாமிஜியைச் சந்திக்க இந்த இரண்டு மிஷனரிகள் காத்திருக்கிறார்கள்.

அப்படி வந்தவர்களும் சாதாரணமானவர்கள் அல்ல. விவேகானந்த சிங்கத்தை ‘சர்ச் கூண்டில்’ அடைக்க எண்ணி வந்தவர்கள் சாதாரணமானவர்களாக இருக்க முடியுமா? ஏசுவிடம் தங்களை அர்ப்பணித்த பக்திமான்களாக அவர்கள் இருந்தனர்.

கங்கையின் கரையில் பேலூர் மடத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் புனித அஸ்தி வழிபடப்பட்டு வருகிறது. தெய்வபதத்தை அடைந்துவிட்ட குருதேவரின் சீடர்கள் அந்த பூமியில் உலாவி வந்த காலம் அது. முக்கியமாக, சுவாமி விவேகானந்தர் ஆழ்ந்த தியானத்தில் – பரவச நிலையில் மூழ்கியிருந்த புனிதப் பொழுது அது.

இவற்றையெல்லாம் கவனித்து வந்த அந்த மிஷனரிகள் இருவருக்கும் மனம் இயல்பாகவே அகமுகப்பட்டது.  பிரார்த்தனையில் ‘கர்த்தரே, என் மீது கருணை கொள்ளுங்கள்’ என ஈடுபட்டிருக்கும்போது என்னவோர் அமைதியும் ஆனந்தமும் நெஞ்சில் முகிழ்க்குமோ, அந்த அனுபவம், அவர்களுக்கு அப்போது வாய்த்ததோ!

அந்த ஆனந்த அனுபவத்துடன் அவர்கள் சுவாமிஜியின் அறைக்கு வெளியே மாமரத்தடியில் இருக்கும்போது உள்ளிருந்து ப்ரீதி மகராஜ் வந்து, “ஜென்டில்மென், சுவாமிஜி உங்களை அழைக்கிறார்” என்றார்.

மிஷனரிகள் இருவரும் மாடிப்படிகளில் ஏறினர். நேராக ஏறிய பின் இடது புறம் சென்று வலதுபுறமுள்ள இரண்டாவது அறைக்குள் அவர்கள் சென்றனர். அது சுவாமிஜியின் அறை.

அங்கே, வெளிநாட்டில் வேதாந்தச் சிங்கமாக கர்ஜனை செய்த விவேகானந்தர், இங்கே சாந்தமாக ரிஷி போல் வீற்றிருந்தார். எவரையும் வணங்க வைக்கும் புனிதம் இவர்களையும் வணங்க வைத்தது.

கருணையுடன் சுவாமிஜி அவர்களைப் பார்த்தார்! ‘ஆ…, இவ்வளவு அன்பான கண்களா!’ என மிஷனரிகள் வியந்தனர்.

அதுவரை விவேகானந்தரைத் தங்கள் பக்கம் இழுக்க என்னவெல்லாம் கூறலாம்,  கேட்கலாம் என்று சிந்தித்து வந்த மிஷனரிகளின் மனங்கள் திடீரென்று செயலற்று நின்றன!

அது எப்படி என அவர்களே வியந்தார்கள். எதிர்ப்பக்கம் இருப்பவரைத் தானே தங்கள் பக்கம் இழுக்க முடியும்? ஆனால் விவேகானந்தரோ எல்லாப் பக்கமும் ஊடுருவி நிற்கும் தெய்வீக நிலையிலல்லவா உள்ளார்!

அங்கு நிலவிய மௌனத்தைக் கலைப்பதற்கு இருவருக்கும் தைரியமில்லை. மனம், ‘ஓ லார்ட், ஹாவ் மெர்ஸி ஆன் மி’ என ஜபித்தது.
அந்தப் பிரார்த்தனையை உணர்ந்தவர்போல் சுவாமிஜி மெல்ல புன்னகைத்தார்.  வந்தவர்களை  உற்று நோக்கினார்.

