மாணவச் செல்வங்களே!
ரோஜா சிறந்த மலர், அன்னம் சிறந்த பறவை, மா சிறந்த பழம், மார்கழி சிறந்த மாதம், வசந்தம் சிறந்த காலம். இவற்றின் சிறப்பு எங்கிருந்து வந்தது என்று எண்ணிப் பாருங்கள்.
மணத்தால் ரோஜா மலரும், பிரித்து உண்ணுகின்ற பண்பால் அன்னமும், முக்கனிகளுள் முதற்கனி ஆதலால் மாவும், தெய்வீகக் காரியங்களைச் செய்வதற்கு உகந்த மாதம் ஆதலால் மார்கழியும், அழகிய பூக்களாலும், தளிர்- செடி-கொடிகளாலும் மனதிற்கு மகிழ்வை ஊட்டுவதால் வசந்த காலமும் சிறப்பைப் பெறுகின்றன.
அதேபோல உங்கள் சிறப்பினால் உயர்ந்து நில்லுங்கள், சிறந்ததையே சிந்தனை செய்யுங்கள், சிறந்த வழியிலேயே செல்லுங்கள். நீங்களும் உயர்வு பெறலாம், சமுதாயத்தையும் உயர்வு பெறச் செய்யலாம்.
‘ஒரு சிறந்த மாணவனாக விளங்குவேன்’ என்ற உறுதியுடன் படிப்பில் ஈடுபடுங்கள்; உயர்ந்த வெற்றி பெறுவீர்கள்.
அதேவேளையில், ‘விவேகானந்தரின் வழியில்’ செல்ல விரும்புவீர்களேயானால், தேர்வில் வெற்றி பெறுவதுடன் சிறந்த பண்புநலன்கள் உங்கள் வாழ்க்கையில் இடம் பெற வேண்டும். அவை நல்லொழுக்கம், கடவுளிடம் பக்தி, சேவை மனப்பான்மை ஆகியவை ஆகும். இந்தப் பண்புகள் நம்மிடம் வளர வளர, நீங்கள் மானிட நிலையில் இருந்து தெய்வநிலைக்கு உயர்வீர்கள்.
சுவாமி விவேகானந்தர் நம்மை வெறும் மானிடர்களாகக் காணவில்லை. தெய்வங்களாகக் கண்டார். நாம் ஒவ்வொருவரும் இறைவனின் குழந்தைகள், தெய்வப் பிறவிகள், அளவற்ற சக்தி கொண்ட ஆன்மாக்கள்! ஆனால் நாம் நம்மைத் தெய்வங்களாக ஆற்றல் படைத்தவர்களாக உணரவில்லையே! அது ஏன்?
ஏனெனில் ‘நீ அறியாமைத் தூக்கத்தில் ஆழ்ந்திருக்கிறாய், அந்த தூக்கத்தில் இருந்து எழுந்து வா’ என்று அறைகூவல் விடுத்தார் அவர். ‘நீ வெறும் மனிதனல்ல, உன்னிடம் மாற்றத்தை உருவாக்கி, மகத்துவம் கண்டு, உன் வாழ்க்கையை உலகம் அறிய ஒளிர வை’ என்று முழங்கினார்.
வசந்தத்தின் விடியலில், வீரத்தின் பாதையில், விவேகத்தின் செழிப்பில், ஆன்மிகத்தின் அரவணைப்பில்- சுருங்கச் சொன்னால் ‘விவேகானந்தரின் வழியில்’ வளம்மிக்க இந்தியாவை உருவாக்குவோம், வாருங்கள்.