Home » சிறுகதைகள் » தட்டிவிடு சாம்பலை!
தட்டிவிடு சாம்பலை!

தட்டிவிடு சாம்பலை!

அமெரிக்காவில், தென் கலிபோர்னியாவில் உள்ள திருமதி கேரீ மீட் வைக்காப்பின் இல்லம். சில வருடங்களுக்கு முன்பு அது குதூகலம் மிக்க ஓர் ஆனந்தப் பூங்கா.

இன்றோ…, வைக்காப் ஏன் இப்படி உருக்குலைந்து கிடக்கிறார்? இவரது சுறுசுறுப்பு எங்கே? சேவை எங்கே?

எங்கே, எங்கே என்ற கேள்விக்கெல்லாம், வைக்காப்பின் ஒரே பதில், ஒரு பெருமூச்சுதான் – உஷ்ணமாக!

எத்தனை எத்தனை இடர்கள் அவரைப் புரட்டிப் போட்டன. இவரா இப்படி?

ஒரு காலத்தில் சூறாவளித் துறவிக்கே சமைத்துப் போட்ட அவரது கைகள் இன்று தளர்ந்து, நரம்பு தெரிய, சுருங்கிப் போய்…

அழுக்கு ஜன்னல் வழியே தூய ஆகாயம் தெரிந்தது – முன்பு இருந்த வைக்காப்பின் மனம் போல.

அந்த வானிலுள்ள மேகங்கள் தான் எத்தனை எத்தனை! இல்லறம் நல்லறமாக அமையாத ஒரு கருமேகம்,  மனவலிமையை உறிஞ்சிவிட்ட நோய்கள் என்ற இடியுடன் கூடிய மேகங்கள்.

காட், ப்ளீஸ், என் இன்னல்களைக் களைய மாட்டாயா? என்று அவரது மனம் பல நாட்களாக ஏங்குகிறது. ஆனால் இன்றோ அவரது இதயம், தெய்வ மனிதருக்கே சேவை செய்தவளாயிற்றே என்றது. அந்த நினைவே சற்று ஆறுதலாக இருந்தது. திரும்பிப் படுத்தார் வைக்காப்.

***

அமெரிக்க சர்வ சமயப் பேரவையில் உலகப் புகழ் பெற்ற உரையை நிகழ்த்திய விவேகானந்தர் இன்று நம் வீட்டிற்கு வருகிறார்; அவர் இங்கேயே சில மாதங்கள் தங்கச் சம்மதித்துள்ளார் என்று வைக்காப்பின் குடும்பத்தினர் முதலில் பேசியபோது இருந்த அதே ஊக்கம், கடைசி வரையிலும் அந்த வீட்டில் இருந்தது.

1900-ஆம் வருடம் சுவாமி விவேகானந்தர் தென் கலிபோர்னியாவில் வைக்காப்பின் வீட்டில் தங்கினார். ‘மீட் சிஸ்டர்ஸ்’ என்று அழைக்கப்பட்ட அந்தக் குடும்பத்தின் மூன்று பெண்களான மிஸஸ் கேரி மீட் வைக்காப், மிஸஸ் ஆலிஸ் மீட் ஹேன்ஸ்ப்ரோ, மிஸ் ஹெலன் மீட் ஆகியோருடன் ஒரு சகோதரனாகவே சில மாதங்கள் வாழ்ந்தார் சுவாமிஜி.

சுவாமிஜி கொல்கத்தாவில் பெரிய குடும்பத்தில் வாழ்ந்தவர். பல சகோதரிகள் அவருக்கு இருந்தார்கள். வீட்டைத் துறந்த அவருக்கு, சகோதரிகளுடன் வாழ வேண்டுமென்ற ஏதோ விட்டகுறை, தொட்டகுறை போலிருக்கிறது…, அக்குறையை நிறைவு செய்தவர்கள் மீட் சகோதரிகள்.

மனிதனின் ‘சுயம்’ பற்றி வேதாந்தம் கூறியதைப் போதித்து வந்த சுவாமிஜிக்கு இப்படியான சுயநலமற்றச் சொந்தம் கிடைத்தது இயல்பே!

வைக்காப் மூத்த சகோதரி போல் சுவாமிஜியை நேசித்தார். பார் சிறக்கப் பாடுபடும் இந்த இளம் இந்தியத் துறவிக்கு, முறையாக உணவு பரிமாறுவதைத் தன் கடமையாகக் கொண்டார் அவர்.