சுவாமிஜியின் கண்கள் மட்டுமா திறந்தன? அந்த மிஷனரிகளின் அகக்கண்களும் அல்லவா திறந்தன! வீரப்புருஷர் முன் ஒருவரது வாயடைத்துப்போகும் என்பர்; ஆனால்  விவேகானந்தரின் முன்பு ஆன்மிக வாழ்வின் முன்னேற்றத்தை எதுவெல்லாம் தடுக்குமோ, அதெல்லாம் தகர்ந்து போகும்.

சுவாமிஜியின் முகத்திலிருந்து வீசிய ஒளியை அவர்களுள் ஒருவர் நேரே பார்த்ததும் தொழுகைக்காகக் கையைக் குவிப்பதுபோல் குவித்து, “ஐயா, சத்தியத்தை எங்கே தரிசிக்கலாம்?” என்று தழுதழுத்தக் குரலில் வினவினார்.

சுவாமிஜி தியான நிலையிலிருந்து, “சத்தியம் ஏற்கெனவே உங்களிடத்தில் தான் உள்ளது. கவனத்தை உள்ளே திருப்புங்கள், சகோதரர்களே” என்று கூறி மலர் மொட்டு போல் கண்களை மெல்ல மூடினார்.

அவ்வளவு தான். இருவரும் நிமிர்ந்து அமர்ந்து கண்களை மூடி அருளில் நனைந்தார்கள். சுவாமிஜி தியானத்தைத் தொடர்ந்தார்.

சுவாமிஜியின் குருசக்தி எல்லோருக்கும் தானே சொந்தம்! அந்த ஆன்மிக சக்தியின் உண்மையான, புதிதான, புனிதக் காற்றை அவர்கள் சுவாசித்தனர்.

நீண்ட நேரம் கழித்து அவர்கள் சுவாமிஜியை வணங்கினர். பிறகு அமைதியாக வெளியே வந்து மாமரத்து நிழலில் அமர்ந்தனர்.

அங்கு அதுவரை நடந்த அனைத்தையும் கண்ட ப்ரீதி மகராஜும் ஆனந்தத்தில் திளைத்தார். வந்த மிஷனரிகளின் அடி ஆழத்து ஆன்மிக ஏக்கத்தைப் புரிந்து கொண்டு அவர்களுக்கு சுவாமிஜி அருளியதைக் கண்டு மெய்சிலிர்த்தார் அவர்.

அப்போது அங்கு வந்த துலாலிடம் அந்த ப்ரூஃபைக் கொண்டுவரச் சொன்னார் ப்ரீதி மகராஜ். அதிலிருந்து அவர் காலையில் வாசித்த சுவாமிஜியின் சொற்பொழிவிலிருந்து ஒரு பக்கத்தை எடுத்து அவர்களிடம் கொடுத்து, “அன்பர்களே, சுவாமிஜியின் பூரண அருள் உங்களுக்குக் கிடைத்துள்ளது. உண்மையான கிறிஸ்தவர்களுக்கு அவர் என்ன உரைத்தார் என்பதைப் புரிந்துகொள்ள இதோ, அமெரிக்காவில் அவர் ஆற்றிய சொற்பொழிவைப் படியுங்கள்” என்றார்.

இருவரும் அதைப் பக்தியுடன் வாங்கி சுவாமிஜி கூறியதைப் படித்தனர்:

‘…சகோதரர்களே, நான் கூறுவதைக் கேளுங்கள்:

‘நீங்கள் வாழ விரும்பினால், உங்கள் நாடு (அமெரிக்கா) வாழ வேண்டும் என நீங்கள் உண்மையாக விரும்பினால், நீங்கள் திரும்பி ஏசுவிடம் செல்லுங்கள். தலைசாய்க்கக்கூட

இடமில்லாத அவரிடம் திரும்பிச் செல்லுங்கள்.

‘பறவைகளுக்குக் கூடுகள் உண்டு. விலங்குகளுக்குக் குகைகள் உண்டு. ஆனால் மனிதகுமாரனுக்கோ தலைசாய்க்கக்கூட இடமில்லை.’

‘ஆனால் ஆடம்பரத்தின் பெயரால் உங்கள் மதம் பிரசாரம் செய்யப்படுகிறது. விதியின் கொடுமை தான் என்ன! நீங்கள் வாழ விரும்பினால் இதைத் திருப்புங்கள், திருப்பியே தீர வேண்டும். இந்த நாட்டில் நான் கேள்விப்பட்டதெல்லாம் முழுக் கபடம், ஏமாற்றுத்தனம்.’

‘இந்த நாடு வாழ வேண்டுமானால் இது ஏசுவிடம் திரும்பிச் செல்ல வேண்டும்.’

‘ஒரே வேளையில் கடவுளையும் செல்வத்தையும் வழிபட முடியாது. இந்தச் செல்வ வளம் எல்லாம் ஏசு தந்தவையாம்! அவர் இருந்திருந்தால் இத்தகைய தெய்வ நிந்தனையை

எல்லாம் மறுத்திருப்பார். செல்வத்திலிருந்து தோன்றுபவை எல்லாம் நிலையற்றவை, அற்ப வாழ்வுடையவை.’

‘கடவுள் ஒருவரே என்றென்றும் உண்மையாக நிலைத்து நிற்பவர். அற்புதமான இந்தச் செல்வ வளத்தையும் ஏசுவின் லட்சியத்தையும் ஒருங்கிணைக்க உங்களால் முடியுமானால் அது நல்லது.’

‘முடியாவிட்டால் செல்வ வளத்தைத் துறந்துவிட்டு, ஏசுவிடம் மீண்டும் போய்ச் சேருங்கள்.’

‘ஏசுவைப் புறக்கணித்துவிட்டு, அரண்மனைகளில் வாழ்வதைவிடக் கந்தை கட்டினாலும் ஏசுவுடன் வாழத் தயாராக இருப்பதே சிறப்பு’. (*2)

சுவாமிஜியின் சொற்பொழிவைப் படித்து முடித்த மிஷனரிகள் யாரிடமும் பேசவில்லை.  நேராக குருதேவரின் கோவிலுக்குச் சென்றனர்.

வெல்ல வந்தவர்கள், வெல்லப்பட்டார்களா? இல்லை. சாதாரண ஒன்றை வெல்ல வந்தவர்கள் சத்தியத்தைத் தரிசித்து ஆசீர்வதிக்கப்பட்டார்கள்.

ஆம். அந்த இருவரும் அதன் பின் அதுவரை செய்து வந்த பிரசாரக் காரியங்களை நிறுத்திக் கொண்டனர். ஏன்?

‘பிரசாரமே வாழ்க்கையின் சாரம்’ என இருந்த அவர்கள், தெய்விக விசாரமும் அதைக் கடைபிடிக்கும் ஆசாரமுமே ஆன்மிக வாழ்வின் சாரம் என்பதைப் புரிந்து கொண்டார்கள்.

அதை உணர்ந்து கொள்வதற்கு அவர்கள் இமயமலையில் தங்கி தியானத்தில் மூழ்கி ஆன்மிக முத்தெடுக்க முயற்சி செய்ய ஆரம்பித்தார்கள்!

பல வருடங்கள் அங்கேயே வாழ்ந்தார்கள். வயது முதிர்ந்த காலத்திலும் தங்களது நாட்டிற்கு அவர்கள் திரும்பிச் செல்லவே இல்லை! (*3)

ஏன்? அவர்கள் தான் ஏசுவின் கிருபை ராஜ்யத்தில் இடம் பெற்று விட்டார்களே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top