ஏசுபிரான் மீதுள்ள தன் பக்தியைப் பாடிக் காட்டிய சகோதரி மேரியாக அவரில்லை; மாறாக, ஏசுவின் தேவைகளைப் பூர்த்திச் செய்த பக்குவமான  ’மார்தா’ என்ற பெரும் பக்தை போன்றவராக இருந்தார் வைக்காப்.

சொற்பொழிவு இல்லாத தினங்களில் சுவாமி விவேகானந்தர் ஓர் இளைஞனின் குதூகலத்துடன் அந்த வீட்டில் வலம் வருவார். சில நாட்களில் சமையல் அறையில் புகுந்துவிட்டால், குளத்தில் குளிக்கும் குட்டி யானை போல் தான். ஒரே அமர்க்களம்.

சுவாமிஜி சமைத்தாலோ, வைக்காப்பின் பாடு திண்டாட்டம் தான். சுவாமிஜியின் சமையல் படு காரம் – அவரது உரையைப் போலவே!

அன்று சுவாமிஜி சமைத்த பின் வைக்காப்புடன் சேர்ந்து உண்டார். திடீரென்று, “சிஸ்டர்ஸ், நான் தயாரித்த அந்த மசாலா கறி எப்படி இருக்கிறது?” என்று கேட்டார்.

காரத்தால் கண் சிவக்க, தவித்தபடி, “யெஸ் சுவாமிஜி, குட்….” என்றார் தயக்கத்துடன்.

சுவாமிஜி அவரை ஒரு கணம் உற்றுப் பார்த்தார். சிறிது நேரம் கழித்து, “சிஸ்டர், நீங்கள் என் சமையலை உண்மையாகப் பாராட்டுகிறீர்களா? அல்லது நட்புக்காகப் பாராட்டினீர்களா?”  என்று கேட்டார் சுவாமிஜி.

அவர் சமையலைப் பற்றிக் கேட்டாரா? அல்லது வைக்காப் எந்த அளவிற்கு மனதைச் சமைத்திருக்கிறார் என்று பார்த்தாரா?

ஐஸ் வாட்டரைக் குடித்துவிட்டு, தொண்டையைச் சரி செய்தபடி தயக்கத்துடன், “சாரி சுவாமிஜி, நட்புக்காகவே கூறினேன்…” என்றார். சுவாமிஜி அவரிடமிருந்து எதையோ எதிர்பார்த்தார். வைக்காப்பால் அதைக் கூற முடியவில்லையா?

சுவாமிஜியின் உரைகள் எத்தனையோ அமெரிக்கர்களின் – அதுவும் கிறிஸ்தவர்களின் நெஞ்சங்களில் உறையும் தெய்வீகத்தைத் தட்டி எழுப்பியதைக் கண் கூடாகக் கண்டு வருபவர் வைக்காப்.

ஆனாலும் அவர் சுவாமிஜியின் சிஷ்யை ஆகவில்லை.

தடுத்தது விதியா? இவர் தான் எப்போதும் எங்களுடன் இருக்கத் தானே போகிறார், பார்த்துக்கலாம் என்ற தள்ளிப்போடும் மனநிலையா?

‘எங்கள் சகோதரர் தானே?’  என்று அந்த தெய்வ மனிதரை வெறும் மனித உறவோடு மட்டுப்படுத்திவிட்ட மயக்கமா?

ஒரு நாள் வைக்காப் சுவாமிஜியிடம் ஏதோ பேசி வந்தார். திடீரென வைக்காப்பை ஊடுருவிப் பார்த்த அவரது மனதில் ஏதோ நெருடியது. “சிஸ்டர் உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக உள்ளதா?” என்று பட்டென்று கேட்டார்.

இந்தக் கேள்வியைக் கேட்டவர், துன்பப்படும் ஒருவரின் மனதை மேம்படுத்தக் கூடிய மகான் என்பதை ஒரு கணம் மறந்த வைக்காப் உணர்ச்சியின்றி, “எஸ் சுவாமிஜி, மகிழ்ச்சியாகத் தான் இருக்கிறேன்” என்றார் காய்ந்த உதடுகளை ஈரப்படுத்தியபடி.

சுவாமிஜி அமைதியாய் அறையிலிருந்து கிளம்பும் முன்பு திரும்பி, “இந்த உலகில் ஒரு திருமண வாழ்க்கையாவது மகிழ்ச்சியாக உள்ளதே, வாழ்த்துகள்” என்றார் ஆழ்ந்த குரலில்.

அதைக் கேட்டு வைக்காப் மெல்லத் திணறினார்.

என் அந்தரங்க வாழ்க்கை எப்படித் தெரிந்தது? நோயாளி நோயை மறைத்தாலும், நோயைக் கண்டுபிடித்துவிடும் தேர்ந்த மருத்துவரா இவர்? சொல்லி விடலாமா என் சுகமற்ற சுமையை? என்று கண நேரம் யோசித்தார் வைக்காப். ஆனாலும் தயக்கம்.

அதற்குள் நினைவு மாறிவிட்டது. நேரம் ஓடிவிட்டது. அவரது அமெரிக்கப் பெண்மையோ, குடும்ப கௌரவமோ யார் முன்பும் பணிய விடவில்லை.

பசியற்ற பிள்ளைக்குத் தாய் பாலூட்ட முடியாதே! சற்று தூங்கட்டும், விழித்ததும் ஊட்டலாம் என்று தாயாக சுவாமிஜி காத்திருந்தார்.

ஆன்மிக வாழ்வில் தயக்கம் என்பது எவ்வளவு பெரிய நஷ்டத்தைத் தரும் என்பதை வைக்காப் உணர்ந்தது பின்புதான்.

‘ஸ்வாமிஜியிடம் என் பிரச்னைகளைக் கொட்டியிருந்தால், அவர் நிச்சயம் உதவியிருப்பார்.  நான் பொய் சொல்லி விட்டேன்.  பலரின் துன்பங்களை அவர் துடைப்பதைப் பார்த்தும் நான் ஏன் அவரிடம் என் துன்பங்களைக் கூறவில்லை? ஒருவேளை அது நடந்திருந்
தால்…? வாய்ப்பை நழுவவிட்டவள் நான். சரி, சுவாமிஜியிடம் சொன்ன மாதிரி, யாரிடமும் இனி சிறு பொய்யும் சொல்லக் கூடாது’ என்று அன்றே கங்கணம் கட்டிக் கொண்டார் வைக்காப்.

***

ஓ, பழம் நினைவுகள் எவ்வளவு சுகமானவை. எல்லாம் நேற்று நடந்தது போலிருக்கிறதே… சுவாமிஜி தமது இல்லத்திற்கு வந்து தங்கிச் சென்ற பின் இந்தியா திரும்பிவிட்டார். இன்று தெய்வமாகவே வழிபடப்

படுகிறார்.

வைக்காப்பிற்குத் தாகமெடுத்தது. இருமினார். பெருமூச்சுவிட்டார். அவரது சகோதரி வந்து நீர் புகட்டினாள். முதுகைத் தேய்த்துக் கொடுத்தாள்.

எனக்கிருந்த அரிய வாய்ப்பை நழுவ விட்டுவிட்டேனே என நினைத்ததும் வைக்காப்பின் சோர்வு இன்னும் அதிகரித்தது.

இந்த மன உளைச்சல்கள் எனக்கு மட்டும் ஏன்? பொருளற்ற இந்த வாழ்வை எதற்காக வாழ வேண்டும் என்று யோசிக்க, யோசிக்க வியர்த்தது, நெஞ்சு கனத்தது.

அப்போதுதான் அந்த எண்ணம் உதித்தது.

இத்தனை வருடங்கள் துன்பத்திலே துவண்டு கொண்டிருந்த வைக்காப்பின் மனதில், எப்படி இன்று சுவாமி விவேகானந்தர் பற்றிய சிந்தனை வந்தது என்று ஒரு கணம் நினைத்தார் அவர்.

நசிகேதனிடத்தில் சிரத்தை நுழைந்ததுபோல், வைக்காப்பின் மனதுக்குள் ஏதோ ஓர் உந்துதல்.

எதிரில் ஓர் அலமாரி. கட்டிலிலிருந்து எழுந்து தட்டுத் தடுமாறி நடந்தார். கால்களில் வலுவில்லை. விழுந்து விடுவோமோ என்ற பயத்தில் நடந்தார்.

பல காலம் திறக்கப்படாத அலமாரி அது. கஷ்டப்பட்டுத் திறந்ததில் ‘கிரீச்’ சத்தம்.

உள்ளே ஓரிரு பூச்சிகள் ஓடி ஒளிந்தன. முகம் சுளிக்க வைக்கும் பழம் நெடி. பழைய சாமான்கள் நடுவில் அது என்ன? அதைப் பார்த்ததும் வைக்காப்பின் மனம் திடீரென்று திறந்தது.

மீண்டும் மனம் சுவாமிஜியிடம் சென்றது.

“சகோதரிகளே,  நான் எங்கு தங்கிவிட்டுச் சென்றாலும் அங்கு நான் பயன்படுத்திய ஒன்றை விட்டுச் செல்வேன். இதோ இந்தப் புகை பிடிக்கும் குழாயை இங்கு விட்டுச் செல்கிறேன்” என்றார் சுவாமிஜி.

சுவாமிஜி அதைச் சொன்னதும் அம்மூன்று சகோதரிகளும் மெல்லச் சிரித்தார்கள்.  ’பெண்கள் அதிகமாக உள்ள எங்கள் வீட்டில் புகை பிடிக்கும் குழாயையா தருவது? வேடிக்கையான சகோதரர் இவர்’.

சுவாமிஜி அதை எடுத்து, வைக்காப்பைப் பார்த்தபடி அதிலுள்ள சாம்பலைக் கீழே தட்டினார்.

***

பல வருடங்களுக்கு முன்பு நடந்த அந்தச் சம்பவத்தின் முக்கிய அங்கமான அந்த ‘பைப்’பைப் பார்த்தார் வைக்காப். உடனே அவரது உள்ளம் “மை டியர் சுவாமிஜி” என உச்சரித்தது.

சுவாமிஜியின் திருவாய் பட்ட அந்த ‘பைப்’பை  கையில் மரியாதையுடன் எடுத்தார். நடுங்கிய கைகளில் ஒரு நளினம். யாரோ அவரை அப்படியே ஏந்திக் கொண்டது போன்ற ஓர் உணர்வு.

சட்டென ஒரு குரல் ஒலித்தது. யார்? யார்?  ’உருவமற்ற ஓர் ஒலியாக விளங்கும்’ சுவாமிஜியா என்னை அழைத்தது?

“மேடம், இந்தத் துன்பங்கள் எல்லாம் உங்களுக்கு ஒரு பெரும் சிரமமா?”

கெட்ட கனவைப் பார்த்து, பயந்து, வியர்த்து, அலறியவனை குருவானவர் எழுப்பி, வெறும் கனவுதான், பயப்படாதே என்று ஆசுவாசப்படுத்தும்போது நிம்மதி பெறும் கனவு கண்டவனைப்
போல் தெம்புடன் எழுந்தார்.

‘எனக்கா, சஞ்சலமா? சுவாமி விவேகானந்தரின் அருளைப் பெற்ற ஆனந்தமானவள் அல்லவா நான்’ என்ற எண்ணமல்ல – அனுபவமே அப்போது வைக்காப்பிற்கு வாய்த்தது.

பிறகு அந்த ‘பைப்’பை தன் நெற்றிக்கு அருகில் கொண்டு சென்றார். நெற்றியால் அதைத் தொட்டார். சுவாமிஜியின் திருமேனியைத் தீண்டிய சம்பந்தம் உண்டல்லவா, அதற்கு!

உடனே வைக்காப்பின் தலைவலி, நெஞ்சு பாரம் என்று குடைந்து வந்த எல்லாம் தீயினில் தூசாயின. பல வருடங்களாகப் புகைந்து வந்த பல துன்பங்கள் சாம்பலாயின. மனம் லேசானது.

வைக்காப் எழுந்து அமர்ந்தார். எங்கே ஓடின என் துன்பங்கள் எல்லாம் என்று அவரே அவற்றைத் தேடிப் பார்த்தும் தென்படவில்லை.

“சகோதரி, உன் வாழ்க்கை என்பது நான் வழங்கிய ‘பைப்’ போன்றது. உனக்குள் வரும் இன்ப துன்பங்கள் எது நடந்தாலும் அதனால் பாதிப்படையாதே. பைப்பில் புகையிலை எவ்வளவு தான் எரிந்தாலும் பைப் எரிவதில்லை. எதை எரித்தாலும் அது அதன் சாம்பலைத் தன்னோடு வைத்துக்கொள்வதுமில்லை.

“வாழ்வில் வரும் ஒவ்வொரு நிகழ்வும், சம்பவமும் உன்னைத் தாக்கவே செய்யும். அந்தத் தாக்கங்களை, அவை தரும் துன்பங்களைத் தட்டிவிடு – நீர்த்துப் போன சாம்பலைப் போல.”

இந்த உண்மையை உணர்த்தத் தான் வைக்காப்பிற்கு தமது ‘பைப்’பைத்  தந்தாரோ சுவாமிஜி?

பிறகு, வைக்காப் சிரமப்பட்டுக் கொண்டிருந்த தன் அகத்தில் – வீட்டில் தெய்வீகத்தை நிரப்பிய சுவாமிஜிக்கே தனது வீட்டையே வழங்கிவிட்டார்.

ஆம், சிரமத்துடன் வைக்காப் வாழ்ந்த அந்த இல்லம் இன்று பலரது சிரமங்களைப் போக்கும் ஆசிரமமாக – ‘வேதாந்த சொஸைட்டி ஆஃப் கலிபோர்னியா’ வாக விளங்குகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top